வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, January 14, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 8 (அனலில் இட்ட புழுக்களாய் துடித்தோம்)

 

குழந்தைகளின் உலகம் உன்னதமானது. கத்தி ஆர்ப்பரித்தாலும் கண்ணீரின்றி அழுவார்கள். அன்போடு அழைக்கும் பகைவர்களையும் நம்பிச் செல்வார்கள். கொஞ்சமாய் இருந்தாலும் நெஞ்சம் நிறைந்து மகிழ்வார்கள். சின்னச் சின்ன கீறல்களையும் தடுமாற்றங்களையும் மறந்து உற்சாகம் தருவார்கள். மழலை மொழியில் இறைவனின் குரலொலி இசைப்பார்கள். குழந்தைகள் இருந்தால் இரைச்சல் இன்னிசையாகின்றது. சிந்தும் உணவுகள் ரங்கோலியாகின்றது. அவர்களது சேட்டைகள் கூட நகைச்சுவை நாடகமாகின்றது. ஆனந்தமே தங்கள் அகராதியாக பிறக்கும் குழந்தைகள் தங்களுக்குள் சோகங்களை சொந்தமாக்கும் நிலை ஏற்படும்போது அரங்கேறா கலைகளாக தொலைந்து போகின்றார்கள். வாழ்வில் சுவை இழந்து போகின்றார்கள். கவலைகளுக்கு காரண காரியங்கள் பல இருப்பினும் பெற்றோரை இழப்பதும், சகோதரர்களை இழப்பதுமே உச்சபச்ச சோகங்களாகும். வாளேந்தி போரிட்ட காலங்களைவிட, ஈழ மண்ணில் சிங்கள வஞ்சனைப்பேய்கள் சதிராடிய போர்க்களங்களில் இவை இன்னும் அதிகம் அதிகம்.
சொந்தங்களை இழந்தாலும் சோகங்கள் நிறைந்தாலும் வற்றாத அன்பின் அரருவியாய் திகழும் குழந்தைகளை பராமரித்துவரும் பொறுப்பாளர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆதரவற்ற மாணவ மாணவிகளை கவனித்து அவர்களுக்கு தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து அன்பொழுக வளர்ப்பது இறைவனின் அருட்கரம் உடையவர்களால் மட்டுமே இயலக்கூடிய ஒன்று. அப்படியான இறைகரத்தை அம்மனிதன் வழியாக கண்டேன். அவர் மனதில் உறைந்த போர்களக் காட்சிகள் என்னைப் பார்த்ததும் உருக ஆரம்பித்தன. காடென்றும் மேடென்றும் கருதாது பிள்ளைகளை கரம் பற்றி சென்ற விரல்கள் நடுங்க தொடங்கின. உதடுகள் துயர காவியம் கதைக்க ஆயத்தமாயின.
vanni1004சிறுபான்மை இனமாக இருப்பதால் பெரும்பான்மையினனாக இருக்கிற சிங்களவன் எங்களை அடித்துக்கொண்டிருக்கின்றான். எல்லாத்தையும் இழந்து இடம்பெயர்ந்து இடம் பெயர்ந்து துன்பங்களை சந்திச்சு ஒவ்வொரு இடமாக ஓடிக்கொண்டே இருக்கின்றோம். நாங்கள் ஓடி நின்ற இடங்களில் எல்லாம் பல இடங்களில் இருந்தும் இடம்பெயர்ந்து வந்தவர்களும் சூழநிற்பார்கள். யார் என்ற விபரம் தெரியாவிட்டாலும் ஆதரவுக்குரலாகவே ஒவ்வொருவரும் நின்றோம். எம் மக்கள் பட்ட கஷ்டங்கள் நிறைய பாதர்…. இப்ப கூட பயங்கரமான சூழலில்தான் நான் இருக்கின்றேன். விரக்த்தியின் விளிம்பில் விக்கித்து நின்ற வார்த்தைகள் மெல்ல வடிவிழந்து வந்து விழுந்தன.
எனது கண்காணிப்பில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் இருந்தார்கள். தகப்பனை அல்லது தாயை முன்பகுதி சண்டையில் சாவுகொடுத்தவர்களும் இருந்தார்கள். ஈழ மண்ணின் வாசம் அறியவும் சுவாசம் காக்கவும் தன்னை உலகிற்கு வெளிக்கொணர்ந்த தெய்வங்கள் எங்கிருக்கிறார்கள் என்ற எந்த முகவரியும் தெரியாதவர்கள் இருந்தார்கள். எல்லோருக்கும் ஆதரவாக அம்மை அப்பனாக இறைவன் எங்களுடன் இருந்தார்.
வானில் வட்டமிட்ட போர் விமானங்கள் மண்ணில் எச்சமிட ஆரம்பித்த நிலையில் எங்கும் ஒரே பேரவலமே ஒலித்தது. பேரச்சம் எங்கள் பிள்ளைகளை கவ்விக்கொண்டது. இயன்றவரை எம் இல்லத்திலேயே இருந்த நாங்கள் இயலாமை வருத்தியபோது கட்டிய முடிச்சுக்களுடன் இடம்பெயர ஆரம்பித்தோம். யுத்ததில் மொத்தமாக அழிந்துவிடக்கூடாதென்ற படபடப்பில் ஓரிரு குழந்தைகளை உடையவர்களே தத்தளிக்கும் வேளையில் ஐம்பது குழந்தைகளோடு நாங்கள் புறப்பட்டோம்.
ஷெல்களில் எங்கள் குழந்தைகள் சிதைந்து விடக்கூடாது ஆண்டவரே என்று மன்றாடியபடியே சென்றோம். எத்தனை நாட்கள் நடந்தோம் என்று நினைவில்லை. கால்கள் வதங்கி ஊர்ந்தோம் என்ற ஞாபகமில்லை. தாகத்தால் எப்படியெல்லாம் தவித்திருப்பார்கள் குழந்தைகள் என்று விளக்குவதற்கு வார்த்தைகளில்லை. எங்கும் குண்டு சத்தங்களும் பேரவல கூக்குரல்களும் எழுந்த வனாந்தரத்தில் நடந்தபோது மனம் சுமந்த அச்சத்திற்கு அளவில்லை. ஆனாலும் எம் பிள்ளைகளின் கண்களில் வடியும் கண்ணீருக்குள் தெரியும் நம்பிக்கையுடன் நடந்தோம். அமதிபுரம் என்னுமிடதிற்கு வந்தபோது ஷெல்லடிச்சத்தம் தூரத்தே கேட்டதால் அங்கேயே தங்க முடிவு செய்தோம்.
அங்கே சில உதவிகள் எங்கள் குழந்தைகளுக்கு கிடைத்தது. சிஸ்டர்கள் வந்து உதவினாங்கள். பாதர்கள் எங்களுக்கு ஆறுதலாக இருந்தாங்கள். ஏதோ கிடைத்ததை வைத்து எங்கள் நின்மதியற்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தோம். எத்தனை நாட்கள் அங்கிருந்தோம் என்று சரியாக தெரியவில்லை என்று சொல்லி யோசித்தவர் இரண்டு, மூன்று மாதம்வரை இருந்திருப்போம் என்றார். பிறகு அங்கேயும் ஷெல்லடி விழத்தொடங்கியது. இனியும் இருந்தால் எம் குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதமில்லை என்று விளங்கியதால், அங்கிருந்து நடக்க ஆரம்பித்தோம்.
சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. யார் யாரை அடிக்கிறார்கள் என்று கூடத்தெரியவில்லை. கால்போன போக்கில் நடந்துகொண்டே இருந்தோம். அத்தனை பேருக்கும் பங்கர் வெட்டி அதன்மேல் மறைப்பை ஏற்படுத்தி எங்களை மறைத்துக்கொள்வதற்காக நாங்கள் அடைந்த துயரம் யாருக்கும் இனி ஏற்படக்கூடாது. எமக்கு முன் கடந்து சென்றவர்களை விட்டு சென்ற பங்கர்கள் பல வேளைகளில் எங்கள் உயிர்களை காப்பாற்றின. இரண்டு மணிநேரம் மூன்று மணிநேரம் ஏன் ஆறு மணி நேரம் வரைகூட பங்கருக்குள்ளேயே நாங்கள் முடங்கிக் கிடந்தோம். அமரவும் முடியாமல் சரிவர காலூன்றி இருக்கவும் முடியாமல் அடுத்தவரின் மூச்சுகாற்றின் வெப்பத்தில் எம்பிள்ளைகள் அனலில் இட்ட புழுவாய் தவித்த நிலமைகள் கொடூரமானவை.

நடந்து கொண்டே இருந்த நாங்கள் பிரமந்தனாறு என்னுமிடத்தில் வந்து சற்று இளைப்பாறினோம். அடிப்படைத் தேவைகளுக்குகூட அதிக சிரமப்பட்டோம். அதிலும் பெண் பிள்ளைகளின் நிலமைகள் இன்னும் கவலைக்குரியதாக மாறியது. அவர்களது தேவைக்குரியவைகளை எங்களால் கொடுக்கமுடியவில்லை.
1983 யூலை கலவரத்தினால் இடம்பெயர்ந்தவர்கள் மத்தியில் ஒரு பெண்ணுக்குபிரசவ வலி எடுத்தது. உடன் வந்தவர்கள் தங்களிடம் இருந்த சேலையை பிடித்து மறைத்து கொள்ள அந்த மறைவில் குழந்தையை பெற்றெடுத்து தாயானாள் அப்பெண். ஆனால், அத்தாய் தீட்டென்றும் வலியென்றும் பாராது வேதனையோடு மீண்டும் நடக்க ஆரம்பித்ததை கேட்டு அன்று மெய்சிலிர்த்த நான், இன்று எம்பிள்ளைகளை பார்த்து கண்ணீர் விட்டேன். எப்போதும் எழும் பேரிரைச்சலுக்கு காதைப்பொத்தி கண்ணைமூடி மிரட்சியுடன் இருந்த அவர்களுடன் ஒவ்வொருவரும் அமைதியாக பேசவேண்டியிருந்தது. புல வேளைகளில் ஒருவருக்கு மற்றவர்களது குரலோசைகூட திடீர் அச்சத்தை கொடுத்தது.
குறிக்கோளை றோக்கி பயணிக்க வேண்டிய பருவத்தில் இருந்த அவர்களை புதிய திசையநோக்கி குண்டுகள் வழிநடத்திக்கொண்டிருந்தன. அப்படியாக தேவிபுரம் வந்து சேர்ந்தோம். நாட்கள் ஆக ஆக ஷெல்கள் அருகருகே வந்துவிழ ஆரம்பித்தன. சாப்பிடப்போகும் நேரம் வந்தபோதெல்லாம் உணவுக்கான எண்ணத்தைவிட உயிருக்கான ஏக்கமே எல்லோர் உணர்விலும் கலந்திருந்தது. பிறகு அங்கிருந்து இடம்பெயர்ந்து, சுதந்திரபுரம் போய்ச்சேர்ந்தோம். கூட்டம் கூட்டமாக மக்கள் ஓடிக்கொண்டே இருந்தார்கள்.
யார் யார் எந்த ஊர் என்றெல்லாம் கேட்கும் நிலையில் யாரும் இல்லை. நடக்கவும் ஓடவும் சக்திபெறக் கிடைத்த உதவிகளைப்பெற்றுக்கொண்டு அரக்கப்பரக்க சென்றுகொண்டே இருந்தோம். பிள்ளைகளை கூட்டிச்செல்ல முடியாமல் பெற்றோர்கள் பட்ட அவதி கொஞ்ச நஞ்சமல்ல. தங்கள் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மகன்களுடனும் மகள்களுடனும் அவர்கள் நடாத்திய பாசப்போராட்டம் தனி இலக்கியமாக்கப்பட வேண்டியவை.
நாங்கள் மட்டுமா ஓடினோம்…. மாடுகளும் நாய்களும் பூனைகளும் தான் என்று சொல்லி சற்று நிறுத்தியவர் அவைகளும் அகதிகள்தானே? உணவுக்கு அவைகள் எங்கு செல்வது? பாசத்தை தவிர வேறொன்றையும் கொடுத்து வழக்கமில்லாது அன்புடன் வீடுகளில் திரிந்த அவைகளின் துயரத்தை என்னவென்று சொல்வது? என்று சொல்லி கண்ணீரைத்துடைத்துக்கொண்டார்.
பிள்ளைகளுடன் நாங்கள் இரணைப்பாலை வந்தடைந்தோம். அந்த இடத்தில் ஒரு சேர்ச் இருந்தது. அதில் தங்கினோம். பாதர்கள் கொஞ்சம் உதவி செய்தார்கள். காய்ந்த நிலத்தை நனைந்த பனிபோல அவர்களது உதவி எங்களை ஈரப்படுத்தியது. அங்கேயும் இருக்கமுடியாமல் ஓய்ந்த பாதங்களுடன் விரைந்து இடம்பெயர ஆரம்பித்தோம். தொடர்ந்து ஓரிடத்தில் இருக்க முடியாததால் போய்க்கொண்டே இருந்தோம் என்றுகூறி சற்று வேதனை நினைவலையை நிறுத்தினார்.
முந்திய நாள் என்னை வந்து சந்தித்து, தனது கவிதையை என்னிடம் கொடுத்த தமிழ் பாரதி வின்சென்ட்டின்(ஈழத்தில் பிறந்ததால் சொந்தப்பெயரில் படைப்புக்களை வெளியிட முடியாத படைப்பாளிகள் பலரில் இவரும் ஒருவர்) கவிதையில் ஒன்று எனக்கு நினைவுக்கு வந்தது.. இவை மட்டுமா என்று தலைபிட்ட கவிதை.
தொட்டும் மழையும்
கொடும் பனியும்
உடலை வாட்டும்
என்றாலும் தொடரும்
இடப்பெயர்வுகள்.
பேரூந்தில்லை படகில்லை
கால்கள் ஓட்டமெடக்கும்
ஒரு கையில் நிவாரணம்
மறுகையில் மருந்துகள்
கண்கொள்ளாக் காட்சியாக
காட்சிப் பெட்டிகளில்
ஒளிபரப்பபடும்
இப்படியும் சொல்லாம்
இன்னமும் சொல்லாம்
இங்குள்ளவர் நினைவலைகளை.
கனத்த இதயத்துடன் தொடர்ந்து பேசியவர், எங்கும் பிணக்குவியல் பாதர். யாருடைய உடல் என்று யாருக்கும் தெரியாதபடிக்கு எங்கும் சிதறிக்கிடக்கும். குடல் வெளியே வந்த உடல்களைப்பார்த்து விக்கித்து நின்றோம். துலையில் ஷெல்லடிபட்டுக் கிடந்தார்கள். ஆங்காங்கே கிழிந்த சதைகளுடன் நைந்த துணிபோல நின்றார்கள். ஆடை கசங்காமல் வாழ்ந்த எம் யுவதிகள் சிங்களவனின் கொடும் ஆசையில் கலைந்து உருக்குலைந்து மண்ணோடு மண்ணாய் வீரம் முளைத்துக்கிடந்தார்கள். ஷெல் துளைத்ததால் கை கால்களை இழந்தவர்கள் நிறையப்பேர் கண்ணீர் காயும் மட்டும் அழுதுவிட்டு மிரட்சியுடன் இருந்தார்கள்… யாரை யார் சுமப்பது என்ற குழப்பம் ஆட்சி செலுத்திய நேரமது.
vanni1005
இப்படி நடக்குமா என்று ஆரம்பத்தில் அலறி அழுத நாங்கள், நாட்போக்கில் சத்தமின்றி கண்ணீர்விட்டு விம்மி விம்மி அழுதோம். ஆனால் எல்லாம் கைமீறியபோது எங்களால் அழ முடியவில்லை ஏன்று கூறி நிறுத்தியபோது 29.05.2009 சங்கொலி வாரஇதழில் தான் எழுதிய கடிதத்தில்
“பெரும் துன்பம் தாக்கும்போது, கண்களில் நீர் பொங்குவது இல்லை. ஏனெனில் அதுவும் துயரத்தால் உறைந்து விடுகின்றது”, என்ற ஈழ மக்களின் துயர் உரைக்கும் உன்னத மனிதர் வைகோவின் வரிகள் நினைவுக்கு வந்து துன்பத்தை அதிகரித்தது.
தாங்கள் கண்ட போர்கள துயர நிகழ்வுகள் சிலவற்றை சொல்லுங்களே என்று கேட்டபோது, அப்படி நிறையப்பாதர் என்று சொல்லி பெருமூச்சு விட்டு கண்களை மூடிக்கொண்டார். துக்கத்தை உள்ளத்தில் புதைக்க முயற்சிக்கிறார் என்பது தெரிந்தது. அமைதியாக இருந்தேன்.
வலையர் மடத்தில் இரண்டு பெண்பிள்ளைகளின் தாயை பார்த்தேன் பாதர், உள்ளே ஓடவேண்டிய இரத்தம் அனைத்தும் மொத்தமா வெளியே ஓடிக்கொண்டிருந்தது. அருகில் இருந்த இரண்டு பெண் பிள்ளைகளும் தம் தாய்க்கு என்ன நேர்கிறது என்பது என்ற எந்த புரிதலும் இன்றி விளையாடிக்கொண்டிருந்தார்கள். துடிதுடித்துக்கொண்டிருந்த  உயிர் துடிப்பு மெல்ல மெல்ல குறைந்து மொத்தமாய் நின்றது. இரண்டு மழலைகளையும் விட்டு விட்டு அந்த தாய் செத்துப்போனாள். எல்லோரும் அழுதோம். ஏனென்று புரியாத குழந்தைகள் இருவரும் தாயின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்…..என்னால சகிக்க முடியல்ல பாதர்…. என்று வார்த்தை வராது அழுதார். கண்ணாடியை கழற்றிகண்களை துடைத்தார். பிள்ளைகளின் நிலமை எனி என்னாகுமோ தெரியல்லையே பாதர்… என்று கூறிவிட்டு தன் வயதையும் மீறி உடல் நடுக்கதுடன் பேசமுடியாது அமைதியானார்.
ஆழ் மனதில் அதிக காயத்தை ஏற்படுத்திய நிகழ்வுகளை கிளறிவிட்டு மேலும் துன்புறுத்துகிறோமோ என்று அச்சம் என்னுள் எழுந்ததால் அப்பெரியவரிடம் மன்னிப்பு கோரினேன்.  முடிந்தால் தொடர்ந்து கூறுங்கள் உங்களை கட்டாயப்படுத்துவதாக நினைக்க வேண்டாம் என்றேன். அவர் தொடர்ந்து பேச தயாராவதற்கு முன் எனக்கு இன்னொரு நிகழ்வு ஞாபகத்திற்கு வந்தது……..
(சந்திப்போமா….)
sm.seelan@yahoo.com

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை