வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Wednesday, January 4, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-2


து ஒரு முள்வேலி முகாம். கவச வாகனங்களும் ஹெலிகாப்டர்களும் முகாமைச் சுற்றி, வானத்திலும் பூமியிலும் வளையமிட்டு உறுமிக்கொண்டு இருக்கின்றன. காட்டு மரம், செடி, கொடிகளின் நிறங்கள், இந்த இயந்திர உறுமல்களின் உடலில் வரையப்பட்டுள்ளன. அச்சமும் அதிர்ச்சியும் தரக் கூடிய, இன்றையஉலகில் பெரும் எண்ணிக்கையிலான மக்களை அடைத்துவைக்கும் கொட்டிலான மெனிக்ஃபார்ம் இவ்வாறாகத்தான் தோற்றம் தருகிறது. என்னதான் இலங்கைஅரசு மூடி மறைத்துவைக்க முயற்சி செய்தாலும், இது இன அழிப்பை மறைவிடத் தந்திரமாகக்கொண்ட சித்ரவதை முகாம் என்பதை இன்று உலகம் அறியும்.

அடர்ந்த காடு ஒன்றின்மையப் பகுதியைத்தான் தேர்வு செய்து இருக்கிறார்கள். மரங்கள் வெட்டப் பட்டு,  அவசர கதியில் அமைக்கப் பட்டமுகாம். இலங்கைத் தீவின் வடக்குப் பகுதியில், தலைநகர் கொழும்பில் இருந்து 250 கி.மீ. தூரம்… வவுனியாவில் இருந்து 35 கி.மீ. தொலைவு. மொத்தம் 13 பகுதிகளில் முகாம்கள் அமைத்து, முள்ளி வாய்க்கால் பேரழிவில் சிக்கிச் சிதைந்த மக்களுக்கு, இடைக் காலத்தில் தங்கும் வசதியை உருவாக்கித் தர வேண்டும் என்று, ஐக்கிய நாடுகள் சபையின்அகதி கள் மற்றும் மறுவாழ்வுத் துறை வழிகாட்டி இருந்தது. ஆனால், இலங்கை அரசு, தந்திரமாக 5 முகாம்களை மட்டுமே அமைத்தது. இதுவும் இன அழிப்புக்கான மிக மோசமான தந்திரம்!
முகாமின் பரப்பளவு 0.8 சதுர கி.மீ. யாழ்ப்பாணத்தில், ஒரு சதுர கி.மீ-க்கு 2,000 மக்கள் வசிக் கிறார்கள். மக்கள் நெருக்கம் மிகுந்த தலைநகர் கொழும்பில், சராசரி யாக ஒவ்வொரு கி.மீ-க்கும் 14,000  மக்கள் வசிக்கிறார்கள். ஆனால், ஒரு கி.மீ-க்கும் குறைவான பரப்பளவைக்கொண்ட மெனிக் ஃபார்ம் முகாமில் 2,84,000 மக்கள் அடைத்துவைக்கப்பட்டு உள்ள னர். இது சர்வதேச விதிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கும் பாசிச நடைமுறை.
முகாமின் ஐந்து பகுதிகளும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பற்று இருக்கின்றன. ஒவ்வொன்றுக்கும் தனித் தனியான முள்வேலி அடுக்குகள். ராணுவ வீரர்களின் 24 மணி நேரக் கண்காணிப்பு. நவீனத் தொழில்நுட்பங்கள் அனைத்தும்கொண்டு, உருவாக்கப்பட்டு இருக்கிறது. யாரும் தப்பித்துவிடக் கூடாது என்பதைவிட, நடப்பது எதுவுமே வெளி உலகுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் அமைக்கப்பட்ட முகாம் கள். தங்கும் கூடாரங்களைப் பொறுத்தவரை, மாட்டுக் கொட்டில்களைப்போன்ற, மனிதக் கொட்டடிகள் என்றே கூற வேண்டும். குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, குளியல் அறை வசதி, தொற்றுநோய்கள் பரவாமல் இருக்கும் சுற்றுப்புறச் சுகாதார வசதி என்று சகல மனித உரிமைகளும் மறுக்கப்பட்ட முகாம்கள்.
போர் நடந்த பெருந் துயரை மார்பில் சுமந்த பெண்ணின் மனத் துயர் ஆழத்தை, இதுவரை யாருமே கண்டு அறிந்தது இல்லை. இதிகாசங்களி லும் காப்பியங்களிலும் தேங்கி நின்று, இவை இன்று வரை நம்மை அதிர வைத்துக்கொண்டு இருக்கி றது. கணவனை இழந்த மகளிரின் விரக்தி, பெரும் மூச்சால் வெந்து வெந்து தணியும் வெப்ப மண்டல மாகிக்கொண்டு இருக்கி றது மெனிக்ஃபார்ம் சித்ர வதை முகாம். இன்று போர் நடந்துமுடிந்து உள்ள இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மட்டும், 1,20,000 இளம் தமிழ் விதவைகள் இருப்பதாகக் கூறப்படுகி றது. இதில் உடல் ஊனமுற்றவர்கள் 30,000 பேர்.
பெண் ஒருத்தியின் கதை ஒன்று நம்மை வந்து அடைகிறது. வானில் இருந்து விழுந் தும் பூமியில் இருந்து வெடித்தும் சிதறிய குண்டுகள் எழுப்பிய புகைப் போர்வையில் அவள் கணவன் காணாமல் போய்விட்டான். கையில் மிச்சமாகக் குழந்தை மட்டும்தான் இருக்கிறது.  ஓர் ஆண் குழந்தை. உயிர் பிழைக்க, பெருங்கூட்டம் ஒன்று ஓடிக்கொண்டு இருக்கிறது. கூட்டத்தோடு கூட்டமாக நகர்கிறாள். சிதறிய உடல்கள், உயிர் பிரிந் தும் பிரியாமலும் அரற்றிக்கிடக்கும் அவலங்கள் என்று அவள் காலடி எடுத்து வைத்த இடங்களில் கண்ட கொடுங்காட்சி களால், அவளுக்கு எந்தவிதமான பதற்றமும் ஏற்படவில்லை. அவளது உணர்வுகள் அனைத்தும் மரத்துப்போய்விட்டன. தோளில் குழந்தையைச் சுமந்துகொண்டு, கைப்பை ஒன்றுடன், ஓர் இயந்திரத்தைப் போல அவள் நடக்கத்தொடங்கிவிடுகிறாள்.
முள்ளி வாய்க்காலில் இருந்து 8 கி.மீ. நடந்திருக்க வேண்டும். அங்குதான் ராணுவத் தின் சோதனைக் கூடம். அருவருப்பு மிகுந்த பரிசோதனை. பெண் பிள்ளைகள் அவமானத் தால், கூசிக் குறுகிப் போய்விடுகிறார்கள். அவள் பஸ் ஒன்றில் ராணுவத்தால் ஏற்றி அனுப்பிவைக்கப்படுகிறாள். மெனிக் ஃபார்ம் முகாம், அங்கு இருந்து 120 கி.மீ. தூரத்தில் உள்ளது. முகாம் வந்து சேருகி றாள். குழந்தையை அணைத்த படி முகாமைச் சுற்றி அவளது கண்கள் வட்டமிட்டுப் பார்க் கின்றன. வட்ட வட்டமாகச் சுற்றப்பட்ட முள் கம்பிகள், மாலை நேர வெயில் பளிச் சிட்டு மின்னுகின்றன. குத்திக் கிழிப்பதைப்போன்ற அதன் முள் கம்பிகள், அவளது உடலை நடுங்கவைத்துவிடுகிறது. இயந்திரத் துப்பாக்கிகளைக் கையில்வைத்து உள்ள ராணுவக்காரர்கள்,அவளது கண்களுக்கு முள் கம்பிகளைவிட குரூர மாகத் தெரிகிறார்கள். ராணுவக்காரன் ஒருவனின் வெறி மிகுந்த பார்வையில் அவளது உடல் நடுக்கம் மேலும் கூடுதல் ஆகிறது.
கூடாரங்கள் ஒவ்வொன்றிலும் 10 அல்லது 12 பேர் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். முதல் மூன்று நாட்கள் குடிப்ப தற்குத் தண்ணீர் மட்டுமே முகாமில்கிடைத் தது. குழந்தை மட்டும்தான் அவளுக்கான ஒரே ஊக்க சக்தி. அதன் உயிரை அவள் எப்படியும் காப்பாற்றி ஆக வேண்டும். உயிரைப் பாதுகாத்து வருவதைப்போலவே கைப் பையையும் பாதுகாத்து வருகிறாள். அதில்தான், குழந்தைக்கான பால் பவுடர் மாவு பத்திரப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. பால் பவுடர் மாவை, கொஞ்சமாக எடுத்துக் கரைத்து குழந்தையின் பசிக்கு ஊட்டுகிறாள். கவனமாக மீண்டும் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொள்கிறாள். தன்னுடைய உணவைப்பற்றி அவள் அக்கறைகொள்வது இல்லை. மூன்று நாட்களுக்குப் பின், உணவுப் பொட்டலங்கள் முகாமில் கொடுக்கப்படுகின்றன. நெடுநாள் பட்டினியால் வாடிய மக்கள், முதல் உணவுப் பொட்டலத்தைப் பார்த்த உடன், முட்டி மோதிக் கூட்டமாக ஓடிக்கொண்டு இருக்கிறார்கள்.
லாரியில் இருந்து உணவுப் பொட்டலங்களை சிங்கள சிப்பாய் ஒருவன் வீசிஎறிந்து கொண்டு இருக்கிறான். முகாம்வாசிகள் முயற்சிசெய்து கைகளால் பிடித்துக்கொள் கிறார்கள். சிலர் முகத்தில் மோதி, பொட்டலம் கிழிந்து, சோற்றுப் பருக்கைகள் சிதறி மண்ணில் விழுகின்றன. முகத்தில் ஒட்டிய சோற்றுப் பருக்கைகளைத் துடைத்துக்கொள்ளும்போது, அவமானத்தால் சம்பந்தப்பட்டவரின் முகம் சிவந்துவிடுகிறது.
பொட்டலத்தை வீசிய சிப்பாய் ஓரக் கண்ணால் பார்த்து, ஏளனத்துடன்ரசித்துக் கொள்கிறான். ஒரு பிணம் தின்னிக் கழுகைப் போல, இந்த அவமானம் கொத்திக் கிளற, இதைத் தூரத்தில் இருந்து கவனித்த முகாம் வாசிகளில் ஒருவர், ‘இந்தக் கொடுமைகளை நேரில் பார்ப்பதைவிட, முள்ளி வாய்க்கால் அக்னியில் சாம்பலாகி இருக்கக் கூடாதா?’ என்று வேதனைப்பட்டுக்கொள்கிறார்.
அந்தப் பெண் அனைத்தையும் எதிர்கொண்டாள். இயல்பாகவே அவளிடம் அமைந்த மன உறுதி அவளை அத்தனை இக்கட்டுகளிலும் பாதுகாத்து வந்தது. இந்த முகாம் வாழ்க்கைக்கு அவள் தன்னைப் பழக்கிக்கொண்டு இருந்த நேரத்தில்தான், அந்தப் பெரும் வேதனை அவளுக்கு நேர்ந்தது.
அந்தப் பெண்ணின் கைக்குழந்தைக்குக் கடுமையான வயிற்றுப்போக்கு. குழந்தை வாடித் துவண்டுபோனான். கடந்த ஒன்பது மாதங்களாக, சத்தான உணவு எதுவும் குழந்தைக்கு அவளால் கொடுக்க முடிய வில்லை. குழந்தை, எலும்பும் தோலுமாகத் தான் இருந்தான். நைந்த உடலால் வயிற்றுப்போக்கை எதிர்கொள்ள முடியவில்லை. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லலாம் என்று முயற்சி செய்து பார்த்தாள். மருத்துவ மனையில் எந்தப் பயனும் கிடைக்காது என்று முகாம் வாசிகள் கூறியது அவளுக் குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துவிட்டது. உண்மையில் சொல்லப்போனால், அங்கு உள்ள மருத்துவமனைகள் மருத்துவமனை களாகவே இல்லை.
கருணையையும் ஆறுதலையும் வழங்க வேண்டிய அவை, மனிதவதைக் கூடங்களாகவே செயல்பட்டன. ராணுவத்தின் கொடுமைகளைவிட, இங்கு நடைபெறும் கொடுமைகள் மக்கள் உணர்வுகளை வெகு வாகப் பாதித்து, மனதில் ரத்தக் கசிவை ஏற்படுத்தின.
முகாமின் பெருங்கூட்டத்தை மருத்துவமனை ஊழியர்களால் சமாளிக்க முடியவில்லை என்றாலும், முகாம்வாசிகளின் வேதனை எல்லாம், தாங்கள் இத்தனை கேவலமாக நடத்தப்படுகிறோமே என்பதில் இருந்தது. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் என்று தரம் பிரித்துப் பார்த்து, ஆறுதல் அளிக்கும் மனிதநேயக்கண்ணோட் டம் மருத்துவமனைகளில் இல்லை.
தமிழ் மக்கள் அனைவருமே பயங்கர வாதிகள். பயங்கரவாதிகளுக்கு மரணம்தான் தண்டனை என்றும் அதை நிறைவேற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டார்கள். ராணுவத்தினர் தங்கள் தோள்களில் இயந்திரத் துப்பாக்கிகளைச் சுமந்து திரிந்தைப்போலவே மருத் துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள் என்று அனைவரின் மனங்களும், தனித்தனியாக ஓர் இயந்திரத் துப்பாக்கியைச் சுமந்து திரிந்துகொண்டு இருந்தன. அவர்களிடம் அமைந்த இன வெறுப்பின் ஆழம் எத்தகையது என்பதை மகப்பேறு பகுதிகளுக்குச் சென்றால் எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
மரண பயமும் அச்சமும் நிறைந்த மெனிக் ஃபார்ம் முகாமில் குறிப்பிடத்தக்க மற்றொன்றும் நிகழ்ந்துகொண்டு இருந்தது. இதற்காக அந்த மக்கள், மகிழ்ச்சி அடைந்தார்களா? அல்லது வேதனைப்பட்டார்களா? என்பது நமக்குத் தெரியவில்லை.
இங்கு மாதம் ஒன்றுக்கு 400 குழந்தைகள் பிறந்தன. பிரசவம் மறுபிறப்புக்கு ஒப்பாகக் கூறப்படுகிறது. குழந்தை ஒன்றைப் பெற்று எடுக்கும்போது, எந்த ஒரு பெண்ணுக்கும் தாயின் அரவணைப்பு தேவைப்படுகிறது. செவிலியரின் ஆறுதல் மொழி, சில நேரங் களில் இந்தத் தாய்ப் பாசத்துக்கு ஈடாக அமைந்துவிடுகிறது. ஆனால், முகாம் மருத் துவமனைகள் முற்றிலும் மாறுபட்டவை.
பிரசவம் ஒருபுறம், மறுபுறத்தில் இறுகிய முகத்துடன் வெறுப்பை உமிழ்ந்து கொண்டே புரியாத மொழியில் வேண்டா வெறுப்புடன் மகப்பேறு செய்தலை, பிரசவ வலியால் துடிக்கும் எந்தத் தாயாலும் பொறுத்துக்கொள்ள முடியாது. தன்னை அநாதையாக்கிவிட்ட, ஆறுதல் அற்ற உலகில் வக்கான மருந்துகளும் மருத்துவ உதவிகளும் இல்லாமல், அந்தத் தமிழ்ப் பெண்கள் தங்கள் குழந்தைகளைப் பெற்று எடுக்கும் போராட்டத்தை நடத்திப் பார்க்கிறார்கள். அனைத்து வேதனைகளை யும் ஓர் அழுகுரலுக்காகப் பொறுத்துக்கொள்கிறார்கள். இதைத் தவிர, அவர் களுக்கு எதிர்கால ஆறுதல் வேறு என்ன இருக்க முடியும்?
குழந்தையின் வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. அந்த இளம் பெண்ணால் என்ன செய்ய முடியும்? எத்தனையோ வேதனைகளைச் சந்தித்துவிட்ட அவளால், இந்த வேதனையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எப்படியும் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிவிட முடிவு எடுக்கிறாள். ராணுவத்திடம் கெஞ்சிக் கதறி அவர்களின் உதவியைப் பெற்றுவிட முயற்சி  செய்கிறாள். ராணுவ அதிகாரி ஒருவர் ஆலோசனையும் வழங்கினார்.
குழந்தையை ராணுவத்திடம் ஒப்படைத் தால், மருத்துவச் சிகிச்சை அளித்து மீண்டும் குழந்தையை அவளிடமே ஒப்படைத்துவிடுகிறோம் என்பதுதான் அந்த ஆலோசனை. இதனை ஏற்றுக்கொள்ளலாமா என்று யோசித்துக்கொண்டு இருந்தபோது கிடைத்த மற்றொரு தகவல், அவளைப் பெரிதும் திடுக்கிட வைத்துவிட்டது. அச்ச உணர்வு அவள் உடல் முழுவதும் பரவிக்கொண்டது!
- விதைப்போம்…
ஆக்கம்: சி.மகேந்திரன்
ஓவியங்கள்: ராஜ்குமார் ஸ்தபதி
ஆனந்த விகடன்

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை