வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Saturday, January 21, 2012

ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதியால் முடக்கப்பட்டிருக்கும் உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை வெற்றிபெற வைப்போம்

  புனிதவதி என்ற சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையினை திரைப்படமாக்கியதன் மூலம் ஈழத்தில் சிங்களத்தால் நிகழ்த்தப்பட்ட,நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றஅவலங்களை உலகின் பார்வைக்கு கொண்டு வந்துள்ளார் இயக்குநர் புகழேந்தி தங்கராசா அண்ணன் அவர்கள்.


நான்கு சண்டைக்காட்சி ஐந்து பாடல் குத்துப்பாடல் என வழக்கமான மசாலா கலவைகளுடன் வெளிவந்து தமிழர்களின் எதிர்காலத்தையே சூனியமாக்கிக் கொண்டிருக்கும் தமிழ்சினிமா உலகத்தில் காற்றுக்கென்ன வேலி திரைப்படம் மூலம் ஈழவிடுதலைப் போராட்டத்தின் பதிவை மேற்கொண்ட அன்பு அண்ணன் புகழேந்தி தங்கராசா அவர்கள் புலம்பெயர் வாழ் ஈழத்தமிழர்களது பங்களிப்புடன் உச்சிதனை முகர்ந்தால் என்ற வரலாற்றுக் காவியத்தை படைத்துள்ளார்.
புகழேந்தி தங்கராசா அண்ணனின் காற்றுக்கென்ன வேலி என்ற முதல் ஈழக்குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்து(மக்கள் ஆதரவு) கிடைக்காத காரணத்தால் வந்தவேகத்திலேயே முடங்கிக் கிடக்கின்ற நிலையிலும் முழு உற்சாகத்துடன் உச்சிதனை முகர்ந்தால் என்ற இரண்டாவது ஈழக்குழந்தையினை உலகத்தமிழர்களிற்காக படைத்திருக்கின்றார் என்றால் அடங்காத தாகத்துடன் இருப்பதனை வெளிப்படுத்துகின்றது.
வரலாற்றுத் துயரமாக இரண்டாவது ஈழக்குழந்தையும் பிறக்கும் போதே பெரும் போராட்டத்திற்கு மத்தியில் பிறந்து தவழ்வதற்கே மல்லுக்கட்டிக் கொண்டுள்ளது. இதன் பின்னணியில் ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதித்திட்டம் மறைந்துள்ளது.
படத்தினை உருவாக்கி முடித்து திரைப்பட தணிக்கைப் பிரிவு சான்றிதழ் பெறுவதற்குள் போதும் போதும் என்றான நிலை ஏற்பட்டிருந்தது. கண்ணில் விளக்கெண்ணை விட்டு உண்ணிப்பாக பார்த்த கடமைவீரர்கள் பல வசனங்களை நீக்கியதுடன் நின்றுவிடாது கூண்டில் கிளி இருக்கும் காட்சியை சாக்குச்சொல்லி காலதாமதம் செய்தார்கள்.
ஒருவாறு பெரும் முயற்சியால் ஒன்றரை இலட்சம் தமிழர்களை கொன்றது ஒருநட்பு நாடா…? போன்ற உணர்வை உலுக்கும் வசனங்களை நீக்கி தணிக்கைச்சான்று பெற்று வெளியிட்டபோதுதான் ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதி அரங்கேறியது.
டிசம்பர்-16ம் திகதி முதல் வெளியாகின்றது என விளம்பரப்படுத்தப்பட்ட உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியம் அறிவிக்கப்பட்ட திரையரங்குகளில் வெளியாகவில்லை என்ற தகவலும் பல மாவட்டங்களில் அறிமுகமில்லாத தரமற்ற திரையரங்குகளிலும் வெளியாகி உள்ளது என்ற தகவலும் தமிழகத் தெலைக்காட்சிகள் பத்திரிகைகள் வாரப்பத்திரிகைகள் என்பவற்றில் விளம்பரத்தை பிரசுரிக்க மறுத்ததாகவும் திரைப்பட விமர்சனத்தை புறக்கணித்ததாகவும் அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.
இது தொடர்பாக நாம் எமது செய்தியாளர் குழு மூலமாகவும் இயக்குநர் புகழேந்தி அண்ணனின் மூலமாகவும் அறிந்த போது அதிர்ச்சியடைந்தோம். அதிர்ச்சிகள்…
படத்தை வெளியிடுவதற்கு முன்னர் பத்திரிகைகள் தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்வது வாடிக்கை. அவ்வாறு உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்திற்கு விளம்பரம் செய்ய அனுகியபோது தமிழினத் துரோகி கருணாநிதியின் கலைஞர் தொலைக்காட்சி முகத்தில் அறைந்தாற்போல் முடியாது என திருப்பியனுப்பியுள்ளார்கள். தமிழக முதலமைச்சர் செயலலிதாவின் ஜெயா தொலைக்காட்சி குழுமமும் இதனை தவிர்த்து தமிழினத் துரோகத்தில் பங்கேற்றுள்ளது.
தமிழக பத்திரிகை வரலாற்றில் தனக்கென தனியிடம்பிடித்திருக்கும் ஆனந்தவிகடன் வார இதழும் உச்சிதனை முகர்ந்தால் விமர்சனத்தை புறக்கணித்திருப்பது யாரும் எதிர்பார்க்காத விடையமாகும். பல்வேறு தொலைக்காட்சி நிர்வாகத்தினர் இத்திரைப்படம் தொடர்பாக எவ்வித காட்சிகளும் விளம்பரங்களும் வந்துவிடக் கூடாது என உத்திரவிட்டும் அவற்றில் பணியாற்றுபவர்கள் கிடைக்கும் சந்தர்ப்பத்தில் படத்தைபற்றி கருத்துக்களை பதிவு செய்வதே படத்திற்கு வெற்றியாகும்.
முள்ளிவாய்க்காலில் வரலாற்றுத் துயரம் அரங்கேற்றப்பட்ட போது கவர்ச்சி நடிகைகளின் ஆட்டம் பாட்டங்களை ஒளிபரப்பி தமிழக மக்களை திசைதிருப்பிய சன் தொலைக்காட்சி தன்நிலை மாறி தற்போது உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தின் விளம்பரத்தினை ஒளிபரப்பி வருவதுடன் புத்தாண்டு அன்று ஒளிபரப்பான திரைக்கண்ணோட்டம் நிகழ்ச்சியில் இந்தப்படத்தினையும் சேர்த்து வழங்கியிருந்தது.
அதிலும் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கியவர்கள் படத்தைப்பற்றி குறிப்பிடுகையில் புனிதவதியாக நீநிகா நடிக்கவில்லை வாழ்ந்திருக்கின்றார் என்று விளித்திருத்தமை படத்தினை முழுமையாக உள்ளுணர்ந்து பார்த்து புனிதவதியோடு பயணித்ததை வெளிப்படுத்துகின்றது.
எல்லாவற்றிற்கும் மேலாக 2011ம் ஆண்டின் சிறந்த திரைப்படங்களை வரிசைப்படுத்திய சன் தொலைக்காட்சி அதிக மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளதாக கூறி உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியத்தையும் வரிசைப்படுத்தி பெருமைபெற்றுள்ளது.
இவ்வாறு புத்தாண்டு தினத்தில் ராச் தொலைக்காட்சி ரோகினி தொகுத்து வழங்கிய சிறப்பு நிகழ்ச்சியில் ஒருமணிநேரம் உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியத்தை பற்றி தொகுத்து வழங்கியது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் புகழேந்தி அண்ணன் நீநிகா இசையமைப்பாளர் இமான் ஆகியோரை அழைத்து சிறப்பித்திருந்தது.
உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியத்தின் விளம்பரங்களையும் காட்சிகளையும் ஒளிபரப்ப மறுத்த கருணாநிதி சன் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கும் அழுத்தங்களை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
இவ்வாறுதான் தமிழர்களின் வீர தீரங்களையும் ஈழத்தில் நிகழ்த்தப்பட்ட அனைத்துலக துரோகத்தையும் இடித்துரைத்து வெளிவந்த ஏழாம் அறிவு திரைப்படத்தில் குறித்த காட்சிகளை நீக்கி வெளியிடுமாறு அதன் தயாரிப்பாளரான பேரன் மூலம் அழுத்தங்கள் பிரயோகித்ததும் கதாநாயகன் சூர்யாவின் தந்தை மூலம் சமாளித்ததும் வெளியுலகிற்கு தெரியாமல் நடந்தவை. வெளியுலகிற்கு தெரிந்தவை ராசபக்சே இலங்கையில் ஏழாம் அறிவு திரைப்படத்தின் குறித்த காட்சிகளை நீக்கி வெளியிட அனுமதித்தது மாத்திரம்தான்.
இவ்வாறு சில ஊடகங்கள் பேராதரவை வழங்கியிருந்தாலும் ராசபக்சே-சோனியா-கருணாநிதி கும்பலின் சதி திட்டம் ஜெமினி நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
ஐந்து புலம்பெயர் தமிழர்களின் நிதிப்பங்களிப்புடன் ஈழத்தமிழர்களின் துயர வாழ்வை திரைக்காவியமாக்கி வெளியிடுவதற்கான முயற்சியில் இயக்குநர் புகழேந்தி அண்ணன் தீவிரமாக ஈடுபட்டிருந்த சமயத்தில் ஜெமினி திரைப்பட நிறுவனத்தினை அனுகியிருந்தார்.
புனிதவதியின் வேதனைப் பயணத்தை திரையிட்டுப்பார்த்த ஜெமினி திரைப்பட நிறுவனத்தினர் நெகிழ்ந்து போய் வெளியிடுவதற்கு ஒப்புக் கொண்டிருந்த நிலையில் அவர்களிற்கு இந்த துரோகத்தில் பங்கிருப்பதற்கு வாய்ப்பில்லை.
திரையரங்குகளை தொடர்பு கொண்டு திரைப்படங்களை வழங்குவது தொடர்பான விடையங்களை கையாளும் நபர்தான் இந்த சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் தி.மு.க. வின் மூத்த தலைவரான பேராசிரியர் அன்பழகனின் உறவினர் என அறியமுடிகின்றது.
இந்த நபரே திரையரங்குகளை தொடர்பு கொள்ளாமலேயே அவை திரையிட மறுத்துவிட்டதாகவும் வேறு திரைப்படங்கள் ஓடிக் கொண்டு இருப்பதாகவும் காரணங்களை கூறியிருக்கின்றார். இது தொடர்பாக எமது தமிழக செய்தியாளர் மூலம் அறிந்தவை..
தமிழகத்தின் மையப்பகுதியும் இரண்டாவது பெரு நகரமாகவும் விளங்கும் திருச்சியில் உள்ள முக்கிய திரையரங்குகளில் சென்று விசாரித்த போது உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் தொடர்பாக தம்மை யாரும் இதுவரை அணுகவில்லை எனவும் அப்போது தம்மை தொடர்பு கொண்டிருந்தால் திரையிட்டிருக்கலாம் எனவும் கூறியிருந்தார்கள். அதைவிட திரையரங்க நிர்வாகத்தில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் இப்படியான நல்ல திரைப்படத்தை எதற்கு நகரத்திற்கு ஒதுக்குப் புறமாக உள்ள திரையரங்கில் வெளிட்டார்கள் என ஆதங்கப்பட்டதாகவும் எமது ஈழதேசம் இணைய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
திருச்சியில் 25 வருடங்களாக இருப்பவர்களிற்கே தெரியாத திரையரங்கில் எதற்காக படத்தை வெளியிட்டீர்கள் என தான் வினவியதற்கு இல்லை.. இல்லை.. அது நல்ல பெரிய திரையரங்குதான் என கூறி சமாளித்ததாக இயக்குநர் புகழேந்தி அண்ணன் எம்மிடம் கூறினார். சென்னையிலும் அறிவிக்கப்பட்ட திரையரங்குகள் பலவற்றில் படம் வெளியாக வில்லை எனவும் அதைவிட போதியளவு விளம்பரங்களும் செய்திருக்கவில்லை என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த வியைடத்தில் ஜெமினி நிறுவனத்தை குற்றம்சாட்ட முடியாது. இருப்பினும் இதனை தவிர்த்து உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியத்திற்கு சிறந்த களத்தினை உருவாக்கியிருக்கலாம். இதற்கான வாய்புகள் ஜெமினி நிறுவனத்திற்கு இருந்தது என்பதனை யாரும் மறுக்க முடியாது.
ஏன் என்றாள் தற்போது திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் விக்ரம் நடிப்பில் வெளிவந்த ராஜபாட்டை திரைப்படத்தையும் தைப் பொங்கல் வெளியீடாக திரைக்கு வர இருக்கும் விஜய்,ஜீவா,சிறீகாந் ஆகியோரின் நடிப்பில் வெளிவரவிருக்கும் நண்பன் திரைப்படத்தையும் வெளியிடும் உரிமையினை ஜெமினி நிறுவனமே கொண்டுள்ளதால்தான்.
உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியத்தை பார்த்து கலங்கி வெளியிடுவதற்கு முன்வந்த ஜெமினி நிறுவனத்தினர் அதற்கு சிறப்புக் கவனம் கொடுத்திருக்கவில்லை என்பதே எமது குற்றச்சாட்டு ஆகும். இதனையும் பத்தோடு பதினொன்றாக கருதியிருக்காது சிறப்புக் கவனம் எடுத்திருந்தால் இந்த சதித்திட்டம் அரங்கேறுவதற்கு பெருமைமிக ஜெமினி நிறுவனத்தை களமாகப் பயன்படுத்துவதனை தவிர்த்திருக்கலாம் அல்லவா.
வசூலை வாரிக்குவிக்கக் கூடிய படங்களாக கருதப்படும் ராஜபாட்டை,நண்பன் ஆகிய திரைப்படங்களை வழங்கும் திரையரங்குகளிற்கு செல்லமாக நிர்பந்தத்தினை கொடுத்து உச்சிதனை முகர்ந்தால் திரைக்காவியத்தை முழுவீச்சில் திரையிட்டிருக்கலாம் என்ற மன்குமுறல் ஒன்றும் அநியாயமான விடையம் இல்லை. தமிழக சினிமா வரலாற்றில் இது ஒன்று புதியவிடையமுமில்லை என்பது விடையம் அறிந்தவர்களிற்கு தெரியும்.
இவ்வாறு உச்சிதனை முகர்ந்தால் வரலாற்றுக் காவியம் பல்வேறு இன்னல்கள் இடையூறுகளை சந்தித்து நிற்பதை கண்டு பிறந்த உடனேயே முடமாகிப்போன பிள்ளையை எண்ணி கலங்கும் தந்தையாக வேதனைப்பட்ட இயக்குநர் புகழேந்தி அண்ணனை உற்சாகப்படுத்தி தற்போது மீள் வெளியீடு செய்வதற்கு உறுதுணையாக இருப்பது தமிழ்த்தேசியத்தை ஒட்டுமொத்த குத்தகைக்கு எடுத்து வீதியுலாவரும் தலைவர்கள் அல்ல மகத்தான மனிதர் நல்லகண்ணு அய்யா என்பதும் பலர் அறிந்திராத விடையமாகும்.
வரலாற்றுக் காவியமான உச்சிதனை முகர்ந்தால் திரைப்படத்தை பார்வையிட்ட நல்லகண்ணு அய்யா இந்தப்படம் தோற்கக் கூடாது.. தோற்கவும் முடியாது என்று கூறியதோடு நின்றுவிடாது தமது கட்சி தோழர்களை களத்தில் இறக்கியுள்ளார்.
தமிழகத்தில் உள்ள தமிழ்த்தேசிய தலைவர்கள் மனது வைத்திருந்தால் ஈழத்தின் அவலத்தை சித்தரிக்கும் இந்த வரலாற்றுக் காவியத்தை பெருவெற்றி பெறச்செய்திருக்கலாம் என்று ஆதங்கப்படுவதிலும் உண்மை இல்லாமல் இல்லை.
நான் நூறு மேடைகளில் பேசிச் சாதிக்க முடியாததை இந்த ஒருபடம் செய்துவிட்டது என்று கூறிய ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைக்கோ அண்ணனாகட்டும் சிறப்பு அழைப்பாளர்களிற்கு திரையிட்டு காட்டிய பிரத்தியேக காட்சியில் பார்வையிட்ட பல இனமானத் தலைவர்கள் ஆகட்டும் எல்லோருமே அந்த இடத்தைவிட்டு அகன்றதோடு தம் இனமானக் கடமை முடிந்துவிட்டதாகக் கருதியதாலேயே வரலாற்றுக் காவியமாகியிருக்க வேண்டிய உச்சிதனை முகர்ந்தால் திரைப்படம் பரிதாப காவியமாகி நிற்கின்றது என்னமோ மனதை நெருஞ்நி முள்ளாக குத்திக் கொண்டு இருக்கின்றது.
தமிழகத்தின் நிலை இப்படி இருக்கையில் புலத்தில் பேராதரவைப் பெற்று நிற்கின்றது உச்சிதனை முகர்ந்தால் திரைக்காவியம். புலம்பெயர் வாழ்தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்றுள்ளதால் மக்களின் வேண்டுகோளிற்கு இணங்க மீண்டும் தொடர்ந்து லண்டன்,பிரான்சு,யேர்மனி,சுவிஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள முக்கிய நகரங்களில் 06ம் திகதி வெள்ளிக்கிழமை முதல் தொடர்ந்து திரையிடப்பட உள்ளது.
இந்நிலையில் நண்பன் படத்தினை புலம்பெயர் நாடுகிளில் வெளியிடுவதற்கு எம்மவர்களை ஜெமினி நிறுவனம் நாடியுள்ளது. இந்த வாய்ப்பினை பயன்படுத்தி நண்பன் படத்தினை வாங்கியுள்ளவர்கள் ஜெமினி நிறுவனத்தினருடன் கதைத்து உச்சிதனை முகர்ந்தால் திரைக்காவியத்தை மீள்வெளியீடு செய்யும் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கலாம்.
எதிர்வரும் பதின் மூன்றாம் திகதி தமிழகத்தில் மீள்வெளியீடு செய்ய இயக்குநர் புகழேந்தி அண்ணன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதற்காக அவர் சந்தித்துவரும் நெருக்கடிகள் அலைச்சல்கள் கொஞ்ச நஞ்சமில்லை.
வரலாற்றுக் காவியமான இரண்டாவது ஈழக்குழந்தையினை எப்பாடுபட்டாவது உயிரூட்டிவிட வேண்டும் என்பதற்காக அவர் பட்டுத்திரியும் பாட்டை தெரிவிக்கும் போது எமக்கு ஆதங்கத்திற்கு பதில் ஆத்திரம்தான் வருகின்றது. பணபலத்தை கொண்டு உப்புச் சப்பில்லாத எத்தனையோ திரைப்படங்களை வலிந்து ஓடவைத்துக் கொண்டு இருக்கையில் உண்மைக் காவியத்தை திரையிடுவதற்கு படாதா பாடு படவேண்டியுள்ளது.
புனிதவதி ஒருதடவைதான் சிங்கள காட்டுமிராண்டிகளால் சிதைக்கப்பட்டால் என்றாள் தமிழகத்தில் நிலவி வரும் சிக்கல்களை பார்க்கும் போது தமிழகத்தில் மீண்டும் மீண்டும் சிதைக்கப்படுகின்றாளே என்ற ஆத்திரம்தான் மேலிடுகின்றது.
முள்ளிவாய்க்காலில் தமிழினம் அழிக்கப்படும் போது மௌனம் காத்து வேடிக்கைபார்த்த தமிழகம் இந்த ஒரு புனிதவதியை மாத்திரம் போற்றி காக்கவா போகின்றது….!?

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்(05-01-2012)

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை