வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Monday, December 19, 2011

தனியனாக நின்று தணலேற்றிய தலைவனின் தூரப்பார்வை..

  இன்றைய மாவீரர் நாள்கூட இதற்கு முந்திய மாவீரர்நாட்களை விட வித்தியாசமாகிவிட்டது அதிசயம்தான். இந்த நாளை நாம் எப்படிப் பயன்படுத்தப் போகிறோம் என்ற கேள்விக்கு விடை தேடும் புதியதொரு சவாலுடன் இந்த நாள் மறுபடியும் எம் கண்முன் மலர்ந்திருக்கிறது.ஒவ்வொரு மாவீரர் நாள் வந்தாலும் சிங்கள தேசம் உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கும். பலாலி முகாமில் இருந்து பனாகொட முகாம்வரை ” எங்கு விடியப்போகிறதோ..? ஐயோ..! எப்படி விடியப்போகிறதோ..? ” என்று சிங்கள இனவாதத்திற்கு கெடிக்கலக்கத்துடன் விடிவதுதான் மாவீரர் தினத்தின் விடியலாக இருந்தது.

அது அன்று ஆனால் இன்று காலம் மாறியிருக்கிறது.. ஆனால் சவால் மாறவில்லை..
” புலிகள் ஆயுதங்களை கீழே வைத்தால் இந்த நாட்டில் 24 மணி நேரத்தில் சமாதானம் மலர்ந்துவிடும்..” என்றான் சிங்கள இனவாதி ஜே.ஆர்.
இன்று..
ஆயுதங்கள் மௌனித்துக் கிடக்கின்றன.. சிங்களவன் சத்தமில்லாமல் மாவீரர் துயிலும் இல்லங்களை இடித்துக் கொண்டிருக்கிறான்.. பிரபாகரன் வீட்டை இடித்துக்கொட்டி, அவன் வீட்டுக்கு அருகில் இருந்த ஆலமரத்தைத் தறித்து புத்தவிகாரையும், புனித வெள்ளரசு மரமும் வைக்க துடித்துக் கொண்டிருக்கிறான்.
ஆயுதங்களை போடுங்கள் என்று சொன்ன அயலில் உள்ள அறிவிலிகள் எல்லாம் அவனோடு சேர்ந்து கும்மாளமடிக்கின்றன… மாவீரனோ துயிலிடமும் இல்லாமல் தூபியும் இல்லாமல் துன்மார்க்கர் கூட்டத்திடையே துறவியாகி நிற்கிறான்.

அடடா அன்று..

கங்கை கொண்டான் சோழன், இமயத்தில் புலிக்கொடி பதித்தான் நம் இராஜேந்திரன், கனகவிசயர் தலையில் கல்லெடுத்து கண்ணகிக்கு சிலை வைத்தான் சேரன் செங்குட்டுவன் என்று திரைக்கதை எழுதிய தமிழக வீரர்கள் வன்னியில் நடப்பதைப் பார்த்துவிட்டு திரை மூடி இருந்தார்கள். இவர்கள் எமக்கு தொப்புள் கொடி உறவுகள் என்றார்கள் சில வெத்து வேட்டு தமிழர்கள்… மாவீரன் மௌனமாகவே அந்தத் திரைப்படத்தையும் வீர வசனங்களையும் பார்த்துச் சிரித்தான்.
பயங்கரவாத பட்டியலிட்ட உலகம் புதுமாத்தளனையும், முள்ளிவாய்க்காலையும் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு வாரத்தில் 140.000 பேர் கொன்று குவிக்கப்பட்டபோது.. பெண்கள் நிர்வாணமாக்கி கடித்துக் குதறி ஓநாய்கள் தின்பது போல தின்னப்பட்டபோது தன் பட்டியலை அது சரி பார்த்துக் கொண்டிருந்தது..
தண்டனை வழங்கப்படாத இந்தக் குற்றங்களுக்கு நீதிகேட்க.. அதைத் தடுக்க வக்கற்ற.. உலக சமுதாயம் பயங்கரவாத பட்டியலில் தன் பெயரையும் சேர்த்துக்கொண்ட அவலத்தையும் மாவீரன் பார்த்துக் கொண்டிருந்தான் மௌனமாக..



நச்சுப் புகை அடித்து நம் வீரர்கள் கொல்லப்பட்டபோது.. போர் விதிகள் மீறப்பட்டபோது.. உலகத்தின் அதி நவீன சற்லைற்றுக்களால் அவதானிக்கப்பட்டு எதிரிக்கு தகவல் கொடுக்கப்பட்டபோது.. புலிகளின் ஆயுதக்கப்பல்கள் ஒவ்வொன்றாக மூழ்கடிக்கப்பட்டபோது.. வெள்ளைக் கொடியுடன் வந்தவன் வெட்டி வீழ்த்தப்பட்டபோது.. சற்லைற்றுக்களால் பார்த்து உலக நாகரிகம் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வெட்கங்கெட்டவர்களின் நாடுகளின் பட்டியலிலா தமிழீழ தேசமும் இடம் பெறப்போகிறது.. மாவீரன் முதல் தடவையாக வெட்கப்பட்டான்.
பின்பொருநாள்..
சனல் 4 தணலாக வெளிவந்தது, ஐ.நாவின் அறிக்கை வந்தது, நோர்வேயின் குற்ற ஒப்புதல் வந்தது.. அநீதியில் இருந்து தப்பிக்கொள்ள துடிக்கும் அந்த உலக அவலங்களை எல்லாம். மாவீரன் பார்த்து காறித் துப்பினான்.
” வந்த பின் அறிக்கை விடும் பேடிகள் அல்லடா நாம் வருமுன் காப்பதற்காக அவன் போராடிய வீரர்..! ” என்று சொல்லாமல் சொன்னான். உலகை எதிர்த்து தன்னந்தனியனாகப் போராடினான், தன்மானத்துடன் தூய தமிழ்க் காற்று வெளியில் கலந்தான் – அவன் மாவீரன். அவன் வாழ்விலும் அர்த்தமுண்டு.. அவன் இறப்பிலும் அர்த்தமுண்டு..!


மாவீரன் என்பவன் ஒருவனல்ல.. இலட்சக்கணக்கான தமிழர்கள் உயிர் கொடுத்த தமிழ் மான ஈகம்..! வீரம்..! ஆதித் தமிழன் போற்றிய அகில உலக நாகரிகம் ! அதற்கு வடிவம் கிடையாது.. அதற்கு தூபியும் கிடையாது, தூண்களும் கிடையாது..
பல்லாயிரம் பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வடித்த தன்மான வீர இலட்சிய வடிவம் அது..
புறநானூற்றில் வரும் புகழ் வீரனெல்லாம் தூபிக்குள்ளா இருக்கிறான்..? மாவீரனுக்கு துயிலிடம் கிடையாது.. ஏனென்றால் அவன் துயில்வதில்லை.. எதிரியிடம் தண்ணீரும் வாங்கிக் குடிக்க மறுத்து, மானத்திற்காக உயிர்விட்ட சங்கத்தமிழ் வீரனுக்கு எதிரி மாநில ஆட்சியை கொடுத்தால் வாங்குவானா..? ஒப்பிட்டுப்பார்…!
மாவீரர்நாளை இன்று போட்டிக்கு நடத்துகிறான் தமிழன் என்று கூறி தமிழ் மானத்தை குலைக்க முயல்வோரையும் மாவீரன் பார்க்கிறான்..
போட்டிக்கு நடாத்துகிறான் என்று ஒருவனை ஒருவன் கொச்சைப் படுத்தினால் நம்மை நாமே அழிக்கும் நாசமே மீண்டும் மிஞ்சும்… போட்டிக்கு நடத்தவில்லை அவன் போட்டி போட்டு நடாத்துகிறான்.. அவன் வாழ்க..! என்று திருப்பிப் போடு.. எல்லாவற்றையும் மறந்துவிட்டு, மாவீரனுக்காக நீயும் ஒரு மலரெடுத்துப் போடு.
மாவீரர் சமாதிகளை இடிப்பவனை மட்டுமல்ல.. அதை இடிக்காமல் இடிப்பவர்களையும் மாவீரன் அறிவான்…
அவன் அறியாதது எதுவும் இல்லை..
எல்லோரையும்… எல்லாவற்றையும் அறிந்தவன் மாவீரன்..
அதனால்தான்..
எல்லோரையும் தள்ளி நிற்கும்படி கூறிவிட்டு தன்னந் தனியனாக வந்து தன் மாவீரத் தம்பியரின் ஈகச் சுடரில் தனி ஒருவனாக நின்று தணலேற்றினான் பிரபாகரன்..
கடுகளவும் கறைபடியாத காந்த நெருப்பு…!
அவன் ஏற்றிய நெருப்பின் ஒளிக்கு முன்னால் போலிகள் எல்லாமே பொசுங்குவதே வரலாறு..
உலக நாகரிகத்தில் ஏற்றப்பட்ட முதல் தமிழ் விளக்கை இன்றுவரை அணையவிடாது காத்த அந்த வீரத் தமிழ் மறவருக்கு இதயத்தால் அஞ்சலிகள்..
எமக்கு செய்த இழி செயலை எம் எதிரிக்குக்கூட செய்ய மாட்டோம்.. செய்தால் எங்கள் வீரம் அக்கணமே செத்துவிடும் என்று உலகுக்கு சொல்லி உயிர் கொடுத்த மாவீரனுக்கு முன்னால் மாபெரும் உலகமே தலை சாய்த்து நிற்கிறது.
உழுத்துப் போன உலகத்தை உதறிவிட்டு தனியனாக தம்பிகளுக்கு விளக்கேற்றிய தம்பி பிரபா நீ வாழ்க..!!

**அலைகள்**

 இந்த பதிவிற்கு முன்  பதிவிடபட்ட பதிவு

ராஜீவ் கொலை வழக்கில் மாத்தையாவை சேர்க்காதது ஏன்? (3)  

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை