வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, January 4, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் பிணவாடையில் கரைந்துபோன காற்று – 5

 

அனுபவங்களே மனிதர்களின் பெற்றோராக, உற்றாராக, மற்றோராக, நல் ஆசானாக மாறிப்போவதை துயரங்களே உறுதி செய்கின்றன. காணுகின்ற காட்சிகள் அனைத்தும் ஒலியோடு பேசும் பட்சிகள் பலவும் சருகுகளின் சலசலப்புக்கும் சங்கடங்களின் முணுமுணுப்புக்களுக்கும் கூட அனுபவமாகி விடுகின்றது. போக்கிடமற்ற பொழுதுகளில் சோகத்தில் சோர்வுற்று, துயரங்களில் தோய்தெடுத்த முகமாக என்முன்னே வந்தமர்ந்தார் முப்பந்தைந்து வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர்.

வழக்கமான வணக்கமும் யாருடனும் இலகுவாக இணைந்துகொள்ளும் புன்சிரிப்பும் நம்பிக்கையை பெறக்கூடிய நல்லுணர்வுகளும் சரியான விகிதத்தில் பரிமாறிக்கொண்டிருந்தது. நம்பிக்கையை உறுதியாக நங்கூரமிட்டவுடன் வெளிப்படையாக பேச ஆரம்பித்தார்.
நடந்துமுடிந்த பேரழிவு சண்டை பற்றிய தமது கருத்துடன் பேச்சை தொடங்கினார். இப்போரை கொண்டு நடத்திய ஆட்கள் சிலபேர் சில பிழைகள் செய்ததால் முடிவு மனதை வசீகரிக்கும் மோகனமாய் மாறுவதற்கு பதிலாக முகாரியாகிவிட்டது. மற்றப்படி இந்தப்போராட்டம் பிழை என்று கூறமுடியாது. சிலருக்கு போராட்டம் பிடிக்காமல் இருக்கலாம் அதற்காக சுவாசிக்க திடமிருந்தும் செயற்கை சுவாசத்தில் எவ்வளவு ஆண்டுகள்தான் வாழமுடியும் என்று என்னை நோக்கி வினா தொடுத்தார். நிகழ்வுகளின் நினைவுகளில் தமது கருத்துக்களை பதிவு செய்தார்.
“நான் தோற்று போகலாம். அதன் பொருள் வெற்றி சாத்தியமற்றது என்பதல்ல. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற முயன்று தோற்றவர்கள் எத்தனையோ பேருண்டு. இறுதியில் எவரெட்ஸ் வெல்லப்பட்டது” என்று முழங்கிய சேகுவேராவின் வார்த்தையை நினைவுபடுத்தினார்.
விடுதலைப் போராட்ட அமைப்போடு அருகில் வாழ்ந்தவன் நான். அவர்களுடன் ஆயுதம் தூக்கவில்லை. ஆனால் அனாயசமாக ஆயுதம் தூக்கி விரைந்து ஓடிய அழகைக் கண்டு ரசித்திருக்கிறேன். போர்ப்பயிற்சி பெறவில்லை மாறாக போர்க் குணத்தையும் போராட்ட நுட்பங்களையும் தூர இருந்து பார்த்திருக்கின்றேன். அப்படி எனக்கு அங்கே என்ன வேலை என்று நினைக்கலாம். நான் அவர்களுக்கென இருந்த கடை ஒன்றில் வேலை செய்தேன். இன்றளவும் அதனால் நான் பெருமை கொள்கிறேன்.
பாலைவனத்தில் வாழ்ந்த முதல் வனத்துறவி புனித வனத்துப் பவுல்(கி.பி.229). பட்டினி கிடந்து இறையனுபூதியாக வாழ்ந்த இந்த அடியாருக்கு தினந்தோறும் சிறு ரொட்டிதுண்டு கொடுத்து ஒரு காகம் வலுவூட்டியது. அதைப்போல எனது உதவி ஈழதேசத்தின் விடுதலைக்காக இருந்தது.
நாட்டு விடுதலைக்கான தமது பங்களிப்பைப் பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருக்கும் போதே உள்ளுக்குள் புதைக்க முற்பட்டு தோற்றுப்போன வதை வார்த்தைகளை தடுமாற்றத்தின்வழியே வலியோடு வெளிவரத் தொடங்கின.
போர் உக்கிரமானவுடன் உயிர் பயத்துடன் ஓட ஆரம்பித்தவர்களுடன் நானும் சேர்ந்து கொண்டேன். வலயமடத்திலிருந்து முள்ளிவாய்க்கால் மட்டும் குத்தும் முள்ளென்றும் சற்றுக்கும் பள்ளமென்றும் கவனியாது ஓடிக்கொண்டே இருந்தேன். விமானங்கள் குண்டு பொழிவதில் ஓய்ந்தபோது உயிர்துடிப்பின் உத்தரவாதத்தை உணர்ந்து கொண்டேன். பதுங்கிக் கொள்வதற்காக ஒவ்வோர் இடத்திலும் பங்கர் வெட்டி வெட்டியே எங்கள் கரங்கள் காய்ந்து போனது.
நாம் பங்கர் வெட்டி உள்ளே நுளைவதைப் பார்த்தவுடன் அந்தப்பக்கமாக தலைதெறிக்க ஓடி வருபவர்களும் தங்களை மறைத்துகொள்ள வருவார்கள். அவர்களையும் ஏற்றுக்கொண்டோம். பங்கர் இல்லாமல் தவிப்பதைப் பார்த்து அவர்களை அழைத்து வந்து உயிரளித்தோம். என்று சொல்லும்போது அவர் பெருமிதப்படவில்லை மாறாக மனநிறைவு அவரது முகத்தில் தெரிந்தது.
பாஸ்டன் நகரில் நடந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் 2004 யூலை 27 அன்று சிறப்பு பேச்சாளராக இன்றைய அமெரிக்க அதிபர் ஒபாமா பேசினார். அப்போது,
“இங்கே “சுதந்திர அமெரிக்கா” என்றோ, “மிதமான அமெரிக்கா” என்றோ ஒன்றும் கிடையாது “ஐக்கிய அமெரிக்க நாடுகள் என்ற ஒன்றுதான் உண்டு. கறுப்பர்களின் அமெரிக்கா என்றோ, வெள்ளையர்களின் அமெரிக்கா என்றோ, லட்டினோக்களின் அமெரிக்கா என்றோ, ஆசியர்களின் அமெரிக்கா என்றோ கிடையாது. ஐக்கிய அமெரிக்கா என்ற ஒன்றுதான் உண்டு. நாம் அனைவரும் ஒருவரே. என்று பேசி அமெரிக்கா முழுமையும் அறிமுகமான நாள் நினைவுக்கு வந்தது.
சிங்களவன் தங்களை அப்படி ஒன்றுபட்ட தேசமாக ஏற்க மறுக்கும்போது என்ன சாதி எந்த ஊர், வசதி படைத்தவர்களா, ஏழைகளா என்ற எந்த வித்தியாசமும் பார்க்காமல் எல்லோரையும் பங்கருக்குள் ஏற்றுக்கொண்டதும் எல்லோரும் பங்கருக்குள் உணவு பகிர்ந்து கொண்டதும் அவருக்கு இல்லாவிட்டாலும் எனக்கு பெருமையாகவே இருந்தது.
பங்கர் வெட்டி மேலே ஓலைகள் அல்லது மரக்கட்டைகளை பரப்பி அதன்மேல் மணல்மூடைகளை பரப்பி வைக்க வேண்டும். மணல் நிரப்ப சாக்குபைகள் வேண்டுமே. சாக்கு கிடைக்காமல் பட்ட அவதி இன்னும் அதிகம். அந்த நேரங்களில் எல்லாம் ஒவ்வொருவர் முகத்திலும் மரண பயமும், வாழ்வின் ஏக்கமும் போட்டிபோட்டு கலங்கப்படுத்திகொண்டிருக்கும். அவதி அவதியாக ஓட்டமும் நடையுமாக மனைவியும் அவள் கரத்திலிருந்த குழந்தைகளையும் கொஞ்ச நஞ்சம் இருந்த சாமான்களையும் அள்ளிக்கொண்டு ஓடிவருகின்றபோது மறைவிடத்தை வேகமாக தேட ஆரம்பித்தோம். எங்களுக்கு பங்கர் வெட்டுவதற்கு கால அவகாசத்தை சிங்கள காடையனின் விமானம் கொடுக்கவில்லை.
எனக்கு முன் ஓடி வந்தவர்கள் வெட்டி தங்கிவிட்டுபோன பங்கர் இருக்கிறதா என்று தேடினால் அதுவும் இல்லை. வானத்தில் பறந்த விமானங்களின் வெளிச்சத்தில் அலைந்துகொண்டே இருந்தோம். என்ன செய்வதென்றே தெரியவில்லை. அதற்குள் ஒருவயதே நிறைவடையாத எனது பிள்ளையும் தூங்கிவிட்டதால் நிலமை தர்ம சங்கடமானது.இறைவனை எப்போதும் இல்லாதளவிற்கு மன்றாடினோம்.
அப்போது அப்பகுதியில் மூன்று பனை மரங்கள் ஒன்றுசேர நிற்பதை பார்த்தோம். ஓட்டைசட்டியானாலும் கொழுக்கட்டை வெந்தால்சரி என்பதுபோல அதன் மறைவில் மறைந்து அமர்ந்தோம். சுற்றிலும் குண்டுகள் விழுகின்ற சத்தமும் அழுகையும் கேட்டுக்கொண்டே இருந்தது. தூக்கத்தில் சிணுங்கும் குழந்தையின் கவிதைகூட அச்சமூட்டும் ஓசையாகவே இருந்தது. காடுகளில் விலங்குகள் மத்தியில் மாட்டிக்கொண்டவர்களைப் பற்றி சிறுபிள்ளையாக இருக்கும்போது நிறைய கதைகள் படித்திருக்கின்றேன். ஆனால் அதே போன்ற சூழலின் சுழலுக்குள் நானும் சிக்கி கொள்வேன் என்று அப்போது நினைக்கவே இல்லை. இப்போது அதையெல்லாம். நினைத்து கலங்கிக்கொண்டிருந்தேன்.
தனித்து நின்ற எங்கள் குடும்பத்திற்கு ஜெபமாலைதான் துணையாக இருந்தது. இரவு முழுவதும் கையிலிருந்த ஜெபமாலையின் துணையுடன் ஜெபம் செய்துகொண்டே இருந்தோம். தூயதாய் மரியாள் எங்களுடன் உடனிருக்கின்றாள் என்பதை நினைத்து சற்றே ஆறுதல் அடைந்தோம். நாங்கள் திரு இருதய ஆண்டவர் ஜெபபுத்தகமும் வைத்திருந்தோம். பகல் நேரங்களில் மனதைரியம் வேண்டி அதைதான் வாசித்துக்கொள்வோம். இந்த இரவில் அருள் ஒளியோடு நிற்கும் திரு இருதய இயேசுவிற்கு அவ்வப்போது முத்தம் கொடுத்து அவரிடம் மன்றாடிக்கொண்டே இருந்தோம்.
“நமது போர்முழக்கம் இன்னொருவரின் காதில் விழுமானால், இன்னொரு கரம் ஆயுதத்தை கையிலெடுக்கத் துணியுமானால், மற்றவர்கள் இயந்திரத்துப்பாக்கியோடு வந்து புதிய போர் முழக்கத்தை அறிவிப்பார்களேயானால் மரணம் வந்தால்கூட அதை வரவேற்கலாம்”. என்ற இளைஞர்களின் இதய துடிப்பாக இருக்கும்வரை இயங்கும் சேகுவாரா. அப்படி ஒன்று வரும் என்றுதான் நாங்கள் காத்திருந்தோம். ஆனால் ஏமாற்றம்தான் மிஞ்சியது.
போரை நிறுத்தும்படியும் அப்பாவித் தமிழர்களை காப்பாற்றும்படியும் அமெரிக்க குடியரசுத் தலைவர் ஒபாமா விடுத்த வேண்டுகோளை புறக்கணித்த ராஜபக்சே…இலங்கையில் போர்நிறுத்தம் வரவேண்டுமென்று நேரடியாக இலங்கைக்கு வந்து வலியுறுத்திய பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் பெர்னார்டு கவுச்னர் ஆகியோரின் கரிசனைகளை காலடியில் மிதித்த ராஜபக்சே… எளியவரின் ஏக்கத்தை மட்டுமா செவிமடுத்து விடுவார். அதுவும் தமிழனின் தவிப்பிற்கா தலைசாய்ப்பார்.
“ சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத்துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்கு சொந்தமான மண்;; பழந்தமிழர் நாகரிகம் நீடித்து நிலைபெற்ற மண், வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர்கள் வாழ்ந்து வளர்ந்த மண்” என்று தமது கடைசி மாவீரர் உரையில் குறிப்பிட்டு(2008) எங்களையும் உலக சமூகத்தையும் வரலாற்று மாளிகைக்குள் அழைத்துச் சென்றவர் தலைவர் பிரபாகரன்.
இன்று அந்த மண்ணில் எல்லா திசையிலும் பிண வாடைதான் என்று சொன்னவரின் முகத்திலும் அதே நெடி படர்வதை கவனித்தேன். ஆரம்பத்தில் எம் பிள்ளைகள் எங்களுடன் சேர்ந்து மூக்கை பிடித்துக்கொண்டே பிண நாற்றத்தை தவிர்க்கப் பார்த்தார்கள். காற்றே தன்னை பிணங்களுடன் கரைத்துவிட்ட பிறகு நாசியை பிடிப்பது என்பது நாடியை நிறுத்துவதற்கு சமம் என்பதனை உணர்ந்து எங்களை போலவே அவர்களும் சுவாசிக்க ஆரம்pத்தார்கள்.
சுத்தமான காற்று என்ற சொல்பதத்தை மறக்க ஆரம்பித்தார்கள். எங்கும் பிணங்கள், குவியல் குவியலாக விதை விதைத்ததை போல வீரம் விளைந்த பூமியில் மக்கள் சிதைந்து விதைந்து கிடந்தார்கள். நாங்கள் பார்க்காத பிணங்களே இல்லை. அவ்வளவு பிணங்கள் கால் இடரும் இடங்களெல்லாம் சதையும் அதன் ஆதார குருதியும்தான் பிரிந்து சிதறி கிடந்தன. என்ன செய்ய முடியும் சொல்லுங்கள்?
ஒவ்வொன்றாக எழுந்து மொத்த பிடரி மயிரை பற்றி இழுக்கும் அழுகுரல் கேட்ட மாத்திரத்திலேயே ஜனங்களுக்கு தெரியும் ரவுண்ஸ் பட்டுட்டது என்று. தனி ஒருவரோ, சேர்ந்து கனவுகளை பகிர்ந்து கொண்டவர்களோ அல்லது குடும்பத்தினர் அனைவருமோ செத்திட்டாங்களென்று எழுந்துபோய் பார்க்கலாம் என்று நினைப்போம் ஆனால் முடியாது. துப்பாக்கி சன்னங்கள் விழுந்துகொண்டே இருக்கும். வெளியே வரமுடியாது. குண்டுகள் விழுந்து மாரியம்மன் கோவிலில் உடைக்கப்படும் தேங்காய் சில்லுகள் போல சிதறிக் கொண்டிருக்கும்போது எல்லோரும் அவரவர் குடும்பம் ஞாபகத்திற்கு வரும். எனக்கு எனது குடும்பத்தை காப்பாற்ற வேண்டமே என்ற எண்ணம்தான் முந்திக்கொண்டது. நான் போயிட்டா யார் பாதர் எனது குடும்பத்திற்கு பங்கர் வெட்டுவது. என்றபோது அவரோடு சேர்ந்து எனது கண்களும் என் அனுமதி இன்றியே குளித்தது.
யார் பாதர் மற்ற உதவிகளை செய்வது. நான் எப்போது சாவேன் என்று எனக்கு தெரியாதுதான் ஆனாலும் நான் உயிரோடு இருக்கும் வரை அவர்களை தனியாக தவிக்க விட்டுவிட முடியாது தானே. தத்தமது குடும்பத்தினரை கைவிட்டுவிடக்கூடாதே என்ற பரிதவிப்புதான் பலரையும் இந்த மனிதாபிமானத்திலிருந்து ஒதுக்கி வைத்தது. அழுவாரோடு அழமுடியாமல் தடுத்தது.
பிண வெறிபிடித்த இந்த சிங்களப்படைகளால் ஜனம் அலைமோதிக்கொண்டே இருந்தது. சில நேரங்களில் ஒரு விமானம் போய்விட்டு மறு விமானம் வருகிற இடைவெளி எப்போதாவது கிடைக்கும். அந்த நேரங்களில் மாத்திரம் வேகமாக அலறல் சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடி காயங்களுடன் காப்பாற்ற ஆட்களின்றி கதறுகின்றார்களா அல்லது செத்தவர்களில் எமது சொந்தங்கள் இருக்கிறார்களா என்று பார்த்திருக்கின்றோம். தெரிந்தவர்கள் அறிமுகமானவர்கள் என்றால் அவர்களை அவசர அவசரமாக குழிவெட்டி புதைத்திருக்கின்றோம். நானே தனி நபராக இரண்டுபேரை இப்படி வயலில் குழி வெட்டி புதைத்திருக்கின்றேன்.
எவ்வளவு வகுப்பெடுத்தாலும் புரியாத உணவின் அருமைகூட அப்போதுதான் தெரிந்தது. ருசிக்கு தேவையில்லை பசிக்காவது ஏதாவது கிடைக்குமா என்று ஏங்கி அலைந்தவர்கள் பலபேர். நான் என்னுடன் சிறிய உரல் ஒன்றும் கொஞ்ச நெல்லும் கொண்டு போயிருந்தேன். அதைத்தான் உரலில் போட்டு குத்தி அரிசியை எடுத்து சமைத்து சாப்பிட்டோம். பருப்பு சேர்த்து சாப்பிடுவது என்பது எங்களுக்கு மிகவும் பிடித்த உணவுமுறை ஆனால் பருப்பு இல்லாமல், சுவைக்கு புளி இல்லாமல், தேங்காய் கிடைக்காமல் அந்த அந்த இடங்களில் என்னென்ன கிடைக்கிறதோ அவைகளையே பயன்படுத்தி சமைத்தடி சென்றோம்.
அந்நாளில் ஒரு தேங்காய் ரூபாய் 2500 க்கும் அதிகமாக விற்றது. மீன், இறால் கிலோ 2000 விற்றது. பணத்தை பத்திரப்படுத்திக்கொண்டவன் முட்டாள் என்ற நிலைதான் நிலவியது. உயிரோடு அடுத்த விநாடி நிற்போமா அல்லது பிணமாக மண்ணில் புதைவோமா என்று தெரியாத வாழ்க்கைக்கு வார்க்கப்பட்டவர்களாக வேறென்ன செய்யமுடியும்.
பண்டமாற்று முறையிலும் எங்கள் வயிற்றை நனைத்து கொண்டோம். உங்களிடம் இரால் இருக்கிறது, எங்களிடம் அரிசி இருக்கிறது என்றால் அரிசியை உங்களிடம் கொடுத்துவிட்டு இராலை பெற்றுக்கொள்வது. கைவசம் ஏதுமின்றி கையறு நிலையில் தவித்தவர்களும் உண்டு. பெற்றோர்கள் தங்களுக்கு இல்லையே என்று ஏங்கியதை விட பெற்றெடுத்த முத்துக்களுக்கு ஏதுமில்லையே என்றுதான் அல்லலுற்றார்கள். போவோர் வருவோரிடமெல்லாம் கைநீட்டி யோசிக்க நேரமின்றி யாசித்து புசித்தார்கள்.
இவ்வளவு ஜனங்கள் போகிறபோது தண்ணிக்கும் கஷ்டம்தான். நாவறட்சியோடு நடக்கமுடியாமல் தவிக்கிற தாய் அல்லது தந்தையின் தோழில் தொற்றிக்கொண்டு அழுத குழந்தைகளை நினைத்தால் இப்போதுகூட கண்ணீர் வருகிறது என்று சொன்னவர் அழுதே விட்டார்.
(சந்திப்போம்……)
- அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
sm.seelan@yahoo.com

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை