முள்ளிவாய்க்காலின் கரையிலே நிகழ்த்தப்பட்ட மானுடத்துக்கு எதிரான குற்றங்களுக்காக, இன அழிப்புக்காக, போர்க்குற்றத்துக்காக மகிந்தா கும்பல் எப்போது கூண்டில் ஏற்றப்படப்போகிறார்கள். 2009ல் வன்னியில் சிங்களம் நிகழ்த்திய காட்டுமிராண்டித்தனங்களுக்கான நீதி தாமதமாகிக்கொண்டே போகின்றது. தாமதம் என்றாலும்கூட நீதி நிச்சயமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையின் வேர்கள் காய்ந்துபோனாலும் இன்னும் பட்டுப்போய்விடவில்லை.
ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கைக்கு ஆதரவாக ஆங்காங்கே எழும்பும் தேசங்களின் குரல்களும், மனிதஉரிமை அமைப்புகளின் வரவேற்பும் இந்த நம்பிக்கையை கொஞ்சம் (மிகமிககொஞ்சமாக) துளிர்க்கவைத்துள்ளது. அத்துடன் இந்த மேமாதத்தில் உலக அரங்கின் நீதிமன்றங்களில் மானுடத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக நடந்தவிசாரணைகளும், தீர்ப்புகளும்,கைது ஆணைகளும் எமக்கான நீதியும் ஒருநாளில் விரைவாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையை தருகின்றது. எல்லாவிதமான நம்பிக்கைகளும் அற்று நடமாடும் பிரேதங்களாக உலாவும் ஒரு இனத்துக்கு இத்தகைய நம்பிக்கையானது பெரும் அலைகடல் நடுவே உயிருக்கு தத்தளிக்குமொருவனுக்கு கிடைத்த சிறு மரத்குற்றிதான். பற்றிப்பிடிப்போம் இப்போதைக்கு அதனையே.
இந்தமாதம் 12ம்திகதி ஜேர்மன் நீதிமன்றத்தின் குற்றவாளிக் கூண்டில் சக்கரநாற்
காலியில் அமர்ந்திருந்த 91 வயதுடைய ஜோன் டெம்ஜனோக் (John Demjanjuk) என்ற உக்ரைன் நாட்டைசேர்ந்த நாஸிப்படை வீரனுக்கு இரண்டாம் உலக யுத்தகாலப் பகுதியில் யுத்தகாலப்பகுதியில் சொபிபர் (sobibor) தடுப்புமுகாமில் 28,060 யூதமக்களைஅழித்ததற்குதுணைபோன
தற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.
அதே ஜேர்மனியின் பிராங்போர்ட் நகர நீதிமன்றத்தில் இந்தமாதம் 11ம் திகதி ருவண்டா நாட்டின் வடகிழக்கு பகுதி நகரான ‘மவும்பா’ நகர தலைவரான (Mayor of mavumba) Rwabukombe என்பவர் மீதான இனப்படுகொலை வழக்கில் முதலாவது சாட்சி தானும் தனது ருட்சி இனத்தவர்களும் எப்படி இவரால் திட்டமிட்டு சிறைவைக்கப்பட்டோம் என்றும் சித்திரவதைசெய்யப்படடோம் என்றும் தனது மக்கள் எப்படி இனஅடிப்படையில் கொல்லப்பட்டார்கள்என்றும்சாட்சியமளித்துஇப்போதேதீர்ப்பைஓரளவுக்குஉ றுதிசெய்துள்ளார்.
உலகின் எந்தப்பாகத்திலும் நடைபெற்ற, நடைபெற்றுவரும் இனப்படுகொலைகளில் சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்கும் உரிமை ஜேர்மனியின் சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதைப்போலவே அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தில் அமெரிக்க பிரசையாக மாறியிருக்கும் ருவண்டாவில் ஆசிரியராகவும், ஆலைஒன்றின் அதிபராகவும் இருந்த hutu இனத்தை சேர்ந்த லாசர கொபயகா (Lazara kobagaya) என்பவர் 1994ல் நடைபெற்ற ருட்சி இனமக்கள் மீதான இனப்படுகொலையில் சம்பந்தப்பட்டதை அமெரிக்க குடியுரிமை விண்ணப்படிவத்தில் தெரிவிக்காமல் (செய்தவன் ஒப்புக்கொள்ளுவானா என்ன) விட்டதற்காக கூண்டில் ஏற்றப்பட்டு விசாரிக்கப்படுகின்றான்.
மிகநீண்ட இனஅழிப்பு வழக்கொன்றில் தன்சானிய நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சர்வதேச நீதிமன்றத்தால் (international criminal tribunal for Rwanda-ICTR) இந்தமாதம் 17ம் திகதி ஒகஸ்டின் பிசிமுங்கா (Augustin Bizimungu) என்ற இனப்படுகொலையாளிக்கு 30 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவனே 1994களில் ருவண்டாவில் இனப்படுகொலை நடைபெற்ற பொழுதுகளில் தலைமை இராணுவத்தளபதியாக இருந்துள்ளான். இவனுடன் மேலும் மூன்று மூத்த இராணுவ முன்னாள் தளபதிகளும் இதே நாளில் தண்டிக்கப்ப்டுள்ளனர்.
அதைப்போலவே இம்மாதம் 16ம் திகதி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைமை வழக்கறிஞர் லிபிய அதிபர் கடாபிக்கு எதிராக, அவர் மானுடத்துக்கு எதிரான குற்றச்
செயல்களில் ஈடுபட்டதற்காக அவரை கைதுசெய்யவேண்டும் என்ற மனுவை கொலண்டில் அமைந்திருக்கும் சர்வதேசநீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.
இனப்படுகொலை, இனச்சுத்திகரிப்பு, போர்க்குற்றம், மானுடத்துக்கு எதிரான குற்றங்கள், திட்டமிட்டு, பாரிய அளவில் பொது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் என்ற எந்த பெயரில் இருந்தாலும் இத்தகைய குற்றச்செயல்களில் ஈடுபட்டோர் எங்காவது தண்டிக்கப்படும்போதும், நீதிவிசாரணைக்கு உள்ளாக்கப்படும்போதும் ‘எங்களுக்கு யாருமே இல்லையா?’ என்ற முள்ளிவாய்க்காலின் இறுதிக் கதறலுக்கு எப்போது நீதிகிடைக்கும்என்றஏக்கமே எழுகின்றது.
இத்தகைய வெறும் ஏக்கம் மட்டுமே சிங்களத்தின் இனப்படுகொலையாளிகளை தண்டித்துவிடப்போதுமானது அல்ல. ஐ.நா செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவின் பரிந்துரைகளை முதல்கட்டமாக சிங்களம் நிறைவேற்றுவதற்கு அழுத்தங்களை வழங்க புலம்பெயர் சமூகம் முயலவேண்டும்.
இன்னுமொரு முனையில் நடைபெற்றது ஒரு இனப்படுகொலைதான் என்ற நிரூபணங்களை சர்வதேச சமூகத்தின் முன் வைப்பதற்கு ஏற்ற அனைத்து செயற்பாடுகளையும் தமிழர் அமைப்புகள் இனிவரும் காலத்தில் கூர்மைபடுத்த வேண்டும். இதற்கானபாதைமிகநீண்டதாகக்கூட இருக்கலாம். ஏனென்றால் எண்ணெய் பீறிடும் பாலைவனத்தில் இருந்து நீளும் நீதிக்கான குரலுக்குதான் முன்னுரிமை வழங்கப்பட்டு
விடும். எங்களைவிட வளம்மிகுந்த மண்ணில் இருந்து அளிக்கப்படும் நீதிகோரிய மனுவுக்குதான் எம்மை பின்னுக்கு தள்ளிவிட்டு முதல் உரிமை வழங்கப்பட்டுவிடும். பாராபட்சம் நிறைந்ததும், ஓரவஞ்சனை கொண்டதும், பாராமுகம் கொண்டதும்தான் சர்வதேசநீதி அமைப்பு. ஆனாலும் எமக்கு இப்போது அதனைவிட்டால் வேறு வழியில்லை.
எமது மக்கள் கொத்துக்கொத்தாக கொல்லப்படபோகிறார்கள் என்று தெரிந்தும், எமது மக்கள் கூட்டம்கூட்டமாக கொல்லப்படுகின்றபோதும் பார்த்துக்கொண்டிருந்த சக்திகளிடம்தான் நாம் எமக்கான நீதியை கேட்டுநிற்கின்றோம் என்பதை மறக்க கூடாது. யாரிடம் சென்றுதன்னும் மகிந்த கும்பலை கூண்டில் ஏற்றியே ஆகவேண்டும். மகிந்த கும்பல் கூண்டில் ஏற்றப்படுவது என்பதும் தண்டிக்கப்படுவது என்பதும் இழந்த உயிர்களை மீண்டும் பெற்றுதராது என்பதும் இறுதி நேரத்து வதைகளின் வலிகளை ஆற்றாது என்றாலும் அந்த மக்கள் எதற்காக அந்த மண்ணில் நின்றார்களோ, அந்த மண்ணில் போராடினார்களோ அந்த தாயக விடுதலைக்கான முதல் திறவுகோலாக மகிந்த கும்பல் தண்டிக்கப்படப் போவது அமையும். நீதியின்கனத்தசட்டப் புத்தகங்களிலும், புரியாத சரத்துகளிலும் விறைத்து
நிற்கும் வாக்கியங்களைவிட முள்ளிவாய்க்கால்பொழுதில் எமது மக்கள் வடித்தகண்ணீர் அதிக வலிமையானவை. அவை என்றாவது ஒருநாள் இதற்கு பதில்பெற்றே தீரும்.
‘அல்லற்பட்டு ஆற்றாது அழுத கண்ணீரற்றே செல்வத்தை தேய்க்கும் படை’
தன்னைத் தானே
ஈகம் செய்தவன்
மே18 என்பது இன்னுமொரு விதத்தில் முக்கியமானதும், தலைவணங்கி நினைவு கொள்ளத்தக்க நாளுமாகும். இருபத்திஏழு வருடமாகின்றது. 18.05.1984 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முதன்முதலாக சயனைற் அருந்தி வீரச்சாவடைகின்றான் வீரவேங்கை பகீன் என்ற செல்வம்.
அவன் எல்லோரையும் அடிக்கடி கேட்டுக்கொண்டதைப்போலவே “இது வேலை செய்யுமா?, வேலை செய்யுமா?” என்பதற்கு சாட்சியாக அது வேலை செய்யும் என்று சொல்லாமல் சொன்னபடி பகீன் போய்சேர்ந்துவிட்டான். மிகவும் துறுதுறுப்பானவன்அவன். அவனைப் பொறுத்தவரையில் ஏதாவது செய்துகொண்டே எந்தநேரமும் இருக்கவேணும் விடுதலைக்காக.
1983 தென்னிலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரம் கொழுந்துவிட்டுஎரிந்துமுடிந்த பொழுதில் அது விடுதலைப் போராட்டத்துக்கு ஏராளமான
வர்களை தாயகத்தில் இருந்து மட்டுமல்லாமல் அப்போது புலம்பெயர்ந்திருந்த தமிழர்களிலும் சிலரை ஈர்த்துக்கொண்டு உள்இழுத்தது. 1983 ஓகஸ்ட்டில் சென்னையில் அமைந்திருந்த உட்லண்டஸ் விடுதியில் பாலசிங்கம் அண்ணாவுடன் ஒருசில தமிழ் இளைஞர்களும் ஜேர்மன், இங்கிலாந்தில் இருந்து போராட்டத்தில் இணைவதற்காக வந்திருந்தனர். அவர்களில் ஒருவனாக முதலில் அறிமுகம் ஆனவன் பகீன். பகீனுடன், குமரப்பாவும், பாலா (பொன்னம்மானுடன் வீரச்சாவடைந்தவர்) இன்னும் ஓரிருவரும் வந்திருந்தனர்.
பகீன் வந்துசேர்ந்தபொழுது மிகவும் முக்கியமான காலகட்டமாக இருந்திருந்தது. அப்போதுதான் அங்கு பயிற்சி முகாம்களையும், கட்டமைப்புகளையும் உருவாக்க தலைவர் முடிவு செய்திருந்த நேரமும் அதுதான். ஏராளம் இளைஞர்களை அமைப்புக்குள் எடுப்பதற்கான ஆயத்த வேலைகளை தாயகத்தில் நிறைவுபெற்று வரும்வேளையில் அவர்களை தமிழ்நாட்டுக்கு கொண்டுவந்து தங்கவைக்கவும், பயிற்சி அமைக்கவும் ஏராளமான அலைச்சல்களையும், நித்திரை அற்றபொழுதுகளையும், கனமான வேலைகளையும் பகீனும் சேர்ந்தே சுமந்தான்.
பயிற்சி முகாம்களின் காணிகளை சுத்தம்செய்வது, கொட்டில்போடுவது, புதிய இருப்பிடங்களை நகரங்களுக்குள் எடுப்பது என்று மிகக்குறுகிய நாட்களுக்குள் பகீன் நிறைய செய்தான். ஆனாலும் முதல் அணிகளில் பயிற்சி எடுக்கும் வாய்ப்பு அவனுக்கு கிட்டவில்லை. அவனுக்கு பயிற்சி எடுப்பதில் அளவு கடந்த விருப்பம் இருந்தது. ஏனென்றால் பயிற்சி எடுத்தால்தான் நாட்டுக்கு போகலாம் என்று. பயிற்சி எடுக்காமலே நாட்டுக்குப் போவதற்கு அவனின் பொறுப்பாளர்களிடம் எப்போதும் கேட்டுக்கொண்டே இருப்பான். வடபழனிப் பகுதியில் அமைந்திருந்த அமைப்பின் இருப்பிடம் ஒன்றில் அதன் பொறுப்பாளரான மாதகல் ராஜனிடம் (லெப்.கேணல் ராஜன்) பீல்ட்டுக்கு அனுப்புங்கோ, நாட்டுக்கு அனுப்புங்கோ என்று நச்சரித்து பகீன் வாங்கிய சிறுதண்டனைகள் கணக்கில் அடங்காது.
தாயகத்தைவிட்டு தொலைவில் ஜேர்மனியில் இருந்ததால் அவன் தனது தேசத்தை, தனது மண்ணை ஆழமாக நேசித்ததும், அதை காணதுடித்ததும் அவனுடன் ஒவ்வொருமுறை கதைக்கும் பொழுதிலும் புரியக்கூடியதாக இருக்கும். அவன் இருந்த வடபழனி முகாமுக்கு மூத்த உறுப்பினர்கள் யார் வந்தாலும் அவர்களிடம் தன்னை களத்துக்கு அனுப்பும்
படி கேட்டுக்கொண்டே இருப்பான்.அவனின் உறுதியைப் பார்த்த தலைமை அவனை பண்டிதருக்கு துணையாக அனுப்பிவைத்தது. மிகவும் சிக்கல் நிறைந்ததும், மற்றைய இயக்கங்களுடன் முரண்பாடு அதிகமானதுமான ஒரு காலகட்டத்தில் அவன் அரசியல் வேலைகளை பண்டிதரின் வழிகாட்டலில் செய்தான். மக்களுடன் ஒரு ஆழமான தொடர்பு வலையமைப்பை மிகக்குறுகிய காலத்திலேயே அவனால் உருவாக்கமுடிந்தது அவனின் ஓய்வொழிச்சல் இல்லாத வேலைகளால்தான். அப்படியான ஒரு பொழுதில்தான் எதிரியிடம் பிடிபட்டால் அமைப்பின் இரகசியங்களை சொல்லிவிட நேரிடும் என்பதற்காகத்தன்னைத்தானே சயனைற் அருந்தி அழித்துக்கொண்டு வீரச்சாவடைந்தான்.
தமிழர்களின் விடுதலைப் போராட்ட வரலாற்றில் பகீனும் முக்கியமான ஒரு நடுகல்தான். நெஞ்சுக்குள் எப்போதும் குத்திட்டு நிற்கும் அவனின் நினைவுகள். தாயகத்தை இப்படியும் ஒருவன் நேசிக்கமுடியுமா என்பதை அவனுடன் கதைத்தபொழுதுகள் எப்போதும் சொல்லிக்கொண்டே இருக்கும்.
No comments:
Post a Comment