வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, January 8, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 7 (தோல்வி அல்ல தொய்வு)

 

மீண்டும் என் அலைவரிசைக்கே என் மனம் வந்தது. விரைவாக விசாரணை செய்துவிட்டு இன்றைக்கு விட்டு விடுவான் நாளைக்கு விட்டு விடுவான் என்று நாட்களை எண்ணிக்கொண்டே இருந்தேன். ஆனால் நான் போன முதல் மாதத்தில் ஒரு விசாரணை செய்த பிறகு மீண்டும் 2010 மார்கழி மாதம் தான் இரண்டாவது விசாரணை செய்தார்கள். அதன் பிறகும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. ஏன் எங்களை வைத்திருக்கிறான் என்ன செய்யத் திட்டமிட்டிருக்கிறான் என்று நினைத்தாலும் அந்த நேரத்தில் ஒன்றும் தோன்றவில்லை. மூளை மரத்துபோனதுபோலதான் இருந்தது.

இன்னொரு பக்கம் என் மனைவியும் பிள்ளைகளும் எங்கே இருக்கிறார்கள். எந்த முகாமில் என்ன செய்கிறார்கள் என்ற பதைபதைப்பும் கூடிக்கொண்டே இருந்தது. தனி ஆளாக இருக்கும் அவள் நின்மதியாக கண்டிப்பாக என்னை விட்டு இருக்கமாட்டாள் என்பது எனக்குத் தெரியும். அந்த நேரங்களில் ஆறுதல் சொல்ல ஆட்கள் உண்டா என்று தெரியாத நிலை.
முதலாமாண்டு பிறந்தநாள் கூட வராத என் மகள் சுகமாய் இருக்கிறாளா அல்லது சுகவீனமாகய் இருக்கிறார்களா… வேளா வேளைக்கு உணவு கிடைக்கிறதா… படுத்து உறங்க இடம் இருக்கிறதா… எனது அப்பாவைப் பார்க்க வேண்டும் என்ற ஏக்கத்தில் ஏங்கிப்போய்விட்டாளோ…. போன்ற குழப்பமும் பயமும் என்னை சூழ்ந்து கொண்டது. எப்போது அவர்களைப் பார்க்க முடியும் என் அன்பு மகளை வாஞ்சையோடு அள்ளி எடுத்து கொஞ்சமுடியும் என்று ஏங்கி நான் தூங்காத இரவுகள் நிறைய உண்டு.
எங்களால் உறவினர்களை தேடிச்செல்ல முடியாது. எங்கிருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. எங்களை அடைத்து வைத்திருக்கும் இராணுவத்தினருக்கும் தெரியாது. கடிதம் தான் எழுதி அனுப்ப முடியும். எங்கே வதைபடுகிறார்கள் என்பது தெரியாமல் எப்படி கடிதம் எழுதினோம் என்று கேட்கிறீர்களா? எங்கெல்லாம் முகாம் இருக்கிறதோ அங்கெல்லாம் கடிதம் எழுதி அனுப்புவோம். ஒரு முகாமிற்கு நான் அனுப்பிய கடிதத்திற்குரியவர் அங்கிருந்தால் அங்கிருந்து பதில் வரும். பதில் வராதபோது அவர்கள் அங்கில்லை என்பது தெரிந்துவிடும். பிறகு அடுத்த முகாமிற்கு அனுப்புவோம். அடுத்து… அடுத்து என்று அது அனுமார் வால் போல நீண்டு கொண்டே இருக்கும்.
அதே போல எத்தனையோ கடிதங்கள் எங்கள் முகாமிற்கும் வந்திருக்கிறது. சில வேளைகளில் அன்றே வந்து அதற்காக, ஆள் இருக்கிறார்களா என்று கேட்பார்கள். சில நாட்களில் வந்த கடிதங்கள் கேட்பாரற்று கிடக்கும். நாங்கள் கேட்டபிறகுதான் தருவார்கள். ஒருவேளை யாரோ ஒரு அன்பார்ந்தவரின் குடும்ப பாசங்களை தனி நபர்களின் ஏக்கத் தேடல்களைச் சுமந்து வந்த கடிதத்திற்குரியவர் அங்கு இல்லாத போது அவை அனைத்தையும் குப்பையில் கொட்டிவிடுவார்கள். கழுதைக்கு கற்பூர வாசனை தெரியாது என்பது முற்றிலும் உண்மைதான்.
அந்தக் கடிதங்களில் நலம் விசாரிக்க மட்டும் தான் முடியும். நடக்கும் கொடுமைகள் பற்றியோ அங்கிருக்கும் மற்றவர்களின் அனுபவங்கள் பற்றியோ ஏதும் எழுத முடியாது. எங்களை பற்றிய குறிப்புகள் மற்றும் பெறுபவர்களின் குறிப்புகள் மட்டும்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் சொல்லிக் சொல்லிக் கொண்டிருக்கும் போதே மலேசியாவில் நடந்த கொடுமை சிந்தைக்குள் சிலிர்த்திட்டது. மலேசியா, ஜப்பானின் கைவசம் வந்த பிறகு மலேசியா – சயாம் – பர்மா இடையே தொடர் வண்டிப்பாதை அமைக்க ஜப்பானியர் விரும்பினார்கள். அதில் மலேசியாவில் இருந்து சயாம் வரை ஏற்கனவே தொடர் வண்டிப்பாதை இருந்தது. எனவே சயாம்-பர்மா இடையே 416 கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாதை அமைக்க திட்டமிட்டு உடனடியாக செயலில் இறங்கினார்கள்.
மலாயர்கள், மலாயாவிற்குத் தோட்டத் தொழிலாளர்களாகப் போயிருந்த இந்திய தமிழர்கள், மேலும் சீனர்கள், சயாம், பர்மா, லாவோஸ், இலங்கை, சீனா, தைவான், வியட்னாம், கொரியா, பிலிப்பைன்ஸ், புருணை, ஜாவா போன்ற ஆசிய நாட்டு தொழிலாளர்கள் மற்றும் பிரிட்டன், ஆஸ்ரேலியா, அமெரிக்கா, நியசிலாந்து போன்ற நாடுகளின் போர்க்கைதிகளை வைத்து ஜப்பான் நாட்டின் தொடர் வண்டி பாதை அமைத்து முடித்தார்கள்.
சயாம்-பர்மா தொடர்வண்டிப்பாதை எனப்படும் அது இன்று மரண இரயிலின் பாதை என்றே அழைக்கப்படுகிறது. காரணம் ஐந்து ஆண்டுகளில் கட்டி முடிக்கவேண்டிய இப்பாலம் ஒன்றரை ஆண்டுகளில் 1943 அக்ரோபர் 25 அன்று முடிக்கப்பட்டு. சுமார் இரண்டரை லட்சம் பேர் மாண்டழிந்தனர் இந்த பாலத்தின் உருவாக்கத்தில்.
அங்கிருந்த ஐரோப்பிய சிறைக்கைதிகளுக்கு சிறப்பு சலுகை ஒன்றை ஜப்பானியர் வாங்கியிருந்தார்கள். தாங்கள் உயிருடன் இருப்பதை தங்கள் உறவினர்களுக்கு தெரிவிக்க குறிப்பு அட்டை ஒன்றை கொடுத்தார்கள். அதுவும் வருடத்திற்கு ஒரு தடவைதான். அதில் அனுப்புனரின் பெயர், தங்கியிருக்கும் முகாமின் பெயர், இரண்டுவரிச் செய்தி, பெறுபவரின் பெயர்,முகவரி முதலியவை மட்டுமே இருக்கும். இச்சலுகையும் ஆசியத் தொழிலாளிகளுக்கு மறுக்கப்பட்டிருந்தது.
தொடர்ந்து பேசிய அவர், நாங்கள் ஐந்தாம் மாதம் சரணடைந்ததை ஏற்கனவே சொன்னேன். இப்படி கடிதம் போட்டு போட்டு கடைசியா எட்டாம் மாதம் தான் என் மனைவி எங்கே இருக்கிறாள் என்பதையே கண்டு பிடித்தேன்.
நாட்கள் ஆக ஆக இதுதான் வாழ்க்கையோ என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம். சோகம் மறைய மனம் விட்டு ஆறுதலாக கதைக்கவும் பயம். நம்பி யாரிடமும் கதைக்கவும் முடியாது. எவர் எப்படிப்பட்டவர் என்று தெரியாது தானே. இரண்டு நாட்கள் கூட இருந்தபிறகு ஒருவரைப்பற்றி தெரிந்து கொள்ளலாம்தான். ஆனாலும் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டி இருந்தது. எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ யார் கண்டது. எங்களது முகாமில் எனது சினேகிதப் பெடியங்கள் மூன்றுபேர் இருந்ததால் அவர்களிடம் கதைத்துக் கொண்டேன். அது புண்பட்ட மனதுக்கு பூபோட்ட மாதரி இருந்தது.
யாராவது நோய் வந்து படுத்து விட்டால் அதிக சிரத்தை எடுத்தெல்லாம் கவனிக்க மாட்டார்கள். எப்போதாவது அங்கு வரும் மருத்துவர் பார்த்து ஏதாவது மருந்து கொடுத்தால் உண்டு இல்லாவிட்டால் அதுவும் இருக்காது. புறக்கணிப்பையும் புண்படுத்தலையும் வழங்குபவர்களிடம் நாம் எத்தனை முறை கேட்டாலும் உறைக்கவும் உறைக்காது. அவதியில் முனகிக் கொண்டிருப்பவர்களுக்கு அருகில் இருந்தால் கல்லும் கூட கண்ணீர் வடிக்கும் ஆனால் கண்களே கல்லாய் இருக்கும் சிங்களவர்களுக்கு அந்த கருணை மொழியெல்லாம் புரியவே புரியாது.
உணவு காரணமாகவோ அல்லது தொற்று நோய் காரணமாகவோ மொத்தமாக நோய் வந்துவிட்டதென்றால் மருத்துவ மனைக்கு கூட்டிச் செல்வார்கள் தான். ஆனால், ஒரு நாளைக்கு பத்து பேரை மட்டும்தான் கொண்டு போவார்கள். மற்றவர்கள் அடுத்த நாள்வரை அல்லலுற வேண்டியதுதான்.
இரவு நேரங்களில் திடீரென உடல் நிலை சரியில்லை என்றால் கண்டு கொள்ளவேமாட்டார்கள். கண்டுகொள்ளாமல் இருப்பதன் வழியாக விடியும் மட்டும் காத்திருக்க சொல்லுவார்கள். காலையிலும் அவர்களது வாகனம் இருந்தால்தான் ஆச்சு. காலதாமதம் ஆனாலும் உடனே போக முடியும். இல்லாவிட்டால் ஆம்புலன்ஸ் வரும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
உறங்க அவர்கள் கொடுத்த இடத்தைப் பற்றியெல்லாம் கேட்காதீங்க பாதர். அது ஒரு சிறைக்கூடமாதிரிதான். புரண்டெல்லாம் தூங்க முடியாது. வரிசையாகச் சாரைப்பாம்பு மாதிரி படுத்துக் கிடக்க வேண்டியதுதான். ஏன் வியர்வை உங்களையும் உங்கள் வியர்வை என்னையும் பாடாய் படுத்தும். என்ன செய்ய?
அங்கே அவர்கள் தந்த உணவு வாய்க்கு விளங்கவே விளங்காது. வெறும் முள்ளங்கியும் சோறும்தான். வேகாத முள்ளங்கியை எப்படி தின்ன ஆரம்பித்தோம் என்பதெல்லாம் சிதம்பர இரகசியம் மாதிரி யாருக்கும் இன்றும் தெரியாத புதிர். எப்பவாவது அதில் ருசி இருக்கும். மறந்துபோன உணர்வுகளுக்கு அதுகூட பசியில் தெரியாது.
தண்ணீருக்கும் பிரச்சனை இருந்தது. பலநாட்கள் அவர்கள் தண்ணீர் தருவார்கள் என்று காத்திருந்தோம் என்றால் இன்று உயிருடன் நீங்கள் என்னைப் பார்க்க முடியாது. நாங்களாகவே ஆங்காங்கே சின்ன குழிகளைத் தோண்டி அதில் தண்ணீர் எடுத்து எங்களது தாகம் தணித்தோம். அதையே புழக்கத்திற்கும் அதிகமாக பயன்படுத்தினோம்.
மலசல கூட வசதி மிகவும் குறைவு. நாநூற்றம்பதிற்கு மேற்பட்டோர் இருந்த அந்த முகாமில் மொத்தமே 8 மலசலகூடம்தான் இருந்தது. மலசலக்குழி நிறைந்துவிட்டால் அதை உடனே எடுக்கமாட்டார்கள். நாங்கள் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்பது அவர்களது எண்ணம் இல்லைத்தானே அதனால் அதைச் சுத்தப்படுத்த சிலகாலம் பிடிக்கும். அதுவரை நாங்கள் மூக்கை பிடித்தபடிதான் வாழ வேண்டும். அங்கிருந்த நாட்களில் எப்போதோ பெய்யும் கோடை மழை போல எச்சில் கையால் ஈ ஓட்டுவதுபோல சில காரியங்கள் நடந்தது. தொழில்பயிற்சி கற்றுத்தருகின்றோம் என்று சொல்லி பதினைந்து நாள் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அதில் ஐந்துநாள் கணனி பயிற்சி கொடுத்தார்கள். எல்லோரும் அதனை ஓன் செய்து ஓவ் செய்ய மட்டும் கற்றுக்கொண்டோம்.
அதற்குள் அடுத்த ஐந்துநாள் வந்தது. அதில் ஆங்கில வகுப்பு எடுத்தார்கள். நாங்கள் என்ன அதிகாரியாக வேலை கேட்கப்போகின்றோமா அல்லது கேட்டால் தான் கொடுத்து விடுவார்களா என்று ஆதங்கத்துடன் பேசினார். இதனை எழுதும்போதே இப்பொழுது இலங்கையில் தற்போது நடந்துவரும் கொடூரசெயற்பாடு நினைவுக்குள் வருகின்றது.
இலங்கையில் தமிழர்களின் வலிமை அனைத்தையும் திட்டமிட்டு சிங்கள ஆட்சியாளர்கள் பறித்து வருவதின் மற்றொரு முகமும் இப்பொழுது நம்மை புதுவகை ஏதிலிகளாக்குகின்றது. எப்படியெனின், அரச பிரதேச செயலகங்களில் இருந்த தமிழ் அதிகாரிகளை பதவியிலிருந்து இடமாற்றம் செய்துவிட்டு அந்த இடங்களில் சிங்களவர்களை நியமிக்கும் அநியாயம் ஆரம்பமாகியிருக்கின்றது. அதுவும் ஏற்கனவே அடிபாடுகளின் அவதாரமாக அலங்கோலப்பட்டு நிற்கும் வன்னிப்பெருநிலப்பரப்பில் ஏன் யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதேச செயலகங்களிலும் உதவி பிரதேச செயலர்களும் சிங்களவர்களாகவே இருக்கும்படி ஒழுங்கமைத்து வருகின்றார்கள்.
எப்படியாவது தமிழர்களை நசுக்கிவிட எத்தணிக்கும் சிங்கள காடையர்களின் சிறுபுத்தி ஆதிக்க வெறி பெரும்பாண்மை பேரிரச்சல் இதன் வழியாக வெளிப்பட்டுள்ளது. தமிழ் மக்கள் தங்களது சொந்த மொழிகளில் தமது பிரச்சனைகளை எடுத்து சொல்லும் உரிமை இழந்து நிற்கின்றார்கள்.
அவரது உணர்வுக்குள் எனது உணர்வு மீண்டும் இணைந்தது. புதினைந்து நாளில் மூன்றாம் ஐந்து நாட்கள் முகாமைத்துவம் (Management) பற்றி வகுப்பெடுத்தார்கள். எதிலும் பிடிப்பில்லாது இருந்த எங்களுக்கு இது ஏதாவது பயனளிக்குமா என்று பார்த்தால் ஒன்றும் இல்லை. மக்களுக்கு இப்படியெல்லாம் செய்யுறோம் என்று சொல்லி வெளிநாடுகளிலிருந்து பணம் பெற்றார்களே செழித்தார்களே ஒழிய எங்களுக்கு அதனால் கிஞ்சித்தும் பயன் இல்லை.
எங்களுக்கு சொந்தமாவது ஆறுதலாக இருந்தது ஜே.ஆர்.எஸ் அமைப்பு சார்பாக எங்களை சந்திக்கவந்த அருட் தந்தையர்களும், அருட் சகோதரிகளுமே. எங்கள்மீது அதிக அக்கறை இருந்தாலும் பல கஷ்ட சோதனைகளையும் தாண்டித்தான் எங்களுக்கு உதவினார்கள். அவர்களுடனுமே நின்மதியாக தனியான இடத்தில் அமர்ந்து பேச முடியாது. துப்பாக்கியுடன் வீரர்கள் அருகிலே நின்றுகொண்டிருப்பார்கள்.
கிறிஸ்தவ மறைப் பணியாளர்களாகிய இந்த அமைப்பினர் கிறிஸ்த்து பிறப்பு மற்றும் புதுவருட நாட்களில் புதிய ஆடையெல்லாம் தந்தாங்க. அத்தியாவசிய பொருட்கள் கொடுத்தார்கள். ஞாயிற்று கிழமைகளில் அவ்வப்போது கறியோடு சுவையான உணவு கொடுத்தார்கள். நியாயத்திற்காக ஒடுக்கப்பட்ட மக்கள் சார்பாக இருக்கும் கடவுள் மற்றும் ஓரங்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்து சிலுவையில் கொலை செய்யப்பட்ட இயேசுவை அறிந்து கொள்ள கடவுளர்களின் உடனிருப்பை உணர்ந்து துன்பியல் நினைவுகளில் இருந்து விடுதலையாக விவிலியம் கொடுத்தார்கள். உண்மையாகவே அதிகமாக எங்களுக்கு உதவியவர்கள் அவர்கள்தான்.
எப்படியோ இரண்டு ஆண்டுகள் ஓடிடுச்சு. என்னையும் விடுதலை செய்திட்டாங்க. எனது மனைவி சில மாதங்களுக்கு முன்னர்தான் விடுதலையாகி இருந்தாங்க. இப்போது வீட்டில் இருக்கின்றேன். ஆனாலும் நின்மதி இல்லை. இப்போது இராணுவத்தினர் வருவார்கள் என்னை மீண்டும் விசாரணைக்கு அழைப்பார்கள் என்று சொல்லத்தெரியவில்லை.
அன்றொருநாள் பேரூந்தில் நான் வந்து கொண்டிருந்தபோது ஒரு வீரன் என்னைப் பார்த்தான். உடனே பேரூந்துக்குள் நுழைந்து வந்து கையெழுத்து போட்டுவிட்டு போ என்றான். வேறு என்ன செய்ய அன்று மாலையே அவர்களது இடத்திற்கு சென்று அவர்கள் சொன்னபடி செய்தேன். வேறு எங்கும் தங்கி வேலை செய்ய முடியவில்லை. கொழும்பு செல்ல வேண்டும் என்றால் அவனிடம் சொல்லிவிட்டுதான் போகவேண்டியுள்ளது. ஒரே உபத்திரமாக உள்ளது.
எல்லா இடமும் இராணுவம் நிற்கின்றது. சாலை நெடுக…சாலைகளின் சந்திப்புக்களில்…. கோவில் வீதிகளில்…கடைத்தெருவில்…வேலைத்தளங்களில்…பாடசாலை அருகில்…எங்கும் இராணுவ முகாமாகவே இருக்கின்றது. இது தேவைதானா…கட்டுப்பாட்டில எங்கட வாழ்க்கை இப்ப அடைபட்டிருக்கு. சொந்த ஊரிலேயே பயத்தோட நடைபிணமாக திரியுறோம். என்று சொன்னவரின் கண்களில் நீர் கசிந்தது.
இயக்கத்தினருக்காக கடையில் வேலை செய்ததில் இருந்து குடும்பத்தை காடுமேடெல்லாம் அழைத்துகொண்டு அரக்கப்பரக்க ஓடியதில் தொடர்ந்து தடுப்பு முகாமில் தான் வாழ்ந்த வாழ்க்கை வரையில் மீண்டும் ஒருமுறை வாழ்ந்தது போல என்னிடம் பேசிய இளைஞனிடம் கடைசியாக கேட்டேன்.
இனி என்ன நடக்கும் என்று நினைக்கின்றீர்கள். எல்லாம்தான் முடிந்துவிட்டதே?. யாராவது தொடுவார்களா என்று காத்திருந்து தொட்டவுடன் உதிரும் பூபோல உடனே பதில் சொன்னான். நிச்சயம் மாற்றம் வரும் பாதர். நீங்கள் பார்ப்பது எல்லாம் மாறக்கூடியது. நாங்கள் அடைந்தது தோல்வி அல்ல தொய்வுதான்.
“ஒரு புதிய மனிதனின் தோற்றம் ஆரம்பமாகின்றது. இதனை சரியாக புரிந்து கொண்டு அவனிடம் நாம் அனைவரும் மிக அருகில் நெருங்க வேண்டியுள்ளது. அதற்கு நாம் ஒவ்வொருவரும், அவரவர் பங்கிற்கு கேட்கப்படுகின்ற தியாகங்களை வழங்க வேண்டும்” என்ற சேகுவேராவின் குரல் அப்போது மீண்டும் என் செவிப்பறைகளில் ஒலித்தது.
(சந்திப்போமா….)
அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
sm.seelan@yahoo.com

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை