வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, September 16, 2011

லெப். மலரவன்

லெப்டினன்ட் மலரவன் ஒரு வேவுப்போராளியின் உண்மைக் கதை ஆனையிறவு கூட்டுப்படைத்தளம் அந்த ஜனவரி மாதத்து நிசப்தமான குளிரில் உறைந்துபோய்க் கிடந்தது. உடலை ஊடுருவும் உப்புக் காற்றின் குளிரையும் மீறீச் சில உருவங்கள் எதிரியின் முன்னணித் தடைகளை நோக்கி வரிசையாக நகர்ந்து கொண்டிருந்தன. அது ஒரு வலிந்த தாக்குதலக்குரிய நகர்வு. இறுமார்புடன் நிமிர்ந்து நிற்கும் ஆனையிறவுத் தளத்தின் இதயத்திற் பாய்வதற்காக அவர்கள் முன்னேறிக்கொண்டிருந்தனர். ஆந்த உவர்மண் வெளியில் ஆங்காங்கே காணப்படும் கன்னாப் பற்றைகளை மறைப்பாகக் கொண்டு அவர்களுடைய அணிநகர்ந்துகொண்டிருந்த அணிகளில், பிரதான முகாமைத் தாக்கியழிக்கும் சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படைப்பிரிவின் குறிப்பிட்ட அணியை வழிகாட்டி நகர்த்திக்கொண்டிருந்தான் ஒரு வேவுப்போராளி. நேரம் நள்ளிரவைத் தாண்டிவிட்டது. அவர்கள் எதிரியின் முன்னணித் தடை வேலியை நெருங்கிவிட்டனர். நீண்டதொரு இரகசிய நகர்வை வெற்றிகரமாகச் செய்து முடித்துவிட்ட திருப்தியில் அவர்கள் இருந்தனர். ஆனால், இன்னுங்கூட அபாயம் நீங்கவில்லை. அப்போது எதிரியால் அவதானிக்கப்பட்டால், அவர்கள் அந்த இடத்திலேயே கொல்லப்படலாம். காவலரண்களின் முன்னாற் சில பத்து மீற்றரில் அவர்கள் நிலத்துடன் நிலமாகக் கிடக்க, அவர்களை வழிகாட்டி அழைத்துவந்த போராளி கைகளில் முட்கம்பி வேலித்தடையை அகற்றும் கருவியுடன் முன்னேறினான். சண்டை தொடங்குவதற்கு இன்னும் சில நிமிடங்களே இருந்தன. முதலாவதாக இருந்த கம்பி வேலியை வெட்டி அகற்றிவிட்டு இரண்டாவது தடைக்கு அவன் „ டோப்பிட்டோ “ குண்டை பொருத்த, மறுமுனைகளிற் சண்டை தொடங்குகின்றது. அங்கே பொருத்திய “ டோப்பிட்டோ “ வெடிக்குமென எல்லோரும் ஆவலுடன் காத்திருக்க, அந்தக் குண்டு வெடிக்காமலே போய்விட்டது. துப்பாக்கிகள் சடசடக்க, எதிரி வானில் ஏவிய “ பரா “ வெளிச்சக் குண்டுகள் இரவைப் பகலாக்கி வானில் ஒளிவீச, அங்கே எமது அணியினர் தமக்குரிய பாதைத் தடையைத் தகர்க்க முடியாமல் இருப்பதை எதிரி கண்டுகொண்டான். தனது சூட்டு வலுவை இப்போது அந்த அணியினர் மீது எதிரி மையங்கொள்ள வைத்தான். நிலமை மோசமாகிக்கொண்டிருந்தது. உள்ளே நுழையவேண்டிய அந்த அணி வழியிலேயே எதிரியின் சூட்டிற்கு இலக்காகிப் போராளிகளை ஒவ்வொருவராய் இழந்துகொண்டிந்தது. மீண்டும் அந்தத் தடையைத் தகர்க்க அவ்விடத்தில் கைவசம் மேலதிக “ டோப்பிட்டோ “ வோ, பின்னாலிருந்து வரவழைக்க அவகாசமோ இருக்கவில்லை. இந்த இக்கட்டான நிலையில் எல்லோரும் தவிப்புடன் பார்த்திருக்க, கைவசம் இருந்த ஒரேயொரு கம்பிவெட்டும் „ கட்டரு “ டன் எழுந்தான்., அந்த அணிக்கு வழிகாட்டி முன்னே நகர்ந்து கொண்டிருந்த லெப்டினன்ட் மலரவன். துப்பாக்கிச் சன்னங்களால் துளைக்கப்பட்டு உடலிலிருந்து குருதி வழிய வழிய, தள்ளாடியபடி எதிரியின் தடைக்கம்பி வேலியை நெருங்கியவன், ஒவ்வொரு கம்பியாய் வெட்டத்தொடங்கினான். எதிரியின் துப்பாக்கிகள் அவன் ஒருவனையே குறிவைத்தன. அந்தச் சொற்ப நேரத்தினுள்ளேயே தடையை வெட்டி அகற்றிவிடவேண்டும் என்ற உறுதியுடன் தடைக்கம்பிகளை வெட்டி அகற்றியவாறு அந்தக் கம்பிகளின் மீதே சரிகின்றான் மலரவன். இறுதிக் கம்பி மட்டும் இன்னும் வெட்டப்படாமல் இருந்தது. ஆயினும் பாதை ஏற்பட்டுவி;ட்டது. அவன் ஏற்படுத்திக் கொடுத்த பாதையின் ஊடாக அணிகள் உள்ளே பாய்கின்றன.அவனது தோழர்கள் அவனைக் கடந்து எதிரியின் அரண்களை நோக்கி ஓடும் போது எஞ்சிய உயிர்த் துளியில் அவனது நாவு உச்சரித்தவை இவைதான். „ மச்சான்! ஒன்றையும் விடமாற் பிடியுங்கோ “ அன்றைய அந்த அணியின் சண்டையின் முடிவை மாற்றியமைத்தவன் அந்தப் போராளி. எதிரியின் சூட்டிற்கு ஒவ்வொருத்தராய் வீழ்ந்துகொண்டிருந்த நிலையை மாற்றியது அவனது முடிவுதான். தன் உயிர்கொண்டு அவன் தடையகற்ற துணிந்தமையால் தொடர்ந்து எதிரிகளை வீழ்த்திக் கொண்டு முன்னேறியது அவனது அணி. அன்றைய சண்டையில் அவர்கள் ஏராளம் இராணுவத்தினரை கொன்றொழித்தனர். பலம் வாயந்த எதிரியின் பிரதான முகாமை ஊடுருவி அவனது பல ஆயுதங்கள் உள்ளிட்ட ஆட்லறித் தளத்தை அவர்கள் அழித்தனர். அத்தனையும் அன்று சாத்தியமாக்கியது தடையகற்றித் தன் சாவைச் சரித்திரமாக்கிவிட்ட அந்தப் போராளியின் இறுதி நேர முடிவே. எமது விடுதலை வரலாற்றுப்பற்றித் தலைவர் அவர்கள் கூறுவது போல் „ ஆயிரம் ஆயிரம் தனி மனித சரித்திரங்கள் சங்கமமாகிய பெரு நதியாக வீறுகொண்டோடும் எம் விடுதலை வரலாற்றில் “ தானும் ஒருவனாய் சங்கமித்துப்போன இவனதும் சரித்திர நாயகர்களினதும் தியாகங்களே இன்றும் எம் விடுதலை நதியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்கின்றன.

2 comments:

  1. மலரவன் பற்றிய வாழ்வியற் குறிப்புகளை தந்தால் அவர் பற்றிய தேடலுக்கு உதவையாக இருக்கும்.நட்புடன்

    ReplyDelete
  2. குறிப்புக்கள் என்று எதை சொல்லுகிறீர்கள் உறவே ?

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை