வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Tuesday, January 24, 2012

இறுதி நாட்களும் எனது பயணமும் - பாகம்-02



உடையார்கட்டு தொடக்கம் முல்லைத்தீவின் பல பகுதிகளும் சனநெரிசலால் திக்குமுக்காடிக் கொண்டிருந்தன. மனிதர்களின் ஆக்கிரமிப்பு அனர்த்தங்கள் போதாதென்று இயற்கையும் மக்கள்மீது சீறி விழுந்தது. காற்றும் மழையும் வந்து மக்களின் தறப்பாள்களை குதறி எறிந்தன. பகலும் இரவுமாக கொட்டிய மழை பெருவெள்ளமாகி குடிசைகளை எல்லாம் அடித்து விழுத்திக்கொண்டு பாய்ந்தது.
போகிற நான் ஏன் சும்மா போகவேண்டும் என்ற குருட்டு நியாயத்துடன் வீதியோரம் ஒதுங்கிய மனிதர்களைக்கூட வாரியிழுத்து வீழ்த்தி தனக்குள் சுருட்டிக்கொண்டு பாய்ந்தது. பலபத்துப்பேர் வெள்ளத்திலும் மாண்டுபோனார்கள். பாரிய மரங்கள்கூட வேரோடு பாரி வீழ்ந்தன. அதுவும் தன் பங்குக்கு சிலரை கொன்றுபோட்டது.

உலகமே சேர்ந்துநின்று கொல்லும் இனத்தில் தானும் ஒன்றிரண்டு பேரை கொன்றால் என்ன குறைந்தாவிடும் என்று இயற்கையும் நினைத்ததுபோலும். எங்கும் சா மயம். அன்றைய நாட்களில் ஈழநாதம் பத்திரிகையின் பக்கங்களை முழுவதுமாக நிறைத்தவை சாவுச்செய்திகள் மட்டும்தான் என்றால் அது மிகையாகாது.
உடையார்கட்டு இருட்டுமடு பகுதிகளுக்குள்ளும் திடுதிப்பென எறிகணைகள் வீழ்ந்து வெடித்தன. சரசரவென சனங்கள் கொட்டில்களைவிட்டு வெளியில் பாய்ந்தனர். பலர் உடுத்திய உடைகளோடும் சிலர் சில பைகளோடும் வீதிக்கு வந்தனர். போகவர முடியாத மக்கள் வெள்ளத்தால் வீதி திமிலோகப்பட்டது. வீதியோரம் முழுவதையும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் நிறைந்து நின்றன. பயணிக்க இடைவெளியின்றி, தங்கிடங்களாகிய, கழிப்பிட மறைவாகிய, எரிந்து கருகிய, பூட்டுகள் தொங்கிய இன்னோரன்ன வாகனங்கள் நின்றன.

உடையார்கட்டு, இருட்டுமடு இடம்பெயர்வின் கையோடுதான் கோடிப்பெறுமதியான சொத்துக்களை கைவிட்டுவிட்டு உயிருள்ள மாந்தர்கள்மட்டும் ஓடத்தொடங்கினர். என்னுடைய குடும்பமும் இதன்பின்னரே மிகமோசமாக அலைமோதித் தவித்தது. என் வயோதிப தாய்தந்தைக்கு உதவ முடியவில்லையே என்ற ஏக்கம் என்னை வதைத்தது. என்னுடைய தங்கை மட்டுமே என் குடும்பத்தின் முழுப்பாரத்தையும் தன் தோள்களில் சுமந்தாள். என் குடும்பத்தின் நிலையை நினைக்கும்போதெல்லாம் எனக்கு அழுகை வரும்.
எனினும் நான்காணும் நூற்றுக்கணக்கான துயரங்களையும் நினைத்து அவர்களது நிலையைவிட என் குடும்பத்தின்நிலை பறவாயில்லை என்று தேறிக்கொள்வேன். எனினும் அடுத்த நிமிடமே தடுமாறும் நடையுடன் என் தந்தை சனக்கூட்டத்தில் நெரிபடுவது என் நினைவில் வந்து வலியை ஏற்படுத்தும். இலகுவில் களைப்படைந்து விடக்கூடிய என் வயதான தாயார் என்னவென்று இந்த நடைப்பயணத்தை சமாளிக்கின்றாரோ என்ற எண்ணமுன் கண்களில் நீர் வழியும்.பாவம் தங்கை, அவள் சம்பாதித்துச்சேர்த்த அனைத்து சொத்துகளையும் இழந்துவிட்டாள்.
வள்ளிபுனம், தேவிபுரம் பகுதிகளிலும் குடியிருப்பதும் கேள்விக்குறியானது. புதுக்குடியிருப்பின் இரணைப்பாலை நிரம்பிவழிந்தது. புதுக்குடியிருப்பின் மையப்பகுதியோ சுடுகாடுபோல கிடந்தது. அங்கு தாக்குதல் நடவடிக்கைக்குரிய போராளிகள் மட்டுமே நடமாடினார்கள். ஆனால் அதையண்டி கூப்பிடுதூரத்தில் இருந்த இரணைப்பாலையோ சன வெள்ளத்தால் பிதுங்கியது.
சனம் சனம் சனம். எங்கும் சனக்கூட்டம். ஒருவர் முகத்தில் ஒருவர் மூச்சுவிடும் நெரிசல். காணும் இடமெல்லாம் தறப்பாள் கொட்டில்கள் முளைத்தன. பின் எரிந்து, கிழிந்து, மிஞ்சியவை பிடுங்கி……. சே. என்னடா வாழ்க்கை என்றானது. இந்தப்பூமியே பிளந்து எங்களை விழுங்கிவிடக் கூடாதா என்று வெறுத்துப்போனது. அடுப்பில் உலை ஏற்றுவதே பிரச்சினை ஆகிவிட்டது. உடுத்த உடுப்பில்லலை. குடிக்க நீரில்லை. உண்ண உணவில்லை. இருக்க இடமில்லை. படுக்க நேரமில்லை என்ற இல்லாமைகளே நிறைய இருந்தன.

இரணைப்பாலை, ஆனந்தபுரம் போன்ற பகுதிகளும் இராணுவ சன்னதங்கொண்டு குதறப்படத் தொடங்க இலட்சக்கணக்கான மக்களின் இடம்பெயர் அவலம் தொடர்ந்தது. மாத்தளன் பகுதி நிரம்பியது. சொத்து சுகமில்லாத வெற்று மனிதர்களே இடத்தை முழுதுமாக நிறைத்தனர். சின்னஞ்சிறு பாடசாலை ஒன்றே பென்னம்பெரிய மருத்துவமனையானது. ஈவிரக்கம் பார்க்கும் குணங்களை கழற்றிவைத்துவிட்டதைப்போன்ற மருத்துவர்களும் மருத்துவத் தாதிகளும் கடமையாற்ற முடிந்தது. காயங்கள் மலிந்து போயின. மண்டபங்களையும் விறாந்தைகளையும் நிறைத்து அடுக்கிப்போட்டும் நோயாளிகளைக் கிடத்த அங்கே இடம்போதவில்லை. தெருவோரப் பிச்சைக்காரர்களைப்போல நடைபாதைகளில் குருதிவழிய கிடந்தார்கள்.
பிச்சைக்காரரே இல்லாத நாட்டை விரும்பிய மக்கள் அனைவருமே இப்போது பிச்சைக்காரர்களைப்போல ஆகிவிட்ட துயரம் எல்லோரிலும் தெரிந்தது. ஏற்கெனவே எரிந்து சுடுகாடாகிப்போன புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரப்பகுதியில் தாக்குதலணிப் போராளிகள் நிலை கொண்டிருந்தார்கள். ‘நகரக்கூடாது’ என்ற பிடிவாதத்துடன் நிலைகொண்ட போராளிகள் படையினருடன் கடுமையாக போரிட்டனர். ஆகவே படையினரால் முன்னரைப்போன்று இலகுவாக நகர முடியவில்லை. முக்கியபல தளபதிகள் நின்றுகொண்டிருந்த அக்களமுனையில் எதிரி கடுமையாக போரிட வேண்டியிருந்தது.
நடந்தே களைத்துப்போயிருந்த படையினருக்கு எறிகணைகளும் கிபிர்களும், டாங்கிகளும் கைகொடுத்தன. படை வீரர்களே போராளிகளை தேடிச்சுடவேண்டிய அவசியமெல்லாம் அவர்களுக்கு இருக்கவில்லை. டாங்கி ஒன்றை நிறுத்தி வைத்து சுழற்றி ஒரு பிடி பிடித்தால் நான்கைந்து தலைகள் ஒன்றாக விழுந்துவிடும். ஒரேயொரு கட்டளையில் நாற்பது, அறுபது என பாயும் பல்குழல் பீரங்கிகளை மணிக்கு ஐந்தாறு தடவைகள் இயக்கினால் குறைந்தது, நூறு போராளிகளாவது களமுனையில் இருந்து அகற்றப்படுவார்கள்.
படையினர் எந்த இலக்கையும் இனங்காணாமல் குருட்டுத்தனமாக எறிகணைகளை ஏவிக்கொண்டே இருந்தார்கள். அவைகூட நாளாந்தம் சிலபத்துப்பேரை அப்புறப்படுத்திக்கொண்டிருந்தன. போதாததற்கு கிபிர்களையும் அழைத்து குண்டுகளை வீசினார்கள். ஒரு பத்து மீற்றர் பாதை திறப்பதற்கு உதவக்கூட நான்கைந்து போர்விமானங்கள் வந்து உடைத்துக்கொடுத்தன. எனினும் ஆனந்தபுரத்தில் போராளிகள் சண்டையிட்டுக்கொண்டேதான் நின்றார்கள். மக்கள் இடம்பெயரத்தொடங்கிய நாட்களிலேயே சுடுகாடாகத் தொடங்கிவிட்ட இரணைப்பாலை வெறும் பொட்டல் வெளியாகிவிட்டது. அங்கு பேராளிகளை கூண்டுக்குள் அடைத்து வைத்திருப்பதைப்போன்று வியூகம் அமைத்து படையினர் சுற்றிநின்று தாக்கினார்கள்.
ஆனந்தபுரத்தைவிட்டு வெளியேற மாட்டேன் என்று தலைவர் உறுதியாகச் சொல்லியிருக்கிறார். போராளிகள் அங்கேயே செத்து மடிவார்களேதவிர ஒருபோதும் அவ்விடத்தை விட்டுவிட்டு வரமாட்டார்கள் என்று ஊரெல்லாம் கதைத்தது. அது படையினருக்கு தெரியுமோ தெரியாதோ உண்மையோ பொய்யோ என்று எவரும் அறிந்திருக்கவில்லை.

ஆனந்தபுரம், கணமும் தவறாமல் பாரிய குண்டுச்சத்தங்களால் அதிர்ந்துகொண்டே இருந்தது ஊருக்கே கேட்டது. நாளுக்கு நான்கைந்து தடவைகள் வந்து விமானங்கள் குண்டுகளை வீசுவதையும் கரும்புகையும் நெருப்பும் கிளம்புவதையும் மக்கள் எல்லோரும் கண்டார்கள். மாத்தளன் பகுதிக்குள் வந்தபின்னும் தேங்காய், மாங்காய், விறகுகள் பொறுக்க என இரணைப்பாலை பக்கமாக போய்வந்த சனங்களும் தம் பயணத்தை நிறுத்திவிட்டர்கள். ஏனெனில் அங்கே தென்னை, பனை உட்பட எந்தவொரு பச்சை மரமுமே இருக்கவில்லை. அத்தனையும் எறிகணைகள் சீவிச்சரித்தன. ஒட்டுமொத்த புதுக்குடியிருப்பும் புகைபடிந்த பொட்டல் வெளியானது.
ஆனந்தபுரத்தில் படையினர் பல நாட்களாக போரிடவேண்டி இருந்தது. அதனால் மாத்தளன், வலைஞர்மடம், முள்ளிவாய்க்கால் பகுதிகளில் தறப்பாள்களை விரித்துக்கட்டிய மக்கள் கொஞ்சம் ஆசுவாசப் பெருமூச்சை விட்டபடி அரிசி பருப்பை தேடத்தொடங்கினர்.
மருத்துவமனை வளாகங்களிலும் ஏனைய எறிகணைகள் விழுகின்ற இடங்களிலும் கிடந்த பிணங்களை அள்ளிச்செல்லும் பாரிய பொறுப்பை தமிழர் புனர்வாழ்வு கழகம் செய்தது. உறவுகளால் கைவிடப்பட்டோ அடையாளம் காணப்படாமலோ வெளியிடங்களில் கிடக்கும் பிணங்களை அள்ளிச்சென்று எங்கேயாவது புதைக்க வேண்டுமே. மருத்துவமனைக்கான தறப்பாள் கொட்டில்களில்கூட ஒருவரை ஒருவர் நெருக்கிக்கொண்டுதான் கிடந்தனர். அப்படி இருக்க பிணங்களை அடையாளம் காணும்வரை அடுக்கிவைத்துக்கொண்டு இருக்க முடியுமா? சிலவேளை அடையாளம் கண்டுவிட்டவர்களும் அதிலேயே அழுதுவிட்டு போகவேண்டியதுதான். அது தனது குழந்தையின் பிணமேதான் என்றாலும் தூக்கிச்செல்ல முடியுமா? எங்கே கொண்டுபோய் புதைப்பது?
ஒருவரை புதைக்கவே இடமில்லை என்று திண்டாடினால் உழவியந்திரத்தில் பெட்டி பெட்டியாக அள்ளிச்செல்லும் பிணங்களை எங்கே கொண்டுபோய் கொட்டிப் புதைப்பது? வீதியில் இடைவெளியே இல்லாமல் ஆமையாய் ஊரும் வாகனங்களுக்கிடையே பிணங்கள் குவிக்கப்பட்ட உழவூர்திகளும் நகரும். பெட்டிமுழுவதிலும் தாறுமாறாக கிடக்கும் பிணங்கள் உயிருள்ளவர்களை அச்சுறுத்தும். ஒரு கொத்துக்குண்டு விழுந்தாலே பத்து இருபது என்று சனங்கள் காயப்பட்டு விழுந்தார்கள். குடும்பங் குடும்பமாய் செத்தார்கள். பிணங்களைப் புதைப்பது ஒரு பிரச்சினை என்றால் காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்வதும் அவர்களது உயிர்களை காப்பாற்றுவதும் அதைவிட பிரச்சினை ஆனது.
அந்த இடத்தில் மட்டும் எல்லோரும் ஒருமித்துச்செயற்பட்டார்கள். யார் எவர் என்றில்லை. காயப்பட்டுவிட்டால் அவர்களை அவசர அவசரமாக தூக்கி வாகனங்களில் ஏற்றி மருத்துவமனைகக்கு அனுப்பிவிடுவார்கள். எந்த வாகனத்திலிருக்கும் சாரதியும் மாட்டேன் என்று ஒரு வார்த்தை சொல்வதில்லை. எவர் காயப்பட்டாலும் எவராவது தூக்கிச்சென்று மருத்துவமனையில் சேர்த்துவிடுவார்கள் என்று நம்பலாம். அந்த மனிதாபிமானம் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் மருத்துவமனையில்தான் மருந்துகள் இல்லாமல் போய்விட்டன.

காயப்பட்டவர்களை கொண்டுசெல்ல மட்டும் எப்படித்தான் வீதியில் இடம் கிடைக்குமோ தெரியாது. அம்புலன்ஸ்களின் அலறலும் அதன்பின்னே அணிவகுக்கும் வாகனங்களின் பாய்ச்சப்பட்ட ஒளியும் ஒலியும் மனிதர்களை பாதையிலிருந்து அப்புறப்படுத்தி விடுகின்றன. ஓன்று, இரண்டு, மூன்று எண்ணி களைத்துவிடுமளவுக்கு வாகன பேரணியே காயப்பட்டவர்களை ஏற்றிச்செல்லும் சம்பவங்களும் நடந்தன.
அந்தளவுக்கு தொகையான மக்கள் காயப்பட்டார்கள். அடிக்கடி ஆகாயத்தில் விரியும் கொத்துக்குண்டுகள் அந்த கைங்கரியங்களை செய்தன. எல்லா வாகனங்களில் இருந்தும் வழியும் குருதி வீதியை சேறாக்கின. அந்த வாகனங்கள் கடந்துசென்ற பின்பும் அழுகை ஒலியும் அலறல் ஒலியும் கேட்பவர்களது காதுகளுக்குள்ளேயே நிற்கும். என்னுடைய குடும்பத்துக்கும் பாரிய இழப்பு. ஆட்லறி எறிந்த ஒற்றை எறிகணையிலேயே எனது சின்னக்காவும் பதினான்கு வயது மகனும் பத்து வயது மகளும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் இருவரது துணைவியர் உட்பட உறவினர்கள் ஐந்துபேர் உடல்சிதறி செத்தனர்.
எனது தாய் தங்கை உட்பட உறவினர்கள் ஆறேழுபேர் காயமடைந்தார்கள். சம்பவமறிந்து நான் வலைஞர் மடத்திற்கு ஓடோடிச் சென்றபோது சன்னங்களும் எறிகணைகளும் என்னுயிரை குடிக்கவும் துரத்தின. எனினும் எப்படியோ உயிர்பிழைத்து நான் அங்கு சென்றபோது எஞ்சிய சிலர் மட்டுமே பிணங்களின் முன்னால் கிடந்து கதறினார்கள்.
மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டவர்கள் இரண்டு பிணங்களோடு அதே வாகனத்தில் திருப்பி கொண்டுவரப்பட்டார்கள். இறந்தவர்களை புதைக்கும் அலுவல்களை உடனடியாக பார்த்தோம். என் அம்மாவுக்கு தலையிலும் முதுகிலும் ஐந்தாறு காயங்கள். இறந்தவர்களின் உடலங்களை பொலித்தீன் பைகளில் முடிச்சுகளாகக் கட்டி அப்புறப்படுத்திய கையோடு நான் உடனடியாக என் தாயாரை ஏற்றிக்கொண்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு சென்றேன். ஏனையவர்கள் முள்ளிவாய்க்காலில் இருந்த உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டார்கள்.
அந்த நாட்களில் மாத்தளனில் இயங்கிய மருத்துவமனை ஊடாக காயமடைந்தவர்கள் கப்பலில் அனுப்பப்பட்டார்கள். எனினும் கப்பலுக்கு பதிவது என்பது சாதாரணமான விடயமாக இருக்கவில்லை. அதுவே பெரும் போராட்டமானது. மூச்சுவிடவே திண்டாடிக்கொண்டிருக்கும் தாயாருக்கு பயண அனுமதி எடுக்க இரவும் பகலுமாக நான் அங்கேயே அலைந்துகொண்டு திரிந்தேன். பெற்றுவளர்த்த என் தாயாரை அந்தநிலையில் தன்னந்தனியே அனுப்புவதில் இருந்த துயரத்தை என்னால் தாங்க முடியவில்லை.
வயது கட்டுப்பாடு என்று தங்கை பயணத்துக்கான அனுமதி மறுக்கப்பட்டாள். அவளும் காயப்பட்டவள் என்பதால், ஏற்கெனவே எனது குடும்பத்தில் பலர் இறந்துவிட்டார்கள் என்பதால், அல்லது நான் போராளி என்பதால், அல்லது அவள் ஒரு மாவீரனுடைய தங்கை என்பதால் அனுமதித்து இருக்கலாமே என்று உறவுகள் என்னிடம் சண்டையிட்டார்கள். அந்தச் சூழ்நிலையில் நானும் ஒரு கையாலாகதவளைப் போலவே நின்றேன். ஏனெனில் எனது தங்கையைவிடவும் எனது குடும்பத்தைவிடவும் பாதிக்கப்பட்ட எத்தனையோபேர் பயணத்துக்காக காத்துக்கிடந்தார்கள்.
கையில் ஒரு ஒற்றை சொப்பிங் பையும் ஆயிரம்ரூபா பணமுமாக அம்மாவை கடற்கரைக்குச்செல்லும் மருத்துவமனை வாகனத்தில் ஏற்றிவிட்டோம். அம்மாவை அனுப்பிவிட்டு நான் வீட்டுக்கு வந்தபோது பிய்ந்து கந்தலாகிப்போன தறப்பாள் கொட்டிலோரம் குந்திக்கொண்டிருந்த தந்தைக்கு தலைதடவி ஆறுதல் சொல்ல என்னிடம் எந்த வார்த்தைகளுமே இருக்கவில்லை. ஏனெனில் அவர் தன் மகளின் குடும்பம் உடல்சிதறி கிடந்த காட்சியை நேரே பார்த்தவர். என்னைப்போல் நிறைய பிணங்களை அவர் இதற்குமுன் கண்டவரில்லை. கூழாகிப்போன உடலையும் தனித்தனியே சிதறிக்கிடந்த உடலின் பாகங்களையும் பொறுக்கிப்போட்ட காட்சிகளை கண்டதால் சுயநிலையை இழந்தவரைப்போல இருந்தார். அவரது கண்களில் இருந்து கண்ணீர் இடைவிடாமல் வழிந்துகொண்டிருந்தது. என் மனவேதனையை அவரிடம் பகிர்ந்துகொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. பிய்ந்த குடிசைக்குள் நுழைந்தேன்.

அம்மா பணப்பையாக பாவித்த பழைய வெற்றிலைப்பெட்டியை தேடினேன். மருத்துவமனையில் வைத்து அம்மா என்னிடம் சொன்னார் ‘வெத்திலப் பெட்டிக்க சில்லறை இருக்கு. அதை செலவுக்கு எடுத்துக்கொள்’ என்று. வெற்றிலை, பாக்கு கிடைக்காத காரணத்தால் காசுப்பெட்டியான அந்த சிறிய பெட்டி, தடித்த சில்வரால் ஆனது. 1985 ஆம் ஆண்டின் இடப்பெயர்வில் இந்தியாவின் அகதிமுகாமில் இருந்தபோது வாங்கிய பெட்டி அது. அதனை மட்டுமே அந்தக்கால நினைவுப்பொருளைப்போல அம்மாவாலும் போகுமிடமெல்லாம் கொண்டுபோக முடிந்தது.
கிழித்தெறியப்பட்ட தறப்பாள் துகள்களால் மூடப்பட்ட நிலையில் மூலையில்கிடந்த பெட்டியை எடுத்து திறந்தேன். உள்ளே இரண்டு இரும்புத்துண்டுகளும் இரண்டு ஐந்நூறு ரூபா என அடையாளம் காணக்கூடிய பணத்தும்பும் கந்தலாகிய சில பத்திருபது ரூபாக்களும் நெளிந்துபோன சில ஐந்து ரூபா குற்றிகளும் கிடந்தன. பெட்டியை துழைத்து உள்நுழைந்த சிதறுதுண்டுகள் இரண்டும்தான் அந்த பணத்தை கடைந்து விட்டிருந்தன.
தூசும் துகளுமாகக் கிடந்த பைகளை திறந்து சில பொருட்களை சேகரித்தேன். அம்மாவின் சேலையொன்று தங்கையின் உடையொன்று தவிர ஏனைய அனைத்து உடைகளும் தும்புதுகள்களாக கிடந்தன. எந்தப்பையும் உபயோகிக்கக்கூடிய நிலையில் இருக்கவில்லை. அம்மா அடுப்பிலே ஏற்றிய சோற்றுலை சரிந்துகிடந்தது. சில விறகுகளும் சிறிதளவு உணவுப் பொருட்களும் கிடந்தன. அவற்றையெல்லாம் தூக்கி பக்கத்துவீட்டு குடிசையில் வைத்தேன்.
வலைஞர்மடத்தில் சேலைகளில் தைத்து அடுக்கிய மண்ணணைகளுக்கு இடையே இயங்கிய தொலைபேசியில் காத்துக்கிடந்து அக்கா வீட்டுக்கு தொடர்பெடுத்தேன். என் மூத்த சகோதரியான அவர் வவுனியாவில் வாழ்ந்தார். அவரிடம் விபரம் சொன்னேன். இனி அம்மாவை அவர் தேடிப்பிடித்து கூட்டிச்செல்லவேண்டும். அறிவித்துவிட்ட நிம்மதியுடன் வீடு திரும்பினேன். இதற்குள் ஆனந்தபுரத்தை படையினர் கைப்பற்றிவிட்டனர் என்ற செய்தி வந்தது. அச்செய்தி எல்லோர் மனதிலும் நெருப்பை அள்ளிக்கொட்டியது. காரணம் இனியும் இடம்பெயர்ந்து செல்ல போக்கிடமே இருக்கவில்லை. இனியும் உயிர் பிழைப்பதென்றால் அது தெய்வச்செயல்தான்.
எனக்கு தலைவலிக்குமேல் தலைவலியானது. ஏனெனில் ஆனந்தபுரத்தில் போராளிகள் இல்லை என்றால் மாத்தளனில் மக்கள் இருக்க முடியாது. உடனே அப்பாவையும் அனுப்பிவிட வேண்டும் என்று தீர்மானித்தேன். தங்கை எப்படியும் சமாளித்துக்கொள்ளட்டும். தங்கைக்கும் காயம் ஆறவில்லை. வயோதிபத் தந்தையையும் கூட்டிக்கொண்டு எங்கலைவாள். அதனால் வயோதிபர் இல்லத்தை நாடினேன். தந்தையை அவர்களிடம் ஒப்படைத்தேன். ஒருவாரகால நாளாந்த அலைச்சலின்பின் அவரது பெயரும் பயணத்துக்கான அனுமதி பெற்றது. அடுத்த வாரத்தில் அப்பாவும் கப்பலில் ஏறினார். எங்கள் குடும்பத்தின் தொடர்பிலிருந்து அவர் காணாமல் போனார். மாத்தளன் பகுதி படையினர் வசமானபோது வலைஞர் மடத்திலிருந்த மக்களும் இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு ஓடினர்.
முள்ளிவாய்க்கால் தொடக்கம் வட்டுவாகல் வரையான மிகக்குருகிய பகுதிக்குள் இலட்சக்கணக்கான மக்கள் குழுமினார்கள். காடு கரம்பைகளெல்லாம் காணாமல்போய் தறப்பாள் காடுகளே முழு இடத்தையும் நிறைத்தன. இயற்கை உபாதைகளை கழிக்கக்கூட இடமற்றுப்போனது. பிணங்களை கடலில் வீசிவிடக்கூட முடியாத நிலை. மக்கள் கையிருப்பு எல்லாவற்றையும் இழந்தார்கள். பலரிடம் எதுவுமே இருக்கவில்லை. விளைவு, பலர் பட்டினியால் மாண்டனர். வயிறுவற்றி செத்த பிணங்களைகூட தூக்கிப்போட சக்தியற்ற உறவுகள் அவற்றை தெருவோரங்களிலேயே விட்விட்டுச் சென்றனர்.
பயணம் தொடரும்……………..
ஆனதி
 நன்றி ஈழம்5 இணையம்
இதையும் கேளுங்கள்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை