வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, January 3, 2012

உணர்வுகளை இறக்கி வைத்த நேரம் யாருக்கும் யாரும் துணையில்லை-4


இன்னொரு இடத்தில் நாங்கள் கண்ணார பார்த்த கொடுமை. ஒரு தாய் அழுத தமது குழந்தையை மடியில் கிடத்தியிருந்தாள். மண்ணில் சிதறடிக்கப்படாது இன்னும் சுரந்து கொண்டிருக்கும் தம் பாலை உணவாகப் புகட்டிக்கொண்டிருக்கின்றாள். குழந்தையும் மகிழ்ச்சியோடு சுவைத்திருக்கின்றது. இதனிடையே எங்கிருந்தோ வந்த ஷெல் அந்த தாயின் கழுத்தில் பட்டிருக்கிறது.

அவள் அப்படியே குழந்தையின் மேல் தன்முகத்தை புதைத்து செத்து கிடக்கின்றாள். தாய் இறந்தது குழந்தைக்கு தெரியவில்லை. பசி ஆறாத குழந்தை பாலில்லாது வறண்டு போன மார்பு காம்பினை சப்பி பார்த்துவிட்டு ஒன்றும் வராததை கண்டு கதறிக்கொண்டிருக்கின்றது. இத்துயரத்தை பார்த்து கொடும்துயருற்றோம் நாங்கள்.
கர்ப்பவதிகளின் பாடு இன்னும் மோசம் பாதர், விரைந்து ஓடவோ, பங்கருக்குள் படுக்கவோ,பங்கர் வெட்டும் தனது கணவருக்கு உதவி செய்யவோ ஏதும் முடியாது அவர்கள் பட்ட பாடு சொல்லி மாளாது. இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையை சுமப்பவள் என்றால், ஏற்கனவே பிறந்து உடன் வரும் குழந்தைகளையும் இழுத்துக்கொண்டு தத்திக்கொண்டு தத்தித் தத்தி செல்வது ஈவுஇரக்கமற்றவர்களுக்குக்கூட நெஞ்சில் ஈரம் சுரக்கச் செய்யும்.
எந்தவிதமான மருத்துவ உதவிகளும் இல்லாமல், ஆதரிக்க ஆட்களில்லாமல் வயிற்றுச் சுமைகளுடன் பாரச்சுமைகளையும் சுமந்து அவதிப்பட்டார்கள், போதிய உணவோ அல்லது சத்தான ஆகாரமோ எதுவுமின்றி உழன்றார்கள். இயற்கை கழித்தலுக்குக்கூட மறைவிடம் இல்லாது எல்லோரையும்விட அதிகமாக மனம் கலங்கினார்கள். காடையர்களின் தாக்குதலுக்கு ஆளாகி ஆங்காங்கே உடைந்துபோன கர்ப்பக்கிரகங்களாக சிதைந்து கிடந்தார்கள்.
கணக்கற்று கொல்லப்பட்ட எம் இனத்தின் பிணக்குகளுக்கு மத்தியில்தான், அடுத்த வினாடியில் உயிர் விட்டவர்களும் அடுத்தடுத்து சிதைக்கப்பட்டவர்களும் மறுநாட்களில் கொல்லப்பட்டவர்களும் உணவுண்டார்கள். இரத்த வாடையும், மத்த வாடையுமே பொதுவாகி போனதால் சுத்தமான காற்றுகூட அங்கே வரலாற்றுக்கதைபோல பேசப்பட்டது.
சொந்த ஊர்க்காரர்கள் பற்றியோ சித்தப்பா மக்கள் பெரியப்பா மக்களைப் பற்றியோ விசாரிக்கவோ, விசனப்படவோ நினைவின்றி பதைபதைத்து நின்றோம்.
தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்த எங்களுக்கு நேரிட்ட இன்னுமோர் அவலம் பசி தாகம். தண்ணீரும் உணவும் இல்லாமல் நாங்கள் பட்ட அவதி துரோகிகளுக்குகூட நேர்ந்துவிடக்கூடாது என்றார்கள். அப்போது அவர்களின் இதய ஈரத்தால் சிலித்துப்போனேன்.
“எம் மக்களைப் பற்றியும் எம் இயக்கம் பற்றியும் எம் தேசம் பற்றியும் மிகவும் பெருமை கொள்கின்றேன்” (சண்டே டைம்ஸ், 08.04.1990) என்ற தலைவர் பிரபாகரனின் வார்த்தையில் தொனித்த கம்பீரம் எவ்வளவு உண்மையானது என்பது அவர்களின் வார்த்தையின் வழியில் உயிர்த்தெழுந்தது.
நாங்கள் ஒரு கிலோ அரிசி ஆயிரத்து ஐநூறு ரூபாவிற்றும் ஒரு தேங்காய் நானூற்றம்பது ரூபாய்க்கும் வாங்கி வயிறு நனைத்தோம். அதுவும் வழுக்கைதான். தேங்காயும் மாவும் எங்களது அத்தியாவசியமான உணவுப்பொருளாகும். எனவே அவை மிக அதிக விலைக்குத்தான் கிடைத்தது. அதிலே அவ்வப்போது கொஞ்சம் வாங்கி ருசிபார்த்துக்கொண்டோம்.
ஈழத்தமிழர்களின் உணவிலே அதிக காரம் இருக்கும். காரமில்லாமல் உணவு உண்பதை உணவாகவே கருதாதவர்கள் நாங்கள். கால் போன போக்கில் போகிறவர்கள் காரத்திற்கு என்ன செய்வது. குழந்தைகள்கூட காரமில்லாமல் சப்பென்று இருக்கும் உணவை வேண்டாமென்று அடம்பிடித்தார்கள். உணவு கிடைப்பதே அரிது என்பதை நாங்கள் விளங்கிக்கொள்ளலாம். பிள்ளைகளுக்கு எப்படி விளங்கப்படுத்த முடியும். சிரமம்தான்.
காரம் தெரியவேண்டும் என்பதற்காக எப்போதோ கிடைத்த ஒரு பொரித்தெடுத்த மிளகாயை தண்ணிச்சோற்றில் முக்கி எடுத்தோம். அம்மிளகாயை கடித்துவிடாமலும் காரம் முழுமையாக போய்விடாமலும் அப்படியே வைத்திருந்தோம். அப்போதுதான், அடுத்தவேளை உணவின் போதும் இப்படி நனைந்து கார சுவை பெற்றுக்கொள்ளலாம் என்பதால்.
இப்படியே அலைந்து திரிந்த பலர் சிங்களவனின் பேச்சை நம்பி அவன் சொல்லிய இடத்திற்குச் சென்றோம். அவன் எங்கள் அனைவரையும் முகாமில் கொண்டு வந்து அடைந்தான். மிகப்பெரிய பொட்டலும் புதர்க்காடுகளும் நிறைந்த பகுதி அது. அந்த கொட்டடிக்குள்தான் எங்களை கொண்டு சென்றார்கள். எங்களுக்கு முன்னே ஆயிரக்கணக்கானோர் ஆயனில்லா ஆடுகள் போல அங்கிருந்தார்கள்.
பெயர் என்னவோ நன்றாகத்தான் இருந்தது நலன்புரி முகாம் என்று. நாடோடிகள் ஆங்காங்கே கூடாரமடித்து தங்கியிருப்பதுமாதிரி எங்களது வீடுகள் அமைக்கப்பட்டிருந்தன. நான்கைந்து குடும்பங்கள் ஒரு கூடாரத்திற்குள் அடைக்கப்பட்டோம்.
அறிமுகமானவர்கள் அல்லது உறவுக்காரர்கள் என்றால் ஓரளவு வெட்கத்தை விலக்கி வைக்கலாம். அவ்வாறு இல்லை என்றால் பெண்களின் நிலமை சித்திரவதைக்கூட அனுபவம்தான். கால் நீட்டி தூங்கவெல்லாம் முடியாது. உட்காந்துதான் இருக்க முடியும் அதிலும் அந்த கூடாரத்திற்குள் வெயில் நேரத்தில் இருக்கவே முடியாது. வெக்கை எங்களை வெளியேற்றிவிடும. பெண்களின் நிலை இன்னும் மோசம்.
பெண்கள் குளிக்கும் இடங்களில் சிங்களவனின் காமக் கண்களுக்கு இரையானார்கள். பாதுகாப்பிற்கு நிற்கின்றோம் என்று சொல்லிவிட்டு பெண்கள் குளிப்பதையும் அவர்கள் உடைமாற்றுவதையும் இச்சையுடன் ரசித்தார்கள். எம்குலப்பெண்கள் அவமானத்தால் நெளிந்தார்கள்.
“பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறைகளிலிருந்து விடுதலை பெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே என் ஆவல்” என்ற எம் தலைவரின் புரட்சிகர பெண்ணிய சிந்தனையை நடைமுறைப்படத்த முயன்று, எத்தனையோமுறை அவர்களை அதட்டி இருக்கின்றோம். சேர்ந்து கத்தி இருக்கின்றோம் அதற்கெல்லாம் அவர்கள் சரிப்படவே இல்லை. மாறாக எங்களை மேற்கொண்டு அடித்து துன்புறுத்த ஆரம்பித்தான். தினந்தோறும் அவர்களிடத்திலிருந்து திமிறி எழுந்துதான் மானம் காத்தோம்.
அவர்களின் தொந்தரவு போதாதென்று அந்த முகாமில் ஈக்களின் தொல்லையும் அதிகமாக இருந்தது. எங்கு பார்த்தாலும் ஒரே ஈதான். சாப்பாட்டிலும் குடிநீரிலும் வந்து அமர்ந்துகொள்ளும். இன்னும்ஏன், சிறுவர்களை மலம் கழிக்க அமர்த்தியபோது அவர்களை முற்றுமாக புற்றுபோல ஈக்கள் மொய்த்தன. இதனால் எல்லோரும் நிறைய உபாதைகளுக்கு ஆளானோம்.
ஏற்கனவே முகாமிற்கு வருவதற்கு முன்பாக இடம்பெயர்தலையே அன்றாட நிகழ்வாக வாழ்ந்து திரிந்த காலங்களில் ஆங்காங்கே கிடந்த தண்ணீரை கொடுத்ததால் பல்வேறு வகையில் குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தார்கள். வழியோரங்களில் கிடந்த தண்ணீரை குடித்து குழந்தைகள் மரணமான சோகங்களும் நடந்தது இருக்க, முகாமுக்கு வந்தவுடன் இங்கு கொடுக்கப்பட்ட தண்ணீரும் சரியில்லாததால் குழந்தைகள் நான்குபேர் இறந்து போனார்கள். தமிழனின் இறப்புக்களெல்லாம் சிங்கள அரசாங்கத்திற்கு ஒரு பொருட்டே இல்லையாதலால் எச்சலனமும் அவர்களது முகங்களில் தென்படவே இல்லை.
நோயுற்ற பிள்ளைகளை மருத்துவமனைக்கு கொண்டு சென்று காட்டுவதற்கும் அவ்வளவு சீக்கிரத்தில் அனுமதி தரமாட்டார்கள். துப்பாக்கி மட்டுமே தெரிந்தவர்களுக்கு அவசரம் என்பதெல்லாம் புரியாது. இன்றைக்கு காட்ட வேண்டுமென்றால் முந்திய மாலையிலேயே போய் வரிசையில் நின்றால்தான் முடியும். அதுவும் அங்கே மக்கள் அலைமோதும். நிற்கக்கூட முடியாது. ஒரே புண் நாற்றமும் சீழ்வடிந்த ரணங்களும் கட்டுப்போடப்பட்ட உடல் பொதிகழுமாகத்தான் இருக்கும்.
அழுகையும் ஒப்பாரியுமே அன்றாட பேச்சாக இருக்கும். காப்பாற்றிவிடலாம் என்று தூக்கி வந்தவர்கள் பிள்ளைகளையோ அல்லது பெற்றோர்களையோ சடலமாக அள்ளிச் செல்வார்கள். யாருடைய பிள்ளையாக, தாயாக, உறவினர்களாக இருந்தால்தான் என்ன? அவர்களின் அழுகையை எல்லாம் கேட்டுக்கொண்டு இருப்பவர்களுக்கு மனநோயே வந்துவிடம். இன்றைக்கு ஒரு மருத்துவர் வந்தார் என்றால் நாளை வேறொரு மருத்துவர் வருவார். மருந்து சீட்டுக்கள் கொடுப்பதில்லை என்பதால் நேற்று என்ன மருந்து கொடுக்கப்பட்டது என்றெல்லாம் அவருக்கு தெரியவாய்ப்பில்லை. நாம் பேசுவது அவருக்கு விளங்கிதொலையாது. அது அடுத்த சிக்கல். அவருக்கு என்ன புலப்படகிறதோ அதுதான் அந்த நோயாளியின் தலைவிதி என்று நினைத்துக்கொள்ள வேண்டியதுதான்.
ஒருவகையில் மருத்துவர்களை பாராட்டதான் வேண்டும். இரத்தத்தோடும் சதைகளோடும் முன்னிற்கும் ஆயிரக்கணக்கானோருக்கு ஒரு சில மருத்துவர்கள் மட்டும் மருத்துவம் பார்ப்பது என்பது சவாலான சேவைதான். ஆனாலும், புதிய புதிய மருந்துகளை உட்கொண்டு முன்னைய நிலையை விட பின்னைய நிலை மோசமானவர்களும் இருந்தார்கள்.
தினம்தோறும் சொல்லெண்ணா காயம் அடைந்தவர்களை சுமந்தபடி டிராக்ரர்கள் முகாமுக்குள் வந்துகொண்டே இருந்தது. கால்களிரண்டையும் இழந்தவர்கள் இருந்தார்கள். கை இழந்தவர்கள், கண் பறிக்கப்பட்டவர்கள், உடலில் அனைத்து இடங்களிலும் ஷெல்லடியால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் அதிலிருந்தார்கள். அதிலும் சிங்களவன் தரம் பிரித்தான். டிராக்ரர்களில் ஏற்றும்போதே அதிகம் காயப்பட்டவர்களை வாகனத்தில் ஏற்றவில்லை. முற்றிலுமாக காயமடைந்தவர்களை வைத்து நாங்கள் என்ன செய்வது என்று கேட்டான்.
ஒரு நபருக்கு இரண்டு கண்களும் இல்லை, கால்கள் இரணடும் இல்லை. அவரை முகாமுக்குள் சேர்க்கவே இல்லை. அவர் என்ன ஆனார் எப்படிப்பட்ட நிலையில் இறந்தார் என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. இன்னொரு நபர் இரண்டு கால்களும் இழந்து இரண்டு கைகளும் இழந்திருந்தார். அவரை உள்ளே அனுமதிக்கவில்லை. முற்றிலுமாக முகம் சிதைந்தவர்கள், குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்தவர்கள் மற்றும் இதுபோன்ற பலர் வாழ வாய்ப்பின்றி போர்க்களத்திலும் முகாம் வாசலுக்கு வெளியிலும் கைகழுவப்பட்டார்கள்.
குமிக்கப்பட்டிருந்த மக்களுக்கு தேவையான உணவுகளையும் சிங்கள அரசு சரிவர செய்து கொடுக்காமல் எங்களை பரிதவிப்புக்கும் பட்டினிக்கும் உள்ளாக்கியது. ஒரு கவளம் சோறு இருந்தாலே போதும் என்ற நிலை இருந்தது. எப்போது உணவு லாரி வரும் என்று காத்து கிடந்தோம். எந்த சத்தம் கேட்டாலும் அது அமுதம் சுமக்கும் வாகனம் இருக்காதா என ஏங்கி தவித்தோம். லாரிவரும். அதில் உணவுப்பொட்டலங்கள் இருக்கும். ஆனால் யானைப் பசிக்கு சோளப்பொரி போல இருக்கும். கைக்கும் எட்டாமல் வாய்க்கும் பத்தாமல் மேலும் பட்டினி தொடரும். இதுகூட வாய்க்காத நிலையில் பல வயோதிபர்கள் இருந்தார்கள்.
ஒருமுறை லாரி வந்து நின்றது. அதில் மாவுப்பொடிகள் வந்திருக்கின்றன என்ற தகவல் எல்லோருக்கும் பரவியது. பசியோடு காத்து கிடந்த சிறுவர்களும் பெரியவர்களும் குழந்தைப்பிள்ளைகளும் ஏங்கி நின்றார்கள். இராணுவ வீரன் வந்தான். முதலில் குழந்தைப்பிள்ளைகள் உள்ளவர்கள் வந்து பெற்று செல்லுங்கள் என்றான். முதலில் தாய்மார்கள் முண்டியடித்துக்கொண்டு வந்தார்கள். யார் யாரையும் தங்களுக்குள் குற்றம்காணா முடியாதபடி இரைகண்ட மீனாக எல்லா மக்களும் வாகனத்தை மொய்க்க ஆரம்பித்தார்கள்.
பட்டினியால் மக்களை வதைத்து வந்த காடையனின் ஏவல்காவலர்கள் தங்கள் கைகளில் இருந்த சங்கிலிகளால் பலம் கொண்டமட்டும் ஓங்கி அடித்தார்கள். விரட்டினார்கள் உணவின்றி ஒருவாரம் வாழலாம் இந்த அடிபட்ட இக்கணமே செத்து விடுவோமோ என அஞ்சி அடியின் வடுக்களை சுமந்தபடி எல்லோரும் ஓடிப்போனார்கள். எல்லாம் முடிந்தபிறகு மாவுப்பொடிகள் கொட்டி கிடந்ததை கண்டோம்.
புதருக்கும் புழுதிக்கும் வெப்பத்திற்கும் பயன்பட்ட செருப்புக்கள் கிடந்ததையும் அவரவர் கொண்டுவந்த பாத்திரங்களும் சிதறிக்கிடந்ததையும் பார்த்தோம். அதனோடு கலந்து ஒரு குழந்தை தலை நசிந்து செத்து கிடந்ததையும் கவனித்தோம். உள்ளார அழ மட்டமே எங்களைப் படைத்த இறைவனை நொந்து கொண்டோம்.
கால ஓட்டத்தில் எனக்கான விசாரணைகள் நடந்தன. ஒன்றரை ஆண்களுக்குப் பிறகு ஒரு வழியாக நான் சொன்னவைகளை நம்பி என்னை என் வீட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். வீட்டுக்கு வந்தேன். எனக்கென்று இருந்த வீடு இப்போது இல்லை என்பதை கண்டேன். இன்றளவும் அதே நிலைதான். ஆனாலும், நாடிழந்த எனக்கு வீடிழந்த துக்கம் பெரிதாக தெரியவில்லை.
(சந்திப்போம்……)
- அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
sm.seelan@yahoo.com

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை