வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Friday, January 6, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர்-3

 

டத்தப்பட்ட தலைமுறை (Stolen Generation) என்னும் சொல், மனதுக்குப் பேரதிர்ச்சியைத் தருகிறது. ஆஸ்திரேலியச் சமூகத்தின் மன ஆழத்தில் மறைந்து நின்று, இன்று வரை குற்ற உணர்வில் துடிக்கவைக்கும் சொல் இது. தாயிடம் இருந்து வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்ட குழந்தைகளின் அலறல் சத்தமும், களவாடிச் செல்லப்பட்ட குழந்தையின் பிரிவுத் துயர் சுமந்த தாய்மையின்  சுட்டெரிக்கும் வெப்பமும், இந்தச் சொற்கள் வழியாக காலப் பெரு வெளியில் வந்து சேர்ந்து, இன்னமும் அனல் குறையாமல் இருக்கின்றன.

அபார்ஜினிஸ், ஆஸ்திரேலியத் தொல்குடிகளின் மூத்த இனம். 25,000 ஆண்டு கால வரலாற்றுப் பின்னணியைக் கொண்டுஉள்ளது இது. ஆஸ்திரேலியக் கண்டத்துடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாத பிரிட்டிஷார், 300 ஆண்டுகளுக்கு முன் கொடும் குற்றம் புரிந்த ஆங்கிலேயக் கைதிகளைக் கொண்டுவந்து சேர்க்கும் திறந்த வெளிச் சிறைச்சாலையாகவே ஆஸ்திரேலியாவை மாற்றிக்கொண்டனர். குற்றப் பின்னணியையும் கொலை வெறியையும்கொண்ட ஆங்கிலேயர், தலைமுறை தலைமுறையாக அபார்ஜினிஸ் மக்களுக்கு இழைத்த கொடுமைகளை வரலாறு நெடுகிலும் சொற்களால் அழுதாலும் தீராது.
அபார்ஜினிஸ் மக்களின் கூட்டு வாழ்க்கை, பல்வேறு மேன்மைகளைக் கொண்டது. உண்ணுவது முதல் நீர் நிலைகளுக்குச் சென்று நீர் அருந்துவது வரை அனைவரும் ஆடிப் பாடி, கூட்டமாகக் கொண்டாடுவதுதான் வழக்கம்.  இதைக் கவனித்து வைத்திருந்த ஆங்கிலேயர்களின் கொடிய மனம், இந்தக் கூட்டு வாழ்க்கையைவைத்தே அவர்கள் அனைவரையும் கூட்டமாகக் கொலை செய்யும் திட்டத்தை வகுத்துக்கொண்டது. இதற்காக இவர்கள் உருவாக்கிய வஞ்சகச் செயல், எந்தக் காலத்திலும் மன்னிக்கக்கூடியது அல்ல. நீர் நிலைகளில் கொடிய விஷத்தைக் கலந்துவைத்தார்கள். கபடம் எதுவுமே தெரியாத இந்த மக்கள் கூட்டம், நீர் அருந்திய இடத்திலேயே கூட்டம் கூட்டமாகச் செத்துக்கிடந்தார்கள். இந்தப் பூர்வகுடிகளை மதுப் பழக்கத்துக்கு அடிமையாக்கும் தந்திரம் பின்னர் உருவாக்கப்பட்டது.

ஆங்கிலேயரின் பழக்கவழக்கங்கள் எதனையும் பார்த்து அறியாத இந்த மக்களுக்கு, இங்கிலாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ரம் போன்ற மது வகைகள் இலவசமாக வழங்கப்பட்டன. இலவசங்களுக்கு அடிமை யான இந்த மக்கள், இன்னும் சில நாட் களில் மதுவில் விஷம் கலந்து தாங்கள் கொல்லப்படப் போகிறோம் என்பதை அறியவில்லை. கொடிய விஷம்வைத்துத்தான் தங்கள் கொல்லப்பட்டோம் என்ற உண்மைகூடத் தெரியாமலேயே, அந்த மக்கள் செத்துப்போனார்கள். 1870-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆங்கிலேயர் எடுத்த கணக்கின்படி அபார்ஜினிஸ் மக்களின் எண்ணிக்கை 3 லட்சம். 2008-ம் ஆண்டு ஆஸ்திரேலிய அரசாங்கம் வெளி யிட்ட மக்கள் தொகைக் கணக்கில், அபார் ஜினிஸ் மக்கள் 2 லட்சமாக இருக்கிறார் கள். அந்தப் பூர்வகுடி இனப் பெருக்கம் அடையாமல் இருக்க, எந்தக் கொடிய செயலையும் செய்யத் தயாராக இருந்தது ஆஸ்திரேலியாவின் நாகரிக சமூகம்.
ஓர் இனத்தை அழித்து, அந்த மண்ணில், தன் அதிகாரத்தை நிறுவிக்கொள்ள விரும்பும் யாரும் குழந்தைகளைக் கொலை செய்வதில் இருந்தே, தங்கள் அழிவுப் பணிகளைத் தொடங்கிவிடுகிறார்கள். ஆஸ்திரேலியாவில் அபார்ஜினிஸ் இனத்தை அழிக்க நினைத்த ஆங்கிலேயருக்குக் குழந்தைகளைக் கொல்வது பாவச் செயல் என்ற உணர்வு ஏற்பட்டு இருக்க வேண்டும். இதற்காக வேறு ஒரு தந்திரச் செயலை உருவாக்கிக்கொண்டார்கள். மழலைக் கொலையைவிட, இது அபாயம் நிறைந்த மனக் கொலையாகத் தெரிகிறது. இந்தக் கொடிய செயல்தான், தலைமுறைக் கடத்தல் என்று அழைக்கப்படுகிறது. இயற்கையோடு மற்றும் ஓர் இயற்கையாக வாழ்ந்து வந்த, அபார்ஜினிஸ் தாய்மார்களிடம் இருந்து அவர்களது குழந்தைகளைப் பிரித்து, கடத்திச் செல்லும் மாபாதகச் செயலை இதன் மூலம் தொடங்கிவைத்தார்கள். இதற்கு ஆங்கிலேயர் கூறிய சமாதானம் மிகவும் வேடிக்கையானது. அடுத்த தலைமுறையை நாகரிகப்படுத்தும் செயல் இது என்று கூறிக்கொண்டார்கள். பெற்ற தாயிடம் இருந்து உயிரைப் பறிப்பதைப்போல, குழந்தைகளைப் பறித்து எடுப்பதுதான் நாகரிகமா?

இந்தக் கொடிய செயலுக்கு ஆங்கிலேயரின் ஆஸ்திரேலிய அரசாங்கம் 1869-ம் ஆண்டு, தனிச் சட்டம் இயற்றிக்கொண்டது. இதில் இன்னொரு வேதனை என்னவென்றால், இந்தச் சட்டம், 1969 வரை ஆஸ்திரேலிய மண்ணில் அமலில் இருந்தது. உலக அளவில் பெரிய போராட்டங்கள் மனித உரிமை அமைப்புகளால் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியாவில் உள்ள சில அரசியல் கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன் வைத்த பின்னர்தான், அந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. 2008-ம் ஆண்டு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஒன்றில், ஆஸ்திரேலியாவின் பிரதமர் கெவின் ரூட் இந்தத் தலைமுறைக் கடத்தலுக்கான தலைமுறை மன்னிப்பைக் கேட்டுக்கொண்டார்.
குழந்தைகளை அழிப்பதன் மூலம் உலகில், பல இனங்கள் அழிக்கப்பட்டு உள்ளன. தலைமுறைக் கடத்தல் மூலம் அபார்ஜினிஸ் இன அழிப்புக்கு, சதி வகுக்கப்பட்டதைப்போலவே, யூத இனத்தை முற்றாக அழிக்க நினைத்த ஹிட்லர், யூதக் குழந்தைகளைக் கொலை செய்யும் திட்டத்தை உருவாக்கினான். ஹிட்லர் கொன்று முடித்த யூதக் குழந்தைகளின் எண்ணிக்கை 10 லட்சம். மெனிக் ஃபார்ம் முகாமிலும் இதனைப்போன்ற, குழந்தைகளை அழிக்கும் சதித் திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது என்ற செய்தி, முகாமில் காட்டுத் தீயைப்போலப் பரவத் தொடங்கியது. ஈழ மக்கள் படிப்பாளிகள், எதிர்காலத்தை எளிதில் ஊகித்துக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். இவர்களுக்கு முகாமில் கூறப்பட்ட சில விதிமுறைகள், சந்தேகத்தைத் தோற்றுவித்தது. நோயுற்ற குழந்தைகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால், தாயிடம் இருந்து தனியே பிரித்து எடுத்துச் சென்றுதான், சிகிச்சை அளிக்க முடியும் என்று முகாம் அதிகாரிகள் கூறினார்கள். இதற்கு சொல்லப்பட்ட காரணம், நம்பக் கூடியதாக இல்லை. ”தொற்றுநோய் தாய்க்கும் பரவிவிடும் அபாயத்தால்தான் இந்த உத்தரவு” என்று தாய்மார்களைச் சமாதானப் படுத்தினார்கள். ஈழத் தாய்மார்களைப்பற்றி இந்த அக்கறை திடீர் என்று இலங்கை ஆட்சியாளர்களுக்கு எங்கு இருந்து வந்தது? இது சந்தேகத்தை மேலும் அதிகப்படுத்தியது. குழந்தைகளை அழிப் பதன் மூலம் தமிழ் இனத்தை அழிக்கும் நடவடிக்கைதானோ என்னும் மனச் சந்தேகம் அவர்களிடம் உறுதி பெற்றுவிட்டது. எச்சரிக்கை அடையத் தொடங்கிவிட்டார்கள். செவி வழியாகப் பல தகவல்கள், இளம் அன்னையரிடம் வந்து சேர்கின்றன. அனைத்தும் குழந்தைகளைக் கொன்று முடிக்கும் திட்டங்களாகவே தெரிகின்றன. முகாம் பெரிதும் பதற்றம் அடைகிறது. ஒவ்வொருவரும் தங்கள் குழந்தையைக் காப்பாற்றும் முயற்சி குறித்து, யோசிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.  வயிற்றுப்போக்கால் மகனின் உடல்நிலை மோசம் அடைந்து வரும் சூழலால், அந்தப் பெண்ணுக்குப் பரபரப்பும் பதற்றமும் ஏற்படுகிறது. இருந்த நம்பிக்கையையும் அவள் இழந்துவிடுகிறாள். ஆனால், மின்னல் கீற்றுப்போல ஒரு நம்பிக்கை மனதில் தோன்றுகிறது. வாடி, வதங்கிய குழந்தையைத் தோளில் தூக்கிப்போட்டுக்கொள்கிறாள். குழந்தையைக் காப்பாற்ற ஏதாவது வழி கிடைக்கிறதா என்று ஆராய்கிறாள்.
அனல் வீசும் பகல் பொழுதில் குழந்தை களைத் தோளில் சுமந்த இளம் பெண்கள், அமைதியற்று அலைந்துகொண்டு இருக் கிறார்கள். கால் இழந்து காயம் ஆறாத குழந்தைகள் ரணமான முகத்திலும், உடலிலும் எரிச்சல் கண்டு கத்திக் கத்திச் சோர்ந்துபோன குழந்தைகள், ஜுரத்தால் தலைக் கொதிப்பு எடுக்க, முனகலை மட்டும் வெளிப்படுத்தும் குழந்தைகள் என்று எத்தனை துயரம் தோய்ந்த உலகம் அது. இதே நேரத்தில் முள் கம்பிகளுக்கு வெளியே ஒரு கூட்டம் பதற்றம்கொண்டு நிற்கிறது. இவர்கள் போர் நடக்காத பகுதியில் வாழ்ந்த, இன்றைய முள்வேலி முகாம்வாசிகளின் உறவினர்கள். தங்கள் தாய், தந்தை, அண்ணன், தம்பி என்று யார் இறந்துவிட்டார்கள்? யார் உயிருடன் இருக்கிறார்கள்? யார் காயப்பட்டுக் கிடக் கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள இயலாது, பல மாதங்கள் நிம்மதி அற்று வாழ்ந்தவர்கள். முள்வேலிக்குள் இருப் பவர்களின் பெயர் சொல்லி, உறவு சொல்லி, முகவரி கொடுத்து, தங்கள் அடையாள அட்டை முதல் அனைத்தையும் காட்டித் தான் யாரையும் அங்கு பார்க்க முடியும். கண்காணிப்பு கேமராக்கள், கண்காணிப்புக் கோபுரங்களில் இருந்து ஒளிந்து பார்க்கும் கண்கள், இயந்திரத் துப்பாக்கிகளைக் கையில் பிடித்தபடி நிற்கும் உலகம் அறியா, ராணுவ விடலைகள், அடித் தொண்டையால் சிங்களம் பேசி, தமிழ் மக்களை அவமானப் படுத்திவிட்டதாக நிம்மதிப்பட்டுக் கொள்ளும் அதிகார ஆணவங்கள், அனைத்தையும் அவர்கள் கடந்து செல்ல வேண்டும்.
கையில் செல்பேசி, கேமரா எதையும் தங்கள் உறவுகளைச் சந்திக்கும்போது எடுத்துச் செல்லக் கூடாது. விலை மதிப்புள்ள இந்தப் பொருட்களை யாரிடம் பாதுகாப் பாக ஒப்படைத்துச் செல்வது என்பதைப்பற்றியும் கவலைகொள்ள வேண்டியது இல்லை. முகாம் அமைக்கும் பணிகள் ஆரம்பமானபோதே, சிங்கள மக்கள் தங்கள் வியாபாரக் கடைகளையும் அங்கு தொடங்கிவிட்டார்கள். ஒரு மணி நேரம் செல்போனைப் பாதுகாக்க 50, கேமராவுக்கு 100 என்று கட்டணப் பட்டியல் தயாரித்து, அங்கு வியாபாரம் மும்முரமாக நடக்கத் தொடங்கிவிட்டது. இந்த வியாபாரிகள் யார்? இவர்களுக்கு இந்தச் சலுகை எப்படிக் கிடைத்தது? இவர்கள் உள்ளே துப்பாக்கி ஏந்தி இலங்கை தேசத்துக்குப் பாதுகாப்பை வழங்கிக்கொண்டு இருப்பதாகத் தோற்றம் காட்டும், ராணுவத்தின் பினாமியாகக்கூட இருக்கலாம்.
ஏழு மலைகள், ஏழு கடல்களைத் தாண்டி வந்தவர்கள் என்று புராதனக் கதைகளில் கூறப்படுவதைப்போல, வெகு தூரத்தில் இருந்து இந்தக் காட்டுப் பகுதியைத் தேடிக் கண்டுபிடித்து வந்து சேர்ந்தவர்கள் இவர்கள். இன்னமும் சில நிமிடங்களில் உயிர் பிழைத்த உறவுகளைப் பார்க்கப் போகிறார்கள். கட்டிப்பிடித்துக் கதறி அழுது, தேங்கி இருக்கும் துயரம் அனைத்தையும் வெளிப்படுத்த வேண்டும். உணர்வுகளின் கொந்தளிப்புடன் வரிசையோடு வரிசையாகக் காலடிகளை எடுத்துவைக்கிறார்கள். உறவுகளைச் சந்திக்கும் அபூர்வ தருணங்களும் கிடைக்கத்தான் செய்கின்றன. இரும்புக் கம்பிகளின் தடுப்புக்கு அந்தப் பக்கத்தில் உறவுகளும் தடுப்புக்கு எதிர்ப் பக்கத்தில் இவர்களும் சந்திக்கும் 15 நிமிடங்கள் இவை. ராணுவத்தினர் சுற்றி நிற்பார்கள். அனுமதிக்கப்பட்ட சில பொருட்களை இயந்திர மனிதர்களைப்போல கை நீட்டிக் கொடுக்கலாம். பேச வாய் துடிக்கும், வார்த்தைகள் வெளிவராமல் மனதுக்கு உள்ளேயே, அவை உதிர்ந்து விழுந்துவிடும். கண்ணீர் கொப்பளித்து வெளியே வரத் துடிக்கும். துப்பாக்கி முனை முதுகை அழுத்த, வார்த்தைகளைப்போலவே இவையும் மனதுக்குள் வடிந்து இறங்கிவிடும். சீ… என்ன இது கேவலப்பட்ட வாழ்க்கை? என்று மனதுக்குள் சொல்லிக்கொள்வதைத் தவிர, அங்கு வேறு எதுவும் செய்துவிட முடியாது!
- விதைப்போம்…
சி.மகேந்திரன்
ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை