வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, October 14, 2011

மனித உரிமை' என்பதும் வல்லரசுகளின் நலன் பேணும் ஆயுதம்

 

மேலை நாடுகளிலும் சரி இந்தியாவிலும் சரி சீன பொருளாதார நிபுணத்துவம் ஆழ ஊடுருவி விட்டதாக கருதப்படுகிறது. உதாரணமாக 885 பில்லியன் டொலர் பெறுமதி மிக்க அமெரிக்க திறைசேரி தாள்களை சீன அரச நிறுவனங்கள் கொள்வனவு செய்து வைத்துள்ளன.

தற்போதய பொருளாதார நிலையில் அமெரிக்க அரசு இதனை மீளப்பெற்று கொள்ளும் வாயப்புகள் மிக அரிதாகவே காணப்படுகிறன என்றும் கூறப்படுகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் இடம்பெறும் வர்த்தக பரிமாற்றங்கள் மிக விரைவில் ஆண்டொன்றுக்கு 60 பில்லியன் அமெரிக்க டொலரை தாண்டும் நிலையை அடைந்திருக்கிறது.

மேலும் பிறேசில், ஐரேப்பிய நாடுகள் என உலகெங்குமான பொருளாதார முதலீடுகளில் சீனா வியாபித்து நிற்கிறது.

ஆக ஆய்வாளர்களின் கருத்துகளுடாக பார்க்கும் பொழுது சீனாவுடன் நேரடியாக மோதுவதோ, சீனாவுக்கு எதிராக பொருளாதார முடக்க நிலையை கொண்டு வருவதோ பொதுவாக சாத்தியப்படாத ஒன்றாகவே கருதப்படுகிறது.

மாறி வரும் உலக நியதிகளும், வல்லரசுகளின் பாதுகாப்பு உத்திகளும், இராசதந்திர சூழ்ச்சிகளும் சீனாமீதான நேரடி நெருக்குதல்கள் கொடாது மறைமுகமான பல அழுத்தங்களை உருவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த பல பத்தாண்டுகளாக சீனா உலக விவகாரங்களில் தலையிடாத நிலையை கடைப்பிடித்தபடி தொடர்ந்து தனது பொருளாதார வளர்ச்சியில் கண்ணும் கருத்துமாக இருந்து வந்திருக்கின்றது.

அமெரிக்கா போன்ற நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிராக யுத்தம் புரிந்து கொண்டிருந்த அதேவேளை சீனா தனது பொருளாதாரத்தை கட்டி எழுப்புவதில் முனைப்புடன் ஈடுபட்டு வந்திருந்தது.

இதனால் தற்போது அமெரிக்க பொருளாதாரத்தை மட்டுமல்ல உலகையே பொருளாதார ரீதியாக கைக்குள் போட்டு கொள்ளும் நிலையை சீனா அடைந்திருக்கிறது.

மேலும் தனது பொருளாதார திட்டங்களை பல ஆண்டுகளுக்கு திடப்படுத்தி கொள்ள கூடிய வகையில் உலக நாடுகளுடன் ஒப்பந்தங்களும் செய்து கொண்டு வருகிறது.

இந்த நிலையில் சீனாவை உலக நடப்பு விவகாரங்களில் தலையிட வைப்பதன் மூலம் அதனுடைய பிரத்தியேக வளர்ச்சிப்போக்கை கட்டுக்குள் கொண்டு வருவது குறித்து ஐரோப்பிய சிந்தனையாளர்கள் திட்டங்களை வகுத்து வருகின்றனர்.

அதேவேளை சீன பாதுகாப்பு யுக்தி நகர்வுகளுக்கு எதிராகவும் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருவது ஆதாரபூர்வமாக வெளித்தெரிகிறது.

அனைத்துலக அரங்கில் சீனாவுடன் நெருக்கமாக இருக்கும் நாடுகள் ஒரு பிரிவாக தற்காலத்தில் நோக்கப்படுவதும் சாதாரணமான விடயமாகிவிட்டது. வடகொரியா மியான்மர் [பர்மா], சிறிலங்கா, பாகிஸ்தான், சூடான் என இந்தப்பட்டியல் நீண்டு செல்கிறது.

அத்துடன் உலகில் சீன பொருளாதார உதவிகளை அதிகம் பெற்ற நாடுகள் மத்தியிலே மனித உரிமை என்ற விடயமும் பொருளாதார வளர்ச்சி என்ற விடயமும் ஒன்றுக்கொன்று எதிராக தாக்கத்தை விளைவிக்க கூடிய வகையில் அமைந்திருப்பதாக மேலை நாடுகளால் பார்க்கப்படுகிறன.

மனித உரிமை விவகாரம், ஒரு நாட்டின் தலைமையை அந்த நாட்டின் மக்களை விட்டு பிரித்தெடுத்து தண்டிப்பதாக அமைவது இங்கே குறிப்பிட தக்கதாகும். இதன் மூலம் உள்நாட்டு மக்கள் மத்தியிலே தாங்கள் மதிப்பை இழக்க வேண்டிய கட்டம் ஏற்படாது என்பது இதன் அர்த்தமாகும்.

உதாரணமாக தியனமன் சதுக்கத்திலே 1989ல் இடம் பெற்ற படுகொலைகளை மனித உரிமை மீறல்கள் என்றால் அது சீன அரச அதிகாரிகளும் சீன பாதுகாப்பு படையான மக்கள் இராணுவத்தையுமே சாரும்.

அதே போல சிறீலங்காவிலும் மனித உரிமை மீறல்கள் அனைத்துக்கும் ராஜபக்ச சகோதரர்களும், துணை இராணுவக்குழு தலைவர்களும், விடுதலைப்புலி தலைவர்களும், என்றே மேலைத்தேய அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைகள் தெரிவிக்கின்றன,

அண்மைய இஸ்லாமிய அடிப்படைவாதத்திற்கு எதிரான போரிலே நேரடி இராணுவத்தலையீடு காரணமாக ஈராக்கிலும் ஆப்கனிஸ்தானிலும் அமெரிக்க படைகள் உள்நாட்டு மக்களிடம் நன்மதிப்பை பெற்று கொள்ள முடியாது போனதால் அமெரிக்கப்படைகள் பின்வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளபட்டுள்ளன.

மேலும் எழுபதுகளில் வியட்னாமில் நடாத்திய படை நகர்த்தல்களின் பின்விளைவுகள், தற்போது வியட்னாமிய அரசுடன் பல்வேறு வர்த்தக பாதுகாப்பு உடன்படிக்கைகள் செய்து கொண்டாலும் அமெரிக்கா என்றதும் வியட்னாமிய மக்கள் மத்தியிலே இன்னமும் கசப்புணர்வு தெரிவதாகவே கூறப்படுகிறது.

ஆக மேலை நாடுகளின் உத்தியில் மக்களின் நன்மதிப்பை தக்க வைத்து கொண்டு தாம் விரும்பும் வகையில் ஒரு நாட்டின் அரசை மாற்றி அமைப்பதற்கு மனித உரிமை என்ற சொற்பதம் மிகவும் வசதியானதாகும்.

அதேவேளை மனித உரிமை மீறல்களில் பாரிய குற்றங்களில் ஈடுபட்ட தலைவர்கள் தாம் சார்ந்த மக்கள் மத்தியில் திடீர் பொருளாதார வளர்ச்சியையும் வேலைவாய்ப்பையும் காட்டியதன் மூலம் தாம் செய்த குற்றங்களை மறக்கடிக்க செய்துவிட்டதாகவும் ஆய்வாளர்கள் கணிப்பிட்டுள்ளனர்.

இதற்கு உதாரணமாக இந்தியாவின் குஜாரத் மாநில முதல்வர் நரேந்திர மோடியையும், தியனமென் சதுக்கபடுகொலைகளின் பின் சீனா கண்ட பொருளாதார முன்னேற்றத்தையும் ஆய்வாளர்கள் முன்வைக்கின்றனர்.
குஜாரத் மாநிலத்திலே 2002ம் ஆண்டு பெப்பிரவரி மாதம் 27ம் திகதி பல கலவரங்களின் தொடர்ச்சியில் உத்தரபிரதேசத்தை நோக்கி சென்று கொண்டிருந்த இரயில் வண்டி எரிக்கப்பட்டது. இந்த இரயில் வண்டியிலே ஐம்பத்தி எட்டு பொதுமக்கள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் இந்து சமயத்தை சார்ந்தவர்களாயிருந்தனர். இந்த இரயில் எரிப்பு இடம் பெற்ற இடம் கோதரா எனப்படும் இஸ்லாமியர் நகரமாகும்.

புதிதாக குஜாரத் முதல்வராக பதவியேற்றிருந்த இந்து அடிப்படைவாத போக்கை கொண்ட நரேந்திர மோடியும், அயோத்தியில் இராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற போராட்டங்களும் ஒரே தருணத்திற்கு வர இரயில் எரிப்பும் சேர்ந்தமைந்தது.

அடுத்த நள் 28ம் திகதி மாநிலம் தழுவிய சோகம் கடைப்பிடிக்கப்பட்டது. தொடர்ந்து குஜாரத் தலைமை நகரான அகமதாபாத்தில் இஸ்லாமிய தெருக்களும் இதர இஸ்லாமிய சிற்ரூர்களும் இஸ்லாமியர்களுக்கு மரணப்பொறிகளாயின.

ஆயிரக்கணக்கான இந்து குண்டர்கள் வீதி வீதியாக இஸ்லாமியர்களை படுகொலை செய்தனர். இஸ்லாமிய பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாயினர். பின்பு மண்எண்ணை ஊற்றி தீவைக்கப்பட்டனர். குழந்தைகள் வாயிலே மண்எண்ணை ஊற்றப்பட்டு தீவைக்கப்பட்டன. இந்த கொடுமையை ஆண்கள் வலுக்கட்டாயமாக பார்க்கவைக்கப்பட்டனர். பின்பு கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை கொடுரம் நடை பெற்று கொண்டிருந்த போது தலைமை அமைச்சர் நரேந்திர மோடி “ஒவ்வொரு தாக்கத்திற்கும் சமமான எதிர் தாக்கம் இருக்கும்” என்று புவியீர்பு சக்தியை கண்டறிந்த ஐசாக் நியூட்டனின் மூன்றாவது விதியை மேற்கோள்காட்டி சாதாரணமாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் சுமார் இரண்டாயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர். நாநூறு இஸ்லாமிய பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாயினர். இரண்டு லட்சம் பேர் வீடு வாசல்களை இழந்தனர். மனித உரிமை அமைப்புகள் பெரும் கரிசனை கொண்டிருந்தனர்.

ஆனால் இத்தனைக்கும் பின்பும் குஜாரத்தின் பொருளாதார வளர்ச்சி காரணமாக அரபிக் கடலிலே துபாய்க்கு அடுத்ததாக மிகப்பெரிய நகராக குஜாரத்தின் கச் பகுதியை உருவாக்கும் திட்டம் தயாரிக்கப்பட்டதோடு பல்வேறு தொழில்பேட்டைகள் உருவாகியதை தொடர்ந்து 2002ம் ஆண்டின் பின்பு குஜாரத்தில் எந்த ஒரு வன்முறையும் இடம் பெறவில்லை.

நரேந்திர மோடி புதிய மோட்டார் வண்டியான 'நானோ'வை வெளியிட்டார்
வேலை வாய்ப்பு தொழில் வளர்ச்சி என்பன இந்தியாவின் சமூகங்களை வெகுவாக பற்றிகொண்டதை தொடர்ந்து இன சமய விவகாரங்களில் மக்கள் கவனத்தை குறைப்பதிலே ஆளும் பகுதியினர் கணிசமான அளவு வெற்றியும் கண்டு வருகின்றனர்.

தியனமென் சதுக்க படுகொலைகளுக்கு பின்பு சீனா தனது பொருளாதார வளர்ச்சி வேலை வாய்ப்பு போன்றவற்றின் அதிகரிப்பால் தான்செய்த மனித உரிமை மீறல்களிலிருந்து சுதாகரித்து முன்னேறியது போன்று குஜாரத்தும் தப்பி கொண்டுள்ளது.

இதனால் மனித உரிமை என்பது ஒரு இனத்துக்கோ அல்லது தனிமனிதனுக்கோ இழைக்கப்பட்ட கொடுமை என்ற நிலையில் அல்லாது மேலை நாடுகளின் மென்மையான சீன பொருளாதார வலைபின்னல்களுக் கெதிரான ஆயுதமாகவே பார்க்கப்படலாம்.

இந்த சீன பொருளாதார வலையில் சிக்கிக் கொண்ட வறுமை மிகுந்த திட்டமிடல்களற்ற சூடான் இருநாடாக பிரிந்து போகவுள்ளது.

தனது மக்கட் பெருக்கத்திற்கேற்ற வகையில் பொருளாதார சக்தியிலே பலம் குறைந்த கடன்பழுக்களினால் அவதியுறும், சீன பொருளாதார வலையினுள் சிக்குண்டு கிடக்கும் மேலும் இரு நாடுகள் மியான்மரும், சிறீலங்காவுமாகும்.

மியான்மருக்கும், சிறீலங்காவுக்கும் இடையில் பல்வேறு ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

இரு நாடுகளும் 1948ல் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றுகொண்டன. இரு நாடுகளும் சுதந்திரம் பெற்ற பொழுது இருந்த தமது பெயர்களை மாற்றி அமைத்து கொண்டுள்ளன [சிலோன்-சிறீலங்கா, பர்மா-மியான்மர்].

இரு நாடுகளும் தேரவாத பௌத்தத்தை கடைப்பிடிப்பனவாகும், அத்துடன் சீனாவின் முத்து மாலை வியூகத்தில் சிறீலங்காவை போலவே மியான்மரும் பங்கு பற்றுவதும் முக்கியமானதாகும்.

சிறீலங்கா புவிசார் கேந்திர முக்கியத்துவம் வாயந்த பகுதியில் அமைந்திருப்பது போல மியான்மரின் கேந்திர முக்கியத்துவம் அது சீனாவை இந்து சமூத்திரத்துடன் அதுவும் வங்கக்கடலை இனைக்கும் கொல்லைப்புற வாசல் நாடாக அமைந்திருப்பதாகும்.

சீன கப்பல்கள் வளை குடாவிலிருந்து அரபிக்கடலூடாக சிறீலங்காவின் தென் பகுதியை கடந்து வங்கக்கடலை அடைந்து, மலாக்கா நீரினை ஊடாக சிங்கப்பூரை அடைந்து, பசுபிக் சமுத்தரத்தின் மேற்கு கரையூடாக தென் சீன கடலை அடைந்து, தமது துறைமுகங்களை அடைவதற்கு பதிலாக மியான்மாருக்கு குறுக்காக சீனா அமைத்து வரும் பாரிய எண்ணை எரிவாயு குழாய்கள் தென்சீன நகரான குன்மிங் பகுதியை வங்கக்கடலிலிருந்து இலகுவாக இணைக்க கூடியதாக இருப்பதாகும்.

சீன மியான்மர் எண்ணை எரிவாயு குழாய்
மியான்மரில் சுமார் 135 இனப்பிரிவுகள் வாழ்கின்றன. இவற்றில் 17 இனப்பிரிவுகள் இராணுவ ஆட்சிக்கெதிராக ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இவற்றில் சில பலம்வாய்ந்த ஆயுதக்குழுக்களாகவும் உள்ளன. இவற்றில் ஒன்றான 'கேரன்' ஆயுதக்குழு மேலைநாட்டு உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருகிறது.

அதே வேளை சான் என்ற இன்னுமோர் ஆயுதக்குழு தனது பிரதேசத்தை தனது கட்டுக்குள் வைத்திருந்தாலும் இக்குழுவுக்கு மியான்மர் இராணுவத்தின் செல்வாக்கு இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

அத்துடன் மியான்மரில் போதை செடிகளின் பயிர்செய்கையும் தாராளமாக இடம் பெறுவதாகவும் இதற்கு மியான்மர் இராணுவத்தின் பாதுகாப்பும் இருப்பதாகவும் தாய்லாந்து ஊடாக இந்த போதை பொருட்கள் சந்தைபடுத்த படுவதாக தாய்லாந்திலிருந்து வெளிவரும் இடம் பெயர்ந்த மியான்மர் மக்களின் இணைய அறிக்கைகள் கூறுகின்றன.

இதற்கும் அப்பால் மியான்மர் இராணுவத்தின் மனித உரிமை மீறல்கள் மிகக்கொடுமையானது என நியுயோர்க்கை மையமாக கொண்டு இயங்கும் மனித உரிமை பிரசாரகர்கள், அமைப்புகள் அவ்வப்போது அறிக்கைகளும் கண்டனங்களும் வெளியிட்டுள்ளன.

மக்களை வருத்தி கடூழியம் புரிய வைப்பதும், வரலாற்று வாழ்விடங்களை விட்டு துரத்தி அடிப்பதும், பாலியல் வன்முறையை இன அழிப்பின் ஒரு திட்டமாக கொண்டு செயற்படுவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறிவருவது மட்டுமல்ல மியான்மர் போர்குற்ற விசாரணைகளுக்கான ஆணையம் ஒன்றை ஐக்கிய நாடுகள் சபையில் உருவாக்கவும் போராடி வருகின்றன.

இதேவேளை அண்மைய விக்கிலீக் அறிக்கைகளின் படி மியான்மர் அரசாங்கம் வடகொரியாவிலிருந்து பெற்றுகொள்ளப்பட்ட தொழில நுட்ப உதவிகளுடன் அணு ஆய்வுகளில் ஈடுபடுவதற்குரிய திட்டங்களும் வெளிவந்துள்ளன.

சிறிலங்கா பர்மிய உறவ
மியான்மருக்கும் சிறீலங்காவுக்கும் இடையிலான உறவு அண்மைக்காலமாக வலுவடைந்நு வருவதாக வெளிவந்த செய்திகளில் சிறிலங்கா அரசு விடுதலைப்புலிகளை வெற்றி கொண்ட தந்திரங்களை பரிமாறி கொள்வது குறித்த பேச்சுகள் முதன்மையானதாக அமைந்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

சுதந்திர மடைந்த காலத்திலிருந்து மியான்மர் இனக்குழுக்களின் ஆயுதப்போராட்டத்தினால் பெரும் தொல்லைகளுக்குள் ஆளாகி வருகிறது. சிறிலங்கா அண்மையில் வெற்றிகண்டது போல பலகால பிரச்சனையை அனைத்துலக, பூகோள நிலைமைகளை சாதகமாக பயன்படுத்தி தனது நாட்டின் பிரச்சனைக்கு இராணுவ தீர்வு காண்பதில் மியான்மர் அதீத நாட்டம் காட்டி வருகிறது.

ஆனால் சிறிலங்கா போல் அல்லாது மியான்மரின் முக்கியத்துவம் அதனுடைய எண்ணை வளத்தினூடாகவே பார்க்கப்படுகிறது ஏற்கனவே குறிப்பிட்டது போல சீன முதலீடுகளும் இந்திய முதலீடுகளும்கூட மியான்மரில் அதிகரித்து காணப்படுகிறன.

குறிப்பாக சீன தலையீட்டின் அதிகரிப்பால் மனித உரிமைக்கும் மக்களாட்சிக்கும் மியான்மர் இராணுவ ஆட்சித்தலைவர்கள் மதிப்பு கொடுப்பதில்லை என்ற கருத்து மேலை நாட்டு ஆய்வாளர்கள் மத்தியில் நிலவினாலும் உலகிலிருந்து தனிமைப்படுத்தும் போது வடகொரிய நிலைக்கு மியான்மர் சென்று விட கூடாது என்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

மியான்மர் எண்ற புதிய பெயரையே ஏற்றுகொள்ளாவிட்டாலும் கூட, மியான்மர் உடன் இணைந்து பயணித்து மக்களாட்சி விழுமியங்களையும் மனிதஉரிமைகளையும் ஊக்குவிக்கும் கொள்கையையே அமெரிக்கா கூட கடைப்பிடிக்க வேண்டும் என இவ்வாய்வாளர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர்.

ஆனால் தற்போது மியான்மார் எல்லை மீறிய நிலையில் அணுஆய்வு வரை சென்றிருக்கிறது. அதே வேளை அமெரிக்காவுக்கு வளைகுடாவிலிருந்து சிங்கப்பூருக்கு இடையிலே சீன கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு அருகில் தளம் அமைத்து கொள்வது குறித்து சிந்திப்பது இராணுவ பாதுகாப்பு ஆலோசகர்களின் பேச்சுகளிலிருந்து தெரிகிறது.

அண்மைக்காலமாக போராளிகளின் தாக்குதல்களும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும் போராளிகள் மத்தியிலே அதிநவீன உபகரணங்கள் கையாளப்படுவது மேலை நாடுகளின் உளவு நிறுவனங்களின் சம்பளத்தில் பலர் போராளிகளுடன் இயங்குவதும் செய்திகளில் வந்துள்ளன.

கோடிக்கணக்கான பணத்தை இராணுவ தலைவர்களுக்கு அள்ளி கொடுக்கும் அதே வேளை ஒரு வேளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் என்ற வகையில் சீனாகூட தனது கேந்திர நிலையை தக்க வைத்து கொள்வதற்கு ஏற்றவகையில் மியான்மரில் மக்களாட்சி தேர்தல்களை ஆதரிக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது என்பதும் கவனத்திற்குரியது.

இந்த நிலையில் இராணுவ தலைவர்கள் சிறிலங்கா ராசபக்ச சகோதரர்கள் கற்ற பாடங்களை கற்க முற்படுவது மியான்மரின் சிறுபான்மை இனத்தவருக்கும், மக்களாட்சி போதகர்களுக்கும் கடும் சோதனைக்கான தெரிவுகளையே சுட்டிநிற்கின்றன.

இவ்விடத்தில் தமிழராகிய நாம் தெரிந்து கொள்ளகூடிய ஒன்றுள்ளது. அது என்னவெனில் நேரடி இரணுவ தலையீட்டாலோ, பொருளாதார முடக்கத்தாலே தாம் விரும்பியபடி மியான்மர் இராணுவ தலைவர்களை பணியவைக்க முடியாத நிலையில் மேலை நாட்டு சக்திகள் மனித உரிமை என்ற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளன.

மனித உரிமைக்கு மதிப்பளிக்கும்படி அழுத்தம் கொடுப்பதிலும் பார்க்க ஏற்கனவே மனித உரிமை மீறல்கள் புரிந்த இதர நாட்டு தலைவர்களுக்கு கடுமையான தண்டனை பெற்று கொடுப்பதன் மூலமும் மேலை நாடுகள் மியான்மர் தலைவர்களை தம்கட்டுக்குள் கொணரக் கூடிய வாய்ப்புகளும் உள்ளன.

லோகன் பரமசாமி

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை