வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Sunday, January 8, 2012

கிட்டு மாமா நினைவில் இணைந்திருப்போம்


கிட்டு மாமா. இந்தப் பெயரை உச்சரிக்கும்போது மனதில் பரவும் உணர்வலைகளை விவரிக்கவோ, மகிழ்ச்சி, துக்கம், ஆதங்கம், கோபம், ஆற்றாமை, ஏமாற்றம், இன்னும் என்னென்ன என்று இனம் பிரிக்கவோ இயலவில்லை. அவர் என் வாழ்வில், என் மனதில் பதித்திருக்கும் தடம் அத்தனை ஆழமானது.

அவரை முதன் முதலில் நான் கண்ட போது எனக்கு 7 வயதிருக்கும். தலைவர் பிரபாகரன் மாமா மதுரையில் தங்கியிருந்த போது அவர் எங்கள் வீட்டிற்கு வரும் போதெல்லாம் அவர் பின்னே மற்றுமொரு வரும் வருவார். ஆனால் வீட்டிற்குள் வராமல் வாசலிலேயே நிற்பார். பின்னர் தலைவர் மாமா கிளம்பும் போது அவரும் பின்னேயே செல்வார். அவரை நான் கவனிக்கும் சூழல் ஏற்பட்டதில்லை.
ஆனால் இதை தொடர்ந்து கவனித்து வந்த என் அண்ணன்மாரும், அப்பாவின் உதவியாளரும் பின்னால் வரும் அந்த நபர் ஒருவேளை உளவுத் துறை அல்லது காவல் துறையைச் சேர்ந்தவரோ என்று அய்யப்பட்டனர்.

ஒருநாள் அவரைச் சுற்றிக் கொண்ட இவர்கள் 'யார் நீ? என்று கேட்டனர். ஆளாளுக்கு கேள்வி கேட்க ஒரே சத்தம். சத்தம் கேட்டு முன்னறையில் இருந்த ஆறுமுகம் சித்தப்பா வெளியே வந்தார். அவர் பின்னாலேயே நானும். வெளியே வந்து பார்த்த சித்தப்பா பதட்டப்பட்டு, 'அவரை விடுங்கப்பா. நம்ம பையன்தான்' என்று சொல்ல, அதன் பிறகு அனைவரும் விலகிச் சென்றனர். சித்தப்பா அவரை அழைத்து 'ஏன் தம்பி, வீட்டுக்குள்ள வந்து அமர வேண்டியதுதானே?' என்று கேட்டுக் கொண்டே உள்ளே அழைத்து வந்தார். மிகுந்த கூச்சத்துடன், தயங்கித் தயங்கி சித்தப்பாவின் பின்னே வந்து நாற்காலியின் நுனியில் அமர்ந்த அந்த 'மற்றொருவர்'தான் கிட்டு மாமா.



தலைவருக்குப் பாதுகாப்பாக தலைவர் செல்லுமிடமெல்லாம் அவருக்குப் பின் செல்வது அவர் வழக்கம். அக்காலக்கட்டத்தில் தலைவர், பேபி மாமா தவிர பிறரை அனேகர் அறிய மாட்டார்கள். அவர்களும் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளாமல் யாரோ போல வலம் வருவார்கள். மிக நெருக்கமானவர்கள் மட்டுமே அவர்களை அறிந்திருந்தனர். அப்பா தலைவரையும் மற்றவர்களையும் அழைத்து வந்து மதுரையில் விட்டதோடு சரி. அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் செய்து அவர்களை முழுமையாகப் பராமரித்தது அனைத்தும் ஆறுமுகம் சித்தப்பாதான். சித்தப்பா ரகசியம் காப்பதில் வல்லவர். பல நேரங்களில் அப்பாவுக்கே சித்தப்பா சொல்லிதான் பல விசயங்கள் தெரிய நேரும் என்ற அளவிற்கு தலைவரும் சித்தப்பாவை நம்பி பலவற்றைப் பகிர்ந்து கொள்வதோடு, நம்பி பல உதவிகள், பொறுப்புகளை ஒப்படைப்பார். இதனால் அப்பாவின் உதவியாளருக்கே தெரியாத கிட்டு மாமாவை சித்தப்பா மட்டுமே அறிந்திருந்தார்.

அன்று ஒருநாள் சித்தப்பாவின் வற்புறுத்தலுக்காக உள்ளே வந்து அமர்ந்த கிட்டு மாமா, அதன் பின்னர் வழக்கம் போல வெளியேதான் நின்றார். அக்காலக்கட்டத்தில் அவருடன் பேசவோ பழகவோ எனக்கு வாய்ப்புக் கிட்டவில்லை.

பின்னர் ஒரு காலக்கட்டத்தில் கிட்டு மாமா, புலந்தி அம்மான் உட்பட பலர் பாபநாசத்தில் உள்ள எங்கள் வீட்டில் சிறிது காலம் பாதுகாப்பாக தங்கியிருந்தனர். அவ்வப்போது அப்பா அவர்களைச் சென்று சந்தித்துத் தேவையானதை செய்து விட்டு வருவது வழக்கம். அப்பா அங்கு சென்று வரும் ஒவ்வொரு முறையும் அவர்களைப் பற்றி சுவையான நிகழ்வுகளைச் சொல்வது வழக்கம். அப்படி அப்பா சொன்ன ஒரு வேடிக்கையான நிகழ்வுதான் கிட்டு மாமாவின் பெயரை முதன் முதலில் என் நினைவில் பதிய வைத்தது.

பாபநாசம், பொதிகை மலையடிவாரத்தில், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள ஓர் அழகிய கிராமம். மலையிலிருந்து சமவெளிக்குள் நுழையும் தாமிரபரணி முதலில் கடப்பது எங்கள் வீட்டைத்தான். வீட்டின் பின்புற வாசலைத் திறந்தால் தாமிரபரணி ஆறு. முன் வாசலில் பொதிகை மலை. இப்படி ஓர் அழகிய சூழலில் அமைந்திருந்த அந்த வீட்டில்தான் அவர்கள் தங்கியிருந்தனர். தற்போது பாபநாசமும், அதையொட்டிய பொதிகை மலைப் பகுதியும் 'முண்டந்துறை புலிகள் சரணாலயம்' என்று அரசால் பாதுகாக்கப்படுகிறது என்பது ஓர் நகைமுரண்.

மலையடிவாரம் என்பதால் குரங்குகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதி அது. எங்கள் வீட்டில் தோட்டமும் மாமரங்களும் இருந்தமையால் குரங்குகள் இயல்பாக தோட்டத்தில் நடமாடும். அப்படி ஒரு முறை குரங்குக் கூட்டம் ஒன்று தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது தவறி ஒரு குட்டிக் குரங்கு வீட்டிற்குள் நுழைந்து விட்டது. பிறந்து சில நாட்களே ஆகியிருந்த அந்த குட்டிக் குரங்கை பார்த்து மகிழ்ந்த கிட்டு மாமா அதைத் தன் கையில் எடுத்து அதற்கு உணவளித்து தன்னுடன் வைத்துக் கொண்டார். சற்று நேரம் கழித்து குட்டியைத் தேடிய குரங்குகள் அதை காணாமல் கத்தத் தொடங்கியுள்ளன. கிட்டு மாமா, குரங்குக் குட்டியை விட மனமில்லாமல் வீட்டுக் கதவை தாழிட்டு விட்டு அமர்ந்துவிட்டார். மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் அவர் ஒப்புக் கொள்ளவில்லை. குட்டியின் சத்தம் கேட்டு வீட்டிற்குள்தான் குட்டி உள்ளது என்பதை குரங்குகள் அறிந்து கொண்டன. சற்று நேரத்திற்கெல்லாம் எங்கிருந்துதான் வந்தனவோ .. அந்த பகுதி முழுக்க பெரும் குரங்குக் கூட்டம். பெரும் சத்தம். கதவைத் தட்டவும் வீட்டின் ஓட்டின் மேலேறி குதிக்கவும் தோட்டத்தை நாசமாக்கவும் என குரங்குகள் போராட்டம் நடத்தத் தொடங்கின. இவ்வளவுக்குப் பிறகும் கிட்டு மாமாவுக்கு குரங்குக் குட்டியை விட மனமில்லை. ஆற்றில் குளிக்க வந்தவர்கள் எல்லாம் வந்து சத்தமிட்ட பிறகு, உடனிருந்த பிறரும் கடுமையாகக் கடிந்த பிறகு வேறு வழியின்றி, மனமேயில்லாமல் குரங்குக் குட்டியை வெளியே விட்டிருக்கிறார் கிட்டு மாமா. இந்த நிகழ்வை அப்பா விவரித்த போது நாங்கள் கண்ணீர் வர சிரித்தோம். பின்னாளில் வன்னிக் காடுகளில் இருந்த போது கிட்டு மாமா ஒரு குரங்குக் குட்டியை வளர்த்தார் என்பது அனைவரும் அறிந்த செய்தி. அதன் பின்னணி நிகழ்வு இதுதான்.

அதன் பின்னர் கிட்டு மாமாவும் மற்றவர்களும் ஈழம் திரும்பிவிட்டனர். யாழ் தளபதியாக அவரைப் பற்றிய செய்திகளை அப்பா மூலமாக அறிந்திருக்கிறேன். ஓரளவு விவரம் புரிய தொடங்கிய வயதில் புலிகளின் தளபதிகளின் பெயர்கள் எல்லாம் மனதுக்கு நெருக்கமான பெயர்களாக பதியத் தொடங்கியிருந்தன - அப்பா ஈழம் போய் வந்த படங்களில் பார்த்த அவர்களின் முகங்களும்.

அப்போதுதான் ஒரு நாள் கிட்டு மாமா மீது நடந்த கையெறிக் குண்டு தாக்குதலில் அவர் கால் சிதைந்தது என்ற செய்தி வந்தது. அதிர்ச்சியும் மன வேதனையும் ஏற்பட்டது.

இது நடந்து சில மாதங்களுக்குப் பின் ஒரு விடுமுறைக் காலத்தில் சென்னையில் அப்பாவுடன் தங்கியிருந்தேன். ஒரு நாள் இரவு 7 மணியளவில் அப்பா 'கிளம்பு ஓரிடத்திற்கு போகலாம்' என்றார். எங்கே என்ற கேள்விக்கு புன்னகை மட்டுமே பதிலாக வந்தது. குழப்பத்துடனும் ஆர்வத்துடனும் கிளம்பினேன். பெசன்ட் நகரில் ஓர் வீட்டின் முன் நின்றது நாங்கள் சென்ற வண்டி. உள்ளே சென்றோம். ஓர் இளம் பெண்ணும் சில இளைஞர்களும் எங்களை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். மாடிக்கு அழைத்துச் செல்லப் பட்டோம். நாங்கள் நுழைந்த பெரிய அறையில் கோல்களின் உதவியுடன் அவர் நின்றிருந்தார். விவரம் அறிந்து, யாரென தெரிந்து அன்றுதான் முதன் முதலாக கிட்டு மாமாவை பார்க்கிறேன். பிரமிப்பால், ஆச்சரியத்தால் என் விழிகள் விரிந்தன. 'வாங்க அண்ணா' என்றவர் சிறுமியான என்னையும் மதித்து தலையசைத்துப் புன்னகைத்து வரவேற்றார். அப்பா நெருங்கிச் சென்று அவர் கைப் பற்றி 'நலமா?' என்றார். அவர் சிரித்தார். 'அமருங்கள்' என்றார். அப்பா அமர்ந்து விட்டு என்னையும் பார்த்து 'உட்கார்' என்றார். பிரமிப்பு அகலாமலேயே அப்பாவின் அருகில் சென்று காதில் 'அப்பா, கிட்டு மாமா தானே' என்றேன். அப்பா சிரித்துக் கொண்டே 'ஆமா' என்றார். 'உங்களை பார்க்க வர்றதா சொல்லல அவகிட்ட. அதான் கேட்கிறா' என்றார். அவர் சிரித்துக் கொண்டே 'அப்படியா? என்ன படிக்கிறீங்க' என்றார். எனக்கு எங்கிருந்தோ வெட்கம் வந்து விட்டது. குரலே எழும்பாமல் பதில் சொன்னேன். எங்களை வரவேற்று அழைத்து வந்த இளம் பெண் பக்கம் திரும்பி தலையத்ைதார். அவர் என்னை 'வாருங்கள்' என்று மேல் மாடிக்கு அழைத்துச் சென்றார். அங்கு ஷெட்டில் காக் விளையாடும் வலை கட்டப்பட்டிருந்தது. சிறிது நேரம் விளையாடினோம். பிற அண்ணன்மாரும் வந்து விளையாடினார்கள். விளையாடினார்கள் என்பதை விட சிறுமியான என்னை சீண்டி மகிழ்ந்தார்கள் என்பதே உண்மை. அந்த அக்காதான் எனக்கு ஒரே துணை. மிக மிக மகிழ்ச்சியாக பொழுது கழிந்தது. பின்னர் இரவு உணவு அங்கேயே உண்டோம். 11 மணியளவில் கிளம்பி வீடு வந்தோம். பெரும் குதூகலமாக இருந்தது. அதன் பின்னர் அப்பாவுடன் அடிக்கடி அங்கு செல்வதும், அக்காவுடனும் மற்ற அண்ணன்களுடனும் விளையாடுவதும் நடந்தது. முன்னர் தலைவர் சென்னையில் தங்கியிருந்த போதும் இப்படித்தான் அப்பாவுடன் அவரை காணச் செல்வதும் அப்போது அவருடன் இருந்த ரகு மாமா போன்றவர்களுடன் விளையாடுவதும் நடக்கும். மிக நீண்ட நாட்களுக்குப் பிறகுதான் புரிந்தது, இப்படி தலைவரை பார்க்கப் போகும் போதும் கிட்டு மாமாவை பார்க்கப் போகும் போதும் நான் விளையாட அனுப்பப்படுவதன் பின்னணி. அப்பாவும் அவர்களும் பேசுபவற்றின் ரகசியம் காக்கவே நான் வெளியேற்றப்பட்டேன் என்ற உண்மைதான் அது.

இக்காலக்கட்டத்தில்தான் கிட்டு மாமாவை அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பும் அவருடன் பழகும் நல் வாய்ப்பும் கிடைத்தது. முதல் நாள் எங்களை வரவேற்ற அந்த அக்காதான் அவரின் மனைவி சிந்தியா அக்கா. அவர் ஒரு மருத்துவர். தொடக்கத்தில் கிட்டு மாமா ஒரு இறுக்கமான, கோபக்கார மனிதர் என்றே நினைத்திருந்தேன். ஆனால் பழகப் பழகத்தான் அவர் முட்கள் போர்த்திய பலாச் சுளை என்பது புரிந்தது. 'பெருங்கோபமும் பேரன்பும்' என்ற பதத்திற்கு மிக பொருத்தமான மனிதர் அவர்தான். அவருடைய கோபத்தில் குறுகிய எவருக்கும் அவருடைய அரவணைப்பில் நிமிரும் பேரனுபவம் காத்திருக்கிறது. (இது எதிரிகளுக்குப் பொருந்தாதுதான்) சென்னையில் அவர் இருந்த காலங்களிலும் அதன் பின்னர் அவர் வெளிநாட்டில் இருந்த காலங்களிலும் அவரது அன்பை முழுமையாக நுகரும் பெரு வாய்ப்பினைப் பெற்றேன். இன்றளவிலும் அப்படி ஒரு நேசத்தை, எதிர்பார்ப்பற்ற பேரன்பை நினைத்து ஏங்குகிறேன்.

என் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அவரிடமிருந்து தொலைப்பேசி அழைப்பும் பரிசும் வராமல் இருந்ததில்லை. வெளிநாட்டிலிருந்து அழைக்கும் போது நடு இரவாயினும் சரி, நான் தூங்கிக் கொண்டிருந்தாலும் சரி, எழுப்பியேனும் என்னுடன் பேசாமல் அவர் வைத்ததில்லை. பெரிதாக என்ன பேசியிருக்கப் போகிறேன்? நினைவில்லை. ஆனால் அந்த அன்பு மட்டும் இன்றும் பசுமையாய், பெருங்கனலாய் நினைவில் தகித்துக் கொண்டிருக்கிறது.

விவரம் புரிந்து என்னை முதன் முதலில் பாதித்த சாவு புலந்தி அம்மானுடையது. அவர் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன், மதுரையில் உள்ள எங்கள் வீட்டிற்கு வந்திருந்தார். பல ஆண்டுகளுக்கு பின் என்னை பார்க்கும் அவர், 'அந்த பொடியளா இவ்வளவு பெரிதாகி விட்டாள்?' என்று வாயில் கை வைத்து வியந்ததும், மறுநாள் நாங்கள் அவரின் பெற்றோரைக் காண அவர் தங்கியிருந்த இடத்திற்குச் சென்ற போது என்னை நிழற்படம் எடுத்ததும், தனது ரிவால்வரை எனது கையில் கொடுத்து வைத்துக் கொள்கிறாயா என கேட்டதும், திருப்பிக் கொடுக்க மனமில்லாமல் அதை திருப்பிக் கொடுத்து விட்டுக் கிளம்பியதும் இன்றும் நினைவில் அப்படியே நிற்கிறது. அடுத்த சில மாதங்களிலேயே அவரது சாவுச் செய்தி வந்த போது துவண்டுவிட்டேன். அந்த வயதில் அது பெரும் அதிர்ச்சி. அதிலிருந்து மீண்டு வருவதற்கு பெரும் பாடுபட்டேன்.

அந்த அதிர்ச்சியிலிருந்தே மீண்டு வர இயலாமல் தவித்து நின்ற நிலையில்தான், ஒரு நாள் இரவு, ஒரு தொலைப்பேசி அழைப்பு என் வாழ்வின் மொத்த மகிழ்வையும் உருவிப் போட்டது. தொலைப்பேசி ஊடாக வந்த செய்தியைக் கேட்ட அப்பாவின் முகத்தில் பெரும் கவலையும் பரபரப்பும். வரிசையாக தொலைப்பேசியில் பலரையும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிய பேச்சுக்களின் ஊடாக கிட்டு மாமா வந்த கப்பலை இந்திய கடற்படை முற்றுகையிட்டிருக்கும் செய்தி ஓரளவு புரிந்தது. அப்பாவின் முயற்சிகள் வீண் போயின. கப்பல் வெடி வைத்துத் தகர்க்கப்பட்ட செய்தியும் வந்தது. அதிர்ச்சியில் உறைந்து போனோம். உண்மையாகவே உறைந்துதான் போனேன். அம்மா அழுகிறார்கள். ஆனால் என்னால் அழ முடியவில்லை. எனக்கு அழுகை வரவில்லை. என் மூளையில் எதுவும் பதியவில்லை.

அன்றிலிருந்து இன்று வரை பல காலம் 'கிட்டு'என்ற பெயரை கேட்பதையோ, உச்சரிப்பதையோ தவிர்த்து வந்தேன். எனக்குள் ஏதோ ஒன்று இல்லாமல் போனது. அதன் பிறகு நான் உளமார மகிழ்ந்து இருந்ததாய் எனக்கு நினைவே இல்லை. மகிழ்ச்சிக்கான அத்தனை தருணங்களிலும் உறுத்தலுடன் ஒதுங்கியே இருந்திருக்கிறேன்.

இன்று முள்ளிவாய்க்கால் பேரிழப்பைச் சந்தித்து நிற்கிற நிலையில் நம்மில் பெரும்பாலானோரின் நிலையும் அவ்வாறே இருக்கிறது. சிரிக்கிறோம். கொண்டாடுகிறோம். எதிலும் உயிர்ப்பில்லை. நிச்சயம் அந்த உயிர்ப்பை நாம் மீண்டும் பெறப் போவதேயில்லை. நம் வாழ்வில் இனி ஒரு போதும் உறுத்தலற்ற மகிழ்வை நாம் நுகரப் போவதேயில்லை. ஏனெனில் நம் இழப்பு அத்தனை பெரியது. ஆனால் அந்த இழப்பு எதற்காக நேர்ந்ததோ அந்தக் கனவை நனவாக்கும் பெரும் கடமையே நாம் நேசித்த - நம்மை நேசித்த, நமக்கு உயிர்ப்பாய், உணர்வாய், மகிழ்வாய், வாழ்வாய் இருந்த - இருக்கிற உயிர்களுக்கு நாம் செய்யும் நன்றி என்ற உண்மை மட்டுமே நினைவெங்கும் நிரம்பியிருக்கிறது.

(16-1-93 அன்று இந்திய அரசின் சதியால் மறைந்த தளபதி கிட்டுவின் 18ஆவது நினைவு நாளையொட்டி இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.)


நன்றி    பூங்குழலி
 நன்றி தென் செய்தி

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை