வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, January 1, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம்-3


தலைவரை ஏமாற்றினோம் தலையறுபட்டோம்
ltte
குடும்பங்கள் வரலாற்றை போதிக்கும் போதி மரங்கள். தம் முன்னோர் விட்ட சென்ற, விடுதலை வேட்கையையும் வீரம் செறிந்த வார்த்தைகளையும் பொக்கிசமாக காத்துவரும் பெட்டகங்கள். வலிகளை தாங்கி கொண்டு காலாகாலத்திற்கும் அழிந்திடாமல் பேசும் கல்வெட்டுக்கள்.
அதனால்தான், “ நீங்கள் எவ்வாறு விடுதலை இயக்கத்தால் கவரப்பட்டீர்கள்?
இந்த இலட்சியத்தை நோக்கி உங்களை உந்தி தள்ளிய காரணிகள் எவை? என்று தன்மான தமிழன் பிரபாகரனிடம் பிரண்ட்லைன் பத்திரிகை நிருபர் கேட்டதற்கு, “அது நீண்ட கதை. என் சிறுவயதில், 1958ல் நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களைப்பற்றி எனது பெற்றோர் பேசிக்கொள்வது வழக்கம்…. நமக்கென ஒரு நாடு வேண்டும். நாமும் திருப்பி தாக்க வேண்டும் என்ற உணர்ச்சி வரும்” (30.12.1985) என்று தன் இதயம் வரலாற்றை நிரந்தர துடிப்பாக்கியதை நினைவு கூர்ந்தார்.
நடந்து முடிந்த நாசகார நர்த்தனத்தின் சாட்சிகளாக இரத்த வாசமே சுவாசமாக வாழத்தலைப்பட்ட குடும்பங்களின் முகவரியாக கணவனும் மனைவியும் பிள்ளையுமாக என்னைப்பார்க்க வந்திருந்தார்கள். யதார்த்தமான விசாரிப்புடன் வேறு திசையில் பயணித்த உரையாடலின் தொடர், திடீரென கனத்த மௌனத்தால் அறுபட்டது. கண்களில் கண்ணீர் தெரிந்தது. விழி பேசும் வார்த்தைகளை உள்வாங்குவதற்கு முன்னதாகவே, பிரபாகரன் எங்களுக்கெல்லாம் கடவுள், என்று சொல்லி மீண்டும் இடை நிறுத்தினார். எட்டிப்பார்த்த நீர் கன்னத்தில் தன்னை இழந்து வடிந்தது. அவரது மனைவியும் கண்ணீரும் விசும்பலுமாக காணப்பட்டார்.
எங்கள் தலைவர் ஒரு தீர்க்கதரசி. அவர் நடக்கும் என்றால் நடக்கும். பத்து ஆண்டுகளுக்கு பிறகு நடக்க இருப்பதை இப்போதே கணித்து சொல்லும் சாணக்கியன். யத்தத்தில் பெற்றோரை பாதுகாவலரை இழந்த பெண்பிள்ளைகளை பாதுகாக்க நிறுவப்பட்ட செஞ்சோலை சிறுவர் இல்லம், ஆண் பிள்ளைகளை பராமரிக்க காந்தரூபன் அறிவுச்சோலை, போரில் அவலங்களை கண்டு மனம் பேதலித்தவர்களுக்கான வெற்றிமனை,
போரினால் இடம்பெயர்ந்து சொந்த இடங்களைவிட்டு அகதிகளாக இருப்பவர்களுக்கான தமிழர் புனர்வாழ்வுக் கழகம், காயங்களாலும் உடல் உபாதைகளாலும் மக்கள் கதறியபோது கண்டு கொள்ளாத சிங்கள அரசிற்கு எதிராக ஏற்படுத்தப்பட்ட தியாகி திலீபன் மருத்துவசேவை, தமிழீழத்தின் பொருளாதார கட்டமைப்பை உறுதிப்படுத்தி ஆற்றல் உள்ளவர்களாக உருவாக்க தமிழீழ பொருண்மிய மேம்பாட்டுநிறுவனம்,
மொழியையும் பண்பாட்டையும் பாதுகாக்க விடுதலைப்புலிகள் கலை பண்பாட்டு கழகம், எங்கள் உரிமை குரலை உலகெங்கும் உரத்து கூற புலிகளின்குரல் வானொலி சேவை, நியாயமானதை கைக்கொள்ள நீதியை நிலைநாட்ட தமிழீழ சட்ட கல்லூரி, கல்வி வழியாகவே மானுடம் தலைக்கும் என்பதை நிலைநாட்ட தமிழீழ கல்வி மேம்பாட்டு பேரவை போன்றவைகளை அமைத்து அதன் அன்றாட அசைவுகளை கண்காணித்து வந்த மாமகான்.
அதுமட்டுமா தினம்தோறும் செய்திகளை வானொலிகளினூடாக அறிந்துகொள்வது, விடுதலைப்போராட்டம் சார்ந்த நூல்களை வாசிப்பது உட்பட உள்ளூர் அரசியல் மற்றும் வெளியூர் அரசியல் அனைத்தையும் உற்று நோக்கி வந்த உத்தம புத்திரன் எங்கள் தலைவர் பிரபாகரன் என்றும் மனம் நெகிழ்ந்தார்கள்.
இடைவெளிவிட்ட கடந்து போன அழகிய நிலா காலத்தில் மனம் லயித்த வேளையில் அவரது மனைவி பேச ஆரம்பித்தார். பெண்களுக்கெல்லாம் அவ்வளவு மதிப்பிருந்த காலம் அது. நாங்கள் எங்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் போய் வரலாம். அவ்வளவு சுதந்திரம். எங்களது பெண்கள் எல்லாம் அண்ணனை நம்பி போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்றார். இயக்கத்தில் ஆண் தளபதிகளுக்கு நிகரான மரியாதையும் மாண்பும் பெண் தளபதிகளுக்கும் அனைத்து வீர தோள்களுக்கும் வழங்கப்பட்டது என்று சிலாகித்தார்.
என் மனது கடந்தகால நிகழ்வுக்குள் நீந்த ஆரம்பித்தது. 1991 மார்ச் மாதம் எட்டாம் திகதி உலக மகளிர் தினம். அன்று நம் தலைவர் ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் “எமது சமூகத்தின் சனத்தொகையில் பெரும்பான்மை இடத்தை வகிக்கும் பெண்கள் தொடர்ந்தும் அடிமைத்தனத்தில் வாழ்ந்து வந்தால் எமது விடுதலைப்போராட்டத்தை ஒரு தேசியப்போராட்டமாக முன்னெடுப்பது கடினம். இதனை உணர்ந்துதான் எமது இயக்கம் பெண் விடுதலையை முதன்மைப்படுத்தியது. பெண்களை அரசியல் மயப்படுத்தி, போராட்டத்திற்கு அணி திரட்டியது. இவ்வகையில் நாம் தமிழீழ பெண்கள் சமூகம் மத்தியில் ஒரு பெரும் புரட்சியை நிகழ்த்தி இருக்கின்றோம்.
தமிழர் வரலாற்றிலே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது. காலம் காலமாக அடுக்களையில் அடங்கி போயிருந்த தமிழீழ பெண்ணினம் இன்று ஆயுதம் ஏந்தி நிற்கின்றது. சீருடை தரித்து நிற்கின்றது. காலம் காலமாக தூங்கி கிடந்த பெண்ணினம் இன்று விழிப்படைந்து எமது போராட்டத்தின் ஒரு புரட்சிகர சக்தியாக எழுச்சி கொண்டு நிற்கின்றது. வீரத்திலும் தியாகத்திலும் விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் சளைத்தவர்கள் அல்லர் என்பதை எமது பெண் போராளிகள் தமது வீர சாதனைகள் மூலம் நிரூபித்து காட்டியுள்ளனர். ஒரு புதுமைப்பெண்ணை, புரட்சி பெண்ணை எமது விடுதலை இயக்கம் படைத்திருக்கிறது. தமிழீழத்தில் இந்த பெண் புரட்சி தொடர வேண்டும்” என்ற தமது ஈழ மண்ணின் வாக்கை இறைவாக்கை அறிவித்தார்.
உரையாடலானது, தலைவனிடமிருந்து கடந்து மாவீரர்கள் அதிலும் கரும்புலிகள் பற்றி விரிந்தது. ”எத்தனை போராளிகள் பாதர், கனவோடு செத்து போயிருக்காங்க, தங்களது எதிர்காலம் சுதந்திர பூமியை தரிசிக்கட்டும் என்றுதானே சுதந்திரத்தின் விதையானார்கள். சாவு மட்டும்தான் மனிதனுக்கு எப்பொழுது என்று தெரியாது என்பார்கள். ஆனால் நாளை பத்து மணிக்கு தான் சாகப்போகிறோம் என்பது அவர்களுக்கு தெரியும். சடங்குகள் செய்யவோ, முகத்தில் விழுந்து அழுவதற்கோ கூட தனது உடல் கிடைக்காது என்பது தெரியும். வாழும் காலத்தில் தமது பிறந்த வீட்டுக்கும் ஒன்றும் செய்யாதவர்கள் கூட செத்தபிறகு பார்த்து அழ தமது உடலை விட்டுவைப்பார்கள். ஆனால் கரும்புலிகளுக்கும் அவர்களின் வீட்டினருக்கும் இந்த பாக்கியம் வாய்ப்பதில்லை. ஆனாலும் உற்சாகமாக சாவை எதிர் கொள்கிறார்கள். அவர்களின் கனவுகளுக்கு எப்படி பாதர் உரை எழுத முடியும்?” என்று என்னை நோக்கி கேள்வி எழுப்பினார்கள். அனைத்து மாவீரர்களின் சுதந்திர குரலும் இன்னும் காற்றில் கலந்து எம் சுவாசமாக இருக்கிறது என உயிர்ப்புடன் கூறினார்கள்.
சுதந்திர இயக்கத்தின் தூண்களாய் நிற்கும் மாவீரர்களே! உங்கள் இரத்தத்தால் எங்கள் விடுதலை வரலாறு மகத்துவம் பெறுகின்றது. உங்கள் இலட்சிய நெருப்பால் எங்கள் போராட்டம் புனிதம் பெறுகின்றது. உங்கள் தியாகத்தால் எங்கள் தேசியம் உருவாக்கம் பெறுகின்றது. எங்கள் தேச சுதந்திரத்தின் சிற்பிகளாகிய உங்களை நாம் சிரம்தாழ்த்தி வணங்குகின்றோம்” என்று 1992 ஆம் ஆண்டு மாவீரர் தின உரையில் நம் தலைவர் உரைத்ததன் உண்மை புரிந்தது.
தலைவரை பற்றியும் வீரர்களை பற்றியும் உத்வேகத்துடன் பேசி வந்தவர்களின் முகத்தில் விரக்தி கோலம் போட்டிருந்ததை அவதானித்த நான் அதைப்பற்றி ஏதும் கேட்காமல் இருந்தேன். மனம் அலைபாய்வது மட்டும் நன்றாகவே தெரிந்தது. இடையிடையே தன் மகனின் தலைமுடியை கோதிவிட்டார்கள். கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் தங்கள் முகத்தை அவ்வப்போது பார்த்து கொண்டார்கள். கைகள் நடுங்கின, உதடுகளை கடித்துக்கொண்டார்கள். ஒலி இல்லாத மொழியில் அர்த்தங்கள் முழுமையாக தெரியாத நிலை. அவை மட்டும் தெரிந்துவிட்டால் அது எவ்வளவு நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
சுற்றிலும் பார்வையை ஓடவிட்டவர்கள் திடீரென சொன்னார் ”பாதர் நானும் ஒரு புலி. பத்தொன்பது வயதிலே தம் மக்களின் வலியையும் கனவையும் சுமந்துகொண்டு வீட்டை விட்ட வெளியேறிய எமது தலைவனின் அடியொற்றி நானும் வீட்டை விட்டு வெளியேறினேன். தாய் நாட்டிற்காக கரத்தில் ஆயுதம் ஏந்தவும் தலைவனின் வழிகாட்டுதலுக்கு சிரம் தாழ்த்தவும் முடிவெடுத்து வெளியேறினேன்”.
“ஒழுக்கமும் படை ஒழுங்கும் தலையாயது. தனிநபர் ஒழுக்கத்திற்கும் தேச பக்த்திக்கும் முதன்மை தருகின்றோம்” (நியூஸ் வீக் 11.08.1986) என்று முன்னொருமுறை தலைவர் சொன்னதை கண்ணார கண்டேன். எந்தவித வேறுபாடுகளுமின்றி பயிற்றுவிக்கப்படுவதையும் புலிகள் அனைவரின் அர்ப்பண தியாகங்களையும் பார்த்தேன். வாழ்வில் மகத்துவம் அடைந்ததாக நான் ஆயுதம் ஏந்தி களத்தில் போராடிய நாளினை நினைத்துக் கர்வப்பட்டேன்.
2008 இல் தற்காலிக கடைசி யுத்தம் ஆரம்பமானது. தலைவர் ஏற்கனவே எதிர்பார்த்திருந்த ஒன்றுதான். எனவே நம்பிக்கையுடன் தயாரானோம். நின்று நிதானமாக பேசுவதற்கெல்லாம் அவகாசம் எங்களுக்கெல்லாம் கிடைக்கவில்லை. அடுத்த கட்ட நகர்வுகளுக்கு எங்களையே தயார்படுத்திக்கொண்டோம். உணர்வுகளும் உரிமைகளும் ஒரு சேர போராட்ட களத்தில் சங்கமித்திருந்தன.
ஆனால் இம்முறை எம் தலைவரின் தீர்க்க தரிசனத்தை புல்லுருவிகள் சுக்குநூறாக்கினார்கள். நம்பிக்கையின் நாயகர்களாக வலம் வந்தவர்கள் நயவஞ்சகர்களானார்கள். உள்ளூர இருந்த இத்துரோகிகள் சிலரால் ஆயுதங்கள் வந்து சேர்வதில் தடைகள் உருவாக்கப்பட்டன. யார் யாரை நம்புவது யாரையெல்லாம் நம்பாமல் இருப்பது என்ற இக்கட்டான நிலையில் வீரர்கள் தள்ளப்பட்டோம். சிரிப்பிற்கு பின்னே ஈழத்திற்கு புதைகுழி வெட்டி வைத்திருப்பார்களோ என்ற சந்தேகம் அவரவர் மனதிலும் நங்கூரமிட்டது. எந்த உயரிய இலட்சியத்திற்காக வீட்டை விட்டு சுகங்களைவிட்டு வந்தார்களோ அதனை மறந்தவர்களானார்கள்.
”அவர்களின் மத்தியிலும் வீரர்கள் உண்மையாக உண்மைக்காக போராடினார்கள். நிச்சயம் இம்முறை நல்ல முடிவு கிட்டும் என்று களமாடினார்கள்.” நாம் சிங்கள காடையர்கள் போல வன்முறைமீது காதல் கொண்ட மன நோயாளிகள் அல்ல” (தங்கத்துரை) என்பதை உலகுக்கு காட்டும் தருணம் இதுவென்று துடிதுடித்தார்கள். ஒரு புறம் மக்களின் பேரவலகுரல், மறுபுறம் எம் வீரர்களின் வீரக்குரல் என்ன செய்ய கொத்து குண்டுகளும், நச்சு குண்டுகளும் எங்களை நிலைகுலைய செய்துவிட்டது. அருகருகே நின்று போராடி அவனது செல்லடிக்கு சில்லு சில்லாகி போனார்கள் வீரர்கள்.
இனியும் தாங்கமுடியாது என்றபோது என்னைப்போல் பலர் களத்திலிருந்து வெளியேறிவிட்டோம். தலைவனை ஏமாற்றிவிட்டோம். நம்பிக்கையுடன் நின்றவர்களை நட்டாற்றில் விட்டுவிட்டோம். சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர்களையும் மீறி கண்ணீர் பொலபொலவென்று கொட்டியது. யாரும் பார்த்துவிடப்போகின்றார்கள் என்ற பரிதவிப்பில் குனிந்து கண்ணீரை துடைத்தார்கள். பொங்கிய நீர் வடிந்து கொண்டே இருந்தது. விசும்பலுடனான அமைதி அவ்விடத்தை ஆட்கொண்டது.
மீண்டும் துணிவை வரவழைத்துக்கொண்டவர்களாக போரின்போது தாங்கள் காண நேரிட்ட துயர கொடூரங்களை பேச முற்பட்டார்கள். அவர்களது இதயத்துடிப்பு வேகமானது. நானும் மனைவியும் பிள்ளைகளும் ஓடிக்கொண்டே இருந்தோம். பேரிரச்சலுடன் வரும் விமானம் எந்த இடத்தில் தம்மில் நிறைக்கப்பட்ட குண்டுகளை உமிழும் என்பது யாருக்கும் தெரியாத நிலையில் எல்லோருமே பங்கர்களை தேடி ஓடிக்கொண்டே இருந்தோம். தடுமாறுகிறவர்களை தூக்கிவிடக்கூட பல வேளைகளில் அவகாசம் பார்க்க முடியவில்லை. பங்கருக்குள் ஓடி பங்கருக்குள் விழுந்த பிறகுதான் யார்யார் வந்து சேருமுன் காலிடறிக்கிடக்கிறார்கள் என்பதைப் பார்த்தோம்.
குண்டுகள் விழுகிற சத்தம் கேட்டவுடன்தான் எங்களுக்குள் நிம்மதிவரும். ஆனால் ஏதோ ஒரிடத்திலிருந்து அடிவயிற்றின் வெறுவயிற்றிலிருந்தும் கிளம்பும் அலறல் ஓசை எம்மையும் கதறச்செய்யும். எங்களை நாங்களே எண்ணிக்கொண்டு, இருந்தால் அழைத்துக்கொண்டும் இல்லாவிட்டால் தேடிக்கொண்டும் நாங்கள் இடம்பெயர ஆரம்பிப்போம். மீண்டும் மீண்டும் இப்படித்தான் சென்று கொண்டிருந்தோம்.
ஒருநாள் நாங்கள் உயிர்காக்க பதுங்கியிருந்த பங்கருக்கருகிலேயே தாயும் தகப்பனும் தமது இரண்டு பெண்பிள்ளைகளுடன் பங்கரில் மரண பயத்துடன் கால்களை கட்டிப்பிடித்தபடியே அமர்ந்திருந்தார்கள். வானத்தில் போர்விமானங்கள் மரண சங்கூத ஆரம்பித்தன. வினாடிகள் ஆக ஆக பேரோசை இன்னும் பக்கமாக வந்தது. எல்லோரும் காதுகளை மூடிக்கொண்டோம். அவரவர் இஷ்ட தெய்வங்களை நினைத்து கும்பிட்டோம். மனதில் ஆயிரம் நேத்திகளை வைத்துகொண்டோம். லட்சக்கணக்கான மக்களை கைவிட்டுவிட்ட தெய்வங்கள் எங்களை கைவிடாது என்ற அந்நேர நம்பிக்கை அது. குண்டுகள் விழுவதை நில அதிர்வும் பார்வையை மறைத்த தூசியும் விளங்கப்படுத்தியது.
விமானம் திரும்பிச் செல்வது தெரிந்து காதுகளை மூடியிருந்த கரங்களை எடுத்தோம். அருகாமையில் இருந்த பங்கரில் இருந்து அழுகுரல் எங்கள் ஈரக்குலையை நடுநடுங்க வைத்தது. தகப்பன் கதறிக்கொண்டிருந்தார். தாயின் மார்பில் சுரந்த பாலை வெளியேற்றியிருந்தது வெறிபிடித்த சிங்களவனின் வெடிகுண்டு. ரத்தத்தில் மூழ்கிக்கிடந்த தாயின் அருகிலேயே ஒரு மகள் தனது கால்களை இழந்து அரற்றிகொண்டிருந்தாள். இன்னொரு மகளோ வயிற்றில் ஏற்பட்ட காயத்துடன் தண்ணீர் தண்ணீர் என்று முனகிக்கொண்டிருந்தார். எங்களிடம் அழுதுவடியாத கண்ணீரைத்தவிர மருந்துக்குகூட தண்ணீர் இல்லை. இறைவன் இப்படியும் இப்பிள்ளையை தண்டித்திருக்க கூடாது. எப்படியாவது தமது மகளை காப்பாற்றிவிடவேண்டும். என்ற வெறியில் அப்பிள்ளைகளின் தகப்பன் காயமுற்றவர்களை அள்ளி அடுக்கி கொண்டிருந்தார். டிரக்ரருக்காக அலைந்து கொண்டிருந்தார். மீண்டும் மீண்டும் சுற்றி விழும் செல்தாக்குதல்களை அவர் பொருட்படுத்தவே இல்லை.
தாக்குதல் முடியும்வரை பங்கருக்குள்ளேயே நாங்கள் பதுங்கி இருந்தோம். பிறகு வெளியே வந்து தண்ணீரைத் தேட ஆரம்பித்தோம். கொஞ்சத்தூரம் போனபிறகு, நாங்கள் எந்த மண்ணுக்காக போராடுகிறோமோ அந்த நிலம் கொஞ்சநீரை புது நிறத்துடன் வைத்திருந்தது. மற்ற நாட்களில் கைகால் கழுவக்கூட முகம் சுழிக்கசெய்யும் அந்த நீர் அப்போது தேவார்தமாக கிடைத்தது. அதனை அள்ளிக்கொண்டு வந்தோம். நிலத்தில் புதைந்து தாகத்துடன் தடுமாறிக்கொண்டிருந்த அந்த பெண்ணை வெளியே இழுத்தோம். ஐயகோ அவளிடம் உயிர் இல்லை.
அதற்குள்ளாக டிரக்ரர் ஒன்றை பார்த்துவிட்டு வந்த தந்தை மனம் பேதலித்தவர் போல நின்றார். கையறுநிலையில் தாம் இருப்பதை உறுதிசெய்துகொண்டு இறந்த மகளை போட்டுவிட்டு காயமுற்ற மகளையும் மனைவியையும் ஏற்றிவிட்டார். கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தார். அவர் உயிரோடு நலமாக நடமாடுகிறாரா அல்லது உயிருள்ள பிணமாக பிதற்றுகின்றாரா என்பது தெரியவில்லை. மகளும் மனைவியும் பிழைத்து எழுந்தார்களா என்பது உறுதியில்லை.
வேறு என்ன செய்வது பாதர். எங்க பாத்தாலும் சாவுதான். பிணங்கள்தான், அழுகைதான் நானும் இவளும் பேசிக்கொண்டிருக்கிறோம். திடீரென செல்பட்டு இவள் சாகிறாள் என்றால் நான் அழுதுகொண்டிருக்கமுடியாது. மற்ற பிள்ளைகளை கூட்டிக்கொண்டு போய்க்கொண்டே இருக்கோணும். அவர்களையாவது காப்பாற்ற முடியும என்றுதான் யோசிக்கணும். அருகில் வரும் தாய் தந்தைக்கு இக்கதி என்றாலும் அவர்களை நிர்க்கதியில் விட்டுவிட்டுதான் போயாக வேண்டும்.
(சந்திப்போம்……)
- அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
sm.seelan@yahoo.com

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை