வீழ்ந்தது போதும் எழுவோம் நிமிர்வோம் தமிழன் எதிர்காலம் காப்போம் தமிழரிடம் தமிழை பேசுங்கள் .தமிழை பேசி தமிழை வளர்ப்போம்

Thursday, January 12, 2012

வீழ்வேனென்று நினைத்தாயோ? தொடர் -5

 

முள்ளி வாய்க்காலில் இருந்து தன்னந்தனியாக தனது ஆண் குழந்தையைச் சுமந்து வரும் பெண்ணுக்கு அவளது குழந்தையைப் பாதுகாப்பது ஒரு பெரும் போராட்டமாக மாறியது. யாராவது காப்பாற்றி குழந்தையை உறவினர்களிடம் ஒப்படைக்க மாட்டார்களா என்று அலை பாய்கிறாள். ஆனால்,  குழந்தையைப் பிரித்து அனுப்ப, அவள் மனம் ஒப்பவில்லை. இத்தனை நாட்களாக, தான் அடைந்த துன்பங்களுக்கு எந்த அர்த்தமும் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்சம். அந்த நேரத்தில் முள்வேலிக்கு அப்பால் இரண்டு கண்கள் தன்னையே
பார்த்துக்கொண்டு இருப்பதை அவள் கவனித்துவிட்டாள். அது யார்? அவளது உறவினரா? அப்படித் தெரியவில்லை.  தானும் தன் குழந்தையும் தனியே துயரப்படும் வேதனையைப் பார்த்துத் துயரப்படுபவராக இருக்கக்கூடும். தன் உடல் பலத்தை எல்லாம் திரட்டிக் குரல் எழுப்பினாள். தன் குழந்தை கடுமையான வயிற்றுப்போக்கால் சாகப்போகிறது என்று. அந்தச் செய்தி, அந்த மனிதரின் காதுகளில் விழுந்திருக்க வேண்டும்.
அவர் மருத்துவரா? மருத்துவம்பற்றி அறிந்தவரா என்பது தெரியவில்லை. அவர் அந்த இடத்தைவிட்டு நகர்ந்துவிட்டார். சிறிது நேரத்துக்குப் பின்னர், முள்வேலி முகாமில் இருந்து வெளிப்புறம் நோக்கிக் குழந்தைகள் எறியப்பட்டதைப்போலவே, வெளியில் இருந்து, பாதுகாப்புடன் ஒரு பொட்டலம் அவளை நோக்கி வந்து விழுந்தது. அதைப் பிரித்துப் பார்த்தவுடன், உடலில் இருந்து வெளியேறிய உயிர் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் வந்து சேர்ந்ததைப்போல உணர்ந்தாள். அதில் குழந்தையின் வயிற்றுப்போக்குக்கான மருந்தும் அதனை எவ்வாறு கொடுக்க வேண்டும் என்ற விவரமும் இருந்தது. அதன் பின்னர், குழந்தை உயிர் பிழைத்துக்கொண்டது என்பதை இறுதியாகக் கிடைத்த தகவல்கள் உறுதி செய்கின்றன.
இந்த ஒரு நிகழ்வு மட்டும் அல்ல, இதனைப்போன்ற எத்தனையோ வேதனைகளுடன் தமிழ் அன்னையரும் குழந்தைகளுமாகத் தவித்து நிற்கும் முள் கூண்டுதான் மெனிக் ஃபார்ம் முகாம்.

எந்த நேரத்தில் அங்கு என்ன நிகழும் என்று யாராலும் அனுமானித்துக் கூற முடியாது. பல்வேறு காரணங்களைச் சொல்லி, இளம் பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு இழுத்துச் செல்லப்படலாம். அவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டவள், உயிருடன் திரும்பி வராமலும் போகலாம். ராணுவம் மட்டும் அல்லாது, சிங்களம் பேசும் கடைநிலை ஊழியன் ஒருவன் இன வெறுப்பை எச்சிலாக முகத்தில் உமிழ்ந்துவிட்டுச் செல்லலாம். எல்லாவற்றையும் சகித்து விழுங்கிக்கொள்ளத்தான் வேண்டும். இலங்கையின் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சரத் என். சில்வா, முள்வேலி முகாம்களைப் பார்வையிட்ட பின்னர், தனது வேதனை வார்த்தைகளை வெளிப்படுத்தி உள்ளார். ”ஊடகங்களோடு இந்த வார்த்தைகளைப் பகிர்ந்துகொண்டேன் என்பதற்காக, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் தண்டிக்கப்படும் வாய்ப்பு களும் இருக்கின்றன. இதன் மூலம் என் உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் என்னால் சொல்ல முடியாது…” என்பதை முதலில் குறிப்பிட்டுவிட்டு, தனது பேட்டியைத் தொடங்குகிறார்.
”பாதிப்புகளை நேரில் பார்த்த பின்னர், அவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள துயரச் சுமை, என்னால் கற்பனை செய்துகூடப் பார்க்க முடியாதவை. அவர்களின் மனம் எதையும் வெளிப்படுத்தும் தகுதியை இழந்துவிட்டது. அந்த அளவுக்கு அவர்கள் பலவீனம் அடைந்துவிட்டார்கள். அவர்களை ஆறுதல்படுத்த வேண்டும் என்பதற்காக, லேசாகச் சிரிக்க முயற்சிக்கிறேன். என்னால் இயலவில்லை. ‘உங்கள் துயரங்களை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம்’ என்று சொல்வதற்கு மனம் விரும்புகிறது. பொய் சொல்வதாக என் மனசாட்சி என் மீது குற்றம் சுமத்துகிறது. வாயைத் திறக்க முயற்சிக்கிறேன். உதடுகள் பிரிய மறுக்கின்றன. என்னால் எந்த உறுதியையும் இங்கு தர முடியவில்லை.
உலகம் முழுமையில் இருந்தும் இந்த மக்களுக்கு உதவி செய்வதற்கு கோடி கைகள் தயாராக இருக்கின்றன என்பதும் எனக்குத் தெரியும். ஆனால், அந்த உதவிகள் அனைத்தும் அவர்களுக்கு வந்து சேருமா? என்பது எனக்குத் தெரியாது. இன்று அவர் களுக்கு உடனடியாகத் தேவைப்படுவது, இந்த முகாம் தரும் நரக வாழ்க்கையில் இருந்து விடுபடுவதுதான். எல்லாவற்றையும் விளக்கிக் கூறுவதைவிட, கழிப்பறை வசதியைப்பற்றி கூற வேண்டும். தங்கள் காலைக்கடனை முடிக்க நீண்ட வரிசையில் மக்கள் மணிக்கணக்கில் காத்துக்கிடக்கிறார்கள் வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள் என்று. இது எத்தகைய வேதனை என்பது காத்துக்கிடப்பவர்களுக்குத்தான் தெரியும்” என்று தலைமை நீதிபதி தனது வேதனையை வெளிப்படுத்தி உள்ளார்.
ஈழத்து மக்கள் வெகு காலத்துக்கு முன்னரே, முன்னேறிய வாழ்விட வசதி களை அமைத்துக்கொண்டவர் கள். குறிப்பாக, பெண்களின் உணர்வுகளை நன்கு புரிந்து, அவர்களுக்குக் கௌரவம் அளிக்கும் சமூகம். கௌரவம் மிக்க அந்தச் சமூகம் பெற்றெடுத்த பெண் பிள்ளைகள், முகாமில் சந்திக்கும் துயரம் சகித்துக் கொள்ளக்கூடியதாக இல்லை. நெருஞ்சிமுள்ளைப்போல, அவர்கள் மனதை உறுத்திக்கொண்டு இருக்கும் ஒன்றை, இங்கு குறிப்பிடுவது அவசியம் ஆகிறது. பாதுகாப்பற்ற கழிப்பிடங்களுக்கும் குளிப் பதற்கும் பெண்கள் செல்கி றார்கள். வக்கிரம்கொண்ட ராணுவத்தின் கண்கள், மறை விடத்தில் இருந்து பார்க்கின்றன. இதனை யாராலும் தடுக்க முடிவது இல்லை. பெண்கள் அவமானத்தால் தினம் தினம் சிதைந்துபோகிறார்கள்.
இந்த நிகழ்வை எல்லாம்  வாசிப்பவர்களுக்கு, இது கற்பனைதானோ என்று நினைத்துக்கொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. முள்ளிவாய்க்கால் துயரப் பெருவெளியின் காயம் சுமந்த மக்கள், உலகின் திசைகள் தோறும் எப்படியோ நகர்ந்து போய்க்கொண்டு இருக்கிறார் கள். ஐக்கிய நாடுகள் சபையி லும் மனித உரிமை அமைப்பு களிடமும் தாங்கள் சந்தித்த துயரங்களை, எழுத்துப்பூர்வமான வாக்குமூலங்களாக இவர்கள் அளித்து இருக்கிறார் கள். அதில் ஒன்றுதான், குழந்தைக்காகப் போராடி அதில் வெற்றி பெற்ற, இந்த முள்ளி வாய்க்கால் பெண்ணின் கதையும், உலக இலக்கியப் பரப்பின் எதிர்காலத்தில், இவ்வாறான ஆயிரமாயிரம் கதைகளை, ஈழ மக்கள் எழுதிக் கொண்டே இருக்கப்போகிறார்கள்!
ராணுவ வெற்றிக்குப் பின் இதை வெறியாக மாற்றிக்கொண்டு, ஆணவத்தின் சிகரத்துக்கே இலங்கை அரசு சென்றுவிட்டது. இந்த வெறியில் போரில் சிதைக்கப்பட்ட மக்களை போர்க் கைதிகளாகத்தான் இலங்கை அரசு கருதியது. போருக்கும் மக்களுக்கும் எந்தவிதத்திலும் சம்பந்தம் இல்லை என்பதுதான் உண்மை. போர் என்பது அந்த மக்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று. ‘பொதுமக்கள் அனைவரும் தங்களால் சிறைப்பிடிக்கப்பட்ட அடிமைகள்’ என்ற ராணுவத்தின் மன நிலை எத்தகைய அநீதியானது? அடிமைகளுக்கு ஏன் அடிப்படை மனித வசதி என்ற கருத்து நிலை இவர்களின் ஆழ் மனத்தில் நின்று அவர்களை இயக்கிக்கொண்டு இருந்தது. சுகாதார வசதிகளை முற்றாக நிராகரித்து, மக்களை மரணச் சகதியில் தள்ளும், நோக்கம்கொண்ட முகாம்களை அமைத்ததற்கும் இதுதான் காரணமாகத் தெரிகிறது. இங்கு சர்வதேச மனித உரிமைகள் அனைத்தும் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டு இருந்தன.
இறந்த பின்னர், மனிதர்களை வைப்பதற்கு ஒதுக்கப்படும், மயான பூமியின் ஆறடி நிலம் என்பதைப் போலத்தான், மெனிக் ஃபார்மில் வந்து சேர்ந்தவர்களுக்கும். முகாமில், ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், சராசரியாக ஒவ்வொருவருக்கும் ஒரு சதுர மீட்டர்தான் இடம்!
- விதைப்போம்…
சி.மகேந்திரன்
ஓவியங்கள் : ராஜ்குமார் ஸ்தபதி

No comments:

Post a Comment

Photobucket
வருகைதரும் உள்ளங்களுக்கு நன்றி வணக்கம் உறவுகளே இங்கு பதிவுகளை படிக்கும் நீங்கள் உங்கள் மனதில் உள்ள கருத்துக்களையும் பதிந்து விட்டு செல்லுமாறு தாழ்மையான வேண்டுகோள் ..நீங்கள் எமக்கு கொடுக்கும் ஊக்கம்தான் எம்மை மேலும் உற்சாக படுத்தும் ..உங்கள் ஆதரவுகளை எமக்கு நல்குங்கள் ..நன்றி வணக்கம் அன்புடன் ஈழம் தேவதை