வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, December 8, 2011

மாவீரர்களை மதிப்போம்...


ஒவ்வொரு மாவீரரும் களத்தில் வீழும்போது தன் இனத்தின், தன்மக்களின் மீது பற்றுவைத்து, தான் வீழ்ந்தாலும் தன் இனத்திற்கு ஒருநாடு வேண்டும், அவர்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்ற
அசைக்கமுடியாத நம்பிக்கையோடுதான் வீழுகின்றார்கள். அவர்களுக்கும் குடும்பம், ஆசை, உணர்வுகள் எல்லாம் இருந்தன. ஆனாலும் விடுதலை உணர்வு அவர்களை மாவீரர்களாக்கியது.

அவர்கள் தாம் வீழும்போது தங்கள் குடும்பம் வாழும் என்ற அசைக்கமுடியாத உறுதியோடு களத்திலே வீழ்ந்தார்கள். கடந்த இருபத்திரெண்டு வருடங்களாக நாம் அந்த அணையா
மணிகளுக்காக போற்றிப் பூசித்து வந்த மாவீரர்நாள் கார்த்திகை 27. அதை அழிக்க சிங்கள அரசு அன்றும் கங்கணங்கட்டி நின்றது. இன்றும் எம்மக்களை தன் வலையில் வீழ்த்த எம்மில் சிலரை வைத்து தன் போலிநாடகத்தை அரங்கேற்றி வருகிறது.

வன்னியில் நடந்த நிகழ்வுகள் சில....!

1995 யாழ்ப்பாண இடம்பெயர்வுக்கு முன்னர் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் எங்களின் தோழர் தோழிகளின் புனிதஉடல் விதைக்கப்பட்டு பேணிப்பாதுகாத்து, பராமரிக்கப்பட்டு ஒவ்வொரு வருடமும் மாவீர்நாள் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வந்தது. அன்று தங்களின் பிள்ளைகளை, சகோதரர்களை, தங்களின் கணவன்மாரை, ஒன்றாக நின்று களமாடி எங்களுக்காக வீழ்ந்த அன்பான தோழர், தோழிகளை நினைத்து பூச்சூடி விளக்கு கொழுத்தி அவர்கள் நினைவுகளை நாம் மீட்டு உறுத்தி எடுத்து கொள்ளும் அந்தநாள்...

1995 யாழ்ப்பாண இடப்பெயர்வுக்கு பின்னர் சிங்கள அரசு செய்த கொடுமையிலும் கொடுமை அந்தக் கோப்பாய் துயிலும் இல்லம் புள்டோசர் போட்டு தரைமட்டமாக்கி தனது கோரத்தாண்டவத்தை அரங்கேற்றியிருந்தது அனைவரும் அறிந்ததே. அவர்களால் சீமேந்து கற்களால் கட்டப்பட்ட மேற்கட்டிடத்தை மட்டும்தான் அழிக்கமுடிந்ததே தவிர உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருந்த எங்களவர்களின் உணர்வுளையோ, அவர்களின் உறுதிகளையோ அழிக்கமுடியாது தோற்றுப்போனது சிங்களம்.



2002 ஆண்டு சமாதான காலத்தில் மீண்டும் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் புனரமைக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் நாங்கள் சென்று விதைத்த எங்கள் சொந்தங்களின் கல்லறைகளை எங்களால் இனங்காண முடியவில்லை. காரணம் இடமே மாறியிருந்தது. கார்த்திகை 27 நாம் கிளிநொச்சியிலிருந்து அங்கு சென்றபோது மக்கள் அலை அலையாக தங்களின் பிள்ளைகளைப் பார்த்துவிடவேண்டும் என்ற துடிப்பிலும் அந்த நேரத்தை விட்டு விடுவோம் என்ற பரபரப்பாலும் விரைந்து கொண்டிருந்தார்கள். அந்தவேகமும் துடிப்பும் எம்மையும் விரைவு படுத்தியது.

ஆனாலும் எங்கள் தம்பியின் கல்லறையை கண்டுபிடித்து விடுவோம் என்ற நம்பிக்கையோடு நாம் அவனை விதைத்த இடத்தைநோக்கி ஓடினோம். அங்கு எம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை. நேரம் 6.05 மணியாகி நிகழ்வு தொடங்கிவிட்டது. எங்கள் தம்பியை நினைத்து பொதுவாக வைக்கப்பட்டிருந்த விளக்கை ஏற்றிவிட்டு நிகழ்வு முடிந்ததும் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தம்பியின் கல்லறையைத் தேடிப்பிடித்தோம்.

அதே கோப்பாய் சிங்கள இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தபோது மக்களை அவர்கள் அனுமதிக்காத நிலையிலும் எமது போராளிகள் களவாகசென்று விளக்கு ஏற்றிவிட்டு வரும் வழியில் சண்டை ஏற்பட்டு அந்தநாளிலேயே தம்மை அர்ப்பணம் செய்தவர்கள் எங்கள் மாவீரர்கள். அதே போன்று நாம் முள்ளிவாய்க்கால் வரை சென்று இராணுவத்தினால் பிடிபட்டு வரும் வழியிலிருந்த விசுவமடு துயிலும் இல்லம் இருந்த இடம்தெரியாது வெறும் சமதரையாக இருந்தைப் பார்த்த எங்கள் இதயமே சுக்குநூறாக சிதறியபோது அந்த ஆத்மாக்கள் எங்களைத் தங்கள் மொழிகளால் ஆறுதல்படுத்தினார்கள். கலங்காதீர்கள் நாங்கள் உங்களை விட்டுப் போகமாட்டம். எங்கள் கல்லறைகளைத்தான் அழிக்கமுடிகிறது, எங்களை அல்ல என்று. இவ்வாறு பலநூறு பதிவுகள் சொல்லிக் கொண்டே போகலாம்.

சிலர் நினைக்கிறார்கள் முள்ளிவாய்க்காலுடன் எல்லாம் அழிந்துவிட்டது என்று. அந்த எண்ணத்தில் மக்களை குழப்பி மாவீரர்களின் புனிதத்ததை அழிக்க நினைப்பவர்கள் சற்றேனும் சிந்திப்பவர்களாக இருப்பீர்கள் எனில் அன்று அந்த மண்ணில் நின்று களமாடிய அத்தனை மாவீரர்களும், மாமனிதர்களும் நாட்டுப்பற்றாளர்களும் ஒரேயயாரு கொள்கைக்காகவே வீழ்ந்தார்கள். இன்றும் நாம் போற்றுபவர்களாக எம்மினத்துக்காகப் பேசப்படுபவர்களாக எல்லோர் மனங்களிலும் வாழும் இவர்களை ஏன் உங்களின் செயல்களால் கொச்சைப்படுத்துகிறீர்ளோ தெரியாதுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் குழப்பத்தை உருவாக்கும் உங்களுக்கு ஏன் இந்த வன்மம்?. அந்தப் புனிதமான நாளை கேவலப்படுத்த நினைக்கும் நீங்கள் அன்று அந்த மண்ணில் நின்று வீழ்ந்தபோது குண்டுமழைக்குள் நின்று போரின் வடுவைச்சுமந்து இன்றும் நிர்க்கதியற்று நிற்கும் அவர்களின் அப்பா, அம்மா, மனைவி, பிள்ளைகள், சகோதர, சகோதரிகள் அனுபவித்த வலிகளை நீங்கள் சற்றேனும் அனுபவிக்காததின் வெளிப்பாட்டினாலா? ஏனெனில் அந்த வடுக்களை சுமந்து இன்றும் அனுபவித்துக் கொண்டிருக்கும் நாங்கள் தெளிவாகவேதான் இருக்கின்றோம். ஏன் உங்களால் முடியாதுள்ளது.

உங்களில் எத்தனையோ பேர் அந்த மண்ணுக்கு உரமானவர்களின் குடும்பங்களை தூக்கிவிடுகின்றீர்கள். இருப்பினும் ஏன் நீங்களும்? குழம்பி செய்பவர்களையும் குழப்பி கொண்டிருக்கின்றீர்கள் என்று எமக்கு விளங்கவில்லை. தான் வீழும்போது தன் உறவுகளை உங்களிடம் ஒப்படைத்துச் சென்றவர்களின் எண்ணங்களுக்கு ஏன் எல்லாருமாக சேர்ந்து அந்தமாவீரர்களின் நினைவைப் புனிதப்படுத்த முடியாதா? என்ற கேள்வி உங்கள் ஒங்வொருவரிடமும் எழும்போது போட்டிவிலகி, பிரிவுகள் நீங்கி, எந்த எண்ணத்தை சுமந்து அவர்கள் வீழ்ந்தார்களோ அதைப் புனிதப்படுத்த இந்த வருடத்திலிருந்து அவர்களின் ஆத்மா மீது உறுத்தி எடுத்துக்கொள்வோம் வாருங்களேன்..!


ச. குட்டியம்மா

நன்றி ஈழ முரசு 

 

திவுகளை  படிக்கும் உறவுகளே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்களை தவறாமல் பதிவுசெய்யுங்கள்  நன்றி

 

 

2 comments:

  1. வாழ்க்கையின் ஈற்றடியை எழுதிவைத்துக் களமாடினார்...தம் இன்னுயிரை மண்ணுக்கீந்து வீர காவியமானார்...தமிழர் மனதில் அழியா ஓவியமானார்...மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்....

    ReplyDelete
  2. நன்றி சகோதரரே உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் எம்மை மேலும் உற்சாக படுத்தும் .. எம்மோடு இணைந்து பயணிக்கும்படி தாழ்மையான வேண்டுகோள் ..

    ReplyDelete

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை