வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, December 22, 2011

ஈழகாவியம் - 01


கடவுள் வணக்கம்
(நேரிசை வெண்பா)

விநாயகர் காப்பு

அங்குசத்தான் ஐங்கரனான் ஆனைமுகத் தானென்றே
எங்கெவர்க்கும் முன்வணக்கம் ஏற்போனே-இங்கீழ
நேசர்க்காய் மண்ணின் நெடுஞ்சரிதம் தானெழுதும்
தேசப்பா உன்காப்புத் தேன்!

யேசு காப்பு
சிலுவையிலே பாடுகளைத் தோளிற் சுமந்த
வலுவை எமக்கருள வல்லாய்-நிலுவையிலே
வல்லரக்கம் தந்த வரலாற்றை நானெழுத
நல்ல கவியருள்வாய் நா!

அல்லா காப்பு

அல்லாவே எல்லெவர்க்கும் ஆண்டருளே செய்திடுமோர்

வல்லவனே என்றனுக்காய் வாராயோ-சொல்லகவி
ஈழவர லாற்று எழுசரிதம் நாளையிலும்
ஆழமென வையகத்தை ஆக்கு!

செந்தமிழ்க் காப்பு
சங்கம் இருந்துலவிச் சாரலிலே அங்கவையாய்ப்
பொங்குதமிழ் என்றேதான் பூத்தவளே-தங்கநிலம்
ஆர்க்கும் தமிழீழ அன்னைத் திருநாட்டின்
கார்ப்பாகும் செந்தமிழே காப்பு!


காவியங்கள் மேவிவரக் காணும் கவிஞரொடும்
சீவியங்கள் வைத்தவளே செந்தமிழே-மேவியொரு
ஈழமணிக் காந்தள் எழிற்சரிதம் தேர்ந்தெழுதும்;
ஆழமனம் மீதூர்ந்து ஆள்!

வைகறையில் உன்சிறகு வார்ப்பெடுக்கும் பொன்நாவில்
மைகரைத்துப் பாவலங்கள் வண்ணமிடும்-கைகளிலே
போர்ச்சிறகை ஏந்திப் புலிமகளாய்ப் போனமகள்
வார்ச்சிறகைக் காவியமாய் வார்!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தின் தேன்தமிழே
வில்தோன்ற மன்னரிட்ட வித்தகியே-நல்லதமிழ்
வஞ்சி மணிமகளே நெஞ்சச் சுனைமருங்கில்
செஞ்சொல் வரமளிப்பாய் தேவி!

பாரதிபோற் பாவலர்க்கும் பாவீழச் சுந்தரர்க்கும்
சாரதிபோல் ஆனதமிழ்ச் சாம்பவியே-வாராய்
கலையும் கனிமொழியும் கல்வியொடும் பண்ணும்
அலையும் சரிதமுமாய் ஆர்!

--------------------------------------------------------------


என்(முன்)னுரை
(நிலைமடி மண்டல ஆசிரியப்பா)

ஈழவர் சரிதம் எழுதவும் என்றவோர்
தோழமை கண்டேன்!, துய்த்துநான் ஆயப்
புலவனும் இல்லை! பூமியின் சாத்திரம்
பலதும் ஏடுறப் பயின்றவ னில்லை!
சட்டவா தியாய்ச் சார்பெயர்ப் பின்னதாய்ப்
பட்டவா தியாய்ப் படமெதும் இல்லைவான்!
மலையின் மீதும் வரைகடல் மீதும்
அலையும் காற்றை அறிந்தவன் இல்லை!
சிலையின் நுணுக்கச் சிற்பியும் அல்லக்
கலையின் வார்ப்புக் கனிந்தவன் அல்ல!
தாயாள் தந்த தமிழணங் கானவள்
தீயாய் என்னுட் சுடர்தந் ததினால்
தீரா வேட்கைத் தீமையைக் காய்க்கும்
பாரா யணத்தைப் படித்ததால் மட்டும்
என்னுள் எரிந்த அகல்விளக் கோடுநான்
மின்னிச் சுடரும் மிதவையில் ஊர்ந்தேன்!
சன்னமாய்ப் பொழியும் சரிநிகர்க் கவிஞர்
தன்னில் அடைக்கலம் தானுவந் தேனே!
நானும் என்னுள் நயந்தவித் தகியும்
தேனும் பாலுமாய்த் தேசெலாம் திரிந்தோம்!
சுந்தரப் புலவன் செப்பிய கூழைக்
கந்தரலங் காரர் கசிந்த பக்தியைத்
தேவரப் புகழைத் திருவா வடுதுறைப்
பாவரெம் பாவைப் பருகினேன் ஆதலின்
என்னுள் நானே எனக்குஅவ் ஏந்திளை
தன்னிற் படிந்தஅத் தமிழவள் கண்டேன்!
மகாகவி யொடும் மதுரமார் கவிஞர்
புகார் செப்பிய புலவர்கள் பாடும்
அரங்குகள் கண்டு அதிர்ந்தஅந் நாளில்
பத்தும் ஆறும் பாய்ச்சிய போதே
சித்தம் எனக்குச் சில்லிடக் கண்டேன்!
குருதி வழியக் கேடவர் வெட்டத்
திருகிய கூட்டத் தெறிப்புட் சிக்கித்
தமிழர்கள் ஆயிரம் தலையுடல் கக்கிச்
சுமையாய் விழுந்த தெருவொடும் நாட்கள்
அகலக் கண்ணில் ஆறாய் ஓடின!
பகலும் இரவும் பற்றிட எரிந்தேன்!
விழியைக் கனவை விதைப்பின் அறுவடைப்
பழியைச் சுமந்த பாராள் மன்றம்
அரித்து விழுத்திய அகத்தமிழ் நிலத்தை
பிரித்துப் பறித்திடும் பேய்களைக் கண்டேன்!
வயல்வெளி தோறும் வார்முற் றைவெளி
அயலொடும் தமிழர் ஆர்த்தகண் ணீரைத்
தகதக தகவெனத் தமிழநற் தலைவர்
புகபுகப் புகலெனப் புட்டுரை யாக்கிக்
கனத்ததோர் வேளை கலவரச் சிங்களர்
தனத்த காடையர் தாக்கிய போதும்
எனக்கென் மானிடம் எகிறிப் பாய்ந்தது!
மனப்புயற் சூறை மண்ணைக் கரைத்தது!
செல்வாக் கிழவன் செப்பிய அறவழி
செல்லாக் காசாய்ச் சிக்கிய போதும்
சில்லாய்த் தமிழன் சிதறிய நாட்களும்
எல்லாம் ஆக எனையழித் தனவே!
அறுபது தொடங்கிஎன் அறுபது ஓடியும்
உறுவதைக் காலம் ஓய்ந்திட வில்லை!
சதியினர் தன்னிற் சரிந்தஎம் இனத்தார்
மிதிபடக் கண்டேன்! மிலேச்சர் தம்மிடை
ஆட்சியும் பகிர்வும் அளந்த தீர்வெனும்
காட்சி எல்லமும் கனத்தபொய் என்பதும்,
நாளை ஒருநாள் நம்அடி இறந்த
வேளைக் கொருகால் விதிர்ப்பை எழுதிடாச்
சாலைக் குள்ளெலாம் சரிதம் சிரிப்பதும்,
வேலைத் தழுவிய வேங்கைமண் புழுதி
கண்ணிற் பரவிக் கசங்கிட வைப்பதும்
எண்ணியே இற்றைஇவ் ஈழமா சரிதம்
மண்ணில் வரைந்தேன்! வாஞ்சையின் தேசம்
நண்ணிடும் போதிலெம் நாள்வரு மேயடா!

வேறு
(இன்னிசை வெண்பா)
காடையர் தீயராய்க் காட்சியாய் நிற்பவர்
கூடையில் தீர்வொடும் கூப்பிடு வாரொடா!
ஆடாய்க் கசாப்பிடும் ஆட்சியை மாற்றஎம்
நாடு கடந்தஎம் நாடிடு வாயடா!

ஈழகாவியம் எழுதிடும் போதுகள்..
1- கதவம்

வெண்பனியாள் வந்துவிழ
வெள்ளையெனப் பாரெழுதும்
வேளை ஒன்றில்
மேபிமர வான்சோலை
விட்டிலைகள் கொட்டிவிட
வெட்கி நிற்கும்!
தண்குளிரிற் சார்நிழலே
தார்க்கருப்புக் கோடுகளாய்த்
தந்த போதில்
தாடைக்கும் மேலாடை
தாங்கியவன் கணினியோடு
தமிழைக் கோர்த்து
கண்ணமுதப் பாட்டெடுக்கக்
கவிஞனுக்கு வாழ்வுதந்த
கனடா மண்ணில்
காரீழம் பற்றியொரு
கனசரிதம் வைக்கவெனக்
கண்டேன் சேதி!
எண்ணலிலா வென்சாதி
இராட்சதராற் சாகவைத்த
இலங்கா ஆட்சி
எமனான காலமதில்
ஈழமெனும் வரலாற்றை
எழுது கின்றேன்!

இருபத்தி யொன்றாகும்
இந்நூற்று ஆண்டென்றன்
இனத்தைக் கொன்றார்
இரும்தமிழர் நிலமெல்லாம்
இராணுவத்தால் மோதியதை
இழுத்துக் கொண்டார்!
குருபத்தி கொண்டவர்கள்
கூடலிறை கண்டவர்கள்
குடிலாய்ச் செத்தார்
கொடியவர்க்குள் நிமிர்ந்தெழவே
கொள்கையினை வகுத்தெடுத்த
கூட்டம் செத்து
ஒருவக்கும் இல்லாமல்
உடல்சிதறிப் போகட்டும்
என்பா ரோடே
இந்தியத்தின் பேய்புகுந்து
ஈழத்தின் மாமறவர்
இல்லா தொழியப்
புருவைத்துப் புண்ணாக்கிப்
பிச்சையரைக் காணாரைப்
பிச்சை யாக்கிப்
பேரீழம் தனைக்கொன்றார்!
போரோடு இனம்காத்த
புலிகள் செத்தார்!

ஆன்றகொடும் ஆட்சியதின்
அலைகளொடும் என்தமிழன்
அள்ளுப் பட்டே
அகிலமெலாம் இலட்சமென
அகதியெனும் குடிசாராய்
அகப்பட் டானாய்த்
தோன்றுநிலம் வெள்ளைநிறத்
தேசாளும் நகரமெலாம்
திருவும் கல்வித்
தேசாளும் கரமனைத்தாய்
திருத்தமிழன் வந்தானெம்
துயர்கள் கண்டான்!
ஈன்றநிலம் எல்லாமும்
இராட்சதர்கள் கையகத்தில்
இழுக்கப் பட்டே
இடர்பதிந்த முகாம்களிலே
ஏந்திளைகள் வன்புணர்வில்
இறந்தார் அந்தோ!
மூன்றிலட்சம் அகதிகளாய்
முடிச்சிறுகக் குச்சுகளில்
மூத்தோர் சிறுவர்
மெய்த்தாயர் தந்தையென
மொய்த்தாரில் வெந்ததிந்த
வேளை அம்மா!

வாராமல் வந்ததொரு
மாமணியாம் கரிகாலன்
மண்ணில் நின்றே
வாதையெலாம் தீர்ப்பதற்காய்
வடிவெடுத்த ஆயுதத்தை
வைத்தி ருந்தான்!
போராக்கி வைத்திருந்த
பேயாட்சிச் சிங்களத்தின்
பிடியிற் சிக்கிப்
பெருநாடு சீனமொடும்
பேரிந்தி உருச்சியமும்
பாக்கிஸ் தானும்
நாராக்கித் தமிழரினை
நாசமிடச் செய்வதற்காய்
நரியாய் நின்றார்!
நாளெல்லாம் ஆயிரமாய்
நலிவினத்தின் சாவினிலே
நாடு பல்லாய்க்
கூராக்கி வைத்தபெரும்
கொடும்காதைப் பின்னலெலாம்
கொடிதே ஆயின்
கொஞ்சுதமிழ் வெல்லுமென்ற
வஞ்சிநிலப் பெருங்கீற்றே
கொள்ளாய் நெஞ்சே!

- ஈழநேசன் -புதியபாரதி

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை