வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, December 3, 2011

போர்க் குற்றத்தில் இருந்து தப்பிக்க இலங்கை அரங்கேற்றும் நாடகங்கள்!

 இலங்கை மீதான போர்க் குற்றச்சாட்டுக்கள் அழுத்தமாகப் பதிவாகியிருக்கின்றன. இலங்கை இதிலிருந்து மீண்டெழ முடியாதளவிற்கு மனித உரிமை அமைப்புக்களும் சர்வதேச மன்னிப்புச் சபையும் ஐ.நா. மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றன. இதனால், ஒரு விசாரணைக் குழுவை அமைக்கின்ற நிர்ப்பந்தமும் ஐ.நாவிற்கு ஏற்பட்டு, குழுவொன்றையும் அது அமைத்தது. அது இலங்கையின் போர்க் குற்றத்தை கண்டறிவதில் எவ்வளவு தூரத்திற்கு செயற்படும் என்பதற்கும் அப்பால், இந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடிந்த அனைத்து வழிகளின் ஊடாகவும் இலங்கை களமிறங்கியுள்ளது.


போர்க் குற்ற மீறல்கள் தொடர்பாக வெளிநாட்டவர்கள் யாரையும் தமது படையினரை விசாரணை செய்ய அனுமதிக்க முடியாது என சூளுரைத்துவரும் மகிந்த ராசபக்சே, நீதி விசாரணை என்ற பெயரில் நல்லிணக்க ஆணைக்குழு என்றவொன்றை அமைத்து உலகத்தை ஏமாற்றி வருகின்றார்.

குற்றம் செய்தவர்களைக் கண்டுபிடித்து, தாங்களே தண்டனை பெற்றுக் கொடுக்கப்போவதாக உலகத்திற்கு இலங்கை காண்பிக்க முயல்கின்றது. சர்வ தேசத்தின் தலையீடு உண்மைகளை வெளிக்கொண்டு வரும் என்ற அச்சம் காரணமாக, குற்றவாளிகளே குற்றங்களை விசாரிக்கின்ற விசித்திரம் இலங்கையில்தான் நடக்கின்றது.

இந்த ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்கு இலங்கையின் எதிர்க்கட்சி கூட மறுத்து வருகின்ற நிலையில், பாதிக்கப்பட்ட தமிழ் மக்களையும், ஒட்டுக்குழுக்களையும் சாட்சியமளிக்க வைத்தவர்கள் தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இந்த ஆணைக்குழு முன் சாட்சியமளிக்குமாறு வற்புறுத்தியுள்ளதாக தெரிய வருகின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சாட்சியமளிக்க வைப்பதன் ஊடாக, இந்த ஆணைக்குழுவை தமிழ் மக்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர் என இலங்கை அரசு காண்பிக்க முயல்கின்றது. இதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் துணை போகுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தமிழர் தாயகத்தில் உதிரிகளாகவும், கூட்டாகவும் படுகொலை செய்யப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் தொடர்பாக இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் 15 வருடங்களுக்கு முன்னர் யாழ்குடாவில் சிங்கள இராணுவம் நடத்திய படுகொலை ஒன்றை தூசுதட்டி எடுத்து கடந்த வாரம் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டு உரும்பிராயில் வேலாயுதம் ரஜினி என்ற இளம் தமிழ் பெண்ணைக் கடத்தி, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சிங்களப் படையினர், பின்னர் அப்பெண்ணை படுகொலை செய்து மலக்குழி ஒன்றில் போட்டு மூடியிருந்தனர். இது தொடர்பாக உடனடியாகவே சம்பந்தப்பட்ட படையினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், 15 வருடங்களுக்குப் பின்னர் இப்போதுதான் இந்தப் படையினருக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு, தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்தத் தீர்ப்பு வழங்கப்படவில்லை. குற்றம் செய்த படையினருக்கு தண்டனை வழங்கப்படுகின்றது என்பதை உலகத்திற்கு காண்பிப்பதற்காகவே அவசர அவசரமாக இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்களை சுட்டும், கடத்தியும் படுகொலை செய்வதைத் தவிர, இலங்கையில் சட்ட ரீதியாக யாருக்கும் இலங்கை அரசு மரண தண்டனையை நீண்ட காலமாக நிறைவேற்றியதில்லை. சர்வதேச நாடுகளில் இருந்து சில சலுகைகளைப் பெற்றுக்கொள்வதற்காக மரண தண்டனைகளை நிறைவேற்றாமல் இருந்து வருகின்றது. இந்நிலையில், தற்போது படுகொலை புரிந்த மூன்று இராணுவத்தினருக்கு மரண தண்டனை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கான மரண தண்டனை என்றைக்குமே வழங்கப்படப் போவதில்லை. ஏற்கனவே, யாழ்ப்பாணத்தில் பாடசாலை மாணவியான கிருஷாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திப் படுகொலை செய்த சிப்பாய்க்கு மரண தண்டனை வழங்கப்பட்ட போதும், அத்தண்டனை இதுவரை நிறைவேற்றப்படவில்லை. சிறைகளில் அவர்கள் சுகபோக வாழ்க்கையை அனுபவித்து வருவதாகவே கூறப்படுகின்றது. இந்நிலையில். சர்வதேசத்தை ஏமாற்றவே இன்னொரு தண்டனை குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேசத்தை ஏமாற்ற இலங்கை காலத்திற்கு காலம் இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டே இருக்கும். இவற்றை அம்பலப்படுத்தி, இலங்கையை போர்க் குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும்வரை புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் ஓய்ந்துவிடக் கூடாது.



நன்றி தென் செய்தி

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை