வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, December 29, 2011

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-1


முதல்முறை வந்தது வசந்தம் namikkaiசுதந்திர தாகத்தை வேகத்தோடும் விவேகத்தோடும் முன்னெடுக்கும் வலுவுள்ளவர்கள் இளைஞர்கள்.
“எமது விடுதலைப்போராட்டப்பளுவை அடுத்த பரம்பரைமீது சுமத்தநாம் விரும்பவில்லை. எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்க வேண்டும்” என்ற எமது வீரமறவன் பிரபாகரனின் உள்ள உந்துதலை நனவாக்க புலியானவர்கள் இளைஞர்கள்.

நமக்கானதொரு தேசத்தை சொந்தமாக்க உயிர் உடன்பிறப்புக்களை சத்தமின்றி பிரிந்தவர்கள் இவர்கள். களமாடி நின்ற காலங்களில் தம் நலம் நாடாது மக்கள் நலம் நாடி எக்காலத்துக்குமான காவியமானவர்கள் இவர்கள்.
காவிய நாயகர்கள் மாகாவியமாகிப் போன வேளையில் நான் ஈழத்தமிழர் பகுதிகளில் நின்றேன். இயல்பான மகிழ்வும் இயற்கையான வளமையும் இல்லா எதிர்கால வரலாற்று உயிரோவியங்களை பார்த்தேன். நெஞ்சம் கனத்தது. அருளில்லா ஆலயம் போல இருந்தார்கள் அவர்கள். வறண்ட பாக்காப் பள்ளத்தாக்குபோல சோர்ந்து காய்ந்து கிடந்தார்கள்.
“விழிப்புத்தான் விடுதலையின் முதற்படி” என்ற தமிழீழத்தலைவரின் அனுபவ வார்த்தையை எம் எதிர்கால வசந்தங்களின் உணர்வலைகளில் ஏற்ற இளைஞர் யுவதிகளுக்காக சிறப்பு கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தோம். தகவல் கிடைத்தவர்களில் துணிவுள்ளவர்களும் கனவுள்ளவர்களும் கலந்து கொண்டார்கள்.
17.07.2011 ஞாயிறு அன்று நடைபெற்ற கூட்டத்தில் வட்டமாக அமர்ந்திருந்தவர்கள் மத்தியில் வலுவில்லாத கேள்விக்குறிகள் மட்டும் பொதுவாய் இருந்ததை அவதானிக்க முடிந்தது. சலனமற்ற வளிமண்டலத்தில் ஒரு மேகமாக பேச ஆரம்பித்தேன்.
“குண்டுகள் வெடிக்கவில்லை. ஆகாயத்தில் கச்சேரி நடத்திய போர்விமானங்கள் பறக்கவில்லை. இரச்சல் கேட்டவுடன் பங்கர் தேடிய நிலை இல்லை, புதிது புதிதாக பதுங்குழிகள் வெட்டவேண்டிய அவசியமில்லை. நடந்துகொண்டே வாழ்ந்து திரிந்த வாழ்க்கை இல்லை. இராணுவம் அரணாக எங்கும் அமைதி, எதிலும் அமைதி. அந்த சூழ்நிலையில் என்ன செய்வதாய் உத்தேசம்? இந்த அமைதியை ஏற்றுக்கொள்கிறீர்களா? அல்லது இவை கல்லறைச்சுவர் என இயம்புகின்றீர்களா? என்ன செய்வதாய் உத்தேசம்?” என்றேன்.
பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகள் திறக்கப்பட்ட வாயில்நோக்கி விரைந்தோடுவதுபோல கருத்துக்கள் பல ஒவ்வோருவரிடமிருந்தும் விரைந்து வரத்தொடங்கின. வெடிகளே வெளிச்சம் கொடுத்த நாட்கள் அன்று இருந்தன. இன்று வெளிப்படையாக வெடியோசை இல்லை. அவ்வளவே.
வெடித்து சிதறிய சில்லுகளாலும் பற்றி எரிந்த குடில்களாலும், எங்களை பொசுக்கிபோன தழல்களாலும் நாங்கள் இழந்தது அதிகம் தான். ஆனால் அவையெல்லாம் மீண்டும் பெற்றுவிடக்கூடியவை.
இப்போது முடியாவிட்டாலும் காலச்சுழற்ச்சியில் பெற்றுவிடலாம்தான். ஆனால் இப்பொழுது பொருளாதாரம் மற்றும் கலாச்சார சுரண்டல் நடந்து கொண்டிருக்கிறதே. இதை எதைக்கொடுத்து பெறுவது? என்று அங்கலாய்த்தார்கள்.
காங்கேசன்துறையில் மிகப்பெரிய சிமெண்ட் தொழிற்சாலை இருக்கின்றது. இந்த இடம் முழுவதும் சுண்ணக்கல் அல்லது சுண்ணாம்புக்கல் அமுத சுரபிபோல கிடைக்கிறது. யாழ்ப்பாணம் வளங்கள் நிறைந்த பூமி என்பதற்கு இவையும் சான்றாகும்.
இது சிமெண்ட் தயாரிப்பதற்கான முக்கிய மூலப்பொருட்களிள் ஒன்று. பல ஆண்டுகளுக்கு முன்பு மொத்த இலங்கையின் சிமெண்ட தேவையை நிவர்த்தி செய்தது இந்த ஆலைதான்.
ஆனால் இன்று அது மூடப்பட்டிருக்கிறது. இங்குள்ள கனிமங்களை வெட்டி எடுக்கிறார்கள். அங்கேயே உடைக்கிறார்கள். தமிழர்களுக்கோ அதனால் எந்த பயனும் கிடைப்பதில்லை.
மாறாக புத்தளத்தில் உள்ள சிங்களவனின் ஆலைக்கு அதனை கொண்டு செல்கிறார்கள். வசதிகள் பறிக்கப்படும் அந்தப்பகுதியிலும் மீள்குடியமர்த்தல் ”நடைபெறுகிறது” என்பது இன்னுமொரு அபத்தம் என்று சொல்லி கொள்ளையிடும் கயவர்களை நினைத்து கொந்தளித்தார்கள்.
உயிருக்கும் அச்சுறுத்தலுக்கும் பயந்து வீட்டை விட்டு ஓடிஒழிந்து திரிந்தவர்கள் நாங்கள். அவதியிலிருந்து மீண்டு, மீண்டும் வந்தபோது எங்களது வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டிருந்தது. காவலர்களின் ஆக்கிரமிப்பாகி அவை இருந்ததன.
சொந்த வீடு இருந்தும் அந்நியமாகி நிற்கின்றோம். “இது பொலிஸ் ஸ்டேசனுக்கு தெரிவு செய்யப்பட்ட பகுதி” என்று பல்வேறு பகுதிகளில் தகவல் பலகைகள் வைத்து முள் வேலியும் அமைத்து விட்டார்கள். எமது நிறைய சொத்துக்களை அபகரித்துக்கொண்டார்கள்.
சிங்கள மொழி ஆதிக்கமும் அதிகரித்துள்ளது. நான்காவது அனைத்துலக தமிழாராட்சி மாநாடு பல்வேறு அரசுசார்ந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 1974ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்றாம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.
ஆனால் இனவெறிபிடித்த சிங்கள அரசு, ஜனவரி 10ஆம் திகதி மாநாட்டின் இறுதிநாளில் யாழ்வீரசிங்க மண்டப முன்றலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியது. அக்கொடூர துயரில் ஒன்பதுபேர் செத்து போனார்கள்.
இன்று அதே யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற அரச நிகழ்வொன்றில் சிங்களத்தின் தேசிய கீதம் பாடப்பட்டுள்ளது. அனைத்து எதிர்ப்புக்களுக்கும் மிரட்டலுக்கும் பின்னே முனகிகொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் இப்படி இல்லைத்தானே. இப்போது சிங்களம் தெரிந்தால்தான் வாழமுடியும் என்ற நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டுள்ளோம் என்கிறார்கள்.
பரந்த மொழிஅறிவு இருக்கின்றபோது, உலக ஞானத்தை, பெரியோர்களின் கருத்துக்களை, நாடுகடந்த விடுதலைப்போராட்டத்தை, உண்மையின் உரைகல்லை நாம் அறிந்துகொள்ள முடியுமே என்று நான்கேட்டேன்.
அதற்கு, மொழி விருப்பம் என்பது,தாய்ப்பால் தேடும் குழந்தைபோல இயல்பாக வரவேண்டும். இங்கே திணிக்கப்படுகிறது. அதிகாரத்தன்மையுடன் கட்டாயப்படுத்தப்படுகின்றது என பரந்த பார்வையுடன் பேசினார்கள்.
குடிப்பழக்கமும் ஆபாச குறுந்தகடுகளும் எம் சகோதரர்கள் பலரின் மூளையை சிதைத்து விட்டன. கடைசிகட்ட போர் ஆரம்பிப்பதற்கு முன்பே குப்பை மேட்டிலும் பேரூந்து நிறுத்தத்திலுமாக பல்வேறு இடங்களில் ஆபாச குறுந்தகடுகள் கேட்பாரற்று கொட்டி கிடந்தன. அனைத்தையும் எடுத்து பார்த்து பழகி மூளையை மழுங்கடித்து கொண்டார்கள் சிலர்.
இன்னும் சிலர் சாராயத்தின் வாசத்தில் நாட்டின் சுவாசத்தை வியாபாரம் செய்தார்கள். மிகப்பெரிய திட்டத்துடன் மறைமுகமாக அரங்கேற்றப்பட்ட இத்திட்டத்தில் நாம் வீழ்ந்து போனோம். சிங்களவன் பயங்கர படைபலத்துடன் எங்களை நெருங்கியபோது போகத்திற்கும் போதைக்கும் பழகிப்போன பலரின் மூளை நாட்டின் நாணயத்தன்மையை மறைத்தது. இன்றுவரை மயக்கம் தெளியாமல் பலர் சீரழிந்து வருகிறார்கள்.
“மொழியும், கலையும், கலாச்சாரமும் வளம்பெற்று வளர்ச்சியும் அடையும் பொழுதே தேசிய இனக்கட்டமைப்பு இறுக்கம் பெறுகின்றது. பலம் பெறுகின்றது. மனிதவாழ்வும் சமூக உறவுகளும் மேன்மை பெறுகின்றது. தேசிய நாகரிகம் உன்னதம் பெறுகின்றது” என்ற நம் தலைவரின் நற்சிந்தனை நினைவுகளில் வந்து சென்ற வேளைகளில் மனம் திறந்த விவாதத்தின் இடையே அரங்கிற்குள் ஒருவர் நேரடியாக நுழைந்தார்.
நம் தேசத்தில் அரங்கேற்றப்பட்ட அநியாய போர் குறித்த ஐக்கியநாடுகள் விசாரணைக்குழு தனது அறிக்கையை ஏப்பிரல் 12,2011 இல் ஐ.நா தலைமைச் செயலர் பான் கீ மூனிடம் அளித்தது. அது ஏப்பிரல் 25ல் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கை,
1. இலங்கை அரசு நடத்திய விரிந்த அளவிலான தொடர் குண்டவீச்சுக்கள் மூலம் பெரும்தொகை பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
2. மருத்துவமனைகள் மற்றும் மனிதநேய நிறுவனங்கள் இலங்கை இராணுவத்தின் குண்டு வீச்சுக்களுக்கு இரையாயின.
3. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதநேய உதவிகள் கிடைக்காமல் இலங்கை அரசு தடுத்துள்ளது.
4. போரில் உயிர்பிழைத்த மக்கள் குறிப்பாக உள்நாட்டில் இடம்பெயரவைக்கப்பட்ட மக்கள் மற்றும் விடுதலைப்புலிப் போராளிகள் என்ற சந்தேகத்திற்குரியவர்கள் ஆகியோர் தொடர்ந்தும் மனிதஉரிமை மீறலுக்கு ஆளாகியுள்ளனர்.
5. போர்க்களத்திற்கு அப்பாலிருந்து போரை எதிர்த்த ஊடகத்துறையினர் மற்றும் பிற திறனாய்வாளர்கள் மனிதஉரிமை மீறலுக்கு உள்ளாக்கப்பட்டனர் என்று தெளிவுபடுத்தியிருக்கின்றது.
ஆனால் வெளிநாட்டிற்கு பயணமான ரணில் விக்கிரமசிங்க ஐ.நாவின் இந்த அறிக்கை பொய்யானது என்றும் இப்படியான அழிவுகள் நடைபெறவே இல்லை என்றும் மற்ற நாட்டு தலைவர்களிடம் பேசியிருக்கின்றார்.
தனது அரசியல் எதிரி அழியட்டும் என்ற எண்ணத்தைவிட தமிழர்கள் அழியட்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருக்கின்றது என்ற எண்ணத்தை பதிவுசெய்திருந்தார்.
யூலை 23 நம் எல்லோருக்கும் கருப்பு ஜூலையாகும். அந்த நாட்களில் நாம் கறுப்புகொடிகட்டி. கண்டன ஊர்வலங்கள் நடாத்தி இக்கால சந்ததியினருக்கு 1981 இல் சிங்கள காடையர்களால் நம்மவர்கள் அனுபவித்த கொடும் துயரங்களை, நம்குலப்பெண்கள் சீரழிக்கப்பட்தை, வணிக வளாகங்கள் இரையாக்கப்படதை, நாம் அகதிகளாக ஓட ஆரம்பித்ததை எடுத்தியம்பி வருகின்றோம்.
ஆனால் இந்த ஆண்டு அதே நாளில்தான் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது(23.07.2011). அன்று நாம் ஒன்றுமே செய்ய முடியாது. நம் வரலாற்று காயங்களை மறைக்கும் அல்லது மறக்கச்செய்யும் ஆதிக்க வகுப்பினரின் இதுபோன்ற அடக்குமுறைகள் தொடருமானால் நிச்சயம் நமது வரலாறு நம்மோடு புதைந்து போகும் என்ற ஆதங்கத்தை முன்வைத்தார்கள். வரலாற்றை முன்னெடுக்கவேண்டிய ஆர்வத்திற்கு ஒளியேற்றினார்கள்.
எல்லா நாட்டிலுமே சுதந்திரத்திற்கான வழிமுறைகள் காலத்திற்கு ஏற்றால் போல மாற்றம் கண்டிருக்கின்றன. நமது போராட்டமும் பல சூழல்களில் மெருகேறியிருக்கின்றது. புது வழிகளில் நடைபோட்டிருக்கின்றது. அனைத்து போராட்ட வடிவங்களுமே வெற்றியை தந்துவிடுவதில்லை. நிறைந்த அனுபவ பாடங்களையும் தோல்விகளையும் தந்திருக்கின்றன. அதற்காக விடுதலை வேட்கையை அணையவிடக்கூடாது. பாதங்கள் நடக்க தயாராகிவிட்டால் பாதைகள் தானே கிடைத்துவிடும்.
வேதனையும் அச்சமும் கலந்து தொடர்ந்து பகிர்ந்து கொண்டவர்கள், சமுதாய மாற்றம் நிச்சயமாக இளைஞர்களால் முடியும் என்ற திசைக்குள் அடியெடுத்து வைத்தார்கள்.
“இளைஞர்களுக்குள் மாற்றத்தை கொண்டுவந்து இளைஞர்கள் வழியாக சமுதாயத்திற்குள் செல்லும்போது நிச்சயமாக நல்ல மாற்றங்கள் ஏற்படும்.” என்ற உற்சாகம் கலந்து உத்வேகத்துடன் முன்வைத்தார்கள்.
கலாச்சாரம் பண்பாட்டு சுரண்டல்களுக்கு மத்தியில் எதிர் நீச்சல்போடவேண்டிய நிலையில் இருக்கின்றோம். எதிர்நீச்சல்போட்டு இந்நிலையை தாண்டிவிட்டால் எதிர்காலம் நமக்கு வசந்தமாகும். அதற்காக நாம் அணியமாவோம். வரலாற்றை பகிர்ந்து கொள்வோம் பரவலாக்குவோம் என்ற புரிதலுடன் கூட்டம் நிறைவடைந்தது.
கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது இக்கூட்டத்தை தவற விட்டவர்கள் நிறைய இழந்துவிட்டார்கள் என்றார்கள். புதிய தளங்களுக்குள் எங்களை அழைத்து சென்றுள்ளீர்கள். எங்களது பகுத்தறிவு பார்வைகளை புதுப்பித்துள்ளீர்கள் என்று சொன்னார்கள். எங்கள் பகுதிக்கு வாருங்கள் எங்கள் இளைஞர் யுவதிகளிடமும் கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்யுங்கள் போன்ற கருத்துக்களை பகிந்ந்து கொண்டார்கள்.
அப்போது அருகில் வந்த யுவதி ஒருத்தி, இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு எங்கள் நெஞ்சை அரித்துகொண்டிருந்த தகவல்களை, கோபங்களை, எதிர்பார்ப்புக்களை, ஏமாற்றங்களை முதல்முறையாக இறக்கி வைத்துள்ளோம்.
எழுதவும் பேசவும் பயந்து வீட்டுக்குள் ஆத்திரத்துடன் அடங்கி கிடந்த எங்கள் உணர்வுகளை எடுத்து வைக்க இடமளித்தமைக்கு உளப்பூரிப்பான நன்றிகள். இனி நிச்சயம் சிறுவட்டத்திலாவது தொடர்ந்து கதைப்போம். வரலாற்றை உயிர்ப்புடன் பாதுகாப்போம் என்றார்கள். இப்போது எனக்கு மனம் நிறைந்தது.
சந்திப்போம்….

- அருள்தந்தை சூ.ம.ஜெயசீலன்
 நன்றி ஈழம் வீவ்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை