
அலைபேசியால் அல்லலுற்ற வேளையில், அதன் இயக்கத்தை நிறுத்திவிட்டு மீண்டும் இயக்குங்கள் என்றார்கள். இயலாது என்று ஒன்றுமில்லை. மீண்டும் முதலிலிருந்து தொடங்குகையில் வெற்றி உறுதி என்பதற்கு அதுவே அரிச்சுவடியாகின்றது.
பின்வாங்குவது கோழைத்தனமல்ல என்பதை அலைகள் உணர்த்துகின்றது. புத்தகங்கள் வாங்கியது செலவீனங்கள் அல்ல என்பதை வாசிப்பு பழக்கத்தினரின் விசாலப்புரிதல் தெளிவுபடுத்துகின்றது. குழந்தைகளிடம் எப்போதும் இருக்கும் ஆச்சர்யத்தனம், எதையும் புதிதாகவே நோக்குபவர்களுக்கு பொழுதுகள் புதிதாவதை சுட்டிக்காட்டுகின்றது. உண்மையாகவே அனுபவங்களுக்கு ஆயுள் கெட்டிதான்.
அனுபவங்களின் புதையலாக தன் மகளுடன் வந்து என்னை சந்தித்தார் பெரியவர் ஒருவர். வேறொரு கிராமத்திலிருந்து என்னை பார்ப்பதற்காக வந்திருந்தார். கன்னத்திலிருந்த கோடுகளையே வரலாற்று குறிப்பேடாக நினைத்து, நிகழ்வுகளையே தங்கள் அனுபவங்களாக பதிவுசெய்து பழகியிருந்தனர். தற்கால கோட்டோவியங்கள் போல நிகழ்வுகளும் அதன் வடிவத்தின் கன்ன கோடுகளாக அழகு பூத்திருந்தன.
வழக்கமான விசாரிப்புக்களுக்கு பிறகு, பார்வையை பாதங்களின் இடையில் பதித்து பேச ஆரம்பித்தார். ”நாங்கள் கடைசி கட்டத்தில வந்தவங்கள் பாதர்… எதுவும் சொல்ல கூடிய அளவில் இல்லை.. எல்லாம் அநியாயம்… அக்கிரமம்”.
பிரளயம் ஒன்று பொங்குவதற்கு முன்னுரையாக இருந்தது அவரது வார்த்தைகள். ”நாங்கள் மீன்பிடி தொழில் செஞ்சவங்கள். எங்களுக்கென்று போட்(படகு) இருந்தது. வசதி இருந்தது. வீடு இருந்தது. மனிசியும் மகளுமாக நின்மதியாகவே வாழ்ந்தோம். தொண்ணூறாம் ஆண்டு எங்கட இடத்தில் ஆமி அடிக்க தொடங்கினான். என்ன செய்யிறது என்னத்த எடுக்கிறது நாங்கள். எல்லாத்தையும் அப்படி அப்படியே போட்டுபோட்டு ஏதோ வாழ்வாதாரத்து தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம். எம்மோடு எங்கட சனம் அத்தனையும் வெளிக்கிட்டு கிளம்பியது. பிச்சைக்காரர்கள் மொத்தமாக இடம்பெயர்வதுபோல இருந்தது விரட்டப்பட்ட எங்களின் நிலமை” என்று கடந்த கால வேதனைகளை சொல்லிக்கொண்டிருக்கும் போதோ இடைநிறுத்தினார்.
அவரின் வயது, வார்த்தைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும் என்ற பக்குவம் பெற்ற வயதுதான். ஆனாலும் ஏனோ வார்த்தைகள் வடிவிழந்து விழத்தொடங்கின. ரணத்திற்குள் என்ன ஒழுங்கு தேவைப்படுகின்றது?
எங்களை விரட்டியபடி சிங்கள ஆமி பின்னாலேயே வந்துகொண்டே இருந்தான். அதனால் நாங்களும் இளவாலை, விளான், பண்டத்தரிப்பு என்று ஒவ்வொரு இடமாகத் தங்கித் தங்கி நகர்ந்துகொண்டே இருந்தோம். இப்படித்தான் கிட்டக்கிட்ட இருந்தோம். நானும் அவர்களும் அருகருகே அமர்ந்திருக்க இடைவெளியை காட்டிப்பேசும்போதே மன நெருக்கடியுடன் அங்கிருந்த இடநெருக்கடியும் விளங்கியது.
சலசலப்பு கேட்டதும் தம் வசிப்பிடம் அல்லது மறைவிடம் தேடும் பூச்சிகள் போல சிங்களவனின் ஆயுத ஓசை கேட்டவுடனேயே ஆயுள் முடிந்ததடா என்று கதைத்தவர்களுக்கு நம்பிக்கை அளித்தது மட்டுமல்லாது எங்களைப் பாதுகாக்க படாத பாடுபட்டு ஓடித்திரிந்தோம். ஆங்காங்கே சிலகாலம் தங்கிச்சென்றோம். கடைசியில், 1995ஆம் ஆண்டு நாங்கள் வன்னிப்பகுதிக்கு சென்றோம்.
எமக்கு அது புதிய சூழல். கடலும் அலையும் அதிலலையும் மீனுமாக வாழ்ந்து வலைகளை சிக்கெடுத்த எங்களுக்கு எல்லாமே புதிதாக புதிராக இருந்தது. வனம் நிறைந்த வன்னி மண்ணில் இருந்தாலும் வளமோடு வாழ முடியுமா என்று எண்ணி கவலை கொண்டோம். எதிலும் நிலைகொள்ள மறுத்த மனதோடு கலைந்த கனவுகளுடன் ஒவ்வொரு நாளும் மறுநாளைய விடியலுக்காக காத்திருந்தோம்.
மனதுக்கு இதம் வேண்டி புதியவர்களிடம் பேச ஆரம்பித்தோம். உறவுகளை உருவாக்கினோம். ஆனந்தம் இல்லாவிட்டாலும் எல்லோருக்கும் ஆறுதல் கிடைத்தது. நிரந்தரம் இல்லை என்றாலும் எங்களுக்கு அது நின்மதி தந்தது. நாட்கள் ஆக ஆக ஓர் உண்மை புரிந்தது. எல்லோருக்கும் கவலை இருக்கத்தான் செய்கின்றது. அதற்காக என்ன செய்வது?
”நாம் நம் அண்ணனுக்கு துணையாக இருப்போம். எப்படி வசியம் வைத்தாலும் மயங்கிவிடாத உத்தம தலைவரை நாம் கொண்டுள்ளோம். எனவே அவரது கரத்தை வலுப்படுத்துவோம். நாம் இணைந்து இருந்தோமென்றால், எல்லோருக்கும் ஒரே கரமாக சேர்ந்து அச்சிங்கள காடையனை விரட்டி அடிக்க முடியும் என்று ஒருசேர கதைக்க தொடங்கினோம்” என்று கூறி நிறுத்தியபோது, கவலை கருக்கொண்டிருந்த வார்த்தை நம்பிக்கையின் வாசலில் புத்தெளித்து நின்றது.
இதைக்கேட்டவுடன், கலாநிதி முருகர் குணசிங்கம் எழுதியுள்ள “இலங்கையில் தமிழர் ஒரு முழுமையான வரலாறு கி.மு 300 – கி.பி 2000” (எம் வி வெளியீடு, தென் ஆசியாவின் மையம். சிட்னி) என்ற நூலில் குறிப்பிட்டுள்ளது நினைவுக்கு வந்தது. 2000ஆம் ஆண்டு சித்திரை 20ஆம் திகதி குணசிங்கம் அவர்கள், ஈழத்து அரசியல் தலைவர்களில் ஒருவரான மு.சிவசிதம்பரத்தை சந்தித்துள்ளார். அச்சந்திப்பில் இரண்டு கேள்விகளை குணசிங்கம் அவர்கள் எழுப்பியிருந்தார்.
முதல் கேள்வி: “நீங்கள் நீண்டகாலம் தமிழ் அரசியலில் ஈடுபட்டவர், உங்களுக்கு நிறைய அனுபவம் உண்டு. அண்மையில் நீங்கள் தமிழீழ விடுதலைப்புலிகளின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் மிகக்குறைந்த வசதிகளுடன் வசிக்கிறீர்கள். எனவே தங்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின்மீதும். அதன் தலைவர் வே.பிரபாகரன் மீதும் ஆத்திரமும் வெறுப்பும் ஏற்பட்டிருக்கும் அல்லவா?”
இரண்டாவது கேள்வி: “தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் இலட்சியம் வெற்றி பெறும் என எண்ணுகின்றீர்களா?
ஐயா, சிவசிதம்பரம் அவர்கள் கண்ணில் நீரோடு மிக அமைதியாக “தமிழ் மக்களுக்கு இப்பதான் ஒரு நல்ல அரசியல் தலைமைத்துவம் கிடைத்திருக்கிறது. அது யாரிடமும் எக்காரணம் கொண்டும் விலை போகாத தலைமைத்துவம்….என்று கூறிவிட்டு, நான் இந்த உலகில் யாருக்கும் இதுவரை தலை தாழ்த்தவில்லை… But I’m prepared to take off hat to Pirabakaran! (ஆனால் பிரபாகரனுக்கு தலைவணங்க தயாராக இருக்கின்றேன்.) என்று சொன்னார்.
2002ஆம் ஆண்டு ஜுன் மாதம் 5ஆம் திகதி இறந்த சிவசிதம்பரம் அவர்களின் உள்மன உந்துதலின் உறைந்திருந்த என்னை பெரியவரின் குரல் நிழல் உலகிற்கு இழுத்தது. ஈழ விடுதலைக்காக பேசியவர்கள், போராடியவர்கள், காயம் பட்டவர்கள், மாவீரர்கள் அவர்களை இப்பூமியில் விதைத்த பெற்றோர்கள் என்று எல்லோரையும் பற்றி நாங்கள் கதைத்திருக்கிறோம். இனி நம்மால் இயன்ற வழிமுறைகள் உதவிகள் என்னென்ன என்பன குறித்து விவாதித்திருகின்றோம். ஓவ்வொருவரும் பலவாறு பதிலளித்தோம். கலைந்து சென்றோம்.
யார் முன்னெடுப்பது? எம்மக்களின் விடுதலைக்காக யார் வருவார்? என்று சிந்தித்த வேளையில் யாரும் வரமாட்டார்கள் நாம்தான் போக வேண்டும் என்று தனது மகன் பதினாறு வயதிலேயே இயக்கத்திற்கு போயிட்டான். கவலைதான், ஆனாலும் நாம்தானே நமது தலைவிதியை எழுத வேண்டும் என்று உள்ளார மகிழ்ந்தேன். அத்தோடு எமது மற்ற பிள்ளைகளையும் பேரப்பிள்ளைகள் பதினான்கு பேரையும் காப்பாற்ற வேண்டி எல்லோரையும் கூட்டிக்கொண்டு புதுக்குடியிருப்பு போனேன். எங்க தங்கிறது. யாரிடம் கேட்பது? சொந்த காணி இல்லதானே இரவல் காணியிலதான் இருந்தோம். உணவுக்கும் உரிமைக்கும் வாய்ப்புக்களற்ற சமூகத்தின் பிரதிநிதிகளாக நின்றோம்.
சில மாதங்கள் போனது. எனது மகனாக சென்றவன் தாய் நாட்டுக்கு மட்டும் பிள்ளையல்ல தரணிக்கே பிள்ளையிவன் என்று வந்துநின்றான். எப்போதும் அண்ணன் பற்றியும் அவரது போர் நுணுக்கங்கள் குறித்தும் படையணியின் ஒழுங்கு சம்பந்தமாகவே அதிகம் பேசினான். ஆயுதம் ஏந்த பழகியபோது தான் அடைந்த மகிழ்ச்சியை விபரித்தான்.
wounded_tamil_civilians
ஒருமுறை சூரியக்கதிர் சண்டை நடந்தது. அதில் எனது மகனும் களமாடினான். அச்சண்டையில் அவனது வலதுகை பாதிக்கப்பட்டது. கடைசிவரை அது விலகாமலே போய்விட்டது. வார்த்தை வராமல் தடுமாறினார். கண்ணீர் கசிந்தது அவரது கண்ணில். அருகிருந்த அவரது மகளும் தனது அண்ணனின் நிலை நினைத்து அழ ஆரம்பித்தாள்.
அனைத்து முக்கிய செயற்பாடுகளையும் வலது கையினால் செய்ய பழகியவர்கள் நாங்கள். இடது கை என்பதே ஒரு தோதுக்குதான் என்று தான் நினைத்திருக்கின்றோம். என் மகனை பார்த்தபோது இந்த உணர்வுதான் என்னை தின்றது. என் மகன் சொன்னான், அடிமையாவதுதான் நமது தலைவிதியோ என்று எண்ணிய மக்களிடையில் பிறந்தாலும் அடிமைச்சேற்றில் விவசாயம் செய்யாது, சுதந்திர பூமியில் பூக்கள் பூக்க வைக்க எம் அண்ணன் களமாடுகின்றார். அவரின் தம்பி நாம் மட்டும் ஏன் எதிர்மறை எண்ணத்துடன் ஓய்ந்து நிற்க வேண்டும். இடது கையால் நான் இனி போர் புரிய இருக்கிறேன் என்றான்.
நம்பிக்கை துயரமும் கலந்த வார்த்தைகளை உதிர்த்து நிறுத்தியபோது மகள் சொன்னார், சொன்னது போலவே அண்ணா மீண்டும் இயக்கத்திற்கு போயிட்டார் பாதர். ஆயுத பயிற்சி மேற்கொண்டார், ஜெயசிக்கிரு சண்டையில் பங்கெடுத்தார்…என்று சொல்லிவிட்டு கட்டுப்படுத்த முடியாமல் கதறி அழுதார். அந்த சண்டையில் அவரது இடதுகால் காயப்பட்டு அதுவும் செயலிழந்து போனது.
யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியவில்லை. இடையே நிறுத்த என்னால் இயலவில்லை. அழட்டும் என்றே நானும் இருந்துவிட்டேன்.
தமிழகத்தில் திருச்சி அருகே உள்ள வாழவந்தான் கோட்டையில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் முகாமில் மற்ற அருட்சகோதரர்களுடன் இணைந்து நான் மூன்று ஆண்டுகள் வாரஇறுதி களப்பணி புரிந்தேன். அந்த காலத்தில்தான் தம் மக்கள் மட்டுமல்லாது பகைவராகிப்போன எல்லோரையும்கூட சிரித்த முகத்துடன் வசீகரித்த தமிழ்செல்வன் சிங்கள இனவெறியர்களால் கொல்லப்பட்டார். செய்தி அறிந்ததும் அந்த முகாமில் இருந்த ஒரு பெரியவர், எம் தமிழ் செல்வனுக்காக சத்தமாக அழக்கூட முடியல்ல பாதர் என்று கூறி கண்ணீர் சிந்தினார்.
அந்த உணர்வுடன் சரி அழட்டும் என்று விட்டுடவிட்டேன். தன் மகனைப்பற்றியே பேசிய அவர், வலது கை, இடதுகால் இழந்த பிறகும் வீட்டில் தங்கமாட்டேன் என்று சொல்லிட்டான் பாதர். முழுமையாகக்கூட கால் சரியாகவில்லை தான் மீண்டும் போகவேண்டும் என்று சொல்ல ஆரம்பிச்சிட்டான். போனா மிதி வண்டியிலதான் போகணும். ஒரு காலும், கையும் சரியில்லாமல் எப்படி மிதிவண்டியை மிதிப்பான் என்று நாங்கள் கவலைப்பட்டோம். தங்கச்சியோட மிதிவண்டியை எடுத்து முயற்சி செய்து பாத்தான். வீரன் அவன். எப்படியோ மிதிவண்டிய மிதிச்சு போயிட்டான். எப்பவாவது வரும்போது அப்படியே வந்து போவான். போகிறபோதும் வருகிறபோதும் அவனது முகத்தில் மகிழ்ச்சி இருக்கும். எம்பிள்ளை படுகின்ற வேதனையை நாங்கள் எப்படி பாதர் தாங்கிறது?
2000ஆம் ஆண்டு ஓயாத அலைகள் -3 என்ற சண்டை ஆனையிறவில ஆரம்பிச்சது. இது கிளிநொச்சியிலிருந்து பளை செல்லும் பகுதியில் இருக்கின்றது. யாழ் குடாநாட்டின் நுளைவாயிலான இது சிங்களவனின் ஆதிக்க தளமாக அவர்களின் படைத்தளமாக மாறிப்போயிருந்தது. இதை மீட்டெடுக்கும் தாக்குதலை இயக்கம் ஆரம்பித்தது.
நமக்கான இடத்தை மீட்டெடுக்கும் வரலாற்று தேவையாக இருந்த இடம் இது. இத்தளத்தை வீழ்த்த குடாரப்பு, தாளையடி,வெற்றிலைக்கேணி, ஆழியவளை, இத்தாவில், மாசார் ,சோரன்பற்று,கிளாலி, பளை, இயக்கச்சி போன்ற இடங்களில் பரந்து விரிந்து சண்டை நடந்தது. 24கிலோமீட்டர் பரந்திருந்த இத்தளம் இரண்டாயிரமாம் ஆண்டு சித்திரைமாதம் 22ஆம் திகதி புலிகளால் மீட்டெடுக்கப்பட்டது.
அந்த சண்டையிலும் என் மகன் பங்கெடுத்தான். 15000 இராணுவத்தினரை பலிகொண்டு 35 போராளிகளை பலிகொடுத்து மீட்கப்பட்ட அப்போரில் என் மகன் முகத்தில் காயப்பட்டான். நாட்டின் அழகு முகத்திற்காக தனது முகத்தின் வடிவை இழந்தான். அதோட வீட்டிலேயே முடங்கி இருக்காமல் தொடர்ந்தும் இயக்கத்தோடு இருந்து பல்வேறு பணிகளை செய்த என் மகன் இருபத்தேழாவது வயதில் சாவகச்சேரியில் வீரச்சாவடைந்தான்.
கனத்த இதயத்துடன் சொல்லி நிறுத்திய அவரது விழிகளில் இப்போது கண்ணீர் இல்லை பெருமிதம் இருந்தது. வீரச்சாவு அடைந்த என் மகனின் மரியாதை நிகழ்வில் என்மகளுடன் நானும் கலந்து கொண்டேன். ஈழ மண்ணுக்காக எம் மகன் புரிந்த தியாகங்களை அக்கூட்டத்தில் சொன்னாங்க ஒருவர் சொன்னார்.” மற்ற போராளிகளும் இவரப்போல உழைக்கோணும். அதுதான் போராட்டம்…” இப்போது மூவரது கண்ணும் கசிந்தது.
“ ஒரு பெருச்சாளியைப்போல கட்டிலுக்கு அடியில் நூறாண்டுகள் பதுங்கி கிடப்பதற்கு பதிலாக சிறுத்தையைபோல ஒரு நிமிடம் , ஒரே ஒரு நிமிடம் பாய்ந்து வாழ்ந்து உயிரைக்கொடுப்பேன்” என்று மல்கம் எக்ஸ் கூறியதை ஒருமுறை நினைத்துக்கொண்டேன்.
நான் என்ர பிள்ளையள மட்டும் பறிகொடுக்கேல்ல பாதர். என்ர பதின்மூன்று பேரப்பிள்ளைகளையும் பறிகொடுத்திட்டு நிக்கிறன் என்று துயரம் தாங்க முடியாமல் அழுதார். வவுனியாவில் உள்ள தாண்டிக்குளத்தில் ஆமி, பொயின்ற் அடிச்சிருந்தான். அவனை அடித்து அவனது பலத்தை குறைக்க பெடியள் ஊடறுப்பு தாக்குதல் தொடுத்தாங்கள், அந்த சண்டையில நான்குபேரும், கிளிநொச்சி, முல்லைத்தீவில் நடந்த சிங்கள வெறியாட்டத்தில் மற்றவர்களுமாக என் வாரிசுகளை சிங்களக் காடையர்கள் அழித்தொழித்தார்கள் என்று கூறி நிறுத்தியபோது, கோபமும் ஆத்திரமும் அவரது மூச்சின் வேகத்தில் என்னை தொட்டது.
(சந்திப்போமா….)
sm.seelan@yahoo.com
அருட்தந்தை சூ.ம.ஜெயசீலன்
No comments:
Post a Comment