நெஞ்சகலா அந்த நினைவு
பச்சிளம் பாலகரை
பத்துமாத தாய் வயிற்றை
பிய்த்தெறிந்த
பிசாசுகளின்
கொத்துகுண்டின்
கொடூர ஒலி
நித்தம் நித்தம் ஒலிக்கிறது-என்
நெஞ்சம் இன்னும் பதைக்கிறது
என்னெதிரில் நான்
கண்டேன்
துப்பாக்கி குண்டுவரும்
ஐஞ்சிஞ்சி செல் வருமா?
காற்றை கிழித்து வருமா
கிபீர் குண்டும்
வந்து விழும்
ஆட்லெறி மழை பெய்யும்
ஆர் பி ஜி உறுமிவரும்
மல்ரிபெரல் பரவி விழும்
அத்தனை
குண்டுகளும்-என்
அருகிருப்போர்
உயிர் குடிக்கும்
எப்போது என்தலைக்கு
இக்குண்டு பாயும் என்று
எதிர்பார்த்தே
நானிருந்தேன்
நேற்றுபோல் இருக்கிறது
நெஞ்சலகா அந் நினைவு
மரணித்து விழுந்தோரை
மணலுக்குள் புதைத்து விட்டு
மறுபடியும் இடப்பெயர்வு
கட்டியணைத்து
கண்ணீர் விட
கணப்பொழுதும்
நேரமில்லை
எட்டி நடப்பதற்கு
உடலினிலே தெம்பில்லை
எப்படியோ நகர்ந்தோம்
நேற்றுபோல் இருக்கிறது
நெஞ்சகலா அந்த நினைவு.
ஒப்பாரி ஒலிகேட்டு
ஓடினால் அவ்விடத்தில்
உருக்குலைந்து கிடக்குமங்கே
அப்பாவி உடல்கள் பல
கமராவை கையிலெடுத்து
காட்சிகளை
சுடுவதற்குள்
படபடவென
பரவிவரும் குண்டுகள்
நேற்றுபோல் இருக்கிறது
நெஞ்சகலா அந்த நினைவு
காலையிலே கண்டமுகம்
மாலையிலே இருக்காது
கண்ணெதிரே
செல்பவரின்
கதைமுடியும்
கணப்பொழுதில்
செல்வந்து வீழ்ந்த
இடத்தினிலே
சிதைந்தவரின் உடல்தேட
பாலகரின் தலைகள் பல
பனைமரத்தில்
தொங்குமங்கே
கடற்கரையால்
நடக்கும்போது
காலில் இடரும்
பிணக்குவியல்
நேற்றுபோல் இருக்கிறது
நெஞ்சகலா அந்த நினைவுகள்
கொடியோரின்
குண்டுபட்டு
செத்தழிந்த எம்முறவின்
ஆத்மாக்கள் கேட்கிறது
என்னபதில் எமக்கென்று
"முத்தையனுர் துசியந்தன்"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இங்கு வருகைதரும் உறவுகளே இந்த இணையத்தை உங்கள் நண்பர்களிடம் கொண்டு சேருங்கள் ...இங்கு இடப்படும் பதிவுகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் விமர்சனங்கள் தவறாமல் பதியுங்கள் உறவுகளே ..உங்கள் விமர்சனம் கருத்துக்கள் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..ஆகையால் உங்கள் கருத்துக்களை எதிர்பாக்கிறேன் ..மேலும் உங்கள் தமிழ், ஈழம் ,தமிழர்கள் பற்றிய கட்டுரைகள் எமக்கு அனுப்புங்கள் ..
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment