வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, January 14, 2012

இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 





http://4.bp.blogspot.com/_PBT9eH6cCGw/TSJlJfCyINI/AAAAAAAAFUA/KkLWkcGLaCo/s1600/Tamil%2Bnew%2Byear.JPGஎமது வாசகர்கள் அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம். தொடர்ச்சியான இனஅழிப்பு மற்றும் இயற்கை அனர்த்தத்தின் மத்தியில் வரும் இத்திருநாளை நாம் ஏற்று, இனிவரும் காலத்தை நாம் எமதாக்க ஒன்றுபட்டு உழைப்போம் என மாவீரர்களின் மீது நாம் உறுதியெடுப்போம்.


“வீழமாட்டோம் எனும் நம்பிக்கை மட்டுமல்ல, ஆழமான அடித்தளமும் வேண்டும். விடுதலைக்கு இப்போது பெறும் பலத்தில்தான் எதிர்காலமே இருக்கின்றது.
உலகம் ஓடிவரும் உனக்கு ஒத்தாசை செய்யும் என நம்பாதே. அவர்கள் பலத்தோடு இருந்தால் மதிப்பார்கள். நிலத்தோடு கிடந்தால் மிதிப்பார்கள்.
இதுதான் உலகத்தின் புதிய ஒழுங்காற்றுகை. ஒன்றை மட்டும் நெஞ்கில் எழுதி வைப்போம்.
வென்றால் நாங்கள் அரியணையில் இருப்போம். தோற்றால் தொல்பொருள் அகத்தில் கிடப்போம்”
- புதுவை இரத்தினதுரை
    —————
    பொங்கல் விழாவை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கல் செய்வதற்கான பொருள்களை வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் தை முதல்நாள் – தமிழ்ப் புத்தாண்டு – பொங்கல் விழாவின் மாட்சியைக் குறித்து பெருமிதமாக எடுத்துக் கூறியுள்ளார்.
    தமிழர்களின் மொழி, நாகரிகம், இன செழுமையை எண்ணிப் பார்த்து பூரிப்படைந்து தமிழர் திருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
    நமக்கு முன்பே மறைமலை அடிகளார், திரு.வி.க. போன்ற தமிழ்ச் சான்றோர் ஒன்று கூடி தைமுதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதை முடிவு செய்தனர். சித்திரையில் வரும் புத்தாண்டு வடமொழியை அடிப்படையாகக் கொண்டது. எனவே, ஆங்கில, தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகள் பேசுபவருக்கு ஒரு புத்தாண்டு இருப்பதுபோல, தமிழர்களுக்கும் ஒரு புத்தாண்டு வேண்டும் என்ற நோக்கில் பெரும் புலவர்கள் ஒன்று கூடி எடுத்த முடிவு இது என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
    ஒளிர் விளக்குகளை மின்னச் செய்து கொண் டாடுங்கள் என்பது – ஏதோ கார்த்திகைத் தீபம் போல் என்று யாரும் கருதத் தேவையில்லை.
    பொதுவாக விழா என்று சொன்னால், வண்ண வண்ண விளக்குகளால் தோரணங்கள் கட்டி மகிழ்ச்சி அடைவதில்லையா? அந்தக் கண்ணோட்டத்தில்தான் அவ்வாறு சொல்லியிருக்கிறார்.
    முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எடுத்துச் சொன்ன ஒரு கருத்து ஆழமானது – வரலாற்று ரீதியானது.
    தமிழர்களுக்கென்று ஒரு ஆண்டு இருக்கவேண்டாமா? இதில் என்ன துவேஷம் இருக்கிறது? உண்மையைச் சொல்லவேண்டும் என்றால், சமஸ்கிருதத்தில் பெயர்களை வைத்துக் கொண்டு அதுதான் தமிழ் ஆண்டுகள் என்று சாதிப்பதில்தானே துவேஷத்தின் புயலே இருக்கிறது.
    சென்னை மாகாணத்தில் உள்ள பார்ப்பனர்கள் துவேஷமாக இருந்துகொண்டே, மற்றவர்களைப் பார்த்துத் துவேஷிகள் என்று கூறுவார்கள் என்றார் லாலாலஜபதி. அதைத்தான் இந்த இடத்திலே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
    தினமணி 2011 ஆம் ஆண்டுக்கு நாள்காட்டி வெளியிட்டுள்ளது. தமிழ்ப் புத்தாண்டு சித்திரை ஒன்று என்று குறிப்பிட்டுள்ளது. ஒரு அரசாங்கம் சட்டம் போட்டு அறிவித்ததைத் தூக்கி எறிந்துவிட்டு, பூணூல் சட்டத்துக்கு முன் அரசாங்கச் சட்டம் எம்மாத்திரம் என்று சவால் விடுவதுதானே இதன் பொருள்?
    பார்ப்பனர்களும் தமிழர்கள்தான் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் இந்த இடத்தில் நின்றுதான் உரத்த முறையில் சிந்திக்கவேண்டும். அப்பொழுதுதான் பார்ப்பனர்களின் தமிழ் விரோத – தமிழின விரோத குருதித் துடிப்பை தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
    அறிஞர் அண்ணா அவர்கள் பார்ப்பனர்களின் இந்த உணர்வை மிக அழகாகப் படம் பிடித்துள்ளார்.
    தமிழ்நாட்டில் பிறந்தும், தமிழ் மொழி பயின்றும் தமிழரெனச் சொல்லிக் கொண்ட போதிலும், தமிழ் மொழி மூலம் பிழைத்து வந்தாலும், தமிழிலே பண்டிதரெனப் பட்டம் பெற்றாலும், சங்கநூல் கற்றாலும் பார்ப்பனர்கள் தமி ழிடத்திலே அன்பு கொள்வதில்லை. அதனைத் தம் தாய்மொழி யெனக் கருதுவதில்லை. அவர்களின் எண்ணமெல்லாம் வடமொழியாகிய சமஸ்கிருதத்தின் மீதுதான்.
    (திராவிட நாடு, 2.11.1947).
    இதைவிடப் பார்ப்பனர்களை எப்படிதான் அடையாளம் காட்ட முடியும்?
    தை முதல் நாள் தான் தமிழ்ப் புத்தாண்டு என்று முடிவு செய்ததுகூட கலைஞர் அல்லவே – அவராகத் திணித்ததில்லையே! மறைமலை அடிகள், திரு.வி.க., கா. நமச்சிவாயனார், கா.சு. பிள்ளை போன்ற பெருமக்கள் அல்லவா கூடி முடிவெடுத்தனர்? அதற்கு எந்த உள்நோக்கத்தைக் கற்பிக்க முடியும் இந்தப் பார்ப்பனர்கள்?
    சோ போன்ற பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்ளாததாலேயோ, தினமணி வெளியிட்டுள்ள நாள்காட்டி வேறு விதமாகக் குறிப்பிடுவதாலேயோ தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு இல்லாததாக ஆகிவிடப் போவதில்லை.
    தமிழர்கள் தை முதல் நாளை – தமிழ்ப் புத்தாண்டாக, தமிழர்களின் பண்பாட்டுத் திருநாளாக, பொங்கல் விழாவாக பெரும் ஆர்வத்தோடும், ஆரவாரத்துடனும், வெளிச்சமாகக் கொண்டாடுவதன் வழியாகத்தான் இந்தப் பார்ப்பனர்களுக்குப் பாடம் கற்பிக்க முடியும். தொடக்கத்தில் தந்தை பெரியார் அவர்களின் தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை ஏற்றுக்கொள்ளாத சோ ராமசாமி, பிறகு அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்பட வில்லையா?
    அதேபோல்தான் தை முதல் நாளைத் தமிழ்ப் புத்தாண்டாக அவர்களை ஏற்றுக்கொள்ள வைக்கும் அளவுக்குத் தை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாகவும், தமிழர் பண்பாட்டு விழாவான பொங்கலைப் பெரு விழாவாகவும் மிகமிகச் சிறப்பாகக் கொண்டாடுவோம். அதன்மூலம் ஆரிய பண்பாட்டுப் படையெடுப்பை துப்புரவாக வீழ்த்துவோம்!
    வாழ்க பெரியார்!
    வளர்க பகுத்தறிவு!!
    “விடுதலை” தலையங்கம் 3-1-2011
    ————————
    பொங்கல்’ என்பது தமிழனுக்கு, பார்ப்பனரல்லாதாருக்கு உள்ள ஒரு பண்டிகை. இந்தப் பண்டிகையின் பொருள் என்னவென்றால், விவசாயிகள் தாங்கள் செய்த விவசாயத்தில் உற்பத்தியான பொருளை, அவ்வாண்டு முதல் தடவையாகச் சமைப்பது மூலம் பயன்படுத்திக் கொள்ளும் நிகழ்ச்சி என்பதாகும்.
    இது தமிழனுக்கே உரியதாகும்.

    நமது மற்ற பண்டிகைகள் என்பவை எல்லாம் ஆரிய மத சம்பந்தமான கதைகளை அடிப்படையாகக் கொண்டு, பார்ப்பனரால் கற்பனை செய்தவைகளேயாகும். இது விவசாயிகளுக்கு உரிய பண்டிகை ஆனதினால் தான், முதல் நாள் தானியம் சமைக்கும் பண்டிகையும், அடுத்த நாள் விவசாயிகளுக்கு முக்கியமான இன்றியமையாததான கால்நடை ஜீவன்களைப் பாராட்டும் மாட்டுப் பொங்கல் என்கின்ற நிகழ்ச்சியையும் ஒரு பண்டிகையாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
    அதனால்தான் இந்த நிகழ்ச்சிகளுக்குப் பொங்கல் பண்டிகை, மாட்டுப் பொங்கல் பண்டிகை என்று பெயர் வழங்கப்பட்டு வருகிறது. இதைப் பார்ப்பனர்கள், தங்கள் ஜாதி நலத்துக்கு ஏற்ற வண்ணம் திருத்தி கற்பனை செய்து இதை ‘சங்கராந்திப் பண்டிகை’ என்று ஆக்கி இதில் பல மூடநம்பிக்கைகளைப் புகுத்திவிட்டார்கள்.
    இந்தப் பொங்கல் நாளைக் கெட்ட நாளாக ஆக்க, அந்த நாளில் ‘துஷ்ட தேவதை’யின் மூதேவி மக்களைப் பற்றுவதாகவும், அதற்குப் பரிகாரம் செய்வதுதான் பொங்கல் முதலிய காரியங்கள் என்றும், அன்று மூதேவி நமது வீட்டிற்குள் புகாமல் இருப்பதற்கு நமது வீட்டுக் கூரைகளில் ஆவாரம்பூ, பூளைப்பூ, வேப்பிலை ஆகிய மூன்றையும் சொருகி வைத்தால், மூதேவி வராது, உள்ளே நுழையாது என்றும் மற்றும் பல முட்டாள்தனமான கருத்துக்களைக் கற்பனை செய்து மக்களை அறிவிலிகளாக ஆக்கிவிட்டார்கள்.
    மற்றும் இப்பண்டிகைக்குப் போகிப் பண்டிகை என்று சொல்லப்படுகின்றது. இந்த ‘போகி’ என்னும் சொல்லுக்குப் போகப் போக்கியங்களை அனுபவித்தல் என்பது பொருள் இதற்கும் விளைந்த பண்டங்களை அனுபவித்தல் என்பதுதான் தத்துவம். இந்தக் கருத்துக் கொண்டே போகிப் பண்டிகை என்பதையும் பார்ப்பனர் தங்கள் ஜாதி நலனுக்கு ஏற்பக் கற்பனைக் கதைகளை உண்டாக்கி இந்திரனுக்கும், கிருஷ்ணனுக்கும் ஏற்பட்ட பொறாமை விரோத சம்பவம் ஒன்று செய்து, அதற்குப் பரிகாரமாகக் கொண்டாடுவது என்றும் ஆக்கி விட்டார்கள்.
    இவையெல்லாம் மகா மகாப் புரட்டுகளாகும். எப்படியெனில், கிருஷ்ணனையும், இந்திரனையும் இவர்கள் யார், எப்போது இருந்தார்கள், இவர்களுக்கு ஏன் சண்டை வந்தது, இவர்கள் எவ்வளவு அற்பர்கள் என்றெல்லாம் பகுத்தறிவுப் பார்வையில் பார்த்தால், இதன் புரட்டு வெளியாகும், எனவே, பொங்கல் என்பது தமிழர்க்கே உரியதல்லாமல், பார்ப்பனர்க்கு இதில் ஏதும் சம்பந்தமில்லை.
    இந்தப் பொங்கல் பண்டிகை என்பதற்குச் சரியான பொருள் அறுவடைப் பண்டிகை என்பதாகும். இவற்றில் கன்னிப் பொங்கல் என்ற ஒரு நிகழ்ச்சியும் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது, யாவரும் அறிந்ததே. இந்தக் கன்னிப் பொங்கல் என்பது, சிறு பெண் அதாவது பூப்படையாத, கல்யாணமில்லாத, கலவி அறியாத பெண் என்பவர்கள் சமையல் செய்து பழகுவதற்கு ஆக அவர்களையே கொண்டு சமையல் செய்யப்படுவதாகும். இதில் பெரிய பெண்கள், அந்தச் சிறு பெண்களுக்கு சமையல் முறையை சொல்லிக் கொடுப்பார்கள்.
    ஆகவே இந்த நிகழ்ச்சிகளுக்குத்தான் பொங்கல், மாட்டுப் பொங்கல், கன்னிப் பொங்கல் விழா என்பதாகும். இது முழுக்க முழுக்க தமிழர்களுக்கே உரிய தமிழ (பார்ப்பனரல்லாதார் பண்டிகையாகும். எப்படியெனில், பார்ப்பான் கலப்பையைத் தொட்டால் பாவம் என்பது அவனது தர்மம். நமது பார்ப்பனர்களுக்கு எந்தக் காரியம் எப்படியிருந்தாலும், யார் எக்கேடு கெட்டாலும், தாங்கள் மனித சமுதாயத்தில் உயர்ந்த பிறவி மக்களாகவும், உடலுழைப்பு இல்லாமல்
    வாழும் சுக ஜீவிகளாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக மனித சமுதாயம்
    முழுவதுமே அறிவைப் பயன்படுத்தாத ஆராய்சியைப் பற்றியே சிந்திக்காத
    முட்டாள்களாகவும், காட்டுமிராண்டிகளாகவும் இருக்கச் செய்யவேண்டும் என்பதே
    அவர்களுடைய பிறவி புத்தியானதால் அதற்கேற்ப உலக நட்பைத் திருப்பிப் பாதுகாத்து வைக்கிறார்கள்.
    பார்ப்பனர்களின் இம்மாதிரியான அட்டூழிய அக்கிரம காரியங்களில் இருந்து விடுபட்டு, மனிதர்களாக நாம் வாழ வேண்டுமானால், பொங்கல் பண்டிகை என்பதை முதல் நாள் அன்று மட்டும் நல்ல உயர்வான உணவு அருந்துவதையும், மனைவி மக்கள் முதியவர்களுடன் இன்பமாகக் காலம் கழிப்பதையும் கொண்டு நம்மால் கூடிய அளவு மற்றவர்களுக்கு உதவி, அவர்களுடன் குலாவுவதான காரியங்களையும் செய்வதன் மூலம் விழாக் கொண்டாடுவது அவசியமாகும்.
    மற்றபடியாக, மதச் சார்பாக உண்டாக்கப்பட்டிருக்கும் பண்டிகைகள் அனைத்தும், பெரிதும் நம் இழிவிற்கும், பார்ப்பனர் உயர்விற்கும், நம் மடமைக்கும், காட்டுமிராண்டித் தன்மைக்கும் பயன்படத்தக்கதாகவே இருந்து வருவதால், பயனளித்து வருவதால், அறிவுள்ள, மானமுள்ள மக்கள் மத சம்பந்தமான எந்தப் பண்டிகையையும் கொண்டாடாமலிருந்து தங்களை மானமும், அறிவுமுள்ள மக்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
    மானமும் அறிவுமே மனிதர்க் கழகு!
    - தந்தைபெரியார்
    “விடுதலை” – 14-1-1972


     நன்றி ஈழம்  வீவ்

    No comments:

    Post a Comment

    Photobucket
    வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை