வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, January 26, 2012

இறுதி நாட்களும் எனது பயணமும் - 3

மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா!
 

இப்போதல்லாம் மாண்டவர்களுக்காக அழுவதற்கு எவரும் தயாரில்லை. சாவு வந்தால் வரட்டும் என்று சும்மா இருந்தார்கள்… எல்லாத்தறப்பாள்களின் கீழேயும் பதுங்கு குழிகள் வெட்டப்பட்டிருந்தன. ஆயிரம் நூறாயிறமாய் காப்பகழிகள் நிலமெல்லாம் முளைத்தன. எல்லாக் குழிகளிலுமே தம் வாழ்வைத் தொலைத்த, உறவுகளை இழந்த
மனிதர்கள், பசித்த வயிறுகளோடும் புளுங்கிய மனங்களோடும் குந்திக் கொண்டிருந்தார்கள். பாலிலும் தயிரிலுமாக வாழ்ந்த எத்தனையோ பேர் கஞ்சிக்குக் கூட வழியற்றுக் கிடப்பதை பார்க்கும் போது வேதனையாக இருந்தது.
குழந்தைகள் பசியால் மயங்கி விழுந்தனர். அதை ஒரளவாவது தாங்கும் திட்டமாக சந்திகளில் கஞ்சிக்கொட்டில்கள் முளைத்தன. போராளிகளேதான் அந்த கஞ்சிக் கொட்டில்களை நடத்தினார்கள்.
இப்போதைக்கு பட்டினிச்சாவை தடுத்தால் போதும் என்று நினைத்தார்கள். தமிழர் புனர்வாழ்வுக் கழகம், பெண்கள் புனர்வாழ்வு நிறுவனம், அரசியல்துறை போன்றவற்றால் இயக்கப்பட்ட கஞ்சிக் கொட்டில்கள் போதவில்லை என்று படையணிப் போராளிகள் கூட தத்தமது இருப்பிலிருந்த அரிசியில் கஞ்சிகாய்ச்சி ஊற்றினார்கள். மூன்று வேளையும் கஞ்சி வழங்கப்பட்டது.
வரிசையில் நின்று பாத்திரங்களில் கஞ்சி வாங்கிக்குடித்த மக்களைப் பார்த்து, எங்கள் மக்களுக்கா இந்தநிலை என்று  நெஞ்சம் கொதிக்க போராடிய போராளிகளில் சிலர் படையினருடன் உக்கிரமாகப் போரிட்டு மாண்டனர்.
மரணம் கூட அழைக்க மறுத்தவர்கள் கண்ணீரில் கரைந்தனர். மாலை நேரங்களில் குழைத்த மா உருண்டை ஒன்றும் ஒரு குவளை பாலும் சிறுவர்களுக்காக வழங்கப்பட்டது. கஞ்சி கொட்டில்களில் அதற்காக குவிந்தது சிறுவர் பட்டாளம்.
வரிசை வரிசையாக நின்ற சிறுவர்கள் தத்தம் குடும்ப அட்டைகளை காட்டி அவற்றை பெற்றுக்கொண்டார்கள். அரசியல்துறை பெண்கள் பிரிவினர் வாய்ப்பன் தயாரித்து கொடுக்கும் நடைமுறையை கொண்டு வந்தனர்.
வெறும் கோதுமை மாவை பிசைந்து எண்ணெயில் பொரித்தெடுக்கப்பட்ட வாய்ப்பனுக்கு ஏகமாய் வரவேற்பு இருந்தது. அவை பசியை ஓரளவு கட்டுப்படுத்த கூடியன. மாவும் எண்ணெயும் கொடுத்து, இவ்வளவிலும் இத்தனை வாய்ப்பன்கள் செய்யவேண்டும். அத்தனையையும் இந்த விலையில் மட்டும்தான் விற்கவேண்டும். அதன் வருமானம் மட்டும்தான் உங்களுக்கான கூலி. இந்தாருங்கள் மாவும் எண்ணெயும். சட்டியும் விறகும் நீங்கள் கொண்டுவந்து சுட்டுவிட்டு, விற்பவரிடம் கொடுத்துவிட்டு உங்கள் கூலியை பெற்றுக்கொண்டு போங்கள், என்று சில பெண்களிடம் பொறுப்பை கொடுத்தார்கள்.
வாய்ப்பன் தயாரிப்பதும் போசாக்கு அளிப்பதுமான இந்த செயற்பாடு நடைமுறைக்கு வந்து வாரம் ஒன்றுகூட ஆகவில்லை. இருந்த இடங்கள் எல்லாம் பற்றிக்கொண்டு எரிந்தன. இரவுபகல் என்றில்லாத எறிகணைவீச்சில் கொத்துக்கொத்தாய் குலை குலையாய் உயிர்கள் உருவப்பட்டன.
பிணங்கள் குவிந்தன. மரணதேவன் தன் கொடூர வலையை அடிக்கடி வீசினான். பலநூறு தடவைகள் வீசிவீசி கிழிந்துபோன அந்த மரண வலையின் கிழிசல்களின் ஊடாக பல்லாயிரம் பேர் உயிர்தப்பி ஓடிவர பல்லாயிரம்போர் மூச்சு திணறியோ உடல் சிதறியோ இதயம் வெடித்தோ செத்துப்போயினர்.
எரிக்கவோ புதைக்கவோ ஆட்களின்றி பிணங்கள் ஆங்காங்கே வாய்பிளந்து கிடந்தன. தூக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியாதளவு காயமடைந்தவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாய் கிடந்து துடித்துச் செத்தார்கள்.
மரணம் மனிதர்களை பலவந்தப்படுத்தி இழுத்துக்கொண்டிருந்தது. தமது எல்லாக் குழந்தைகளும் செத்துவிட எஞ்சிய கணவனும் மனைவியும், பெற்றோர் இறந்துவிட மிஞ்சிய பிள்ளைகளும், கணவனை இழந்த மனைவியும் துணைவியை இழந்த துணைவனும், தாய்மாரை இழந்த ஒருமாத, ஒரு வார குழந்தையும் என எங்கும் அவலம். மனித பேரவலம். நடைப்பிணமான வாழ்க்கையின் துயரப்பயணம் மட்டும் முடிந்ததாய் தெரியவில்லை.
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் பெரும் சவால்களுக்கு மத்தியில் கப்பலை முள்ளிவாய்க்கால் கடற்கரைக்கு கொண்டு வந்தார்கள். ‘அந்த கப்பலில் பயணமா?’ என்றுதான் எவ்வளவு அஞ்சவேண்டி இருந்தது.
ஏனெனில் ஆரம்பத்தில் தனியே வந்த கப்பல்கள் இப்போது சுற்றிவர சிறிலங்கா கடற்படையின் டோறா படகுகளோடு நின்றது. கடற்படையினரும் படகுகளில் வந்து கனோன்வகை ஆயுதங்களால் ஊருக்குள் ஆபத்தை விளைவிப்பதுண்டு.
காதுக்குருத்துகளை கிழித்தெறியவல்ல கணீர் என்ற சத்தத்துடன் வந்து ஊரை கருக்கும் கனோன் அடியின் ஒலியில் இதயங்கள் உறைந்துவிடும். அதை நினைத்தாலே நெஞ்சம் படபடக்கும். அந்த ஒலியும் அதனால் ஏற்படும் படுகாயங்களும் அச்சத்தை உண்டுபண்ணக்கூடியன. காயத்தை ஏற்படுத்தும் சிதறுதுண்கள் மிகுந்த எரிவை ஏற்படுத்துவதோடு குருதியில் நச்சுத்தன்மையையும் பரப்பக்கூடியன.
ஈவிரக்கமின்றி மக்களின் உயிர்பறிக்கும் கனோன் அடிக்கும் கடற்படையின் டோறாக்கள் கப்பலின் பாதுகாப்பில் எங்கள் கரையருகே வந்துநின்றன. சனங்கள் பாதுகாப்பு அரண்களுக்குள் பதுங்கிக்கொண்டார்கள். வீதிகள் வெறிச்சோடின. நீண்டநேரம் மருத்துவமனைக்குரிய எல்லாச் செயற்பாடும் ஸ்தம்பிதமாகிவிட்டன. டோறாக்கள் தரையிறங்கிவிடுமோ என்ற அச்சம் கேள்வியாகிக் குடைந்தது.
பின்பு வாகனங்களில் நோயாளிகள் ஏற்றப்பட்டார்கள். அவர்களும் பயந்துகொண்டேதான் சென்றார்கள்.
அன்றைய நாட்களில் கப்பலால் செல்வதற்காக மக்கள் துடியாய் துடித்தார்கள். நான் நீ என்று போட்டிபோட்டுக்கொண்டு நிற்பவர்களில் எவரை அனுமதிப்பது எவரை தவிர்ப்பது என்ற திண்டாட்டம் மருத்துவர்களுக்கு இருந்தது. காயப்பட்டவர்கள் மட்டும்தான் கப்பலில் செல்லலாம் என்ற கட்டாயம் ஒன்றும் இல்லையே.
காயப்பட போகிறவர்களும் முற்கூட்டியே ஏறிவிட்டால் காயங்களை தவிர்த்துக்கொள்ளலாம் அல்லவா? ஆகவே பயண அனுமதி பெறுவதிலும் ஒரே சண்டையும் சச்சரவுமானது. எப்படியோ எல்லோருமே அந்த பாழும் பிணக்குழியை விட்டு வெளியேறிவிடவே துடித்தார்கள்.
மாறிமாறி வந்த கப்பல்களில் எத்தனை தடவைகள்தான் ஏற்றிச் சென்றாலும் காயமடைந்தவர்கள் நிரம்பி வழிகின்றார்களே தவிர குறைந்தபாடில்லை. வயோதிபர்களும் சிறுவர்களும் கர்ப்பிணிகளும் செல்வதற்கான அனுமதி பெரும்பாலும் கிடைத்தது. மற்றவர்கள்தான் அதிக விசாரிப்புகளின்பின் அனுமதிக்கப்பட்டார்கள்.
கப்பலடி எப்போதுமே பிரியும் உறவுகளால் கதறியது. கப்பலில் ஏறப்போனவர்கள்தான் அதிகமாய் அழுதார்கள். ‘உங்களை பயங்கரத்திற்குள் விட்டுவிட்டு நாங்கள்மட்டும் போகிறோமே’ என்றுதான் கதறினார்கள். மக்களின் கண்ணீர் பெருகி கடலோடு கரைந்தது. கேட்டு முடியாவிட்டால் எவர் காலிலாவது விழுந்து கெஞ்சிக்கூட கப்பலேற அனுமதி கிடைக்காவர்கள் அங்கேயே கிடந்து காயம் புழுத்து அழுகி செத்துப்போனார்கள்.
கொடுக்கும் அனுமதியையும் பயனள்ளதாக கொடுக்கவே மருத்துவர்களும் விரும்பினார்கள். காப்பாற்ற முடியாத பெரும் பாதிப்புகளை உடையவர்களையும் அடுத்த சில மணித்தியாலங்களுக்குள் இறந்து விடக் கூடியவர்களையும் அவர்கள் கப்பலில் ஏற்றவில்லை.
மனிதாபிமானம் பார்த்து சில மருத்துவர்கள் சிலருக்கு சலுகை காட்டினார்கள்தான். எல்லோருக்குமே உதவக்கூடிய வழிகள் எவருக்குமே இருக்கவில்லை. வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசிய வைத்தியர்களையும் பொறுப்பதிகாரிகளையும் சனங்கள் கரித்துக் கொட்டினார்கள்.
சரி எது பிழை எது என்று நீதிநியாயம் கேட்காமல் தத்தமக்கு சரி என பட்டதையே எல்லோரும் செய்தார்கள். அனுமதி வழங்கினாலும்தான் கப்பலில் எத்தனை பேரை ஏற்ற முடியும். நாளுக்கு பத்துக் கப்பல்களா வந்தன. வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ என வரும் கப்பல்களில் இடைவெளியே இல்லாமல்தான் சனத்தை நிரப்பினார்கள். அங்கே எவரும் கெஞ்சி மன்றாடி எல்லாம் அனுமதி பெற்றுவிட முடியாது.
சாவுகளைபார்த்துப் பார்த்து பழகிப்போனாலும் சாப்பயம் மனிதர்களை விரட்டத்தான் செய்தது. முள்ளிவாய்க்கால், வெள்ளை முள்ளிவாய்க்கால், உண்டியல் சந்தியடி பகுதியெங்கும் எறிகணைகள் சரமாரியாய் விழுந்தன.
செய்திகள் பலவிதமாய் வந்தன என்றாலும் எல்லாமே ஒரே தகவலைத்தான் சொல்லின. ‘போராளிகளின் முக்கிய தளபதிகளில் முக்கால்வாசிப்பேரும் ஆனந்தபுரத்தில் மரணமடைந்து விட்டார்களாம் சிலருக்கு நடமாடவே முடியாத காயங்களாம்” என்று. மக்கள் இப்போது கடுமையாக யோசித்தார்கள்.
எல்லாம் ஓய்ந்து விட்ட கதை எல்லோருக்கும் புரிந்தது. மக்கள் சண்டை வரிசைகளை ஊடறுத்துக்கொண்டு தங்கள்மீது எறிகணைகள்வீசும் படையினரிடமே சரணடைந்துவிட துணிந்தார்கள். வேறு வழியெதுவும் இருப்பதாக அவர்களுக்கும் தெரியவில்லை.
சாப்பயம் அவர்களை எதிரியின் கால்களில் விழவைத்தது. மன்னாரிலிருந்து ஓடிஓடி வந்தவர்கள் கூட தம் அர்த்தமற்ற இழப்புகளுக்காக அழுது விட்டு சொப்பிங் பைகளோடு சரணடைய புறப்பட்டு விட்டார்கள். காலதேவனின் கருணையற்ற மாற்றத்தை கண்டு பலர் நெஞ்சம் குமுறினார்கள். மாட்டவே மாட்டன் என்ர குமருகள கூட்டிக்கொண்டு அவங்களிட்ட போக மாட்டன் என்று தாயொருவர் தன் தலையிலடித்துக்கொண்டு கதறியழுதார். அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆறுதல்சொல்லத்தான் முடியவில்லை.
நள்ளிரவு. மணி பன்னிரண்டு. வீதிநிறைய சனக்கூட்டம் இடவலம் புரியாமல் திண்டாடிக் கொண்டிருந்தது. மெல்லிய நிலவு வெளிச்சத்தில் தம் உறவுகளை இனங்கண்டவர்கள் சேர்ந்து கொண்டார்கள். பலரும் தத்தம் உறவுகளை தொலைத்துவிட்டு தேடுபவர்களாகத்தான் இருந்தார்கள். அவலபபட்ட பலர் சந்திகளில் நின்று புலம்பினார்கள். அப்படித்தான் அந்த அம்மாவும் தடுமாறி அலை மோதிக்கொண்டு நின்றார். எனக்கு அவரை பார்க்கப் பார்க்க பரிதாபிமாக இந்தது. அருகில் சென்று அவரது கரம்பிடித்து அழைத்து வந்து எனக்கருகில் அமரவைத்தேன்.
நான் போக மாட்டனம்மா எதிரியிட்ட போக மாட்டன் நான் அனுபவப்பட்டவள் குமருகள் அவனிட்ட பட்டபாடுகள பாத்தவள் என்ர குமருகள் ரெண்டையும் கூட்டிக்கொண்டு நான் அவனுகளிட்ட எப்பிடியம்மா போவன் போக மாட்டன் அப்பிடி இந்த போராட்டம் தோத்தாலும் நான் போகமாட்டன் என்ர பிள்ளைகள இழுத்துக்கொண்டு போய் கடல்ல விழுந்து சாகுவன் சாகுவனம்மா சாகுவன் என்றெல்லாம் கதறும் அந்தத்தாயின் புலம்பலை கேட்க இதயம் வலித்தது.
மணலாறு மண்ணின் வேர் அவள். சுத்த வீரர்களின் சொந்தக்காரி. அவரது தாங்கமுடியாத வேதனை விம்மலாகி கண்ணீராயும் புலம்பலாயும் கொட்டிக்கொண்டிருந்தது. எத்தனை விதமான மனித உணர்வுகள். எல்லோரும் எதையோ நம்புகிறார்கள். இனிமேலும் இங்கே இருக்க முடியாது என்று தெரிந்தும் படையினரிடம் போகமாட்டேன் என்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம்?


 நன்றி ஈழம்5 இணையம்

 உறவுகளே இந்த  பக்கத்தை உங்கள் நண்பர்கள் உறவுகளிடம் கொண்டு சென்று சேருங்கள் (SHARE   ) பகிருங்கள் என்னும் பகுதியை சொடுக்கி நண்பர்கள் அனைவரிடமும் கொண்டு செல்லுங்கள் 


முத்துக்குமார் நினைவு பேரணி - செந்தமிழன் சீமான் அழைப்பு விடுக்கிறார்.

சனவரி 29 அன்று திருசெந்தூரில் நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்தும் வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் நினைவு நாள் பொதுக்கூட்டம்

தமிழ் இனம் ஒன்றிணைந்து தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக போராடவேண்டும் என்பதற்காகத் தன் இன்னுயிரை ஈந்த ஈகி வீரத்தமிழ்மகன் முத்துகுமாரின் நினைவு நாள் பொதுக்கூட்டம். நாம் தமிழர் இளைஞர் பாசறை நடத்துகிறது. அனைவரும் வாரீர்.

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை