இது ஒரு வேறு பட்ட நேர்காணல். கனவுகள் கலைந்துபோன நிலைமையில் ஒரு போராளி - சரணடைந்தவராகி, கைதியாகி, மன்னிப்பு வழங்கப்பட்டவராகி, புனர்வாழ்வுக்குட்பட்டவராகி (?), மறுவாழ்வு நிலைக்குள்ளானவராகி (?) இப்போது பொதுவாழ்வில் ஈடுபடும் ஒரு நிலைக்குள்ளான சந்தர்ப்பத்தில் இந்த நேர்காணல் பதிவு செய்யப்படுகிறது.
அதிகம் பேச விரும்பாத - ஏன் பேசவே விரும்பாத - பேசி என்னதான் பயன் என்ற நிலையில் - இந்த நேர்காணல் பதிவு செய்யப்பட்டது.
குறிப்பாக, 'விருப்பமில்லாத நிலையிலும் நான் இங்கே பேசுவதன் மூலமாக சில விசயங்களை வெளியே தெளிவு படுத்த முடியும். உள்ள நிலைமைகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காக பேசுகிறேன்' என்று சொல்லும் ஒரு போராளியோடு உரையாடுகிறோம்.
இந்தப் பதிவு மிகவும் உணர்ச்சி பூர்வமான நிலையில் பதிவு செய்யப்பட்டது.
எதிலிருந்து தொடங்குவது என்று தெரியவில்லை. என்றாலும் நாம் பேச வேணும். நீங்கள் இப்போது எப்படி எல்லாவற்றையும் உணர்கிறீங்கள். அதாவது, கடந்த காலம் நிகழ்காலம் குறித்து....
ம். என்னத்தைச் சொல்ல. எல்லாம் முடிஞ்சுது எண்டுதான் சொல்ல வேணும் போல இருக்கு. ஆனால் அடுத்த கணமே ஒண்டும் முடியேல்லப் போலவும் இருக்கு. எல்லாமே குழப்பந்தான்.
இப்ப பிரச்சினைகள் கூடியிருக்கு. நாங்கள் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலைமை உருவாகியிருக்கு. ஆனால் இப்படியே காலம் உறைஞ்சு போயிருக்காது. நாளைக்கு இப்ப இருக்கிற நிலைமை இருக்காது. இன்னொரு மாதிரியான நிலைமை வரும். அது முந்தியைப் போலத்தான் இருக்கும் எண்டில்லை.
இப்ப இருக்கிற இந்த நிலைமையை யாராவது நினைச்சிருப்பமா? அப்பிடித்தான் நாளைக்கு இன்னொரு நிலைமை வரும் எண்டு நம்பிறன் வரலாறு எப்பவும் தேங்குவதில்லை. அது பின்னோக்கியும் பாய்வதில்லை எண்டு சொல்லுவார்கள்.
இது எனக்கு மட்டும் தெரியிற ஒரு பிரச்சினையெண்டு நான் நினைக்கேல்ல. அல்லது எங்களைப் போல ஒரு நிலைமையில இருக்கிற ஆக்களின்ர பிச்சினை எண்டும் நான் பாக்கேல்ல.
பொதுவாகச் சொல்லிறதெண்டால் என்ன செய்யிறதெண்டு தெரியேல்ல எண்டுதான் எங்களின்ரை நிலைமையைச் சொல்ல வேணும். கண்ணைக் கட்டிக் காட்டில விட்டது எண்டு சொல்லுவினம். நாங்கள் காட்டில கைவிடப்படேல்லை. முள்ளுக்கு மேல நெருப்பைப் பரவி விட்டு, அதுக்கு மேல நிக்கச் சொன்னதைப் போல இப்ப இருக்கிறம்.
இதில கடந்த காலம் - நிகழ்காலம் எண்டு என்ன இருக்கு? ஆனா ஒண்டு மட்டும் உண்மை, நாங்கள் எங்களால முடிஞ்ச அளவுக்கு விசுவாசமாகச் செயற்பட்டிருக்கிறம். அதாவது போராட்டத்தில தவறுகள் பிழைகள் இருக்கலாம். போராளிகளிலயும் அந்தப் பலவீனங்கள் இருக்கலாம். அப்பிடி ஏதோ இருந்துதானே நாங்கள் தோற்றுப் போயிருக்கிறம்.
இல்லையெண்டால் எப்பிடித் தோற்க முடியும். அதுவும் உயிரையே ஆயுதமாக்கிய ஒரு அமைப்புத் தோற்கிறது எண்டால் என்ன சாதாரண சங்கதியா? ஆகவே எங்கோ குறைபாடு இருக்கு.
நான் இப்ப அதைப் பற்றியெல்லாம் கதைக்க விரும்பேல்ல. அதைக் கதைக்கிறதால எனக்குத்தான் இப்ப பிரச்சினை. ஆனால், இப்ப எங்கட போராட்டத்தின்ர சரி பிழைகளைக் காணக்கூடியதாக இருக்கு. இதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேணும்.
என்னைப் பொறுத்தவரை எல்லாம் ஒரு படிப்பினைதான். ஆனால், மனிசன் எவ்வளவைப் படிச்சாலும் திருந்தவே மாட்டான்.
நாங்கள் பட்ட கஸ்ரங்களுக்கான பயன் கிடைக்கயில்லை எண்டதும் சனங்களின்ரை சாவு அநியாயமாகப் போயிட்டுது எண்டுந்தான் எனக்குக் கவலை. மற்றப்படி நான் என்னைப் பற்றிக் கவலைப்படேல்ல. எவ்வளவோ எதிர்ப்புகளுக்கு மத்தியிலயும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியிலயும் வளர்த்தெடுத்த அமைப்பின்ர தோல்வியைத் தாங்க முடியாது.
என்னைப் பொறுத்தவரை வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில இருந்த வேறுபாட்டைச் சரியாகக் கணக்கெடுக்கத் தவறியிட்டம் எண்டுதான் சொல்லுவன்.
அப்படியென்றால், அதை விளக்க முடியுமா? வெற்றிக்கும் தோல்விக்கும் இடையில் இருந்த வேறுபாட்டை எப்படிப் புரிந்திருக்க வேணும்?
தோல்வியில் கிடைக்கிற அனுபவங்கள் வேற. வெற்றியில கிடைக்கிற அனுபவங்கள் வேற. போராட்டத்தில ஒரு போதும் தோல்வி எண்ட சொல்லையே பாவிக்கக்கூடாது. அதைப் பின்னடைவு எண்டுதான் சொல்ல வேணும். அப்ப, பின்னடைவில நாங்கள் ஒரு நெருக்கடியைச் சந்திப்பம். அந்த நெருக்கடியில இருந்து மீளுறதுக்காக எல்லாரும் ஒண்டாக நிற்பினம்.
ஆனால வெற்றியில ஆளாளுக்குப் போட்டி வந்திடும். பங்கைப் பகிர்வதில், சுகங்களையும் வசதிகளையும் அனுபவிக்கிறதில போட்டிகள் வரும். இந்தப் போட்டியில இடைவெளிகளும் பகைமையும் தானாகவே வரும்.
இதை என்ரை கண்ணால பார்த்திருக்கிறன்.
இது உள்ளுக்குள்ளை எண்டால், வெளியில வெற்றியின் போது வாற வாய்ப்புகளையும் தொடர்புகளையும் சந்தர்ப்பங்களையும் நாங்கள் சரிவரப்பயன்படுத்தியிருக்கலாம். இதுக்கு ஒரு நிதானம் இருந்திருக்க வேணும். ஆனால், இதெல்லாம் ஏன் இடையில பிழைச்சு கெட்டுப் போனதெண்டு தெரியேல்ல.
இறுப்போர் நடந்த போது என்ன செய்தீர்கள்? நீங்கள் இறுதி வரையிலும் முள்ளிவாய்க்காலில் இருந்தவர் என்ற வகையில் அந்த நாட்களை அந்தக் கணங்களை எப்படி உணர்ந்தீர்கள்?
இதைப் பற்றி நான் கதைக்க விரும்பேல்ல. ஏனெண்டால் இதைப் பற்றி நாங்கள் சரணடைந்த பிறகு எங்களை விசாரித்த படைத்தரப்பிடம் சொல்லியாச்சு. இனி நான் வேற இடங்களில கதைச்சு வேற பிரச்சினைகளை உருவாக்க விரும்பேல்ல. பொதுவாகச் சொல்லிறதெண்டால் இதைப் பற்றிக் கதைக்காமல் விடுறதுதான் நல்லது.
ஆனால் எங்கட தலைவிதியைப் பாத்தீங்களா? நாங்கள் ஆரிட்டை எதையெல்லாம் சொல்லக் கூடாது எண்டு நினைத்தமோ அதையெல்லாம் அவங்களிட்ட சொல்ல வேண்டிய நிலையொண்டு வந்ததை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? ஆனால் அதை ஏற்றுக் கொண்டுதான் வாழுறன்.
கடைசி நாட்களில் சாவதா சரணடைவதா எண்ட போராட்டம் எனக்கு வந்தது. என்னை மாதிரித்தான் பல ஆயிரக்கணக்கான போராளிகள் அந்த வெட்டையில கொதிக்கிற மணற் குவியல்களுக்கு மேல நிண்டார்கள்.
ஒருவராலயும் ஒரு முடிவையும் எடுக்கேலாமல் இருந்திது. பிறகு நடக்கிறது நடக்கட்டும் எண்டு சனங்களோட ஆமியிட்ட போனதுதான். ஆனால், அப்பிடிப் போகேக்க இருந்த மன நிலையைச் சொல்லேலாது. அது பெரிய கொடுமை.
பிள்ளையளையும் கூட்டிக் கொண்டு, என்ன செய்யிறது, என்ன நடக்கப் போகுது எண்டு தெரியாமல் வெறுங்கையோட எதிர்த்தரப்பிட்டப் போறதை எப்பிடிச் சொல்ல முடியும்?
விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரை அவர்கள் எதிரியை அழிப்பது அல்லது எதிரியிடம் சிக்காமல் உயிரை மாய்த்துக் கொள்வது என்ற மரபைக் கொண்டவர்கள். சயனைட் என்ற ஒரு விசயமே புலிகளினால்தான் தமிழ்ச் சூழலில் பிரபலமாக்கப்பட்டது. புலிகளின் சிறப்பு அடையாளங்களில் சயனைட் ஒன்று. இந்த நிலையில் நீங்கள் இறுதிக் கட்டத்தில் எதிர்த்தரப்பின் கைகளில் சிக்காமல் சரணடையும் முடிவை எப்படி எடுத்தீர்கள்?
இது தனியே நான் எடுத்த முடிவோ, எனக்கு மட்டும் ஏற்பட்ட ஒரு பிரச்சினையோ இல்லை. அப்படி எண்டால்தான் நீங்கள் என்னை இப்பிடிக் கேட்க முடியும். இது பல ஆயிரக்கணக்கானவர்கள் சந்திக்க வேண்டியிருந்த பிரச்சினை. அதிலும் முற்றிலும் வேறுபட்ட ஒரு சூழலில் ஏற்பட்ட ஒரு பிரச்சினை.
என்னைப் பொறுத்தவரை இந்த நிலைமை யாரும் எதிர்பார்த்திருக்காத ஒரு பிரச்சினை எண்டுதான் சொல்லுவன். எதிரிகள் கூட இப்படியொரு நிலையில் புலிகள் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை.
அதைப்போலவே இந்தப் பிரச்சினையைப் பற்றிக் கதைப்பதும் ஒரு எதிர்பாராத நிலைமைதான்.
நாங்கள் எதிர்பாராமல் சரணடைய வேண்டி வந்ததைப் போலவே சயனைற் கடிக்காமல் விட்டதும் ஒரு எதிர்பாராத விசயந்தான்.
ஆனால் இதே இடத்தில நான் ஒரு விசயத்தையும் சொல்ல வேணும். நாங்கள் ஏன் சயனைட் குடித்திருக்க வேணும் எண்டு எதிர்பார்க்கிறியள்? அல்லது அங்கே சயனைற் கடிக்காமல் விட்டதைத் தவறாகப் பாக்கிறீங்களா?
இயக்கத்தையும் தலைமைப்பீடத்தையும் இயக்கத்தின்ர ஆயுதங்களையும் பாதுகாக்க வேணும் எதிரியிடம் இரகசியங்கள் எதுவும் போய்ச் சேரக்கூடாது. ஆயுதங்களை எதிரி எடுக்கக் கூடாது எண்டதுக்காகத்தானே சயனைட் குடிக்க வேணும்? அப்படித்தானே இயக்கத்தின்ர விதியும் எதிர்பார்ப்பும் இருந்தன.
ஆனால், அந்த இயக்கமும் ஆயுதங்களும் தலைமையும் எதிரியிடம் சிக்கிய பிறகு எல்லாமே முடிஞ்சிட்டுது எண்ட பிறகு நாங்கள் சயனைட் கடிக்கிறதால என்ன பிரயோசனம்?
ஒருக்கா நீங்கள் அந்தக் காட்சியை நினைச்சுப் பாருங்கள். இறுதிப் போரில சரணடைந்த 13000 ஆயிரம் பேரும் சயனைற்றைக் கடித்துச் செத்திருந்தால் அந்தப் பிரதேசம் முழுக்கவும் பிணக்காடாகத்தான் இருந்திருக்கும். ஆனால், அதால ஆருக்குத்தான் என்ன லாபம். அப்பவும் எதிர்த்தரப்புத்தான் சந்தோசப்பட்டிருக்கும்.
ஆனால், பிறகு நான் பல தடவை அங்க அப்ப சயனைட்டைக் கடிக்காமல் விட்டதுக்காகக் கவலைப்பட்டிருக்கிறன்.
இருக்கும் வரையும் சரியாகவும் விசுவாசமாகவும் இயங்கினம். எல்லாம் கையை மீறிப் போனாப் பிறகு வீம்புக்கு செத்து மடியிறதால என்ன பலன்? நீங்கள் சொல்கிறபடி பார்த்தால், போர் முடியும் போது மிஞ்சியிருந்த அத்தனை போராளிகளும் செத்திருந்தாலும் என்ன நடந்திருக்கும்? சாவுதான். பிணக்குவியலாக அப்பிடியே செத்துத்தானிருப்பம்.
ஒரு சாவின் மூலம் மக்களுக்கும் தாய் மண்ணுக்கும் ஏதாவது கிடைக்கும் என்றால், நானோ அல்லது மற்றப் போராளிகளுமோ செத்திருக்கலாம். அது வீரச்சாவாகவும் கருதப்பட்டிருக்கும்.
ஆனால், அதுக்கெல்லாம் சந்தர்ப்பம் இல்லாமலே நாங்கள் சரணடைய வேண்டி வந்தது. பிறகென்ன, கைதியாக்கினார்கள். கைதி எண்டால் அவர்களுடைய கட்டுப்பாட்டில், அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைச் செய்யும் நிலைதான் இருந்தது. இப்பவும் ஏறக்குறைய அதே நிலைமைதான்.
இப்ப வெளியாலே விடப்பட்டிருக்கிறம். இது பேரளவிலதான். ஆனால் சுயாதீனமாக நாங்கள் வாழ முடியேல்ல. நாங்கள் முயன்றாலும் சூழல் அதுக்கு முழுக்க இடந்தராது. சிலவேளை சிலபேருக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினை மாதிரித் தெரியாமலிருக்கலாம். அவையள் எந்தச் சூழலுக்கையும் வாழக்கூடியமாதிரி தங்களை மாத்தியும் கொள்ளலாம்.
ஆனால் என்னால அங்காலயும் போக முடியவில்லை. இங்காலையும் போக முடியேல்ல. ஏதோ மனதுக்குள்ள கிடந்து உருட்டிக் கொண்டிருக்கு. நாங்கள் எங்கேயோ பிழைவிட்டிருக்கிறம். கனக்கப் பிழையள். அதுதான் இப்ப எனக்குப் பிரச்சினை.
நாங்கள் பிடிபட்டுக் காம்பில இருக்கேக்க இதை உணர்ந்திருக்கிறன். பலரிட்டயும் இந்த மாதிரியான ஒரு, ஒரு நிலைமையைப் பாத்திருக்கிறன். பொதுவாகக் கனபேர் கவலைப்பட்டார்கள்.
நாங்கள் கன இடத்தில பிழை விட்டிட்டம் எண்டதை வாய்விட்டே சொன்னார்கள். ஆனால் இனிப் பழைய இடத்துக்குத் திரும்பிப் போக முடியாது. ஆனால் நாங்கள் இப்பிடியே இருக்கவும் ஏலாது. இதைத்தான் நான் திரும்ப திரும்பச் சொல்லுவன்.
சரணடைந்தபோதே எங்களுக்குத் தெரியும், நாங்கள் விரும்பாத ஒரு இடத்துக்குத்தான் கொண்டு போகப் போறாங்கள் எண்டு நினைச்சம். அப்பிடியே நடந்தது, போராட்டத்தின்ர தோல்வியே நாங்கள் விரும்பாத ஒரு இடந்தானே. அதாவது, அப்படியான நிலைமை எண்டது நாங்கள் விரும்பாத நாங்கள் எதிர்பார்க்காத, நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு நிலைதானே.
பிறகு இடைக்கிடை விசாரணைகள். தேவையில்லாத சந்தேகங்கள். எப்பவும் என்னை யாரோ கண்காணிக்கிற மாதிரி ஒரு உணர்வு. இதுதான் அடுத்த பெரிய பிரச்சினை.
இப்பிடியே எல்லாப் பக்கத்தாலையும் வதைபடுகிறதை விட சாகலாம். அல்லது இந்த நாட்டை விட்டே எங்காவது தொலைஞ்சு போகலாம்.
பழைய இடங்களையும் தெரிஞ்ச சனங்களையும் பாக்க எப்பிடியிருக்கும் எண்டு சொல்லுங்கோ பார்ப்பம்.
சரி, என்ன மாதிரியான பிழைகள் நடந்திருக்கு? அதை எப்படிச் சீர்ப்படுத்தியிருக்க முடியும் என்று நினைக்கிறீர்கள்?
இதைப் பற்றி இஞ்ச இப்ப கதைக்க விரும்பேல்ல. அதுக்கு காலம் இருக்கு. அல்லது அதை நான் கதைக்க விரும்பேல்ல. அதில கன பக்கங்களிருக்கு. பல காரணங்களும் அந்தக் காரணங்களோட தொடர்பான கன தரப்பும் இருக்கு. எல்லாத்தையும் சரியாக அறியாமல் கதைக்கவும் முடியாது.
ஆனால், ஏதோ நடந்திருக்கு எண்டது மட்டும் உண்மை. இல்லையெண்டால், இந்த பெரிய அமைப்பும் போராட்டமும் இப்பிடிச் சட்டெண்டு முடிஞ்சு போகுமா?
இதையெல்லாம் ஆரோ ஒரு நாளைக்கு வெளியில சொல்லத்தான் போகினம். சிலர் – பல விசயங்களையும் அறிஞ்ச ஆட்கள் - இதையெல்லாம் எழுதக் கூடும்.
என்னைப் பொறுத்தவரையும் நான் விசுவாசமாக வேலை செய்திருக்கிறன். சனத்துக்காகப் பாடு பட்டிருக்கிறன். இயக்கத்துக்காகவும் பாடுபட்டிருக்கிறன். போராட்டத்துக்காக உழைச்சிருக்கிறன். சில சந்தர்ப்பங்களில என்ரை அறிவைக் கடந்தும் வேலை செய்திருக்கிறன். ஒரு அமைப்பில இருந்தால் அதின்ரை தலைமைக்குக் கட்டுப்படவேண்டி வரும். அது எங்க இருந்தாலும் அப்பிடித்தான்.
தமிழகத்தில கருணாநிதியின்ரை ஆட்சியையும் கதைகளையும் பாக்க எங்களுக்கு விசர்தான் வரும். ஆனால், அவற்றை கட்சிக்கும் தொண்டர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கட கட்சியின் வெற்றிக்காகவே உழைக்கிறார்கள். இது அமரிக்காவுக்கும் பொருந்தும். சீனாவுக்கும் பொருந்தும் எண்டுதான் நினைக்கிறன்.
நாங்கள் எல்லாத்தையும் பட்டுக் கழிச்சிட்டம். இறுதிவரையும் நிண்டு பாத்தாச்சு. என்னைப் போல ஆயிரக்கணக்கானவையள் இப்பிடிக் கடுமையாகக் கஸ்ரப்பட்டிருக்கிறார்கள். இதுக்கு மேல நாங்கள் என்ன செய்ய முடியும்? ஆனால் எங்களுக்குத்தான் இப்பவும் கஸ்ரம். எங்களால கண்டபடி அங்க இங்க திரிஞ்சு நிலைமைக்குத் தக்கமாதிரிப் பாடவும் முடியாது. காரியம் பாக்கவும் முடியாது.
இயக்கம் எண்டது பெரிய மரத்தைப் போல. அது சரிந்தால் சும்மா கயிற்றைப் போட்டுக் கட்டி நிற்பாட்டேலாது. அதைப் போல அந்த மரம் இல்லாட்டித்தான் அதின்ரை அருமையும் அது இருந்த இடமும் தெரியும். வெட்ட வெளியாக இருக்கிற இடத்தைப் பாத்தால் இனம் புரியாத ஒரு சோகம் மனசில வருகிது.
இந்த நிலைமை அதாவது, புலிகளின் வீழ்ச்சியும் நீங்கள் சரணடைந்ததும், பிறகு இப்போது விடுதலையாகி குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதைப் பற்றியும் என்ன நினைக்கிறீங்கள்?
இதைத் தானே நான் முன்னரே சொல்லிவிட்டன். நாங்கள் விரும்பாத ஒரு கட்டத்துக்கு வந்திருக்கிறம் எண்டு. இப்பிடியான நிலைமைக்குப் பிறகு ஒரு காலகட்டம் வரையில நீரோட்டத்தில போக வேண்டியதுதான்.
நீந்தேக்க களைச்சுப் போனால், கொஞ்சநேரம் நீரோட்டத்தின்ர போக்கில போய்ப் பிறகு திரும்பிற விளையாட்டுத்தான்.
ஆனால், இது நிலைப்பாட்டின் வீழ்ச்சியாக மாறாதா?
அப்ப என்ன செய்யிறது? எதையும் சொல்லலாம். செய்து பாத்தாத்தான் தெரியும் எண்டு சொல்லுவார்கள். அதைமாதிரி, நாங்கள் இருக்கிற சூழ்நிலையில இப்ப பேசாமல் இருக்கிறதே மேல். தொழில், வருமானம், வீடு, பிள்ளைகளின்ர எதிர்காலம் எண்டு எங்களுக்கு முன்னாலே ஏராளம் பிரச்சினைகளிருக்கு.
இதையெல்லாம் இந்த வயதில எப்பிடிச் செய்து முடிக்கிறது எண்டு தெரியேல்ல. எல்லாத்தையும் தொடக்கத்தில இருந்து செய்ய வேணும் எண்டால் எவ்வளவு கஸ்ரம்?
22 வருசமாக பொது வாழ்வில இருந்திட்டு இப்ப இப்படித் திடீரெண்டு தனியாகக் குடும்ப வாழ்க்கைக்கு வாறதே சிரமம். உழைக்க வேண்டிய உற்சாகமான காலத்தை இளமைக்காலத்தை இழந்திட்டு இப்ப புதிசா என்ன செய்யலாம் எண்டால் என்ன செய்யிறது?
நானாவது பரவாயில்ல. கால் இல்லாதவங்கள், கையில்லாதவங்களின்ரை நிலைமையைக் கொஞ்சம் நினைச்சுப் பாருங்க.
இந்த நிலைமையில நாங்கள் என்ன செய்யிறது?
எங்க இருந்தாலும் இதயம் நல்லா இருந்தாச் சரி எண்டதுதான் என்ர நிலைப்பாடு.
அரசாங்கத்தின் உதவித்திட்டங்கள், புனர்வாழ்வு நடவடிக்கைகள் எல்லாம் எப்படி இருக்கு? விடுதலையாகிய போராளிகளின் பொதுவான நிலைமையைப் பற்றிச் சொல்லுங்கள்.
அரசாங்கம் கடன் தாறதாகச் சொல்லியிருக்கு. ஐ.ஓ.எம் எண்ட ஒரு தொண்டு நிறுவனம் தொழில் உபகரணங்களைத் தருகிது. அதுக்கு மேல நாங்கள் எதிர்பார்க்க ஏலாது. அப்படி எதிர்பார்க்கிறதில பிரயோசனமும் இல்ல.
புனர்வாழ்வில சிலபேருக்கு நல்ல வாய்ப்புக் கிடைச்சிருக்கு. சிலருக்கு தொழில் வாய்ப்பும் கிடைச்சிருக்கு. குறிப்பாக இளைய பெடியள். அல்லது பெண் போராளிகளுக்கு வேலை வாய்ப்புகளில் இடம் குடுக்கிறார்கள். அவர்களின்ர வயது அதுக்குத் தோதாக இருக்கு.
எங்களுக்கு வயதும் கூடீட்டுது. படிப்பும் போதாது. படிக்கிற ஆக்களுக்கும் பரவாயில்ல. ஆகப் பாதிக்கபபட்டது எங்களைப் போல இருக்கிற ஆக்கள்தான்.
இப்போதுள்ள உங்களின் மன நிலை என்ன?
இப்பிடியொரு கேள்வியை விசாரணையின்போதும் கேட்டார்கள். இப்ப நீங்களும் கேக்கிறியள். இதுக்கு நான் என்ன பதிலைச் சொல்ல முடியும்?
பொதுவாகவே போராளிகளின் இன்றைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்லுங்கள்.
வசதி வாய்புள்ள ஆக்களுக்கு ஒரளவு பிரச்சினை இல்ல. சிலர் வெளியில போயிட்டினம். மற்ற ஆக்கள் சிலர் சொந்தமாகத் தொழில் செய்கிறார்கள். சிலருக்கு சொந்தக்காரர் நண்பர்களின் உதவி இருக்கு.
ஆனால், பலருக்கும் வசதிகள் இல்லை. உதவிகள் இல்லை. சிலருக்கு சில இடங்களில் இருந்து உதவிகள் கிடைச்சிருக்கு. அவர்கள் அந்த உதவிகளைப் பெற்றுக் கொண்டு ஏதாவது செய்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான போராளிகள் வேதனையோட இருக்கிறார்கள். அரசாங்கத்தின்ர கடனைப் பெற்றாலும் அதை வைச்சுத் தொழில் செய்யக்கூடிய நிலைமை எல்லாருக்கும் இல்லை.
பொதுவாகச் சொன்னால் இதுக்கு ஒரு ஒழுங்கான திட்டம் இருந்தால்தான் எதுவும் செய்யலாம்.
பெண்போராளிகளின் நிலைமை எப்பிடி இருக்கிறது. குறிப்பாக திருமணம் முடித்திருக்கும் பெண் போராளிகளின் நிலைமை?
அவர்களின் நிலைமை இன்னும் மோசமானது. பெரும்பாலும் இந்த மாதிரிப் பெண் போராளிகள் ஆண் போராளிகளையே திருமணம் செய்திருந்தினம். இப்ப அவர்களில் பலரும் இல்லை. பலர் ஏற்கனவே வீரச்சாவடைந்து விட்டார்கள். சிலரைப் பற்றிய தகவலே இல்லை. இந்த நிலையில இந்தப் பெண் போராளிகள் பிள்ளைகளோடு பெரிய கஸ்ரங்களைப் படுகுதுகள்.
அதுதான் சொன்னேனே, ஒரு நல்ல திட்டம் இல்லை எண்டால் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது.
முடிவாக என்ன சொல்ல விரும்புகிறீங்கள்?
இவ்வளவு காலம் எங்களை ஒரு கொள்கையில அர்ப்பணிச்சு வாழ்ந்த நாங்கள் இப்ப இப்பிடி ஒண்டுஞ் செய்ய முடியாத ஒரு நிலையில இருக்கிறம். இதை எப்பிடி மாத்திறதெண்டு தெரியேல்ல. அதைப் பற்றித்தான் யோசிக்கிறன்.
இப்பிடி யோசிக்கேக்க இனி ஒரு சோலியும் வேண்டாம் எண்டுதான் முடிவெடுக்க முடியுது.
நல்லாக் களைச்சுப் போனா தண்ணியாவது தரவேணும். அதுக்கும் ஆளிருக்க வேணும். ஆனா, இப்ப அதுக்கெல்லாம் ஆருமே இல்ல.
ஒரு முன்னாள் போராளி என்ற வகையில உங்களின் இன்றைய மனநிலை?
முன்னாள் போராளி - இப்படிச் சொல்வது தவறு. போராளி என்றால் முன்னாள் பின்னாள் என்றெல்லாம் கிடையாது. போராட்டம் என்றைக்கும் ஓய்வதில்லை. அது வெவ்வேறு விடிவங்களை எடுக்கும். வெவ்வேறு சூழ்நிலைகளில் அது வேறான தொழில்பாடுகளைக் கொண்டிருக்கும். ஆகவே போராட்டத்துடன் என்றைக்கும் இணைந்திருக்கும் ஒரு போராளியை முன்னாள் போராளி பின்னாள் போராளி என்று சொல்ல முடியாது.
போராளி ஒரு அரச உத்தியோகத்தரைப்போல ஓய்வு பெறவும் முடியாது. ஓய்வாளராக அவரைக் கருதவும் முடியாது - இது அவர்களைக் கொச்சைப் படுத்தும் வார்த்தை அல்லது போராளி என்றால் என்ன என்று புரிந்து கொள்ளாதவர்களின் கதை எண்டுதான் அர்த்தம்.
மற்றும் படி வேறு என்ன சொல்ல முடியும். இதைத்தானே ஏற்கனவே சொல்லியிருக்கிறன்.
----------------------------------
நேர்காணல்: ஆதித்தன்
No comments:
Post a Comment