வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, January 18, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 09 (வரலாற்றை மறக்காத இனத்திற்கு வெற்றி நிச்சயமே!)

 

நான் சென்றிருந்த ஊரில் தினமும் மாலையில் அங்கிருந்த ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றினேன். திருப்பலியில் மறையுரை நிகழ்த்திய பிறகு அம் மறையுரையில் இருந்து ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கான சரியான விடையை அல்லது சரியான உணர்வுகளை வெளிப்படுத்துவோருக்கு திருவிழா நாளில் பரிசு வழங்கப்படும் என்ற அறிவிப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஜூலை 19ஆம் திகதி, இன்றைய கால சமூக வாழ்க்கைச் சூழலில் கறை படிவது எமது வாழ்க்கைக்கு உகந்ததா? என்று வினா தொடுத்தோம். பலரும் பதில் எழுதியிருந்தார்கள். வயது வித்தியாசமோ, அனுபவ வேறுபாடுகளோ இல்லாது பலரும் எழுதியிருந்தார்கள். பலவித பதில்களில் தாங்கள் ஈழத்தில் பகுத்தறிவு பாதையினையும் பரந்துபட்ட ஞானத்தினையும் வெளிப்படுத்தியிருந்தார்கள். அவர்களுள் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவியும் ஒருவர்.
“போர்க் காலத்தை எடுத்துக் கொண்டால் பிறருக்காக எமது உயிரையும் அர்ப்பணிக்க நேர்ந்தது. அதற்கு உதாரணமாக ஒரு சம்பவத்தை முன் வைக்கிறேன். ஒரு பதுங்கு குழியில் ஒரு சிறிய குழந்தை. அந்த சிறிய குழந்தையின் தாய் தந்தை குண்டு வீச்சில் இறந்து அந்த பதுங்கு குழியில் கிடந்தனர். அத்தருணம் அச்சிறிய குழந்தையும் இறக்க நேரிடும்போது அந்த தாய் அந்த சிறிய குழந்தையை அணைத்து வைத்திருந்ததனால் அந்த தாயின் முதுகு பக்கம் குண்டின் சிறிய துண்டு துளைத்தது. தந்தையின் மேலும் குண்டு பதிந்திருந்தது. சிறிய குழந்தை அனாதையாக அந்த பதுங்கு குழியில் கத்தி அழுதது.
குண்டு வீச்சினால் எல்லோரும் இடம் பெயர்ந்து கொண்டிருந்தனர். எல்லோரும் தங்கள் உயிரைக் காப்பாற்றுவதற்காக கவனிக்காமல் சென்றனர். அவ்வழியே ஒரு பத்து வயது சிறு பையனும் தனது தந்தையுடன் சென்றான். இக்குழந்தையின் அழுகுரலை கேட்டு, தாய் தந்தை விட்டுச் சென்று விட்ட அச்சிறிய குழந்தையை தூக்கி கொண்டு சென்றான். அச்சிறிய குழந்தையின் உடல் முழுவதும் தாய் தந்தை குருதி காணப்பட்டது. அவன் தனது மார்போடு அணைத்து வருவதை அவனது தாய் தந்தை அவதானித்து அந்த பையனிடம் பேசினார்கள்.
உனது ஆடை முழுவதும் கறைபடிந்திருக்கு. ஏன் இக்குழந்தையை தூக்கி வந்தாய் என்று கேட்டார்கள். அப்பையன் தாய் தந்தைக்கு சொன்னான். நீங்கள் இறந்து நான் தவித்திருந்தால் என்னை யாரும் ஆதரிக்க மாட்டார். யாராவது எங்களைப்போல சிறுவர்கள் காப்பாற்றுவார்கள்.
இதைக்கேட்ட தாய் தந்தை வியப்பில் ஆழ்ந்தனர். பின் தந்தை கூறினார். நீ நல்ல காரியம் செய்திருக்கிறாய். உனது ஆடையில் கறை படிந்தததை அவதானிக்காமல் அந்த உயிரை காப்பாற்றினாய். உன்னை பெற்ற எனக்கு பெருமைதான். இது உண்மை சம்பவம். ஆகவே நாங்களும் இக்குழந்தையுள்ளம் படைத்தவராக எமது ஆடையில் கறைபடிந்தாலும் இதனால் பிறருக்கு நன்மை செய்து வாழ வேண்டும்”. என்று எழுதியிருந்தார்.
எழுத வேண்டிய தனிநபர் அனுபவங்கள் ஆழ்கடல் பொக்கிசமாக அபரிமிதமாக இருக்கின்றனர். வலி அனைத்தும் ஒன்று சேர்ந்து தன்னை எழுதுமாறு கேட்டுக்கொண்டே இருக்கின்றனர். பேசவே அச்சப்படும் ஈழ மண்ணில் இவை அனைத்தும் சாத்தியமின்றி இருக்கின்றன. இம் மாணவியின் இப்பதிவின் உண்மையை வெளியுலகிற்கு உணர்த்த விரும்பிய நான் இலங்கையில் வெளிவரும் ஒரு மாதாந்திர இதழுக்கு அனுப்பி வைக்கச் சொன்னேன். இக்கட்டுரையும் அனுப்பபட்டது. ஆனால் கருத்து சுதந்திரம் கருத்தடை செய்யப்பட்ட நாட்டில் இருப்பதால் அவர்கள் அதனை வெளியிடவில்லை.
பேசுவதைக்கூட அவசர கதியில் பேசிவிட்டு இடம் பெயரும் சூழலில் இருக்கும் எம்மவர்களின் எதிரொலியாக பெரியவர் தொடர்ந்து பேசினார். வலைஞர் மடத்தில் உள்ள மருத்துவமனையில் நான் கண்ட காட்சிகள் இப்போது நினைத்தாலும் என்று ஆரம்பித்தவர்… மீண்டும் தடுமாறினார்…குவியல் குவியலாக பிணங்கள்…பேசவும் முடியாமல் முனகவும் முடியாமல் கனபேர்…தெரிந்த உறவுக்காரர்கள் யாருமின்றியும் ஆறுதலாக பேச ஒருவருமின்றியும் பலர்…மருத்துவர்கள் வரும் வரை உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்க முயன்று தோற்றுப்போய்கொண்டிருந்தார்கள். யாருமே நிற்க முடியாது பாதர். மனத்திடம் இருந்தது. ஆனாலும் நிற்க முடியாது.
கால்கள் அல்லது கைகளில் ஏதாவது ஒன்றை இழந்தவர்கள் துடித்து அழுததையும், காயங்களோடு கதறியதையுமே தாங்க முடியாத நிலையில் இருந்த நான் ஒரு முதியவரைக் கண்டேன். தலை இருந்தது உடல் இருந்தது. இரண்டு கால்களும் முழங்காலுக்கு கீழ் இல்லை. இரண்டு கைகளும் இல்லை. நாட்டைக்காப்பாற்ற போராடிப் பழக்கப்பட்ட இனம் இப்போது தன்னைக்காக்கவே போராட வேண்டிய சூழலில் யார் பாதர் அவரை தூக்கிச்செல்ல முடியும்? யார்தான் கவனிக்க முடியும் என்று ஆதங்கத்தில் ஆறுதலாய் கேட்டவர் ஆண்டவர் அவரை எடுத்துக்கொண்டாலாவது நல்லது என்றவரின் கண்ணில் கண்ணீர் குறையவில்லை.
கடந்த கால நிகழ்வுக்குள் மூழ்கிப்போன பெரியவரின் உணர்வுவுக்குள் கலந்துவிட்ட எனக்கு ஒரு வழக்கு நினைவுக்கு வந்தது. அது 1781ஆம் ஆண்டு நடந்தது. கருப்பின மக்கள் மீது வெள்ளைத்தோலினர் கொண்டிருந்த மனநிலையை உரத்துக்கூறும் வழக்கு அது. மேற்கு ஆபிரிக்காவிலிருந்து நீக்ரோக்களை அடிமையாக மக்காவுக்கு கப்பல் வழியாக கொண்டு சென்றனர். அந்த கப்பவில் 400 நீக்கிரோக்கள் இருந்தார்கள்.
போகின்ற வழியில் உப்புக்காற்றும் சுடும் வெப்பமும் இயலாதவர்களின் குமுறலும் ஒன்றிணைய புதுவகையான நோய் கப்பலில் தொற்றிக்கொண்டது. தங்களை காப்பாற்றிக்கொள்ள முனைந்த கப்பல் தலைவன் அடிமைகளுக்கு ஏன் உயிராசை என்று கூறி ஒதுங்கினர். அவர்களை ஒதுக்கினர். நாட்கள் ஆனது. நோய் தீவிரமடைந்தது. நீக்ரோக்களில் ஒவ்வொருவராக சுருண்டு படுத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். என்ன செய்வது என்று யோசித்த கப்பல் தலைவன் விபரீதமான முடிவொன்றை எடுத்தான். அதன்படி நோயுற்றிருந்த 132 நீக்குரோக்களை கடலில் தூக்கிவீசினான்.
கப்பல் கரையை அடைந்ததும் கப்பல் தலைவன் நேரே நீதிமன்றம் சென்றான். கடலில் எறியப்பட்ட நீக்குரோக்களின் சந்தை விலைக்கு ஈடாக காப்பீட்டு நிறுவனம் பணம் தரவேண்டும் என்று வழக்கு தொடுத்தான். அதற்கு அவர் சொன்ன காரணம், கப்பலில் பயணிக்கும்போது அதன் உள்ளிருக்கும் ஏதாவது பொருள் அழுக ஆரம்பித்தால் அதனை கடலில் கொட்டிவிடுவதன் வழியாக மற்ற பொருட்களை பாதுகாக்க முடியும். அதே போலதான் நோயுற்ற நீக்ரோக்களை கடலில் கொட்டிவிட்டு மற்ற நீக்குரோக்களை நான் காப்பாற்றினேன். எனவே எனக்கு காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு தரவேண்டும் என்று வாதிட்டான்.
நீதிபதி வெள்ளை இனவெறியின் மொத்த உருவமாய் அமர்ந்திருந்தார். அவர் கப்பல் தலைவனைப்பார்த்து உயிருக்கும் உடைமைக்கும் வேறுபாடு தெரியாதவனே, தெய்வச்சாயலுக்கும் அவர் உருவாக்கிய பொருளுக்கும் வித்தியாசம் தெரியாதவனே, பகுத்தறிவு உடையவர்க்கும் பயன்படும் பொருளுக்கும் மாறுபாடு அறியாதவனே என்றெல்லாம் கடிந்து கொள்ளவில்லை. மாறாக,
“ஆடு, மாடுகள், குதிரைகள் கொண்டு செல்லப்படும்போது, நோய் வந்துவிட்டால் . நோயுற்றவர்களை அப்புறப்படுத்தி மற்றவர்களை காத்திடுவது போன்ற முறைப்படிதான் தலைவன் நடந்து கொண்டான். ஆகவே, அவனுக்கு நிறுவனம் நட்ட ஈடு தரவேண்டும் என்று தீர்ப்பு அளித்தார்.” வெள்ளைச்சட்டையை உதறி அணிந்து கொண்டார்.
அப்படித்தான் ஈழத்தமிழர்களை காப்பாற்றுகின்றேன் என்று சொல்லிக்கொண்டு எல்லோரையும் சிங்கள காடையர்கள் அழித்தொழிக்கிறார்கள். பிணக்குவியலாக மக்களை மாற்றுகிறார்கள் என்பதனை நினைக்க நினைக்க அவருக்கு ஆத்திரம் பொங்கியது. தலை கவிழ்ந்து தரையையே பார்த்தபடி இருந்தார்.
சகிக்க முடியாது பாதர். எங்களுடன் சேர்ந்து ஒரு குடும்பம் நடந்து வந்தது. அந்த குடும்பத்தில் நான்கு பிள்ளைகள் இருந்தார்கள். நாற்பது வயது மதிக்கத்தக்க ஒருவர் இருந்தார். அவர் அந்த பிள்ளைகளின் தந்தை என்று நினைக்கிறேன். அவரது மனைவி,மாமா மற்றும் தாத்தா ஆகியோரும் அதில் இருந்தார்கள். எங்கும் ஷெல் விழுந்துகொண்டே இருந்தது. தப்பித்தபடியே எங்களைப்போலவே ஓடிக்கொண்டிருந்தார்கள். இடறிவிழுந்த குழந்தையையும் அள்ளிக்கொண்டு மறைவிடம் தேடினார்கள். ஷெல் விழந்தது. அவர்கள் நின்ற இடத்தில் ஒரே ஒரு ஷெல் விழுந்தது. அந்த நபர் இறந்தார். அவரது மனைவி, மாமா, தாத்தா எல்லோருமே இறந்தனர் நான்கு பிள்ளைகளும் அனாதையாகி நின்றார்கள் என்று சொல்லி வார்த்தையை முடிக்க முடியாமல் கேவிக்கேவி அழுதார்.
உடல் காயப்பட்டவர்களை ரக்குகளில் தூக்கி போட்டு போனாங்கள். அவர்கள் எழுப்பிய உயிர்க்குரல் இருக்கின்றதே …அப்பப்பா நினைச்சு பார்க்க முடியாதது…எங்கும் சதைத்துகள்களாய் இறைச்சிக்கடை மாதிரித்தான் இருந்தது பாதர். பதினான்கு பதினைந்து வயது பிள்ளை ஒருத்தி தான் சாகப்போற நேரத்திலயும் தன் பெற்றோர் மற்றும் சகோதரர்களை நினைத்து துடித்து கதறியது இன்னும் என்னை என்னமோ செய்கிறது என்ற தன் ஏக்கத்தைக் கூறி மிரட்சியோடு இருந்தார்.
ஒரு பெரியவர் தன்னுடன் மூன்று இளவயது பிள்ளைகளுடன் எங்களுடன் இருப்பதை நாங்கள் நின்று மூச்சு வாங்கியபோது பார்த்தோம். தம் பிள்ளைகளின் குடல் நனைக்க பாண்கூட இல்லாமல் துடிதுடித்தது தன் பிறப்பை நினைத்து கதறினார். அவசர அவசரமாக மற்றவர்களிடம் ஓடி கையேந்தி நின்றார். தான தர்மத்திற்கு பெயர்போன எங்களுக்கு இருந்ததை மட்டுமே பகிர முடிந்தது. அடுத்த வேளை உணவு இருக்கலாம். நமது உயிர் இருக்குமா என்ற உத்தரவாதம் இல்லாத நிலையில் இருந்த எல்லோரும் பகிர்ந்ததால்தான் எம் பிள்ளைகளும் உணவுச்சுவை மறக்காது வழிநடந்தார்கள்.
வலைஞர்மடத்தில் இருந்நு இடம்பெயர்ந்தபோது மேற்றானியார் எங்களுக்குத் தேவையான உதவிகள் சிலவற்றை செய்தார். அங்கும் இருக்கமுடியாது என்றபோது அங்கிருந்து அனைத்து குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு மாத்தளன் சென்றோம். மாத்தளனிலும் ஷெல்லடி அதிகரித்தவுடன் அனைவரையும் அழைத்துக்கொண்டு அருட்தந்தையர் முள்ளிவாய்க்கால் பக்கமாக நகர்ந்தார்கள்.
தாங்கள் பார்த்துக்கொள்வதாக உறுதியளித்துவிட்டு என்னை அனுப்பிவிட்டார்கள். செல்ல மனமின்றி நானும் மூன்று அருட் சகோதரிகளும் சிறிய கப்பலில் ஏறி இரவோடு இரவாக விமானங்களின் வெளிச்சத்தில் புல்மோட்டை என்னுமிடத்தில் வந்து இறங்கினோம். அங்கே கல்வி இலாகா அலுவலகமாக மகாவித்தியாலயக் கட்டடம் இருந்தது. அங்கே எங்களை அடைத்து வைத்தார்கள். ஏறக்குறைய ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் அங்கிருந்தார்கள். மூன்று நாள் சிறை வாசத்திற்கு பிறகு அருட் சகோதரிகளை விட்டு விட்டார்கள். எங்களை காமினி முகாமில் சிறை வைத்தார்கள். இருபது நாட்கள் அங்கிருந்த நான் அருட் தந்தையர்களின் தலையீட்டால் விடுவிக்கப்பட்டேன்.
குழந்தையர், அருட்தந்தையர்களின் கரம்பற்றி பாதுகாப்புதேடி முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் சென்றார்கள். இப்பகுதியில்தான் 50,000 இற்கு மேற்பட்ட மக்களை சிங்கள காடையன் கொன்று குவித்தான். அக்கொலைக்களம் நோக்கி எம் பிள்ளைகள் அனைவரும் இடம் பெயர்ந்தார்கள். அங்கே சொல்லெண்ணா துன்பத்துக்கு ஆளானார்கள். பெரிய அவலங்களை சந்தித்தார்கள்.
சுற்றி குண்டுகள் விழுந்த நேரங்களில் பிள்ளைகள் தங்களைக் கட்டிப்பிடித்துக்கொண்டு தங்களுள் யாரும் களப்பலி ஆகிவிடக்கூடாதென்று அச்சத்துடன் வானையே பார்த்துக்கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு வினாடியும் யுகம்போல கடந்தது. ஆயுதங்கள் குறைவாக இருந்தாலும், ஆட்பலம் குன்றினாலும் சர்வதேசம் கைவிட்டாலும், அண்டை நாடுகள் ஆயுத அரண் அமைத்தாலும் கடைசிவரை போராடிய எம்மவர்கள் எம் போராளிகள் ஒரு கணம் யோசித்தார்கள். சிங்கள காடைகள் மக்களை மொத்தமாக அழித்துவிடுவார்களோ என்று துடிதுடித்து பின்வாங்கினார்கள். அப்போது மக்களை இராணுவம் சுற்றி வழைத்தது. அந்த வளையத்திற்குள் எம்பிள்ளைகளும் அகப்பட்டார்கள்.
எங்கள் குழந்தைகள் அனைவரையும் வவுனியாவிற்கு அழைத்து வந்தார்கள். அங்கிருந்த முகாம் ஒன்றில் அடைத்து வைத்தார்கள். அது வலையம் நான்கு எனப்பட்டது. ஓராண்டு அங்கிருந்து பிறகு பலரின் முன் முயற்சிக்கு பிறகு விடுவிக்கப்பட்டார்கள். படபடப்பு மிகுந்த போர்க்கால நினைவுகளுடன் நடு இரவில் எழுந்து கதறிய அனுபவங்கள் அவர்களுக்கு உண்டு. எவர் மீதும் நம்பிக்கை இல்லாத வறட்சி உணர்வு உண்டு. கை நடுக்கங்கள் உண்டு. மேசை விழுவதையும் உணவு தட்டு தடுமாறுவதையும் கேட்டு அலறும் நிலை இருக்கிறது. உணவு இன்றி செத்தவர்களின் ஏக்கப் பெருமூச்சுக்களை நினைத்து முகம் வெளிறி இருக்கிறார்கள். இரத்தமே காட்சிகளான வெளியில் நடந்து வந்தவர்களுக்கு சிகப்பு நிறமே வேதனைக்குரியதாக இருக்கின்றது.
தொடர்ந்து பேசியவர் தம் ஆதங்கத்திற்கு நடுவில் சில ஆண்டுகள் முன்னோக்கி சென்றார். ஒருமுறை தந்தை செல்வா அவர்கள், தமிழனைக் காப்பாற்ற ஆண்டவனால்தான் முடியும் என்றார். காலப்போக்கில் மக்களிடம் இறைநம்பிக்கையும் குறைஞ்சுபோச்சு பாதர். கடவுள் இல்லை நமக்குதான் எல்லாம் தெரியும் என்று சிலர் வாழ்ந்திருந்தார்கள். ஆனால் எம் பிள்ளைகள் யாரையும் அழியவிடாமல் இறைவன் காப்பாற்றினார். அன்று எகிப்தில் இருந்தது, வாக்களிக்கப்பட்ட கானான் தேசத்திற்கு இடம்பெயர்ந்த இஸ்ரேலிய மக்களுடன் இருந்து வழிநடத்தியது போல எங்களுடனும் இறைவன் உடனிருந்தார் என்ற தமது விசுவாசத்தை வெளிப்படுத்தினார்.
எங்களுடன் இருக்கும் குழந்தைகளுக்கு சொல்வது போலவே இனிவரும் பிள்ளைகளுக்கும் நாங்கள் சிலவற்றை சொல்ல ஆரம்பித்திருக்கின்றோம் பாதர். இவர்களது, தாய் தகப்பன் செய்த தியாகங்கள் சுதந்திர மண்ணுக்காக அவர்கள் சிந்திய இரத்த துளிகள். உயிர் மாத்திரமே ஆயுதமாக இருந்த வேளையில் அதையே ஆயுதம் தாங்கி ஆனந்தமாக சமர் புரிந்த சகோதரங்கள் அனைவரையும் பற்றி சொல்லிக்கொண்டிருக்கின்றோம்.
வரலாற்றை மறக்காத இனம் எப்பாடு பட்டாலும் விடுதலையை ஒருநாள் நிச்சம் வென்றெடுக்கும் என்ற நம்பிக்கையை வரலாறு காட்டும் புனிதத்துவத்தை எடுத்தியம்பிகின்றோம். மேற்கில் மறையும் சூரியின் கிழக்கில் எழுந்தே ஆகவேண்டும். பறவைகள் தரைக்கு வந்தே ஆகவேண்டும். மக்கள் சக்தி எப்போதும் வெற்றியின் சக்தி. இதுதானே பாதர் நியதி என்றார். நான் கையெடுத்து கும்பிட்டேன்.
(சந்திப்போமா….)
sm.seelan@yahoo.com
அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை