வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, January 5, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் – 6 (பொட்டல் வெளியில் பொட்டிழந்தோர்)

 

மக்கள் நிறைய வந்துகொண்டே இருந்ததால் மலசலகூடப் பிரச்சனை அடுத்த பிரச்சனை ஆயிடுச்சு. அவ்வளவு பேரும் எங்கதான் போறது. நாங்கள் ஓர் இடத்தில கொஞ்சப்பேர் தங்கியிருந்தோம். பதினைந்து குடும்பங்கள் வரை இருக்கும் என நினைக்கிறேன். எங்களுக்காக ஒரு ரென்ற் அமைத்து அதில் சின்ன பிள்ளைகளை தூங்க வைத்தோம். நாங்கள் வெளியில்தான் படுத்துக்கொண்டோம்.
ஆண்கள் எப்படியோ ஒரு மறைவைத்தேடி மலசலம் கழித்து வந்துவிடுவோம்
பாவம் பெண்கள். எனவே வீட்டுக்கு பக்கத்திலே ஒரு கிடங்கு வெட்டி நாங்கள் தற்காலிகமாக – எல்லாமே தற்காலிகமாக இருந்திச்சு…உயிர் உட்பட – கழிப்பறை ஒன்றை அமைத்தோம். பெண்களுக்கு மறைவான இடமொன்றை ஏற்படுத்தினோம். நாங்கள் கனநாளெல்லாம் அங்கு இருக்கவில்லை அதிக பட்சம் பதினைந்து நாட்கள் இருந்திருப்போம். பிறகு மீண்டும் அள்ளிக்கொண்டு புறப்பட்டோம் இன்னோரிடம்.
இப்படியே நகர்ந்து கொண்டிருக்கையில் கடைசியில் முள்ளிவாய்க்கால் பகுதிக்குள் ஒடுக்கப்பட்டோம். ஓரங்கப்படுத்தப்பட்டோம். எங்கள் உயிரை எப்படி பாதுகாப்பது என்ற அச்சம் அதிகரித்தது. பிழைக்க முடியும் என்ற நம்பிக்கை சுத்தமாக குறைந்து கொண்டே வந்தது. முன்னமே சொன்னதுபோல ஜெபமாலையும் திருஇருதய ஆண்டவர் ஜெப புத்தகமும் தான் எப்போதும் உறுதுணையாக இருந்தது.
சிதைந்த முகங்களினூடாக ஓடிவந்த நாங்கள் ஒரு இடத்தில் மூன்று நாள் பங்கருக்குள்ளேயே இருந்தோம். நான் எனது மனைவி என் மகள் மற்றும் இன்னும் இருவர் எல்லோரும் இருந்தோம். இதய துடிப்பின் சத்தம் எப்படி இருக்கும் என்பதெல்லாம் அப்போதுதான் தெரிந்தது. கண்கள் அவ்வப்போது எம்மை மறைத்திருந்த தட்டி வழியே எட்டி பார்த்தப்படி இருந்தது. மூன்று வேளை சாப்பாடெல்லாம் நினைக்க முடியாத ஒன்றாயிற்று. எப்போது பசிக்கும் என்றெல்லாம் அப்போது தெரியவில்லை.
நான் தான் மெதுவாக வெளியே ஊர்ந்து வந்து வானத்தில் ஒரு கண்ணும் பாத்திரத்தில் மறு கண்ணுமாக பங்கர் மறைவிலேயே சமையல் செய்தேன். தூரத்தில் விமானச் சத்தம் கேட்டால் கூட காதருகே வந்துவிட்தோ என்று பயந்து மீண்டும் பங்கருக்குள் ஓடியிருக்கின்றேன். எப்படியோ ஒரு வழியாக ஒரு மத்தியான சாப்பாடு மட்டும் சமைத்து அனைவருக்கும் கொஞ்சம் கொடுத்தேன்.
நாங்க உள்ள இருந்த மூன்று நாள்களும் ஒரே ஷெல்லடியாகவே இருந்தது. இன்று படபடக்கும் தகர ஓசைகள் கூட ஷெல்லின் சத்தங்கள் என தரையில் விழுந்திருக்கிறேன். அவ்வளவு அச்சத்தை தந்துவிட்டு மனதில் தைரியத்தை மடியச்செய்தவைகள் அவை. சில ஷெல்கள் ஓசையில்லாமல் வந்து விழும். ஐந்து இஞ்ச் ஷெல் என்று சொல்வார்கள். எப்போது எப்படி எங்கிருந்து வரும் என்றெல்லாம் தெரியாது. யார் அடிக்கிறார்கள். எங்கிருந்து அடிக்கிறார்கள் என்று தெரியாது. ஆனால் திடீரென எழும் அழுகுரல், சிங்களவன் நிகழ்த்திய கொலைவெறி ஆட்டத்தை சுட்டும்.
பாதர்,….ஷெல்லும் கொத்து குண்டுகளும் பலகுழல் எறிகணைகளும் நிறைய பயம் என்பதே தேசிய மொழியாக்கிக்கொண்ட சமூகமாக்கப்பட்ட நாங்கள் அதிகமாக பயந்தது பல்குழல் எறிகணைக்குத்தான். இடியும் மின்னலும் ஒன்றுசேர மேகம் தமது சிறுவாட்டக் காசை கொட்டிவிட்டு கரும் பூதமாக நிற்பதுபோல ஒரே விசையில் எண்ணற்ற குண்டுகளை கொட்டிவிட்டு இரத்தமும் சதையுமாக மக்கள் பிய்த்தெறியப்படுவதை கல்நெஞ்சத்துடன் பார்த்து முறுவலிப்பார்கள்.
கடைசியாக ஜனங்கள் பூராவும் கடல் ஓரத்திற்கு தள்ளப்பட்டோம். தண்ணீரும் கடல் நீரும் உப்பு கரிக்கின்ற நிலையில் எமது துயரம் கடலுக்குத் தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றெல்லாம் சில நேரங்களில் எங்கள் விரக்த்தியினூடே பேசியிருக்கின்றோம். கடல் வழியே தப்பிக்க முடியுமா என்று பலர் வழிதேட ஆரம்பித்தார்கள். நாங்களும் முயற்சி செய்தோம். கடல் வழியாக இந்தியா போய்விடலாமா என்று பலவாறு முயற்சி செய்தோம். சந்தர்ப்பவாதிகள் தலைமையேற்று நடத்தும் நாட்டிற்குள் நுழைய கடைசிவரை எங்களுக்கு சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
சண்டை இறுக்கமாக நடைபெற்ற இறுதி நேரம் நாங்கள் எங்கும் நகர முடியவில்லை. இயக்கமும் பின்வாங்க ஆரம்பித்தால் சரணடைவதைத்தவிர வேறுவழி தெரியவில்லை. எவருடைய கைக்குள் சிக்கிவிடக்கூடாதென்று நினைத்தோமோ அவர்களிடமே சரணடைய வந்தோம்.
நாங்கள் சரணடைய வரும் போது பார்த்த ஒரு துயர சம்பவம். மறைந்து கொள்ள பங்கருக்குள் ஒரு குடும்பம் நுழைந்திருக்கிறது. எப்போது நுழைந்தது என்றெல்லாம் தெரியாது. பட்டினியாக வந்து அமர்ந்தார்களா அல்லது உணவெல்லாம் வைத்திருந்தார்களா என்று தெரியாது. யாரும் காயம் பட்டிருந்தார்களா கால்களை இழந்திருந்தார்களா என்றெல்லாம் அறிய வாய்ப்பில்லை. ஆனால் எப்போதோ அந்த பங்கர் மீது விழுந்த குண்டுக்கு இரையாகி அப்படியே செத்துகிடந்தார்கள் குடும்பத்தில் அத்தனைபேரும். யாராலும் போய் அடக்கம் செய்ய முடியாத சூழலில் மண்ணோடு மண்ணாக உரமாகி இனிவரும் இளைஞர்களுக்கு ஆங்கார சுதியாக கிடந்தார்கள். பங்கர்தான் எங்கள் உயிர் நிறுத்தும் தொப்புள்க் கொடியானது. சிலருக்கு அதுவே கல்லறையானது.
தான் வருகிற போது கண்ட காட்சிகளைப் பற்றி பேசியவர் இடையிடையே நிறுத்தி கண்களை துடைத்து கொண்டும் மூக்கு சிந்திக்கொண்டும் பேசினார். தடுமாற்றமே பேச்சில் நிலை கொண்டது. உணர்வுகளை அதிகமாகிவிடக்கூடாதென்ற உள்ளுணர்வில் நான் செவிமடுக்க மட்டுமே செய்தேன்.
பாதர் நாங்க, தலையில்லாத உடல்களைப் பார்த்தேன்…தலை பிளவுண்ட உடல்களும் கிடந்தது. குடல் வெளிவந்த மனிதர்களைப் பார்த்தோம் …பனைமரத்துடன் செத்துக்கிடந்தவர்கள், நடைஓரப்பாதையில் கிடந்தவர்கள்….மரங்களுக்குள் மடிந்து கிடந்தவர்கள்..அடையாளம் காணமுடியாத உருவங்கள் என பல கொடூரத்தைப் பார்த்தோம்.
வடிவாக உடுப்பு உடுத்திய எம் குல பெண்களின் ஆடைகள் எரிந்து அவர்கள் நிர்வாண பிணமாக கிடந்ததை கண்டோம். யுவதிகளின் இளமைக்கனவு சிதைந்து கிடப்பதையும் சிதைவுக்குள் புதைந்து கிடப்பதையும் கண்டோம். துணி எடுத்து மூடக்கூடமுடியாத எத்தனையோ பேர் நிர்வாணமாக இரத்தமே போர்வையாக கிடந்தார்கள்….கால் நைந்தவர்கள் நடக்கமுடியாமல் கிடந்தார்கள்…அதற்கு மேல் சொல்ல முடியாமல் படபடப்புடன் அழுதுகொண்டே இருந்தார்.
எங்களோடு கைகள் அறுந்த நிலையில் நடந்து வந்தார்கள்…உதடு கிழிந்தவர்கள் வந்தார்கள்…விழி பாதிக்கப்பட்டவர்கள் வந்தார்கள்…முகத்தில் காயப்பட்ட குழந்தைகள்…சின்ன சின்ன சத்தத்திற்கும் அஞ்சும் மனமுடையோர் இருந்தார்கள். உடல் முழுக்க இரத்தம் பிசுபிசுத்த உடல்கள்… இரத்த கறை உறைந்த தேகங்களுடன் பலர்…கணவரை இழந்து பொட்டல் வெளியில் பொட்டிழந்த பூவையர் என்று கணக்கற்றோர் உடல் நடந்தார்கள். மிரண்ட விழிகளுடன் உடன் வந்தார்கள்.
“அடக்கு முறையின் இரும்பு கால்களால் நசுக்கப்படும் மக்கள் ஒரு கட்டத்தில் தாங்க முடியாமல் வேதனைப்படும் நிலை உருவாகின்றது. அந்தக்கட்டம் தான் இப்போது நேர்ந்து உள்ளது” என்று ஒரு முறை மாட்டின் லூதர் கிங் உரைத்தது இன்று எமக்கு நிகழ்ந்துள்ளது என்ற உணர்வுடன் எல்லோருடனும் 2009, 5ஆம் மாசம் 11 ஆம் திகதி சிங்களவனிடம் சரணடைந்தோம்.
என்னைப் போல நம்பிக்கை நசிந்த பிறகு சரணடைந்த பலர் அங்கிருந்தார்கள். யாருடைய முகத்திலும் ஒளி இல்லை. பாழடைந்த குகையில் நுலாம்படை அப்பியது போலதான் எங்களது முகங்கள் காய்ந்து போன இரத்தக் கரைகளுடன் இருந்தது. ஓடித்திரிந்த கால்கள் அன்றுதான் வாடி வதங்கி அமர்ந்திருந்தது. எங்களுக்குள் எந்த சலனமும் இல்லை. திடீரென நான்கைந்து இராணுவ வீரர்கள் வந்து முன்னால் நின்றார்கள். எங்களை சுற்றி நின்ற வீரர்கள் பருவ வயதினர்தான் என்பது அரும்பு மீசையே காட்டிக்கொடுத்தது. பட்டினியாக பரிதவிப்புடன் வந்தவர்கள் மீது கிஞ்சித்தும் அவர்களுக்கு அக்கறை இருக்கவில்லை. எத்தனுக்கு எத்தன் உலகில் உண்டு என்று அறியும் படிப்பறிவோ பட்டறிவோ அதிகம் இருக்க வாய்ப்பில்லாத அவர்கள் விசாரிக்க ஆரம்பித்தார்கள்.
114777-ethnic-tamil-civilians-wait-to-go-to-a-camp-for-internally-displaced-p
காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பார்கள். அங்கு நின்ற அனைவருக்கும் தமிழர்கள் அனைவரும் புலிகளாகவே தெரிந்தார்கள். ஒவ்வொருவரின் பூர்வீகம் என்ன என்பதையும் என்ன தொழில் புரிந்தனர், எங்கிருந்தனர் என்பதையும் கேட்டு குறித்துக் கொண்டனர். அவர்களது வினாக்கள் எல்லாமே எப்படியாவது நாங்கள் எங்களை புலி என்று அறிவிக்க வேண்டும் அல்லது அவர்கள் எங்களை புலியாக இனங்காண வேண்டும் என்பதில்தான் இருந்தது. பலர் பயத்தில் வார்த்தைகள் வராமல் சிங்களவனின் சூழ்ச்சி மிகுந்த வார்த்தைக்கு ஆம் என்று சொல்லி மாட்டிக்கொண்டார்கள். பலர் தாங்கள் பொதுமக்களே என்பதை திரும்பத்திரும்ப சொல்லி அவர்களின் ஒப்புதல் பெற்றார்கள்.
என்னைப்போலவே பலர் உண்மையையே சொன்னோம். நான் இயக்கம் செயற்பட்ட காலத்தில் வன்னியில் அவர்களுக்கான கடை ஒன்றில் வேலை செய்ததையும் அதற்கு மேல் எனக்கும் போராட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதையும் தெரிவித்தேன். தலைக்கு மேலே வெள்ளம் போன பிறகு சாண் என்ன முழம் என்ன என்ற நினைப்பு எனக்கு. அவர்களுக்கு முதலில் நம்பிக்கை இல்லை. பனைமரத்தின் கீழிருந்து பால் குடித்தாலும் பார்ப்பவர்கள் கள் என்று சொல்வார்களே அது போலவே நான் என்னதான் சொன்னாலும் அவர்கள் நம்புவதாக இல்லை. புலிகளுள் ஒருவனாக நினைத்தே என்னை விசாரித்தார்கள்.
அஞ்சா நெஞ்சர்கள் நாங்கள் என்று முரசு கொட்டியவர்கள் புலி படத்தை பார்த்தாலே புலி என்ற பெயரை கேட்டாலே பயந்து, பயத்தை கோபமாக வெளிக்காட்டியதைக் கண்டு வியந்து நின்றேன். ஒரு வழியாக என்னை விசாரித்து முடிவில் நான் சொன்னதை நம்பினார்கள். தடுப்பு முகாமிற்கு என்னை அனுப்பினார்கள். மனைவி மற்றும் பிள்ளைகளை வேறு முகாமிற்கு அனுப்பினார்கள்.
“இன்பத்திலும் துன்பத்திலும் உடல் நலத்திலும் நோயிலும் நான் உனக்கு பிரமாணிக்கமாக இருந்தது. என் வாழ்நாள் எல்லாம் உங்களை நேசிக்கவும் மதிக்கவும் வாக்களிக்கிறேன்” என்று ஆலயத்தில் ஆண்டவர் சாட்சியாக அருட் தந்தை முன்னிலையில் வாக்குறுதி கொடுத்து மணந்து கொண்ட மனைவியை நானும், என்னை என் மனைவியும் பிரிந்து செல்லும் துர்ப்பாக்கியசாலிகள் ஆனோம்.
தடுப்பு முகாமில் நான் அடைக்கப்பட்டேன். ஐந்து ஏக்கர் சுற்றளவு உள்ள முகாம் அது. நான் இருந்த முகாம் போலவே வெலிக்கந்தை திரிகோணமடு, சேனபுரம் போன்ற பகுதிகளிலும் தடுப்பு முகாம்கள் இருந்தது. என்னோடு மட்டுமே 450 பேர் இருந்தார்கள். இயக்கத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல இயக்க தொடர்பு உடையவர்கள் என்று அவர்கள் சந்தேகித்தவர்கள் அனைவருமே தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தோம். வதைக்கப்பட்டோம்.
போராட்டம் தொடங்கிய ஆரம்பத்தில் இருந்து இன்றுவரை இயக்கத்தில் இருந்தவர்கள், இயக்க தொடர்பு உடையவர்கள், பதினாறு பதினேழு வருசத்திற்கு முன்பே இயக்கத்தை விட்டு விலகியவர்கள், என் நான்கு ஐந்து நாட்கள் இரண்டு நாட்கள் இருந்தவர்களெல்லாம் அங்கிருந்தோம். குறிப்பாக கடைசி காலத்தில் இயக்கத்தில் இருந்தவர்கள், அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்தவர்கள், சாப்பாடு கொடுத்தவர்கள் எல்லோரையும் அங்கு வைத்திருந்தார்கள். சிலரை வேறு வேறு முகாமிற்கு மாற்றியபடி இருந்தார்கள்.
“வலி…வேதனை…எல்லாவற்றையும் உணர்கிறேன். ஒரு புரட்சிக்காரன் வெறுப்பினால் உந்தப்படுவதில்லை. அன்பினால்தான்” என்ற சேகுவேராவின் வார்த்தையை உள்வாங்கிய தமிழீழ வீரர்கள் சிலரை வேறு இடங்களுக்குக் கொண்டு சென்று அடித்துநொறுக்கி விட்டார்கள். அதில் ஒரு சிலர் மீண்டும் திரும்பி வரவே இல்லை. வந்தவர்களும் தேக ஆரோக்கியத்துடன் மீண்டு எழவே இல்லை. எத்துன்பம் வந்தாலும் தமிழர்களை நேசித்தே சிறையிலும் பேசிய வீரர்கள் நிறைய பேர் இருந்தார்கள் என்று சொல்லும் போதே, “ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைப்போராட்டம் என்பது, தீச் சுழல்களைப் கடப்பதுதான்” என்ற ஒடுக்கப்படுபவர்களுக்காக ஓயாது குரல்கொடுத்துவரும் வைக்கோவின் வார்த்தைகள்தான் ஞாபகத்திற்கு வந்தது.
யார் யார் என்னென்ன வேலைகள் செய்தார்கள் என்ற விபரம் தாங்கிய பட்டியலை வைத்துக்கொண்டு ஒவ்வொருவராக எப்போதாவது மட்டும் விசாரித்தார்கள். நிதித்துறை மற்றும் புலனாய்வு துறையில் பணியாற்றியவர்;களை அதிக கவனம் செலுத்தி பலமுறை விசாரித்தார்கள்.
தொடர் விசாரணை நடத்தினார்கள். திருப்தியாக பதில் கிடைக்க வேண்டும். இல்லா விட்டால் பூசாவில் உள்ள சிறைச்சாலைக்கு கொண்டுபோய் அடைத்தார்கள்.
தவறு செய்யாதவர்களைக்கூட தலைமைக்கு கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக சிறைச்சாலையில் அடைத்திருந்தார்கள். ஏழை சொல் அம்பலத்தில் ஏறாது என்பதுபோல இவர்கள் என்னதான் கூறினாலும் அதெல்லாம் எடுபடவே இல்லை, என்று கூறி சற்று நேரம் பேச்சை நிறுத்தினார்.
சுற்றுமுன் என்னிடம் வந்து பேசிச் சென்ற தாய் ஒருவரின் அழுகுரல் எனது நினைவுக்கு வந்தது. பேச ஆரம்பித்த உடனேயே அழ ஆரம்பித்து விட்டார். 2006ஆம் ஆண்டு என் மகன் விருப்பபட்டு நாட்டின் விடுதலைக்காக இயக்கத்தில் சேர்ந்தார் பாதர்.
கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. அதைப்பற்றிய உணர்வே இல்லாது தடுமாறி தடுமாறி பேச முயற்சி செய்து கொண்டிருந்தார். அவரால் தொடர்ந்து பேச முடியவில்லை. சுற்றிலும் பார்த்து கொண்டவர் இரகசியம் பேசுவதுபோல கிசுகிசுத்து என்னிடம் பேச ஆரம்பித்தார்.
எப்போதாவது தான் கடிதம் எழுதுவான். எங்களைப்பற்றி கவலைப்படாதீங்கம்மா அண்ணன் எங்களை எந்த குறையும் இல்லாமல் பார்த்து கொள்கிறார் என்றெல்லாம் எழுதுவான். அடுத்த கடிதம் வருவதற்கு ஒரு மாதமோ இரண்டு மாதமோகூட ஆகும். அதுவரை அந்த கடிதங்கள்தான் என்மகனின் நிழல்படங்கள் போல எனக்கு இருந்தது. ஏன் இன்றுவரையும் அதுதான் அவன் எங்களுக்கு குடும்பத்திற்கென்று சேர்த்து வைத்த சொத்து போல இருக்கிறது. வார்த்தையோடு குரலும் கம்மியது.
சண்டை தீவிரம் ஆனவுடன் என் மகன் தாக்குப்பிடிக்க முடியாமல் சரண்டர் ஆகிட்டான். சரண்டர் ஆனவனை விசாரித்து விடுதலை செய்வாங்களென்று நாங்கள் எல்லோரும் காத்திருந்தோம். ஆனால் அவனை அடி அடி என்று அடித்து பூசாவிலே போட்டிருந்தார்கள். பெத்த வயிறு தவியா தவிக்குது. சிங்கள பயக போய் பார்க்கக்கூட விடமாட்டேங்கிறாங்கள். என்னென்னமோ காரணமெல்லாம் சொல்லி வழக்கு போட்டிருக்கிறாங்களாம். அங்க போகணுமென்றாகூட நிறைய செலவு செய்யவேணும் பாதர்…எங்களுக்காக நன்றாக மன்றாடுங்க பாதர் என்று சொல்லிவிட்டு எமக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய வயதில் தேம்பி தேம்பி அழுதபடி அந்தத்தாய் சென்றது விழித்திரையில் வந்து வந்து விழுந்தது.
(சந்திப்போமா….)
அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
sm.seelan@yahoo.com

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை